Sunday 30 January 2022

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும்.

'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வைகள்.

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -

  


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும்.  இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம்ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத்  தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால்குறையாக  உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.

அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

சிரிய அதிபரின் ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டங்கள், பின்னாளில் ஒரே மதத்தின் உட்பிரிவுகளான சுனி, ஷியா முஸ்லிம்களின் முரணாகவும், தீவிரவாதிகளின் பட்டறையாகவும் உருமாறின. ஆதிக்க நாடுகளின் அனுசரணையுடன் பெரும் உள்நாட்டுப் போராக தோற்றம் பெற்றது. கணக்கற்ற உயிரிழப்புகளும், அண்டை நாடுகளுக்கான அகதிகள் இடம்பெயர்வுமாக பல லட்சங்கள் தாண்டிய அவலமும் அண்மைய வரலாறு. பிஜியின் கரும்புத் தோட்டங்களுக்கும், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கும் இந்தியாவிலிருந்து வேலைக்காக அழைத்து  வரப்பட்ட இந்திய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களும், ஒடுக்குமுறைகளும் சில நூற்றாண்டுகள் கடந்த வரலாறு. இலங்கையின் இன ஒடுக்குமுறைகளும், இறுதிப்போரும், அகதி வாழ்வும் எமது தாயக வரலாறு. இவையெல்லாம் ஆசியின் படைப்புகள் சிலவற்றின் கதைக்களங்கள். இப்படைப்புகளின் இறுதியில் பல கேள்விகள் உருவாவதும், பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுகளை வாசகரிடம் தோற்றுவித்தலும் அறிவுசார் இலக்கியரசனைக்கு  உரியது. இதில் 'தலைமுறை தாண்டிய காயங்கள்' மனதில் பதிந்ததும் அல்லாமல் சில பதற்றங்களையும் ஏற்படுத்தியது. காரணம் உள்ளார்ந்த உணர்வு நிலைகளின் ஒத்திசைவும் சில முரண்களும். தொடரும் உரையாடல் இச்சிறுகதையின் மனதுக்கு வலி தரும் அழுத்தமான பகுதி.

Saturday 22 January 2022


கோளமயமாதல்

ஆசி கந்தராஜா

ளமைக்கால இலக்கிய நண்பன் ஒருவனை, பல்கலைக்கழக பணி நிமித்தமாக நான் கிழக்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்றிருந்த பொழுது சந்தித்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பணிபுரிவதாக அவன் சொன்னான். கல்லூரி நாட்களில் அவனும் நானும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்தோம். பிற மொழி இலக்கியங்களை அவன் நிறையவே வாசிப்பான். மரபுகள் மீறப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது அவன் கொள்கை. இது சம்பந்தமாக பலதடவைகள் அவன் கல்லூரி நண்பர்களுடன் முரண்பட நேர்ந்ததும் உண்டு.

இலங்கையில் நடந்த இனக்கலவரம், அதைத் தொடர்ந்த போராட்டம், புலம் பெயரும் நிர்ப்பந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் நாம் இருவரும்  வெவ்வேறு திசைகளில் பயணித்து விட்டோம். இப்போது இருண்ட கண்டத்தின் நாடொன்றிலே எதிர்பாராத சந்திப்பு.

பிறந்த மண்ணைத் தொலைத்துப் புதிய வாழ்க்கை தேடும் எலியோட்டத்திலே, இலக்கியச் சிந்தனைகளைத் தான் தொலைத்துவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டான். அங்கு நிற்கும்வரை இரவுச் சாப்பாட்டுக்கு தனது வீட்டுக்கு வருமாறும் அன்புக் கட்டளையிட்டான்.

ஹோட்டல் வளவுக்குள்ளேயே நண்பனுக்கு வீடொன்றை ஒதுக்கியிருந்தார்கள். நண்பனின் வீட்டில் பீட்டர் என்ற சுதேசி இளைஞன் குடும்பத்தில் ஒருவனாக வளையவந்தான். அவனே நண்பனின் அலுவலக உதவியாள், சாரதி, வீட்டு வேலைக்காரன் எனச் சகலகலா ஊழியன். இட்லி, தோசை, சப்பாத்தி முதல்கொண்டு இந்திய உணவுவகைகளை சுவையாகச் சமைப்பான் என நண்பனின் மனைவி சொன்னார். விசுவாசம் என்பதின் அர்த்தத்தை அவனிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பீட்டருக்கு நற்சான்றிதழ் வழங்கினான் என் நண்பன்.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் பலதும் பத்தும் பேசிக் கொண்டிருந்தோம். ஆபிரிக்க இலக்கியம், எழுத்தாளர்கள், அங்கு வாழும் 'ட்ரைபல்' இனங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கலந்துரையாடும்போது பீட்டர் பற்றி பேச்சுத்திரும்பியது.