Thursday 11 August 2022

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும்.

'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வை. 

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும்.  

இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம்,  ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத்  தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.