Sunday 30 April 2023

காய்களைக் கனியவைக்க, சௌக்கியக்கேடான கல்லுவைக்கும் முறை.

ஆசி கந்தராஜா

லங்கை இந்திய நாடுகளில் இப்பொழுது பழங்களின் காலம். மாம்பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன.

வேகமான வாழ்க்கை முறையால்தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண்வயிற்றுப் போக்குஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் 'கல்சியம் கார்பைடுஎன்னும் இரசாயனம்தான் என  கண்டறியப்பட்டுள்ளது. அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் காய் பிஞ்சுகளை முற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன் என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் இது அப்பிள்எலுமிச்சை மற்றும் தோடங்காய்களிலிருந்து பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Saturday 15 April 2023

 ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு:




தாவரத்துக்கு நல்ல கல்சியம் பசளை என்று சொல்லி, பலர் முட்டைக் கோதுகளை நொருக்கி மண்ணுடன் கலப்பதுண்டு. முட்டைக் கோதிலுள்ள கல்சியம், கல்சியம் காபனேற் (சுண்ணாம்புக் கல்) வடிவத்திலேயே உண்டு. இதிலுள்ள கல்சியம் அயன்கள் இலகுவில் வெளிவரமாட்டாது. எனவே முட்டைக்கோதிலுள்ள கல்சியம் உடனடியாகவே தாவரத்துக்குப் போய்ச்சேரும் என எண்ணவேண்டாம். குறைந்தது இரண்டு முன்று வருடங்களுக்கு மேல் எடுக்கும். 

கல்சியம் குறைபாடு இருந்தால் கல்சியம் நைற்றேற் உரத்தை வாங்கிப் போடவும்.



தக்காளிக் காயின் குண்டிப்பகுதி (குண்டி, நல்ல தமிழ்ச்சொல்) கறுப்பாகி பழமாவதற்கு முன்பே அழுகிவிடுவதை அவதானித்திருப்பீர்கள். இது கல்சியக் குறைபாட்டால் வருவது.

கல்சியம், தாவரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயராத காரணத்தாலேதான் கல்சியம் (சுண்ணாம்பு) பவுடரை கரைத்து விவசாயிகள் தெளிப்பதுண்டு.

கொசுறுச் செய்தி: கல்சியம் காபனேற்றை  (சுண்ணாம்புப்பாறை) 800 பாகை C வெப்பநிலையில் எரித்தால் பெறப்படுவது கல்சியம் ஒக்சைட் (சுண்ணாம்பு துகள்கள்). இதற்கு நீர்விட்டுக் கரைத்தால் வருவது, கல்சியம் கைற்றொக்சைட் (வெத்திலையுடன் போடும் சுண்ணாம்பு).

 

Thursday 6 April 2023

பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…!

கம்யூனிச கொள்கைளின் கேள்வி ஞானத்திலே, பொதுவுடமை சித்தாந்தம் பற்றி, முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே, முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவி’தத்தனத்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று இன்றும் மனதில் நிக்கிறது. ‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப்பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.

சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை, நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.