Monday 14 March 2022

புனைகதை வெளியில் புதிய எல்லையைத்  தொடும்

பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு

 


றிவியலுடன் உலகளாவிய தனதனுபவங்களையும் கலந்து வித்தியாசமான தளங்களில் நின்று புதிய புனைவு மொழியிலும், உத்திகளிலும் கதை சொன்ன முறைமையில் இன்றைய எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவராக முதற் சிலருள் வைத்துப் போற்றத்தக்கவராக ஆசி கந்தராஜா திகழ்கிறார். பூங்கனியியல், உயிரியல்  தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர், அறிவியல் அறிஞர், விவசாயத்துறை ஆலோசகர், அனுபவமிக்க மின்னியல் ஊடகவியலாளர், எழுத்தாளர் என ஆசி கந்தராஜா பல்துறைகளிலும் பிரகாசிப்பினும் அவரை ஜனரஞ்சகப் படுத்தியது எழுத்தாளர் எனும் அவரது பேராளுமை தான் எனத் துணிந்து கூறலாம்.

எழுத்தாளர் எனும் வகையில் கதைஞராக, புனைவாளராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக ஆசி செயலியற்றி வருகிறார். அறிவியலை குறிப்பாக பூங்கனியியலை முன்னிறுத்தி ஆசி புனையும் கட்டுரைகளில் அறிவியல் சார்ந்த தகவல்கள் அவருடைய சித்திரிப்பு ஆற்றலுடன் செம்பாதியாய் கலந்திருக்கும். ஆனால் அவரது புனைவுகளிலோ ஆசிரியரின் திறனானது அவரது சித்திரிப்பு ஆற்றலுக்கு அப்பாலும் பல தளங்களிலும் வியாபித்து மானுட உறவு நிலைகளையும் உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்துவதாக அமையும்.

புனைகதைஞராய் நின்று ஆசி படைத்த இலக்கியங்கள் சர்வ தேசிய மாற்றங்களின் போக்கிற்கேற்ப இயைந்திருந்து அவரை ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளராக சிறுகதையைப் புத்தாக்கம் செய்யும் பிதாமகர்களில் ஒருவராக நிலைநிறுத்தின எனலாம். அந்த வகையில் 'பாவனை பேசலின்றி' (2000) உயரப் பறக்கும் காகங்கள் (2003) போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் அதில் உள்ளடங்கி யிருந்த கதைகளும் இலக்கியவெளியில் பெரிதும் பேசப்படலாயின. இந்த இரு நூல்களைத் தவிர 2018 இல் ஆசியின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பானது 'கள்ளக்கணக்கு' எனும் பெயரில் அறுவடையானது. 'பாவனை பேசலின்றி' சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான இலங்கை அரசின் இலக்கிய விருதினைத் தனதாக்கியிருந்தமையும், 'கள்ளக்கணக்கு' நூலானது தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது என இரட்டை விருதுகளைப் பெற்றிருந்தமையும் இவரது புனைவாற்றலுக்குக் கிடைத்த பேரங்கீகாரங்கள் எனக் கொள்ளலாம். அறிவியல் சார் தகவல்களையும் புனைவின் கூறுகளையும் கலந்து  புதுவித மொழிநடையுடனும் அங்கதச் சுவையுடனும் தன் கதைகளை அவர் நகர்த்தும் பாங்கு அவருக்கேயுரியது. இப் பண்பினாலேயே பெரும்பாலான வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அ.முத்துலிங்கம் அவர்களுடன் ஆசி பொருத்திப் பார்க்கப் படுகிறார்.

ஆசியின் அல்புனைவுகள் அறிவியல் சஞ்சிகைகளுக்கு நிகரானவை. விஞ்ஞானியான போதிலும் வித்துவத்துடன் அவற்றினைப் புனையாது விவசாயஞ் செய்பவர்களாலும் அறிவியல் பிரஞ்ஞை அற்றவர்களாலும் புரிந்துணரத்தக்க வகையில் தனது கட்டுரைகளை அவர் வடிவமைத்திருப்பார். நீண்ட காலப் பயிர்களை குறுகிய காலத்துள் மகசூல் தரவைப்பது அயன மண்டலப் பயிர்களை  அவுஸ்திரேலியாவிலும் பயிரிட்டு அறுவடை காண்பது ஒட்டு வைத்தும் பதிவைத்தும் பயிர்களில் மிகுந்த பலனைக் கொள்வது என பயிர்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளையும், பூங்கனியியல் அபிவிருத்தியினையும் இலக்கியமாக்கி