Friday 29 October 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (1)

ஆசி கந்தராஜா

1. காவா சடங்கு

காலையில் காவா (Kava) அருந்தும் சடங்கு. அதைத் தொடர்ந்தே மாலை ஒரு மணிக்குமாநாட்டின் முதல் அமர்வு எனச் சொன்னார்கள். சர்வதேச மாநாடொன்றில் இந்த ஒழுங்குமுறைபேராசிரியர் சுந்தரமூர்த்தியின் மனதுக்கு நெருடலாக இருந்தது. பிஜியின் தலைநகர் சூவாவில்தென் பசிபிக் நாடுகளுக்கான பல்கலைக் கழகமொன்றுண்டு. அங்கு நடந்த விவசாய மாநாடான்றில்ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றபோதே அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

 பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் தாவரம் 'காவா'. இது மிளகு மற்றும் வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை காயவைத்து இடித்து மாவாக்கிதண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டிகாவா பானத்தைத் தயாரிப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தேதென் பசுபிக் நாடுகளான பிஜிஹவாய்டோங்காநியூகினியா உள்ளிட்ட தீவுகளில்திருமணம்பிறப்புமரணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களில் காவா பானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

காவா என்ற பானத்தைபேராசிரியர் சுந்தரமூர்த்தி முன்பு சிட்னியில் வசிக்கும் அவரது பிஜி நண்பரின் வீட்டிலும் அருந்தியிருக்கிறார். களிமண்ணை தண்ணீரில் லேசாக கலந்து விட்டது போன்ற கலங்கல் திரவம் அது. மரத்தால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமொன்றில் வைத்திருந்தார்கள். பாயை விரித்து பாத்திரத்தைச் சுற்றி நிலத்தில் இருந்தவாறுதும்பு செதுக்கிய தேங்காய்ச் சிரட்டையில் காவாவை அள்ளி அள்ளி மாலை வரை குடித்தார்கள். சிரிப்பும் அரட்டையும் பின்னர் தூக்கமும் காவாவுடன் சேர்ந்த சமாச்சாரங்கள் எனஅன்று அவர் தெரிந்து கொண்டார். காவா அவருக்குக்கு ருசிக்கவில்லை. தொண்டை கட்டியது. நெடுநேரம் தலை கனத்து அம்மலாகவும் இருந்தது.

பிஜிக்கு வந்தபோதுமீண்டும் காவா அருந்த வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டார். மாலை அமர்வில்அவர் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்போது தலை அம்மலாக இருக்கும் என்ற பதகளிப்பில் காவா குடிப்பதை தவிர்க்க முயன்றார். அவர்கள் விடவில்லை. காவா நிரம்பியபெரியதொரு சிரட்டையை கையில் திணித்துவிட்டார்கள். குடிப்பதுபோல பாசாங்கு செய்தவாறு அருகிலிருந்த பிஜி பேராசிரியரிடம் காவா சடங்கு பற்றிக் கேட்டார்.

Wednesday 27 October 2021


பணச்சடங்கு- பல்லின பண்பாடுகளின் நுணுக்கமான பதிவு

அலைமகன்


ஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசிகந்தராஜாவின் புதுவரவு, பணச்சடங்கு சிறுகதை தொகுப்பு. ஏற்கனவே அவரது சிறுகதைகள், குறுநாவல் போன்றவற்றால் தமிழுலகில் நன்கு அறியப்பட்டவர். மட்டுமல்லாது, புனைவுக்கட்டுரை என்ற வடிவத்தை தமிழுக்கு அறிமுகம்செய்தது ஆசி கந்தராஜா அவர்கள்தான். தனது பரந்த உலக அனுபவத்தையும், தனது தொழில் மூலமும், கல்வி மூலமும் பெற்ற விவசாய விஞ்ஞான அறிவியலையும் எளிமையாக புனைவு என்ற வடிவத்துக்குள் உள்ளடக்கி பரவலாக்கியவர். தமிழில் இந்த முயற்சிக்கு ஆசி கந்தராஜா அவர்களே முன்னோடியாவார்.

ஈழத்து எழுத்தாளர்களில் மிக நுணுக்கமாக யாழ்ப்பாணத்தின் வாழ்வியல் கோலங்களையும், வட்டார வழக்குகளையும் சித்தரிப்பதில் ஆசிரியர் கைதேர்ந்தவர். குறிப்பாக அறுபது, எழுபதுகளில் யாழ்ப்பாண வாழ்க்கை முறையையும் அதன் உள்ளடுக்ககளையும் இவரின் கதைகளில் எப்போதும் இரசிக்க முடியும். பெரும்பாலும் கதையின் நாயகர்கள் நனவிடை தோயும்போது வரும் விவரிப்புக்கள் உண்மையில் ஆசிரியரின் நனவிடை தோய்தல்தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

முதலில் இந்த கதைகளிலுள்ள பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். இவற்றின் களங்கள் மிகவும் பரந்துபட்டவை. ஆஸ்திரேலியா, லெபனான், இஸ்ரேல், ஈரான், வன்னி, யாழ்ப்பாணம் என்று கதை நகரும் எல்லைகள் உலகளாவியவை. அந்தவகையில் இது ஒரு சர்வதேச, பல்லின பரிமாணம் கொண்ட தொகுப்பு. ஆனால் கதைகளின் கதையோட்டம் உண்மையில்ஒரு யாழ்ப்பாணத்து மனிதனின் பார்வையில் அல்லது அவனது அனுபவத்தில் இருந்துதான் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. கதைசொல்லி ஒருபோதும் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை விட்டு விலகுவதில்லை என்பது அவதானிக்கப்பட வேண்டியது. உதாரணமாக தலைமுறைதாண்டிய காயங்கள் என்ற கதையை குறிப்பிடலாம். புலம்பெயர்ந்த எல்லா ஈழத்தமிழ் மக்களினதும் மனங்களில் அவர்களின் தாய்நிலத்து நினைவுகள் காலம் முழுவதும் வண்டல் மண்ணாக படிந்து போயிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட கால நினைவுகள் மற்றும் தொன்மங்கள் வழியாக வந்த அந்த உணர்வை இலகுவில் அழித்துவிட முடியாது.

Tuesday 19 October 2021



ணைய சஞ்சிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூவாமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது.

நீங்களும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை என அடித்துச் சத்தியம் செய்வீர்கள்.

ஆனால் அது உண்மையல்ல!

பலாமரம் பூக்கும். பலாவின் பூக்கள் பல்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறு வேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்.

பெண் பூக்கள், பெரும்பாலும் அடி மரத்திலும் கொப்பின் அடிப்பாகத்திலும் தோன்றும். சில சமயங்களில் மேல் கிளைகளிலும் குறைவான எண்ணிக்கையில் தோன்றுவதுண்டு.

Thursday 14 October 2021


தக்காளி ஏன் சுவைக்கிறது...?

'அஜினமோட்டோ' ( Ajinomoto -“Essence of Taste”).

இது இல்லாத சைனீஸ் உணவு வகைகளே இல்லை. 'அஜினமோட்டோ' சேர்க்காவிட்டால், சைனீஸ் சாப்பாடு 'சப்'பென்று இருக்கும்.

பண்டைய கால சீனர்களும், ஜப்பானியர்களும் தங்களின் உணவில் ஒருவித கடற்பாசியை சேர்தார்கள். அந்த கடல்பாசி புதுவித சுவையை கொடுப்பதை உணர்ந்தார்கள். இந்த கடல் பாசியில் அப்படி என்ன இருக்கின்றது...? என்று 1908 ம் ஆண்டு, ஆராய்ச்சியில் இறங்கினார் ஒரு ஜப்பானிய பேராசிரியர். கூடுதல் சுவைக்கு காரணம் மொனோ சோடியம் குளுட்டாமேட் -MSG-  (Mono sodium glutamate)   என்ற வேதிப்பொருள்தான் என்பதை அறிந்தார். பின்பு அதிக ஆராய்ச்சி செய்து, இந்த மொனோ சோடியம் குளுட்டாமேட்டை எப்படி கடல் பாசியில் இருந்து பிரித்து எடுப்பது என்ற ரகசியத்தை கண்டு பிடித்தார். உடனே ஒரு பணக்கார ஜப்பானிய நிறுவனம், பேராசிரியரை நண்பனாக்கி, அந்த ரகசியத்தை பெற்றுக்கொண்டது. பின்பு அதை வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்தது. இந்த நிறுவனம்தான் அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto).

மொனோ சோடியம் குளுட்டாமேட் -MSG-  (Mono sodium glutamate) என்ற வேதிப்பொருளை அஜி-நோ-மோட்டோ (Aji-no-moto) என்ற ஜப்பானிய நிறுவனம், செயற்கை முறையில் தயாரித்ததால், அதன் கம்பெனி பெயரான 'அஜினமோட்டோ'வே (Aji-no-moto)  இந்த வேதிப் பொருளின் பெயராகி பிரபலமாகி விட்டது.

உதாரணமாக, Photo copy என்றால் சிலருக்கு புரியாது. இதையே 'ஜெராக்ஸ்' என்று சொல்லுங்கள். புரிந்து விடும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர்.

இனி தக்காளி விசயத்துக்கு வருகிறேன்.

இந்த மொனோ சோடியம் குளுட்டாமேட் MSG (Mono sodium glutamate) தக்காளியில் “இயற்கையாக” இருப்தாலேயே தக்காளி சுவைக்கிறது. இதனாலேயே எமது உணவுத் தயாரிப்பில் தக்காளி முதலிடம் வகிக்கிறது.

செயற்கையாக தயாரிக்கப்பட்ட 'அஜினமோட்டோ' உப்பை அதிகளவில் உணவில் சேர்ப்பது சௌக்கியத்துக்கு தீங்கானது.

சைனீஸ் உணவுப் பிரியர்களே உசாராக இருங்கள்....!


நிர்வாண அடி!

நிர்வாண அடி!

சிறுவயதில், எங்கள் வீட்டிலே எனக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் அடி விழுவதுண்டு. அவைகளும் பாவப்பட்ட ஜென்மங்கள். வளவில் எந்த மரமாவது காய்க்காமல் டிமிக்கி விட்டால், அடிக்காத மாடு படிக்காது என்ற கொள்கைப்படி, கோடாலியின் பின் புறத்தால் நாலு சாத்து சாத்துவார்கள். அவர்களின் தியறி சில மரங்களில் வேலை செய்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதன் சூக்குமம், நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் வரை விளங்கவில்லை. கோடாலியால் அடிவாங்கிய நோவினால் மரங்கள் காய்க்கவில்லை என்றாலும், அடி வைத்தியத்தில் வீட்டாருக்குத் தெரியாத அறிவியல் விளக்கங்கள் பல புதைந்து கிடப்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு தாவரத்தில் நீரையும் ஊட்டச் சத்தையும் இலைகளுக்கு கடத்துவது, காழ்க் கலங்கள் (Xylem Cells). இதற்கு வெளியேயுள்ள உரியக் கலங்கள் (Phloem Cells) இலையிலே தயாரிக்கப்பட்ட உணவை, வேருக்கும் தாவரத்தின் மற்றைய பகுதிகளுக்கும் கடத்துகிறது. கோடாலியால் மரத்தை அடிக்கும்போது, உணவைக் கடத்தும் உரியக் கலங்கள் சிதைக்கப்பட, தயாரித்த உணவின் பெரும்பகுதி தாவரத்தின் கிளைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் அங்கு உடல் தொழில் மாற்றங்கள் ஏற்பட்டு, தாவரம் பூக்கத் துவங்கும்.

இதற்கும் மேலாக, பலா மரத்தில் இன்னொரு விஷயமும் நடக்கிறது. பலாவில்,  புதிய அரும்பில் இருந்தே பூக்கள் தோன்றும். கோடாலியால் பலாவில் அடித்த காயம் மாறும் போது, அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி பூக்களாகி காயாகும்.

மரத்தைச் சுற்றி நிறைய அடி போட்டால், உரியக் கலங்கள் முற்றாக அறுபட, மரம் செத்துவிடும்.

விவசாய பண்ணைகளில், கூரிய கத்தியால் அடிமரத்து மரப் பட்டையை அரை சென்ரி மீட்டர் அகலத்துக்கு 'இடையிடையே' வெட்டிவிடுவார்கள்.

மரம் நிறையக் காய்க்கட்டும்' என்ற பேராசையில், மரத்தைச் சுற்றியுள்ள பட்டையை முழுமையாக வெட்டி வரைந்து விட்டால், அடுத்த வருடம் மரம், விறகுக்குத்தான் பயன்படும். இதை விடுத்து, வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மந்திர உச்சாடனம் செய்தபடி கோடாலியால் மரத்தை அடிக்க வேண்டுமென்பதோ, நடு இரவில் நிர்வாணமாய் சென்று அடிக்கவேண்டும் என்பதோ, வெறும் கட்டுக் கதைகளே.


Sunday 10 October 2021

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே...!

ன்று வைகாசி விசாகம். எங்கள் குடும்ப வைரவருக்கு முக்கனிகள் சகிதம் படையல் வைத்தோம். கந்தையா அம்மானின் தோட்டத்தில் வெட்டிப் புகைப் போட்டு, பழுக்க வைத்த, ஆமான கதலிக் குலை, கறுத்தக் கொழும்பான் மாம்பழம், அடி மரத்தில் காய்த்துப் பழுத்த பலாப்பழம் என, பல வகைப்பட்ட பழங்கள், வைரவரின் மடைக்கு வரிசை கட்டி நின்றன.

பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடங்களுடன் நான் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் இந்துசமயமும் படித்தேன். இலக்கியத்தில் பாரதி பாடலுடன் பாரதிதாஸன் பாடல்களையும் சிற்றம்பலம் மாஸ்டர் படிப்பித்தார்.



'கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே, இங்கு வேரிற் பழுத்த பலா' எனத் துவங்கும் பாரதிதாஸன் பாடலை, அன்றைய இலக்கிய வகுப்பில் வாசித்து, சிற்றம்பலம் மாஸ்டர் பொழிப்புரை சொன்னார்.

எனக்கு எப்பொழுதும் குறுக்குப் புத்தி. வேரில் கிழங்குதானே விழும், எப்படிக் காய் காய்த்துப் பழுக்கும்? என என் மூளை, குறுக்குச் சால் ஓடியது. இதை தாவரவியல் படிப்பித்த வாத்தியாரைக் கேட்கப் பயம். அமைதியாக இருந்துவிட்டேன்.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் Under ground stem என்போம்.  இதிலிருந்து தோன்றிய முகை அரும்பாகி, மண்ணுக்கு வெளியே எட்டிப் பார்த்து, காயாக மாறும்போது அது வேரில் காய்த்தது போலத் தோன்றும். இதைத்தான் வேரில் பழுத்த பலா என்பார்கள். எந்த மரத்திலும் வேரிலிருந்து காய்கள் தோன்றுவதில்லை, என்ற இந்த உண்மையை நான் பல்கலைக் கழகத்தில் விவசாயம் படித்தபோது தெரிந்துகொண்டேன்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள்.

Thursday 7 October 2021

கல்லாக்காரம்




னங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம், சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிப்பது. இது, பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரைக் (கருப்பணி) காய்ச்சிப் பெறப்படுவது. நூறு லிட்டரகள்; பதநீரைக் காய்ச்சி, ஐந்து கிலோ பனங்கற்கண்டு தயாரிக்கலாம்.

இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் நிறைந்துள்ளன என்றும் நீரிழிவு நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பனங்கற்கண்டை பயன்படுத்துவது நல்லது எனவும் அறிவியல் தகவல்கள் சொல்கின்றன.

தினமும் நான் சிறு துண்டு பனம் கற்கண்டை வாயில்போட்டு உமிழ்ந்தபடி, தேத்தண்ணி கோப்பி குடிப்பதுண்டு. சீனி, சர்க்கரை பாவிப்பதில்லை.

பசும்பாலுடன் மிளகும் பனங்கற்கண்டும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிப்பது எங்கள் ஊர் இருமல் வைத்தியம்.

பனம் கற்கண்டுடன் தேன், எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, தரமான பிரண்டி (Brandy) என்பன கலந்து, இரவு படுப்பதற்கு முன் சொட்டுச் சொட்டாகப் பருகுவது, எனது நவீன இருமல் மருந்து. ஓரிரு நாளில் இருமல் பறந்துவிடும். அநுபவத்தில் சொல்கிறேன், செய்து பாருங்கள்.

பிரண்டிக்கு பதிலாக பனஞ்சாராயம் சேர்ப்பது அதி விஷேசம் என்கிறான் சிட்னியில் வசிக்கும் நண்பக் ஓருவன். பிரண்டியையும் பனஞ்சாராயத்தையும் மருந்துபோலச் சேர்க்கவேண்டும். போதைக்காக அல்ல!

பனம்பொருள் அபிவிருத்தி சபை தயாரித்த பனம் கற்கண்டு தமிழ்க் கடைகளில் கிடைக்கும். படத்திலுள்ள பனம் கற்கண்டு வடமராட்சித் தயாரிப்பு.

 

 

Tuesday 5 October 2021


'பலாக் கட்டை'



செண்பகவரியன் பலாப்பழம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. இதில் இளம் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறைய சுளைகள் இருக்கும். மிகவும் இனிப்பான, நார்த்தன்மை அற்ற இச் சுளைகளைக் கடித்தால் தொதல் போல இரண்டு துண்டாகும். எங்கள் வளவிலும் செண்பகவரியன் பலாக் கட்டையை, சாவகச்சேரி சந்தையில் வாங்கி நட்டோம். அது கிசுகிசுவென வளர்ந்து வஞ்சகம் செய்யாமல் காய்த்தது.

பலாக் கட்டை என்ற பதம் சற்று விசித்திரமானது. பலா மரத்தின் நீண்ட கிளையை வெட்டிப் பதிவைத்த வெட்டுத் துண்டை, பலாக் கட்டை என்பார்கள்.

Friday 1 October 2021

 

கருகம்பனையும் காய்வெட்டிக் கள்ளும்.




த்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் 'கருகம்பனை' என்று அழைக்கப்படும் ஓர் பெண்மணி எமது அயலில் வாழ்ந்தார். நான் உட்பட ஊரிலுள்ள பலரும், 'கருகம்பனை'தான் அவரது பெயரென  எண்ணியிருந்தோம். இந்தப் பத்தி எழுதுவதற்கு முன்னர், ஊரில் வாழும் பெரிசுகளிடம் அவரது உண்மையான பெயர் என்ன? எனத் தட்டிப்பார்த்தேன். ம்ஹூம்! இன்றுவரை ஒருவருக்கும் அவர் பெயர் தெரியவில்லை.

கருகம்பனை என்ற ஊரில் பிறந்த அவர், எமது ஊரில் வாழ்க்கைப் பட்டதாக, கோவில் பெரிய குருக்கள் சொன்னார். ஊர்ப் பெயருக்கு ஏற்றபடி கரிய, நெடிய, திடமான உடல் தோற்றம் கொண்ட அவர், பாயில் கிடந்து அழுந்தாமல் தனது தெண்ணூற்று ஐந்தாவது வயதில் மாரடைப்பு வந்து காலமானதாக அறிந்தேன். 

கருகம்பனை, யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டி கீரிமலை வீதியில், கீரிமலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிராமம். பெயருக்குச் சாட்சியாக அங்கு பனைகள் நிறைந்திருந்தன.  உண்மையைச் சொன்னால், நான் மஹாஜனாக் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பில் சேரும்வரை கருகம்பனை பற்றிக் கேள்விப் பட்டதில்லை. மஹாஜனாக் கல்லூரியை பாவலர் துரையப்பா, கொட்டில் கட்டி ஆரம்பித்தபோது, தேவைப்பட்ட பனைமரங்கள் அங்கிருந்துதான் தறித்து வரப்பட்டதாகச் சொன்னார்கள். கருகம்பனைக் கதையுடன் கூவில் கள்ளும் கவுணாவத்தை வேள்வியும் சேர்ந்தே வரும். கருகம்பனைக் கிராமத்திலும் அதன் அருகேயுள்ள கூவில், வெளிக்கூவில் பிரதேசங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகள் வரை வைரம் பாய்ந்த, நூறு வருடங்களுக்கு மேற்பட்ட பனைகள் நின்று ஆட்சி புரிந்ததாக, பிறிதொரு தகவல் சொல்கிறது.