Tuesday 19 January 2021

முதல் பிரசவம்

சவாரித் தம்பர்…!

என்னை எழுத்தாளன் ஆக்கியவர்களுள் இவர் முக்கியமானவர். 

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், தினகரனில், திங்கள் முதல் வெள்ளிவரை சவாரித்தம்பர் என்னும், தொடர் கேலிச் சித்திரம் வெளி வந்தது. இதன் மறுவடிவம், வார மஞ்சரியில் சித்திர கானம் என்ற பெயரில் வந்தது. இவற்றை வரைந்தவர் சுந்தர் என அழைக்கப்பட்ட திரு சிவஞானசுந்தரம் அவர்கள். இவரது கேலிச் சித்திர நாயகர்களான சவாரித் தம்பர், சின்னக்குட்டி, பாறி மாமி, மைனர் மச்சான் ஆகிய அனைவரும், நாம் அன்றாடம் ஊரில் சந்திக்கும் பாமர மக்கள், சாதாரண மனிதர்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், இலங்கை அரசியல் மற்றும் சாதி வேறுபாடுகள், பிற்போக்குத் தனங்கள், மூடக் கொள்கைகளை நகைச் சுவையாக இவர்கள் நையாண்டி செய்தார்கள். சுந்தரின் திறமையை ஊக்குவித்தவர் திரு கைலாசபதி. கால ஓட்டத்தில் கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும், கார்டுநிஸ்ட் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவருடன் அவரது கேலிச் சித்திர பாத்திரங்களும் வீரகேசரிக்கு சென்றன. இவரே பின்னர் சிரித்திரன் என்ற கேலிச் சித்திர சஞ்சிகையை யாழ்பாணத்தில் ஆரம்பித்து நடத்தியவர். 

அப்போது நான் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சவாரித்தம்பரை வாசிக்காமல் படுப்பதில்லை என்னும் அளவுக்கு அதில் நான் ஊறிப்போயிருந்தேன். சவாரித்தம்பரை வாசிப்பதற்காகவே, நான் செய்தித்தாளுக்காக காத்திருந்த காலங்கள், இன்றும் என் நினைவில் சுழன்றடிக்கின்றன.

Saturday 16 January 2021

 ‘மொழி


ந்த திருமண மண்டபம் சற்றுச் சிறியது. பெருமளவில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் அலங்கரிக்கப்பட்ட வட்ட மேசைகள் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்தன. மேசையைச் சுற்றி பன்னிரண்டு கதிரைகள்.  முச்சுவிட இடமில்லை. நான் இருந்த மேசையில் எனக்குப் பக்கத்தில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். பதினாறு வயது மதிக்கலாம். பையனின் பெற்றோர் மணப் பெண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருக்கவேண்டும். மணப்பெண்ணை அழைத்துவர ஒப்பனை அறைக்குச் சென்றுவிட்டார்கள். பையன், திருமணத்துக்கு வந்த நேரம் முதல் ஐபோனை நோண்டிக் கொண்டிருந்தான். இன்றைய இளவல்கள் சதா ஐப்பாட்டுடனும் ஐபோனுடனும் காலத்தை கடத்துவது எனக்கு எரிச்சலைத் தரும் சமாச்சாரம். இதனால் ஐபோணிலிருந்து திசை திருப்ப அவனுடன் பேசினேன்.

சிட்னியிலுள்ள ஜேம்ஸ் றூஸ் விவசாய உயர் நிலைப் பாடசாலையில் பதினொராம் வகுப்பு படிப்பதாகச் கொன்னான். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள அதி புத்திசாலி மாணாக்கர்கள் கல்வி பயிலும் முதல் தர பாடசாலை அது. இங்கு கல்வி பயிலும் 95 விழுக்காடு மாணாக்கர்கள் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டிராத, ஆஸ்திரேலிய பிரசைகளான சீனர்கள், வியட்நாமியர்கள், கொரியர்கள், இந்தியர்கள் மற்றும் ஸ்ரீலங்கர்கள். இவர்கள் போட்டி பரீட்ஷை மூலம் வடிகட்டி எடுக்கப்பட்டவர்கள்.

இங்கு இன்னுமொரு கொசுறுச் செய்தியையும் பதிவு செய்ய வேண்டும்.

அடிப்படையில் ஆஸ்திரேலியா ஒரு விவசாய நாடு. ஆரம்பத்தில் நிலச் சுவாந்தர்களான வெள்ளையர்களே அதிகார மையத்தில் இருந்தார்கள். இவர்களின் பிள்ளைகள் விவசாய கல்வி பெறுவதற்காக சிட்னி றிச்மண்ட் என்னும் இடத்தில் 1891ம் ஆண்டு, ஹோக்ஸ்பெரி விவசாய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1989ம் ஆண்டு மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது.

இதே போல குவீன்ஸ்லாந்திலும் ஹற்றன் என்னுமிடத்தில் 1897இல் ஒரு விவசாயக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 2004இல் குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. ஜேம்ஸ் றூஸ் விவசாய உயர் நிலைப் பாடசாலையில், விவசாயத்தை ஒரு பாடமாக் கற்று, பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் மாணாக்கர்கள், ஹோக்ஸ்பெரி விவசாய கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொள்வது அன்றைய பாரம்பரியம். ஆனால், எனது (இன்றைய) 35 வருட ஆசிரிய அநுபவத்தில் ஒரேஒரு மாணவனே விவசாயம் படிக்கவென ஹோக்ஸ்பெரி விவசாய கல்லூரிக்கு வந்ததை, காலத்தின் கோலம் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்கள் மருத்துவம், சட்டம், கணக்கியல் போன்ற கியாதியுள்ள துறைகளையே நாடுவது வழக்கமாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பான பன்னிரண்டாம் வகுப்பு இறுதிப் பரீட்ஷைக்கு, தமிழையும் ஒரு பாடமாக எடுக்கலாம். ஒரு சில மாணவர்கள் இதில் சிறப்புச் சித்தியும் அடைந்திருக்கிறார்கள். இவர்களுள் ஜேம்ஸ் றூஸ் பாடசாலையில் படித்த மாணவனும் ஒருவன். இதனால் தமிழ் மொழி கல்வி பற்றிக் கருத்தறிய அவனது வாயைக் கிளறினேன்.

Friday 15 January 2021

'வைரஸ் புராணம்'

ங்கள் சிட்னி வீட்டில், ஒரு எலுமிச்சை நின்றது. வருடம் முழுக்கக் காய்க்கும். விதைகள் இல்லை, நல்ல புளி. திடீரென அதன் இலைகள் வெளிறிச்சுருண்டு, பட்டை வெடித்து, காய்ப்பதை நிறுத்திக் கொண்டது.

எலுமிச்சைக்கு வைரஸ் நோய் (CTV) என்பதை உறுதி செய்துகொண்டேன். தாமதிக்காது மரத்தை வேருடன் பிடுங்கி எரித்து விட்டேன்.

மனைவிக்கோ அது பெரும் கவலை. அது அவள் ஆசை ஆசையாக, பண்ணையில் வாங்கி, நட்டுவளர்த்த மரம்.

எல்லாத்துக்கும் மருந்தடிக்கிறியள் எலுமிச்சைக்கு மருந்தடிக்கேலாதோ? எனப் புறுபுறுத்தாள் மனைவி.

தாவரத்தையோ அல்லது மனிதர் உட்பட விலங்குகளையோ தாக்கும்   வைரஸ் கிருமிகளுக்கு மருந்தில்லை என்றேன் மொட்டையாக.

என்ன சொல்லுறியள்? உலகமே கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க, கங்கணம் கட்டிக்கொண்டு ஆராச்சியில் இறங்கியிருக்குது. நீங்கள் வைரஸ் கிருமிக்கு மருந்தில்லை என, புதுக்கதை சொல்லுறியள் என்றவாறே என் முன் வந்தமர்ந்தாள் மனைவி.

Tuesday 12 January 2021

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்

 

ம்மா என்னுடன் சிட்னியில் வாழந்த காலங்களில் தைப்பெங்கலன்று, சிட்னி கோவிலொன்றில் எழுந்தருளி இருக்கும் வைரவருக்கு வடை மாலை சாத்துவார். இதற்கான நினைவூட்டல், தைப்பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னரே துவங்கிவிடும்.

கனவில் தன்னை நாய் துரத்துவதாகவும், வைரவர் நாய் வாகனத்தில் திரி சூலத்துடன் வந்து, நெஞ்சாங்கூட்டை அமத்துவதாகவும் இதனால் இரவில் மூச்சுவிடக் கஷ்டப் படுவதாகவும் கதைகளை அவிழ்த்து விடுவிடுவார்.

அம்மாவின் இந்த அதிதீவிர வைரவர் பக்திக்குக் காரணம் உண்டு!

எங்கள் குடும்பத்துக்கென அம்மாவுக்கு சீதனமாக வந்த பனங்கூடலில், கொண்டல் மரத்தின் கீழ் ஒரு வைரவர் இருந்தார். வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் அவர் நாங்கள் ஏற்றும் வெளிச்சத்தில் இருப்பார். மற்றும்படி இருட்டில்தான் அவரது சீவியம்.

தைப்பொங்கல் ன்று மாத்திரம் வைரவருக்கு பொங்கல் பொங்கி முக்கனிகள் சகிதம் படையல் வைப்போம். இப்படி மூன்று நான்கு குடும்பங்களுக்கு ஒரு வைரவர் வீதம், பல வைரவர்கள், பனைகளுக்கு நடுவே இருந்து யாழ் குடாநாட்டில் அருள் பாலிப்பர்கள்.

வைரவர் வழிபாடு பற்றி என்னுடைய ஐயா சொன்ன சங்கதி ஒன்று இங்கு பதிவுக்குரியது. 'போத்துக்கேயர் இலங்கைக்குப் படையெடுத்து இலங்கையை ஆண்டபோது மக்களை வலோற்காரமாக மதம் மாற்றியதுடன் வழிபாட்டு தலங்களையும் அழித்தார்களாம். அப்போது யாழ்ப்பாண மக்கள், பயத்தில் தங்கள் பின் வளவுகளுக்குள் அல்லது பனங்கூடலுக்குள் வைரவர் சூலங்களை நாட்டி மறைவாக வழிபடடார்களாம். அதுவே காலப்போக்கில் வைரவர் கோயில்களாக வந்திருக்கலாம்' என்ற கருத்தை சொன்னார்.

இந்த வகையில் தான், போத்துக்கேய எஜமானர்களுக்கு பயந்து யாழ்ப்பாணத்தில் 'அடுப்பு நாச்சியார்' என்ற பெயரில், அடுப்படிக்குள் அடுப்பைக் கும்பிட்ட வழக்கம் வந்ததாம். இன்றும் கிராமத்தில் தைப்பொங்கலன்று முற்றத்தில் பொங்கியவுடன், பொங்கிய சாதத்தில் ஒரு பகுதியைக் கிள்ளி அடுப்பில் வைப்பதும் இதன் நீட்சியாகவே இருக்க வேண்டும்

தைப்பொங்கலன்று, வைரவருக்கு பொங்கல் பொங்கி, முக்கனிகளாகச் சொல்லப்படும் மா, வாழை, பலாப் பழங்களுடன் மடைவைக்கும் போது, பனை மரம் பற்றிய தகவலொன்றை அறிந்து கொண்டேன். முக்கனிகளைப் பற்றிய புனிதம் சைவசமய பூசை அநுட்டானங்களிலே வலியுறுத்தப் படுவது பிற்காலத்திலே தோன்றியதாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விருட்சம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆதிகாலத்தில் யாழ்ப்பாணக் கோவில்களுக்கு தல விருட்சமாக அமைந்தது, யாழ் கலாசாரத்துடன் கைகோத்துச் செழித்து வளர்ந்த பனை மரமே' என்றார் புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த பெரியவர் ஒருவர் .

Sunday 10 January 2021

எஸ்.பொ: ஒரு நனவிடை தோய்தல்…!


நான் செத்தால், இந்தியாவுலதான் சாகவேணுமடா தம்பி…’ என்று சிட்னியில் நடந்த மரணச் சடங்கொன்றில் கலந்துவிட்டு, எஸ்.பொ என்னுடன் காரில் வரும்போது சொன்னார்.

ஏன் அப்படி?’ என்று கேட்டேன்.

இந்தியாவிலென்றால் எஸ். பொ. செத்தார் எனச் செய்திவரும். ஆனால் ஆஸ்திரேலியாவில் டாக்டர் பொன் அனுராவின் அப்பா காலமானார் என்பதுடன் என்னுடைய கதை முடிந்துவிடும்’ எனச் சொல்லிச் சிரித்தார். நீண்டகாலமாக அவருடன் ஆரோக்கியமான இலக்கிய நட்புப் பாராட்டியவன் என்ற வகையில் இதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்தது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, காடாறு மாதம் நாடாறு மாதம் என எஸ்.பொ இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறிமாறி வாழ்ந்தவர். இருப்பினும் எழுத்தாளராக அவர் ஆஸ்திரேலியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்று சொல்வதற்கில்லை. அதற்கான காரணிகள் பல.

எஸ்.பொ’வை நான் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் சந்தித்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

Wednesday 6 January 2021

சமையல் ஒரு கலை.

சமைப்பதற்கு நிறையக் கற்பனை தேவை. இதற்கு, வீட்டில் சமையல் பொருட்களும் மளிகைப் பொருட்களும் 'மட்டுமட்டாக' இருக்க வேண்டும், தட்டுப்பாடு நிலவவேண்டும். அப்போதுதான் அதனுடன் இதைக் கலந்து, காணாவிட்டால் இன்னுமொன்றையும் கலந்துசமைக்கும் கிறியேற்றிவிற்றி (Creativity) ஏற்படும். இதனால் உணவும் சுவைக்கும் மளிகைப் பொருட்களும் விரயமாகாது. ஊரில், கீரைக்குள் பருப்புப் போடுவதும், வறைக்குள் தேங்காய்த் துருவல் கலப்பதும், இறைச்சிக்கு உருளைக் கிழங் கு சேர்ப்பதும் இதனால்தான்.

'என்னடா? பல்கலைக் கழகத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பவன் சமையலைப் பற்றிச் சொல்கிறானே' என நீங்கள் எண்ணலாம்.

நான் நன்றாகச் சமைப்பேன். 🤪😜😝

எனது சமையலில் கற்பனை இருக்கும். இது நானாகவே கற்றுக் கொண்ட கலை. ‘Well done Kantharajah. நல்ல சமையல்’ என, என்னை நானே சமைக்கத் துவங்கிய காலத்தில் பாராட்டிக் கொள்வேன். எம்மை நாமே பாராட்டிக் கொள்வதில் தப்பில்லை. அது நிச்சயம் முன்னேற்றத்துக்கு வழி சமைக்கும் என்பார் ஜேர்மன் பேராசிரியர் ஒருவர்.

சிலீப் அப்னியா 

(Sleep apnea)


ண்பன் ஒருவன் சமீபத்தில் வாகனம் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டு மரணமானான். அவனுக்கு சிலீப் அப்னியா குறைபாடு இருந்ததாக பின்னர் தெரியவந்தது.

சிலீப் அப்னியா என்றால் என்ன?

இரவில் நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, உங்களை அறியாமலே உங்கள் தொடர்சுவாசம் தடை செய்யப்படுவதை, சிலீப் அப்னியா என்பார்கள். இதனால் உங்கள் மூளைக்கும் மற்றைய உடல் உறுப்புக்களுக்கும் செல்லும் பிராணவாயு தடைப்படும்.

இது நோயல்ல. ஒரு குறைபாடே!

சத்தம் போட்டுக் குறட்டை விடுதல், நித்திரை தடைப் படுதல், ஆழ்ந்த நித்திரையில் மூச்சுத் திணறுதல், காலையில் தலைவலி, சீறிச்சினத்தல், அளவிற்கு அதிகமான பகற்தூக்கம், வாகனம் செலுத்தும் போது தன்னை மறந்து தூங்குதல். அதனால் விபத்து, உணர்ச்சி வசப்படுதல், கோர்வையாக ஒன்றைப் பேச முடியாத நிலை, அவதானக் குறைவு, மனவழுத்தம் என்பன, சிலீப் அப்னியா குறைபாட்டால் வருபவை.

இதன் காரணமாக இருதயம், சிறுநீரகம் ஆகிய உள் உறுப்புக்கள் பாதிப்படைவதுடன் உங்கள் தாம்பத்திய வாழ்வும் பாதிக்கப்படும்.

இப்போது சொல்லுங்கள் உங்களில் எத்தனைபேருக்கு மேலேசொன்ன அறிகுகுறிகள் இருக்கின்றன?

இருந்தால், உங்கள் குடும்ப வைத்தியரிடம் முறையிடுங்கள். அவர் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வார்.

இதற்காக உங்களை ஓரிரவு தங்கவைத்து, நீங்கள் தூங்கும்போது அதற்குரிய பரிசோதனைகளை (Sleep study) செய்வார்கள்.

Tuesday 5 January 2021

கண்ணைக் குருடாக்கிய மெதைல்

 அல்க்ககோல்.

ண்மைச் சம்பவம்.

ஆய்வு கூட உதவியாளர் ஒருவருக்கு இரவோடு இரவாக, கண்பார்வை போய்விட்டது. நடந்தது இதுதான்! மதுவுக்கு அடிமையான அவர் மதுச்சாலைக்கு மது அருந்தப் போயிருக்கிறார். தொடர்ந்து மது அருந்தப் பணம் போதவில்லை. நேரே தான் பணி புரிந்த ஆய்வு கூடத்துக்கு வந்தவர், மது மயக்கத்தில் ஆய்வுகூடத்தில் எதைல் அல்க்ககோலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மெதைல் அல்க்ககோலை தவறுதலாக எடுத்து அருந்தியிருக்கிறார். காலையில் கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன.

மெதைல், எதைல் இரண்டும் அல்க்ககோல் மதுக்களே.

நாம் அருந்தும் விஸ்க்கி, பிரண்டி, வொட்கா, சாராயம் அனைத்திலும் எதைல் அல்க்ககோல் 40 – 45 வீதம்வரை கலந்திருக்கும்.

ஆனால் மெதைல் அல்க்ககோல் நஞ்சு, கண்ணைக் குருடாக்கும்.

பத்து வீதமளவில் மெதைல் அல்க்ககோல் கலந்த, எதைல் அல்க்ககோல்தான் கடைகளில் விற்கப்படும் Methylated spirit. இதை விளக்கு எரிக்கப் பாவிப்பார்கள். இதைத்தான் நாம் முன்பு 'பெற்றோல்மாக்ஸ்' கொழுத்தப் பாவித்தோம். சிலர் போதைக்காக, ஏலுமிச்சைச் சாறைக் கலந்து இதைக் குடிப்பார்கள். எலுமிச்சை, மெதைல் அல்க்ககோல் நஞ்சைச் சமப் படுத்தும் என்பது அவர்கள் வாதம். இது அபாயகரமானது.

எதைல் அல்க்ககோல் மதுவை வடிக்கும் போது மெதைல் அல்க்ககோலும், மலிவு விலை மதுவகைகளில் கலந்திருக்க வாய்ப்புண்டு. வடி சாராயம் இதற்கு நல்லதோர் உதாரணம்.

மதுப்பிரியர்களே எச்சரிக்கையாக இருங்கள். விலை அதிகமென்றாலும் நல்லவகையாகப் பார்த்து வாங்குங்கள்.

மெதைல் அல்க்ககோல் - Methyl alcohol CH3OH.

எதைல் அல்க்ககோல் - Ethyl alcohol C2H5OH

Monday 4 January 2021

வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!


பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் கலாநிதி காசிநாதன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பனில் வாழ்கிறார். இருந்தாலும் பொதுவெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர், கலாநிதி இந்திரபாலா. இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த (2019) தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். நமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் 'எல்லோருக்கும் எல்லாம் தெரியும்' என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

கலாநிதி காசிநாதனுடன் நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் பேசுவது உவப்பானது. பல விஷயங்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம். சமீபத்தில் அவருடன் பேசியபோது, தனது பின் வளவில் செழிப்பாக வளர்ந்த வாழையொன்று ஐந்து சீப்பில் குலை தள்ளியிருப்பதாகச் சொன்னார்.

அப்படியா? என நான் ஆச்சரியப்பட்டேன். ஐந்து சீப்பில் வாழை குலை தள்ளுவது ஒன்றும் புதினமில்லை. ஆனால் அவர் வாழும் மெல்பனில் அது ஆச்சரியம்தான்.

அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, கண்டமும்கூட! இங்கு வெப்ப வலயம், உபவெப்ப வலயம், குளிர் வலயம் என மூன்று மண்டலங்களும் உண்டு. பூமத்தியரேகைக்கு கீழே, பூமிப்பந்தின் தென் முனைப் பக்கமாக அவுஸ்திரேலியா அமைந்திருக்கிறது. இதனால் பூமத்தியரேகைக்கு மேலே இருக்கும் நாடுகளுக்கு, அவற்றின் குளிர் காலங்களில் விவசாய உற்பத்திகளைப் பெருமளவு ஏற்றுமதி செய்யமுடியும். இதுவே இந்த நாட்டுப் பொருளாதார வெற்றியின் சூக்குமம் எனச் சொல்வார்கள்.