Saturday 8 May 2021

'எரிற்றியர்களும் இலங்கைத் தமிழர்களும்'

-1-

ன்று சனிக்கிழமை. காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போலத் தோன்றியது. வீதிக்கு வந்தான் முகுந்தன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை. உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், ஆரம்பித்த நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை, ஆகிய சகல விபரங்களும் தாங்கிய விளம்பர பலகை யொன்று சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி வழங்கும் உலக நிறுவனங்கள் அடுத்தடுத்து வைத்திருப்பார்கள்.

முகுந்தன் தங்கி ருந்த ஹோட்டல், நெடுஞ் சாலையைக் கடக்கும் குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. நெடுஞ் சாலையில் யப்பானிலிருந்து இறக்குமதியான ஆடம்பர வாகனங்கள்,அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பாதசாரிகள் சர்வசாதாரணமாக, குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத் துணிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் முகுந்தன்.

'ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டவாறே எதியோப்பிய இளைஞன் ஒருவன், புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான்.

'நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு பரிமாறினேன். நான் எட்வேட், என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன்' எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான்.