Friday 26 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (2)

ஆசி கந்தராஜா


2. வெள்ளையர்கள் பழக்கிய குடி.

அன்று முழு நிலவு. அதுவும் சித்திரைப் பூரணை!

அன்றைய தினத்தை தங்களின் மூதாதையர்களின் தினமாக ஆட்டம் பாட்டத்துடன் அநுஷ்டித்தார்கள். பகல் முழுவதும் ஒருவித போதை மயக்கத்திலும் உறக்கத்திலும் இருந்தவர்கள், மாலையானதும் 'யுக்கலிப்ரஸ்' மரத்தின் கீழ் ஒன்று கூடினார்கள். கருக்கல் நேரத்தில், பைன் மர ஊசி இலைகளையும், யுக்கலிப்ரஸ் மர இலைகளையும் எரித்துப் புகை போட்டு, பாட்டுப் பாடினார்கள். வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் கொழுத்த 'கங்காரு'க்களை தோளில் சுமந்து வந்தார்கள். அவற்றைத் தோலுடன் நெருப்பில் கருக்கி, யுக்கலிப்ரஸ் இலைகளை எரித்த புகையில் பதப்படுத்தி, மூதாதையர்களுக்குப் படைத்தார்கள். அதன் பின்னர் விருந்தும் ஆட்டமும் துவங்கியது. இப்படியான ஒரு சூழலில், அபொர்ஜினி குழுத் தலைவரை, மாணவர்கள் சுந்தரமூர்த்திக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது இயல்பாகவே அபொர்ஜினி மக்களின் வரலாறு பற்றிப் பேச்சு வந்தது.

'தன்னுடைய பெயர் அக்காமா (Akama), திமிங்கிலத்தின் பலம் கொண்டவன் என்பது அதன் பொருள்' என்று, தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் ஒரு பழுத்த அநுபவசாலி என்பது பேச்சில் தெரிந்தது. 'பாம்' மர இலை ஒன்றால் காத்து விசிறியபடி, தங்களது வரலாற்றில் நடந்த சோக அத்தியாயங்களை, தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் சொல்லத் துவங்கினார்.



1770ம் ஆண்டு கப்டன் குக் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர்களின் வருகை (1788), ஆதிவாசிகளின் வாழக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. முதலில் குற்றவாளிகளும் அவர்களின் காவலர்களும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்டார்கள். பின்னர் பிரித்தானியாவில் வாழ லாயக்கற்ற காவாலிகளும், 'கடைப்புலி'களும் வந்தார்கள். வரும்போது அவர்கள் 'சும்மா' வரவில்லை! விஷக் காச்சல், அம்மை போன்ற நோய்களையும் கொண்டு வந்தார்கள். அதுவரை ஆதிவாசிகளிடம் இல்லாத பால்வினை நோய்களை, பரப்பியவர்களும் வெள்ளையர்களே. காலப் போக்கில் நாடு விருத்தியடைய, ஐரோப்பிய வெள்ளையர்களின் குடியேற்றம் படிப்படியாக ஆரம்பமாகியது.

Friday 19 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (1)

ஆசி கந்தராஜா

 

1. தப்புத்தாளங்கள்

ந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. அதற்கும் மேலாக அந்த முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது அவரது மனதைச் சுட்டெரித்தது. மற்றவர்களுடன் ஒத்துப் போவதென்றால், போலிகளுக்குத் துணை போவதுதானோ?

'அபொர்ஜினி' என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச் சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, சுந்தரமூர்த்திக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின் ஆஸ்திரேலியா வந்தவர் சுந்தரமூர்த்தி. அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பது பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. சுமார் நாற்பத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. கடுமையான வறட்சியினால் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, பிழைப்புக்காக புதிய பூமி தேடி, இந்தோனேசியத் தீவுகளின் வழியாக இவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்கள் என்ற கருத்தும் உண்டு. 1974ம் ஆண்டு, நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 'முங்கு குளத்தருகில்' (Mungo Lake) கண்டெடுக்கப்பட்ட மனிதச் சுவடுகளின் மரபணுக்கள், இந்திய பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday 12 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (3)

ஆசி கந்தராஜா



3: இந்திய மைனாக்கள்

வார்த்தை தவறாது, மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை பத்து மணிக்கே சுந்தரமூர்த்தியைக் கூட்டிப்போக வந்திருந்தான் சேகர். தென் இந்தியாவில் இருந்து கரும்புத் தோட்ட வேலைக்கு வந்த குடும்பத்தின் வாரிசான சேகரிடம் சொந்தமாக காரை எதிர்பார்க்க முடியாது. பிஜித் தீவுகளில் றெயில் வண்டிகளும் கிடையாது. எனவே வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக் கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றார்கள்.

சேகரின் பெற்றோர்கள் தலைநகர் சூவாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நௌசோறி என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அங்குதான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. போகும் வழியில் மிகப்பெரிய சர்க்கரை ஆலை ஓன்று இயங்காமல் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தார். அது பற்றி அவனிடம் கேட்டார்.

என்னுடைய மூதாதையர்களின் பிழைப்பு இந்த ஆலையை நம்பியே இருந்தது. 1882ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலை 1959இல் மூடுவிழா கண்டது. எல்லாம் தெரிந்தவர்களாக, தங்களைத் தாங்களே எண்ணிக் கொண்ட பிரித்தானியர்கள், பிஜித்தீவில் செய்த தப்புத்தாளங்களில் இதுவும் ஒன்று!

அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.


பிஜியின் பாவு தீவைச் சேர்ந்த,  ‘சேரு-எபெனிசா-சாக்கோபாவு’ என்பவன் பிஜியில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை தன்னுடைய கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, பிஜியின் அரசனாக தன்னை அறிவித்தான். 1874 ஆம் ஆண்டு பிஜி பிரித்தானியரின் கட்டுப்ப்பாட்டில் வரும் வரை இவனே பிஜியை ஆண்டு வந்தான். பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர், பிஜியின் சர்க்கரைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களைத் தருவித்தனர். அப்போது இளைஞனாக வந்தவர்தான் என்னுடைய முப்பாட்டன். அவரும் என்னுடைய தாத்தாவும் 1959ம் ஆண்டு, இந்த ஆலை மூடப்படும்வரை ஆலையைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டத்திலேயே அடிமைகளாக உழைத்தார்கள்.

இதைச் சொல்லும்போது சேகர் சற்று உணர்ச்சிவசப் பட்டான்.

Friday 5 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (2)

ஆசி கந்தராஜா


2. இனக் குரோதம்

மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுள் பெரும்பாலானோர் பசுபிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் காவா மயக்கத்தில் இருந்தார்கள். பேராசிரியர் சுந்தரமூர்த்திக்கு நேரம் போகவில்லை. மெல்ல எழுந்து சேகரின் அருகே வாங்கில் அமர்ந்து வலிந்து புன்னகைத்தார்.

சேகர், தான் சம்பாசனையின் நடுவே திடீரென எழுந்து வந்ததை நினைத்து நெளிந்தான். பின்னர் சிறிதுநேர இடைவெளி விட்டு, குறை நினைத்துக் கொள்ளாதீர்ள். இங்குள்ள இந்தியர்களின் நிலமை அப்படி என்றான்.

அப்படி என்றால் எப்படி? என்று புருவத்தை உயர்த்தினார் சுந்தரமூர்த்தி.

சுற்றும் முற்றும் பார்த்து ஒருவரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டபின் சேகர் பேசத்துவங்கினான்.

பிஜித் தீவில் இரண்டாயிரமாம் ஆண்டு மே மாதம், பிஜி-இந்தியர் மகேந்திர சௌத்ரி, ஜனநாயக முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். சனத்தொகை எண்ணிக்கையில் அப்போது இந்தியர்கள், பூர்வீக பிஜியர்களிலும் பார்க்கச் சற்று அதிகமாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று. இந்தியர் ஒருவர் பிஜி நாட்டின் பிரதமராவதை, சுதேசிகளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இராணுவத்தில் சுதேசிகளான பிஜியர்கள் மாத்திரம் இருந்தார்கள். இதன் நீட்ச்சியாக இராணுவ புரட்சிக்காரர்களால் மகேந்திர சௌத்ரி கைதுசெய்யப்பட்டார். அவர் சிறை வைக்கப்பட்ட பின்பு, புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் அட்மிரல் பைனமராமா இருவரும், இதே காவா பானத்தை சேர்ந்து அருந்தி, தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களாம். இதுபற்றிப் பல விமர்சனங்கள், கட்டுரைகள் அப்போது உலக ஊடகங்களில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான துவேச உணர்வுகள், சௌத்ரியின் வெற்றியைக் காரணம்காட்டி கூர்மை அடையத் துவங்கியது, எனச் சொன்னவன் தொடர்ந்து பேசாது தன் கைகளால் முகத்தை அழுத்தித்துடைத்து சற்று நேரம் அமைதியானான்.

அப்புறம்? எனக் கேட்டு சுந்தரமூர்த்தி கதையைத் தொடர அடியெடுத்துக் கொடுத்தார்.