Tuesday 28 September 2021

கட்டையர்,  எம் ஊர் (கைதடி) கட்டையர்!

பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம் ‘Four pack, six pack’  உடம்புக்காக இளஞர்கள் ஜிம்முக்கு அலைவார்களே...? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும் குரக்கனும் சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு ‘six pack’ உடம்பு தானாகவே வந்தது.  அவர் கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார் ###

யாழ்ப்பாணத்தில் பல தோட்டங்களுக்கு நடுவில் ஒரு பொதுவான கிணறு இருக்கும். அறுபதுகள் வரை பட்டை இறைப்புத்தான். இதற்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். பெரிஐயா ஒரு விவசாயி. அவரின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும் நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.

Monday 27 September 2021

முந்தானை முடிச்சும் முருங்கைக்காயும்



யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. சிட்னியில் என்னுடன் அவர் இருபத்தைந்து வருடங்கள் சுகதேகியாக வாழ்ந்து, 92 வயதில் காலமாகும்வரை அவரது முப்பத்துரண்டு பற்களும் விழாமல் அப்படியே இருந்தன.

வீட்டில் முருங்கைக்காய் சமாசாரம் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அம்மா அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.

உலாந்தா முருங்கைக்காய் மிக நீளமானது. இலங்கையின் ஏனைய பகுதிகளிலே 'யாழ்ப்பாண முருங்கை' என்று அழைக்கப்படும் இது, யாழ்குடா நாட்டில் மட்டுமே 'உலாந்தா முருங்கை' என்று அழைக்கப்படுகின்றது. 'உலாந்தா முருங்கை' என்ற பெயர் வந்த வர்த்தமானத்தை என்னுடைய பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டேன். ‘Surveyor’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நில அளவையாளர்' என்பது தமிழாக வழங்கும் பொழுது, யாழ்ப்பாணத்தில் மட்டும் 'உலாந்தா' என்று அழைக்கப்படுவதும் உண்டு.

ஆங்கிலேயருக்கு முன், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டார்கள். இந்த 'உலாந்தர்களே' முதன்முதலில் இலங்கையில், முறைப்படி நிலஅளவை செய்தார்கள். அதைச் செய்தவனை யாழ்ப்பாணத்தில் 'உலாந்தா' என்று அழைத்தார்கள். இந்த 'உலாந்தர்' இந்தோனேசியத் தீவுகளையும் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அங்கே கண்ட நல்ல முருங்கை வகையை யாழ்ப்பாண விவசாயிக்கு அறிமுகப் படுத்தினார்களாம். இந்த வரலாற்றினை, முன்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், உலாந்தா முருங்கை என்று பெயர் வைக்கப்பட்டதாம்.

சும்மா சொல்லப்படாது!