Tuesday 6 September 2022

 

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

அ. ராமசாமி

 

புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால்நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தவிர்க்க முடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது. இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்பு பற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டுக்குள் ஏற்பட்ட போர்களாலும் கடும்பஞ்சங்களாலும் பெருந்தொற்று நோய்களாலும் நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாழ்க்கையைக் குறித்த சொல்லாக ‘அலைந்துழல்வு’ – Diaspora – என்ற சொல் உருவாகி நிலைபெற்றதின் பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப்போர்களைச் சந்தித்த காரணிகள் இருந்தன. அதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் உலகெங்கும் உருவாக்கிய காலனிய வடிவத்தால் ஒரு நாட்டின் மனிதர்கள் இன்னொரு நாட்டிற்குள் குடியமர்த்தப்பட்ட பெரும் நிகழ்வுகளும் நடந்தன. அப்பெருநிகழ்வுகளைக் குறிக்கும் சொல்லாடலாகவும் ‘அலைந்துழல்வு’ இருக்கிறது. இந்திய, இலங்கைத் தமிழ் மனிதர்கள் பிரிட்டானியக் காலனியவாதிகளாலும் ஒல்லாந்து காலனியாட்சியாளர்களாலும் வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்க்கப்பட்டு உடல் உழைப்புத் தொழிலாளிகளாக ஆக்கப்பட்ட வரலாறும் நிகழ்வுகளும் அவ்வப்போது புனைகதைகளாக ஆக்கப்பட்டுள்ளன. ப.சிங்காரம், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களின் நாவல்களும் ஜெயந்திசங்கர் போன்றவர்களின் சிறுகதைகளும் அப்படியான வகைப்பாட்டில் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியில் அண்மையில் வந்த இரண்டு நாவல்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதப்பெற்றுள்ளன.