Monday 29 April 2024

வேர்க்கடலை (கச்சான்கடலை) மற்றும் உருளைக்கிழங்கு




வேர்க் கடலை (கச்சான் கடலை) மற்றும் உருளைக் கிழங்கு வேரில் உற்பத்தியாவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா

மீண்டும் உங்களைக் குழப்புகிறேனோ?

வேர்க் கடலைத் தாவரம் நிலத்துக்கு மேலே மெட்டுவிட்டுப் பூத்தாலும் காய்ப்பது நிலத்துக்கு கீழே. பாமரமொழியில் சொன்னால் தரைக்கு மேலே பூக்கள், தரையின கீழே காய்கள் (பழங்கள்). வேர்க்கடலை தாவரம் சுமார் ஒரு அடி உயரம் அடையும் போது கருக்கட்டிய பூக்களிலிருந்து நீளமான கூரான ஆப்பு போன்ற அமைப்பு தோன்றி மண்ணுக்குள் போகும். இந்த ஆப்புகளே வேர்க்கடலையை மண்ணுக்குள் உருவாக்குகின்றன. அதாவது பெயர் வேர்க்கடலை என்றாலும் அவை வேர்களில் தோன்றுவதல்ல. இதனால் வேர்க்கடலை தாவரத்தை மண்ணில் படர விடுங்கள்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள். உண்மைதான். அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக் கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் (Underground stem) என்போம். மண்ணுள் புதைந்திருக்கும் இத்தண்டிலிருந்தே  உருளைக் கிழங்கு உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியை பிடுங்கிப் பார்த்தால் கிழங்குகள் அடித் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருப்பதைக் காணலாம்.

மரவெள்ளியில் வேர்போன பக்கமெல்லாம் வேரிலே கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக் கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை.

Thursday 4 April 2024


அப்பிள் இலங்கையின் உலர்வலயத்தில் பூத்துக் காய்க்குமா?

இல்லை என்பதே இதற்கான பதில்.

நல்ல இன அப்பிள் விதைகளை ஐரோப்பாவில் வாங்கிச் சென்று இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விதைத்து வளர்க்கும் முயற்சியில் சிலர் முயன்றுள்ளதாக அறிகிறேன். இவர்களின் ஆர்வத்தைப் பாராட்டும் அதேவேளை, ஐரோப்பிய அப்பிள் இனங்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில கிளைவிட்டு வளர்ந்தாலும் அவை ஒருபோதும் மொட்டரும்பி பூத்துக் காய்க்காது. வீணாக நட்டமடையாதீர்கள்!

அப்பிள் மரங்கள் கடும்குளிர் சுவாத்தியத்துக்கே உரித்தான பயிர்.

விஞ்ஞானரீதியாக பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை (Low Chill – பீச், பிளம்ஸ்), நிறைகுளிர் வகை (High Chill -அப்பிள்), குளிர் தேவையற்ற வகை (No Chill - மா பலா).

தாவர உடற் கூறு இயல்பின்படி அப்பிள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் (freezing temperature hours) தேவை.

எனவே ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளை, இலங்கையின் வெப்மான வலயத்தில் வளர்த்தால் அவை கிளைவிட்டு வளரும் ஆனால் பூத்துக்காய்க்காது.

அப்பிள் மரங்கள் வின்ரர் (Winter) காலங்களில் இலைகளை முற்றாக இழந்து அதன் நுனி மொட்டுக்கள் உறைந்துபோய் இருக்கும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் Winter காலங்களில் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் அப்பிளுக்குத் தேவை. பின்னர் வசந்த காலங்களில் (Spring) வெப்பநிலை கூட மொட்டுக்கள் அரும்பி பூவாகி காய்க்கத் துவங்கும். குறிப்பாகச் சொன்னால் வின்ரரில் கிடைத்த உறைகுளிர் நிலையின்போது, அப்பிள் தாவரத்தின் கலங்களுக்கு உள்ளே மொட்டரும்பி பூப்பதற்கான  ஹோமோன் ஆயத்தங்கள் நடக்கும். (உறைகுளிர் கிட்டத்தட்ட 5 பாகை சதமளவுக்கு (C) கீழே. இது அப்பிள் இனத்துக்கு இனம் மாறுபடும்).

இந்தியா காஸ்மீரில் வளரும் அப்பிள், குறை குளிர் வகை (Low chill variety). அவை நுவரெலியாவின் மலை உச்சிகளில் காய்க்கும். ஆனால் ஐரோப்பிய வகை பூக்காது, காய்க்காது.

இதே போல, நுவரேலியாவில் நன்கு வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் நன்கு பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

ஆசி கந்தராஜா. சிட்னி.

 


வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் காசிநாதன், இருபது வருடங்களுக்கு மேலாக மெல்பேர்னில் வாழ்கிறார். இருந்தாலும் பொதுவெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர் இந்திரபாலா. இவர் இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட வரலாற்றாசிரியர், தொல்பொருள் ஆய்வாளர். இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து மறைந்த தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். எமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் 'எல்லோருக்கும் எல்லாம் தெரியும்' என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

கலாநிதி காசிநாதனுடன் நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் பேசுவது உவப்பானது. பல விஷயங்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம். சமீபத்தில் அவருடன் பேசியபோது, தனது பின் வளவில் செழிப்பாக வளர்ந்த வாழையொன்று ஐந்து சீப்பில் குலை தள்ளியிருப்பதாகச் சொன்னார்.

அப்படியா? என நான் ஆச்சரியப்பட்டேன். ஐந்து சீப்பில் வாழை, குலை தள்ளுவது ஒன்றும் புதினமில்லை. ஆனால் அவர் வாழும் குளிர்கூடிய மெல்பேர்னில் அது ஆச்சரியம்தான்.

அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, கண்டமும்கூட! இங்கு வெப்ப வலயம், உபவெப்ப வலயம், குளிர் வலயம் என மூன்று மண்டலங்களும் உண்டு. பூமத்தியரேகைக்கு கீழே, பூமிப்பந்தின் தென் முனைப் பக்கமாக அவுஸ்திரேலியா அமைந்திருக்கிறது. இதனால் பூமத்தியரேகைக்கு மேலே இருக்கும் நாடுகளுக்கு, அவற்றின் குளிர் காலங்களில் விவசாய உற்பத்திகளைப் பெருமளவு ஏற்றுமதி செய்யமுடியும். இதுவே இந்த நாட்டுப் பொருளாதார வெற்றியின் சூக்குமம் எனச் சொல்வார்கள்.

இந்தவகையில் பலதும் பத்தும் பேசிய காசிநாதன் சுழன்றடித்து மீண்டும் வாழைக்குலை விஷயத்துக்குவந்து, வாழைப்பழம் நிறைய, மொட்டைக்கறுப்பன் நெல்லு சைஸில், கறுத்தக் கொட்டைகள் இருக்குதடாப்பா, எனச் சொல்லிச் சிரித்தார்.

காலாதிகாலமாக, எமக்குத் தெரிந்த வாழைப்பழத்தில் விதைகள் இல்லை. அன்னாசியிலும் இல்லை. பிற்காலங்களில் இனவிருத்தி செய்யபட்ட திராட்சை, தர்பூசணி, பப்பாளியிலும் விதைகள் இல்லை. இதுபற்றிய விபரம் அறியவே காசிநாதன் என்னைத் தொடர்பு கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் தனது துறை சார்ந்த நூல்கள், மட்டுமல்ல அதற்கு வெளியேயும் நியை வாசிப்பவர். அதனால் அறிவியல் ரீதியாக அவருக்கு விளக்கம் சொன்னேன்.