Saturday 31 December 2022

சீன நாட்டு அரிசியும் பிளாஸ்டிக் சலசலப்பும்.

- ஆசி கந்தராஜா -

பிளாஸ்டிக்கில் அரிசி செய்வது சாத்தியமா? பிளாஸ்டிக் அரிசி, உண்மையான அரிசிபோல கொதி தண்ணீரில் வேகுமா? என்ற பல கேள்விகள் எமக்குள் எழுந்தாலும் பிளாஸ்டிக் என்றவுடன் எமக்குள் ஒருவித பயம் ஏற்படவே செய்கிறது. 'பிளாஸ்டிக் அரிசி' பற்றிய பல யூ-டியூப் வீடியோக்களும் தகவல்களும் அண்மைக் காலமாக ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் நான் பார்த்த, சீன மொழியில் விளக்கம் சொல்லும், ஒரு யூ-டியூப் வீடியோவின் முதலாவது காட்சியில், மெல்லிய பிளாஸ்டிக் தகடுகள் இயந்திரம் ஒன்றுக்குள் போடப்படுகிறது. அடுத்து நூல்கள் போன்ற அமைப்பு ஒரு இயந்திரத்திலிருந்து இன்னொரு இயந்திரத்துக்குப் போவது காண்பிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சியில் இயந்திரத்திலிருந்து அரிசி வெளியேறுகிறது. ஆனால் இந்த மூன்று காட்சிகளுக்குமான தொடர்புகள் எதுவும் அங்கு காட்டப்படவில்லை.


பிளாஸ்டிக் அரிசிசந்தைக்கு வந்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் புரளிக் கதை. 2011-ஆம் ஆண்டு வியட்நாமிய இணையப் பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலில் பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருப்பதாகவும், அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது. அதன் பின்னர், பிளாஸ்டிக் அரிசி குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்துமே வியட்நாமிய இணையப் பத்திரிகை வெளியிட்ட செய்தியைச் சார்ந்தே இருந்தன.

சீனாவில் வுச்சாங் என்னும் இடத்தில் விளையும் அரசி மிகப் பிரபல்யமானது. இது நல்ல சுவையும் மணமும் கொண்டது. இந்த அரிசி அவியும்போது வெளிவரும் வாசைன பசியைத் தூண்டும் என்றும் சொல்லப்படுகிறது. வுச்சாங் அரிசி, அதிக விலையானதால், வியாபாரிகள் கலப்படம் செய்வதாகவும் அதனுடன் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலி அரிசியை கலப்பதகவும் வியட்நாமிய பத்திரிகை மேலும் தெரிவித்தது. இந்த கலப்பட அரிசியானது உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற மாச்சத்துள்ள கிழங்குகளை அரைத்து, அரிசி போன்று செய்யப்படுவதாகவும் இரசாயனங்களைப் பூசி அவை விற்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. சீனாவின் புகழ்பெற்ற 'வுச்சாங்'ரக அரிசியைப் போன்று தோற்றமளிக்க கலப்பட ரக அரிசிகளில் வாசனைத் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் பின்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எந்த செய்தியிலும் நேரடியாக பிளாஸ்டிக் கலக்கப் பட்டதாகத் தகவல்கள் இல்லை.