Sunday 9 July 2023

ஆசி கந்தராஜாவின்

'அகதியின் பேர்ளின் வாசல்'

-    வாசிப்பு அனுபவம்

ரஞ்ஜனி  சுப்ரமணியம்

 



மிகைப் படுத்தல்களும் திரிபுபடுத்தல்களும் இல்லாது, வரலாற்றினை அடியொற்றி எழுதிய 'அகதியின் பேர்ளின் வாசல்' என்னும் நாவல், ஈழத்தமிழர்களின் ஆரம்பகால புலம்பெயர்வின் தெளிவான குறுக்கு வெட்டுமுகம் எலாம். ஜேர்மனிக்கான அன்றைய புலம்பெயர்வின் பயணப் பாதைகள் பற்றியும் அதன் பின்னணியில் ஆதிக்க நாடுகளின் பனிப்போர்கள் பற்றியும் இதுவரை அறியப்படாத பல உண்மைகள் அந்நாவலில் எழுதப்பட்டுள்ளன. தமிழினத்தின் மீதான அரச வன்முறைகளை அடுத்து, தமிழ் இயக்கங்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாறிய காலமாகிய 1970 களில் ஆரம்பமாகி 2017 இல் நிறைவுபெறும் ஐந்து தசாப்தங்கள், நாவலின் பேசுபொருள். 

பேரினவாதத்தின் அரசியல் ஆதாயங்களுக்காக தாயகத்தில் தமிழினத்துக்கான பல வாயில்கள் மூடப்பட்டன. இதுவே, சர்வதேச அரசியலின் தந்திரோபாய நடவடிக்கைகளால் மேற்கு நாடான ஜேர்மனியில், ஏற்கனவே இருந்த ஓர் வாயிலை புலம்பெயர்ந்த அகதிகளுக்கு இனங்காட்டியது. புலம்பெயர்வின் வரலாற்றுப் புலங்களும் காட்சிப் புலங்களும் நாம் அறிந்தவை, அறியாதவை என, இரு பிரிவுகளுள் அடங்குகின்றன. உண்மையிலேயே நாட்டில் வாழ முடியாத உயிராபத்து நிறைந்த சூழ்நிலையில் அரசியல் தஞ்சம் கோரி புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர். நிலைமையை சாதகமாகப் பயன் படுத்தி பொருளாதார மேன்மைகளுக்காக அகதி என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றுமோர் பகுதியினர். இந்த இரு பகுதியினரையும் இலக்காகக் கொண்டு, மனிதக் கடத்தல், போதைவஸ்துக் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்த பண முதலைகள், சட்டவிரோதமாக புலம்பெயரும் பெண்களை சீரழித்த காமுகர்கள், விரும்பியோ விரும்பாமலோ பயண முகவர்களை நம்பி இடைநடுவில் அகப்பட்டு மொழியறியா நாட்டுச் சிறைகளில் வாடும் அப்பாவிகள், பயணவழியில் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் என பலரின் கதைகள் இங்கு கூறப்பட்டு உள்ளன. ஆனால் 1980களில் இனக்கலவரங்களை அடுத்து, ‘நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போலவும்’, 'செல்லச்சந்நிதி கோயில் தேர்த்திருவிழாவிற்கு அள்ளுப்பட்டு போனது போலவும்'  ரஷ்ய ஏரோபுளோட் விமானத்தின் மூலம் ஜேர்மனியை நோக்கி அகதிகளாக படையெடுத்த எம்மவர்களுக்கான வாயில் எங்கே திறந்திருந்தது என்ற உண்மையோ, எப்படித் திறந்தது என்ற வரலாற்றையோ யாரும் அறிந்திருக்கவில்லை.