Wednesday 2 November 2022

 ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்.

ஆசி கந்தராஜாவின் புனைகதைகள்.



சி கந்தராஜா இன்றைய ஈழத்து புலம்பெயர் எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்மனிஜப்பான்அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் கல்விகற்றவர். உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கற்பித்தவர். விவசாயத்துறை ஆலோசகராகப் பணியாற்றியவர்ஏராளமான சர்வதேச ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். அவ்வகையில் சர்வதேச அளவில் அறியப்பட்டஅங்கீகாரம் பெற்ற ஓர் அறிவியல் அறிஞர்பூங்கனியியல்உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருபவர். இத்தகைய பின்புலமும்படைப்பாற்றலும் உள்ள ஒருவரின் தமிழ் இலக்கியத் துறைப் பிரவேசம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் தந்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

தமிழ் இலக்கியத்தில் புனைகதைபுனைவுக் கட்டுரை ஆகிய இரு துறைகளில் அவர் கால் பதித்திருக்கிறார். புனைகதைத் துறையில் பாவனை பேசலன்றிஉயரப் பறக்கும் காகங்கள்கள்ளக் கணக்கு  ஆகிய சிறுகதைத் தொகுதிகளும்கீதையடி நீ எனக்கு என்னும் குறுநாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கறுத்தக் கொழும்பான்செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் என்பன இவரது புனைவுக் கட்டுரைத் தொகுதிகள்.

புனைவுக் கட்டுரை என்ற தொடர் கந்தராஜா மூலமே பிரபலம் பெற்றிருக்கின்றது எனலாம். ஆங்கிலத்தில் இதனை இமஜினேற்றிவ் எஸ்ஸே (Imaginative Essay) என்பார்கள். நமது பாடசாலைக் கல்வியில் இதனைக் கற்பனைக் கட்டுரை என்போம். ஏதாவது ஒரு பொருள் பற்றி புனைந்து எழுதுவது இவ்வகைப்படும். இதில் உண்மையும் கற்பனையும் கலந்து இருக்கும். ஒரு பேனையின் கதைநான் ஜனாதிபதியானால்எனது சந்திரமண்டலப் பயணம் போன்ற தலைப்புகளில் நமது பள்ளிப்பருவத்தில் நாம் கட்டுரைகள் எழுதியிருப்போம். நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலத்திலிருந்தே புனைவுக் கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. பாரதியின் தராசுசிட்டுக்குருவி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லாம். புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசபிள்ளை பிறிதொரு உதாரணம்.