Wednesday 2 November 2022

 ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்.

ஆசி கந்தராஜாவின் புனைகதைகள்.



சி கந்தராஜா இன்றைய ஈழத்து புலம்பெயர் எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்மனிஜப்பான்அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் கல்விகற்றவர். உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கற்பித்தவர். விவசாயத்துறை ஆலோசகராகப் பணியாற்றியவர்ஏராளமான சர்வதேச ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். அவ்வகையில் சர்வதேச அளவில் அறியப்பட்டஅங்கீகாரம் பெற்ற ஓர் அறிவியல் அறிஞர்பூங்கனியியல்உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருபவர். இத்தகைய பின்புலமும்படைப்பாற்றலும் உள்ள ஒருவரின் தமிழ் இலக்கியத் துறைப் பிரவேசம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் தந்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

தமிழ் இலக்கியத்தில் புனைகதைபுனைவுக் கட்டுரை ஆகிய இரு துறைகளில் அவர் கால் பதித்திருக்கிறார். புனைகதைத் துறையில் பாவனை பேசலன்றிஉயரப் பறக்கும் காகங்கள்கள்ளக் கணக்கு  ஆகிய சிறுகதைத் தொகுதிகளும்கீதையடி நீ எனக்கு என்னும் குறுநாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கறுத்தக் கொழும்பான்செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் என்பன இவரது புனைவுக் கட்டுரைத் தொகுதிகள்.

புனைவுக் கட்டுரை என்ற தொடர் கந்தராஜா மூலமே பிரபலம் பெற்றிருக்கின்றது எனலாம். ஆங்கிலத்தில் இதனை இமஜினேற்றிவ் எஸ்ஸே (Imaginative Essay) என்பார்கள். நமது பாடசாலைக் கல்வியில் இதனைக் கற்பனைக் கட்டுரை என்போம். ஏதாவது ஒரு பொருள் பற்றி புனைந்து எழுதுவது இவ்வகைப்படும். இதில் உண்மையும் கற்பனையும் கலந்து இருக்கும். ஒரு பேனையின் கதைநான் ஜனாதிபதியானால்எனது சந்திரமண்டலப் பயணம் போன்ற தலைப்புகளில் நமது பள்ளிப்பருவத்தில் நாம் கட்டுரைகள் எழுதியிருப்போம். நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலத்திலிருந்தே புனைவுக் கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. பாரதியின் தராசுசிட்டுக்குருவி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லாம். புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசபிள்ளை பிறிதொரு உதாரணம்.

ஆசி கந்தராஜாவின் புனைவுக் கட்டுரைகள் நாம் பாடசாலைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் போன்றவை அல்ல. பாரதிபுதுமைப்பித்தன் கட்டுரைகள் போன்றவையும் அல்ல. இவை உண்மையில் அறிவியல் கட்டுரைகள். அறிவியலை துறை சார்ந்த நிபுணர்களுக்காக அன்றிபொதுமக்களுக்காக எளிமைப்படுத்தி சுவாரஸ்யமாக வாசிப்பதற்காகவும் அதேவேளை அறிவியல் உண்மைகளைப் புரிந்துகொள் வதற்காகவும் எழுதப்பட்ட கட்டுரைகள். இத்தகைய எளிமைப்படுத்திய அறிவியலை ஆங்கிலத்தில் பொப்யுலர் சயனஸ் (Popular Science) என்பார்கள். தமிழில் இதனை ஜனரஞ்சக அறிவியல் அல்லது வெகுஜன அறிவியல் எனலாம். மேலை நாடுகளில் ஜனரஞ்சக அறிவியல்துறை பெருவளர்ச்சி பெற்ற ஒரு துறை. அதற்கென்றே பல சஞ்சிகைகளும் ஏராளமான நூல்களும் வெளிவருகின்றன. பொப்யுலர் சயன்ஸ் மந்த்லி என்ற ஆங்கில சஞ்சிகை இவ்வகையில் புகழ் பெற்றது. 1960, 70 களில் இத்துறை சார்ந்த பல சோவியத் நூல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. நான் ஏன் என் தந்தையைப்போல் இருக்கிறேன்என்ற மரபணு உயிரியல் தொடர்பான ஒரு சோவியத் நூலை 1970களின் தொடக்கத்தில் நான் வாசித்த ஞாபகம். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழில் ஜனரஞ்சக அறிவியல் நூல்கள்கட்டுரைகள் என்பன பெருமளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு வெளிவந்திருக்கின்றன. கலைக்கதிர் என்ற ஒரு சஞ்சிகை இதற்காகவே வெளிவந்ததை நாம் அறிவோம். ஆயினும் இவையெல்லாம் பெரும்பாலும் எளிமைப்படுத்திய அறிவியலாக அமைந்தனவே தவிரபுனைவியல் சார்ந்த சுவாரஸ்யமான வாசிப்புக்கும் உரியவையாக அமையவில்லை எனலாம்.

ஜனரஞ்சக அறிவியலையும் புனைவுக் கட்டுரை வடிவத்தையும் ஒன்றிணைத்தமை ஆசி கந்தராஜாவின் எழுத்தின் தனித்தன்மை எனல் வேண்டும். குறிப்பாக விவசாயத் துறையில் மரபணு உயிரியல் தொழில்நுட்பச் செயற்பாடுகளை பொதுமக்கள் விளங்கிப் பயனடையும் வகையில் அன்றாட வாழ்க்கை அனுபவத்துடன் இணைத்து சொந்த அனுபவமாகவும் புனைகதை உத்தியைப் பயன்படுத்தியும் அவர் விளக்குகிறார். அவ்வகையில் ஒரு விஞ்ஞானியின் அறிவாற்றலும்ஒரு படைப்பாளியின் புனைவாற்றலும் ஒன்றிணைந்து உருவாக்கிய இக்கட்டுரைகள் தமிழில் ஒரு புதுவருகை எனலாம்.

ஆசிரியரின் துறைசார்ந்த அறிவுபன்னாட்டு அனுபவம்யாழ்ப்பாணப் பண்பாடு பற்றிய கூருணர்வுகற்பனை வளம்மொழியாற்றல் என்பன அவருடைய எழுத்துக்கு வலுவையும் வளத்தையும் தருகின்றன. விவசாயத் துறைசார்ந்த பொதுமக்கள்மாணவர்கள் மட்டுமன்றி பொது வாசகர்களும் படித்துப் பயனடைவதற்குரியவை இவரது புனைவுக் கட்டுரைகள். ஜனரஞ்சக அறிவியல்புனைவுக் கட்டுரை ஆகிய இரு துறைகளுக்கும் ஒரு தகுந்த முன்மாதிரியாகவும் இவரது கட்டுரைகள் அமைகின்றன.

-2-

இனி இவரது புனைகதைகளுக்கு வருவோம். இவரது புனைவுக் கட்டுரைகளுக்கும் புனைகதைகளுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு மெல்லியதுதான். இவரது புனைவுக் கட்டுரைகள் சில புனைகதைகள் போலவும்புனைகதைகள் சில புனைவுக் கட்டுரைகள் போலவும் மயக்கம் தருவதற்கு இந்த இரண்டுக்கும் இடையிலான இந்த மங்கலான இடைவெளியே காரணம் எனலாம். சமீபத்தில் வெளிவந்த காலம் 54 ஆவது இதழில் (ஜனவரி - 2020) பிரசுரமாகியுள்ள ”ஆசி கந்தராஜாவின் படைப்புலகம்” என்ற கட்டுரை இவ்விரு வகையான எழுத்துகளையும் ஒன்றாக நோக்குவது இந்த மயக்கம் காரணமாகவே எனலாம். ஆனால்கந்தராஜாவின் இருவகை எழுத்துகளுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைத் தேர்ந்த வாசகர்கள் தவறவிட முடியாது. அவரது புனைவுக் கட்டுரைகளில் அனுபவச் சித்திரிப்புகள் ஊடாக அறிவியல் விளக்கம் முனைப்பாக இருக்கும்அதவேளைஅவரது புனைகதைகளில் அனுபவச் சித்திரிப்பின் ஊடாக மனித உறவுச் சிக்கல்களும் மனித உணர்வு நெருக்கடிகளும் முனைப்பாக வெளிப்படும். ஆயினும் இருவகை எழுத்துகளிலும் சொல்லும் முறையும் மொழிநடையும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். இது அவரின் எழுத்தின் பொதுப்பண்பு எனலாம்.

இத்தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் கந்தராஜாவின் முத்திரை பதித்த கதைகள். வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுபவை. பல கதைகள் மனதை அதிரவைப்பவை. இத்தொகுப்பில் உள்ள கதைகளை அவற்றின் கதைக்களத்தின் அடிப்படையில் மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தி நோக்கலாம். முதலாவதுயாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டவை. இவ்வகையில் சாது மிரண்டால்இந்துமதி ஆகிய நான்நரசிம்மம் ஆகிய மூன்று கதைகளையும் சொல்லலாம். இரண்டாவதுஈழத்தையும் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலியாவையும் களமாகக் கொண்டவை. இவை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பேசுவன. இத்தகைய ஆறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மூன்றாவதுபிறநாட்டு அரசியல் பண்பாட்டுப் பின்னணியில் அமைந்தவை. இவை பெரும்பாலும் ஜோர்த்தான்லெபனான்ஜெருசலேம்ஈரான் நாட்டு வாழ்க்கை பற்றியவை. இத்தகைய ஆறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இக்கதைகள் எல்லாமே மனிதர்கள் எதிர்நோக்கும் சமூகஅரசியல்தனிமனிதபண்பாட்டுச் சிக்கல்களையும் இன்னல்களையும்நெருக்கடிகளையும் உணர்வு பூர்வமாகச் சித்திரிப்பவை.

இத்தொகுப்பில் உள்ள சாது மிரண்டால்இந்துமதி ஆகிய நான் ஆகிய இரண்டும் சற்று வித்தியாசமான கதைகள். நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்குள் பொதுவாக அகப்படாதஆனால் அகப்படக்கூடிய நிகழ்வுகளின் புனைவுகள். திருமண உறவையும் பாலியல் சிக்கல்களையும் பேசுபவை. 

தன்னை வஞ்சித்த மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் பால்வினை நோயைத் தொற்றவைத்துப் பழிவாங்கிய அப்பாவியான பேரம்பலத்தையும்அவனது மனைவிக்கும் அவளது கள்ளக் காதலனுக்கும் ஊனமுற்றுப் பிறந்த பிறப்புச் சான்றிதழ் இல்லாத நாராயணனையும் பற்றிய கதை சாது மிரண்டால். பேரம்பலம் சௌக்கியத் திணைக்களத்தில் வேலை செய்பவன். அழகன் அல்ல. கிராமத்தில் அழகியும் கிசுகிசுப் பேச்சுக்கு ஆளானவளுமான அமிர்தவல்லியை அவன் கலியாணம் செய்ய நேர்கிறது. கணவனானாலும் அவன் தன்னை அணுகவிடாது அவனை ஒரு வேலைக்காரனைப் போலவே நடத்துகிறாள் அமிர்தவல்லி. எப்போதும் துப்பாக்கியுடன் திரியும்ஒரு இயக்கத்தின் பிராந்தியத் தலைவனான மலர்வண்ணனுடன் அவளுக்குக் கள்ளத்தொடர்பு ஏற்படுகின்றது. கணவன் வீட்டில் இருக்கும் போதே வந்துபோகக் கூடிய துப்பாக்கிப் பலம் அவனுக்கு இருக்கிறது. அவன்மூலம் அவள் கருவுறுகிறாள். அதை மறைப்பதற்காக அவள் பேரம்பலத்துடன் சேர முயல்கிறாள். அது அவனுக்கும் தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன்னை வஞ்சித்தவளைப் பழிவாங்குவதற்றகாக சிபிலிஸ் நோயுடைய ஒரு விபச்சாரியைத் தேடிப்பிடித்து நோயைத் தொற்றிவந்து அதை அமிர்தவல்லிக்கும் அவள் மூலம் மலர்வண்ணனுக்கும் தொற்றவைக்கிறான். நோய் முற்றிய நிலையில் ஊனமுற்ற நாராயணனைப் பெற்றுவிட்டு அமிர்தவல்லி செத்துப்போகிறாள். மலர்வண்ணனை இயக்கம் ”மண்டையில் போடுகிறது”. ஒரு தொழில் பெறுவதற்காக ஊனமுற்ற காலோடுபிறப்புச் சான்றிதழுக்காக அலைகிறான் நாராயணன்.

நம்பலாம் நடந்தது வகையைச் சேர்ந்த கதையல்ல இது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டுப் பால்வினை நோயைத் தொற்றிவந்து அதை மற்றவருக்குத் தொற்றவைத்துப் பழிவாங்குவது சாத்தியம்தானா என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. நான் இணையத்தில் தகவல் தேடியபோது இந்நோய்க்கிருமியின் தொற்று வெளிப்படும் காலம் கிருமியின் வகையைப் பொறுத்து சில நாட்கள்வாரங்கள்மாதங்கள் அல்லது வருடங்களாகலாம் என்று அறிந்தேன். இவன் பயன்படுத்திய சிபிலிஸ் நோய் வெளிப்படுவதற்கு கிருமியின் வகையைப் பொறுத்து மூன்று வாரங்கள் முதல் இருபது வருடங்கள்கூட ஆகலாம் என்று தெரிகிறது. அதிஷ்டவசமாகவோதுரதிஷ்டவசமாகவோ பேரம்பலம் தொற்றிக்கொண்டுவந்தது விரைவில் தொற்றக்கூடிய ஒருவகை என்று நாம் அமைதிகாணலாம். அப்பாவியான பேரம்பலத்துக்குத் தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்குவதற்கு இருந்த ஒரே சுலபமான வழியும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். தன் நண்பனிடம் அவன் இப்படித்தான் சொல்கிறான்

எனக்கு வேறு வழி தெரியல்லையடா. வாழ்க்கைபூரா என்னை ஏமாத்தி துரோகஞ் செய்தவளுக்கும்துப்பாக்கி வைத்திருந்த தைரியத்தில்நான் வீட்டில் இருக்கவேமனைவியிடம் வந்துபோனவனுக்கும் தண்டனை குடுக்க என்னாலை முடிந்த வழி இதுதான்”

இந்தக் கதையில் எனக்கு முக்கியமானதாகப்படுவதுஒரு இயக்கத்தின் பிராந்தியத் தலைவன் ஒருவனின் நடத்தை பற்றிய சித்திரம். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இத்தகைய விசயங்களைக் கையாண்டது குறைவு. அவ்வகையில் ஆயுதக் கலாசாரம் தனிமனித வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் விளையாடி இருக்கிறது என்பது பற்றிய ஒரு விமர்சனமாகவும் இக்கதையை வாசிக்கலாம்.

துரதிஷ்டவசமாக ஆண்மையற்ற ஒருவனைத் திருமணம் செய்ய நேர்ந்த இந்துமதிகணவனின் திருப்திக்காககன்னி கழியாமலே யாரோ ஒருவனின் கருவைச் சுமந்து செயற்கை முறையில் ஒரு குழந்தையைப் பெற்றறெடுப்பதும்ஒரு கணநேர உணர்வு மயக்கத்தில் பிறிதொருவனுடன் கூடி பிறிதொரு குழந்தைக்குத் தாயாக நேர்வதும் அதன்மூலம் அவளுடையவாழ்வு திசைமாறிப்போவதும் பற்றியது இந்துமதி ஆகிய நான். சமூக நியமங்களின் சவாலை அவள் துணிச்சலுடன் எதிர்கொள்வதை கதை பேசுகிறது. நரசிம்மம் ஈழப் போராட்டத்தின் இறுதி யுத்தத்தின் பின்விளைவுகளின் வலியைப் பேசுகின்றது. புலிகள் இயக்கத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய புனிதவதி யுத்தமுடிவில் கைதுசெய்யப்பட்டு அவளுடைய உடல் வனப்புக் காரணமாக இராணுவ முகாமில் வைக்கப்படுகிறாள். இராணுவத்தினரால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். அதன்மூலம் அவளுக்கு ஒரு மகன். அவனுடன் அவள் வாழ்வை எதிர்கொள்வதில் அவள் அனுபவிக்கும் வலி. நாமும் அந்த வலியை உணரமுடிகின்றது. சிங்களதமிழ்த் தேசிய முரண்பாட்டுப் பின்னணியில் ஆசிரியர் எழுதிய முதலாவது கதையாக இது இருக்கலாம் என்று நினைக்கின்றேன். நரசிம்மம் இக்கதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. புனிதவதி என்ற பெயரையும் ஆசிரியர் காரணத்துடன்தான் பயன்படுத்துகிறார் என்று கருதலாம்.

 -3-

இத்தொகுதியில் உள்ள அந்திமம்எதிலீன் என்னும் ஹோமோன் வாயுவேதியின் விளையாட்டுசாத்திரம் உண்டோடிமுகமூடி மனிதர்கள்பணச் சடங்கு ஆகியவை யாழ்ப்பாணத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை பற்றிப் பேசுகின்றன. புலம்பெயர் தமிழர் மத்தியில் காணப்படும் பண்பாட்டு அந்நியமாதல்பாலியல் சிக்கல்கள்கௌரவ வேட்கைகலியாண வேட்டை போன்ற பல்வேறு அம்சங்களை இக்கதைகள் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான மனித ஆளுமைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் இக்கதைகள் சித்திரிக்கின்றன. எதிலீன் என்னும் ஹோமோன் வாயு யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றிலிருந்து சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை அநுபவத்தைப் பேசும் சுவாரஸ்யமானஆச்சரியமூட்டும் கதைப்பின்னலைக் கொண்ட அதேவேளை மனித உறவுகள்உணர்வுகளின் இழிவுகள்மேன்மைகள் பற்றிய உருக்கமான கதை. வேதி விளையாட்டு திருமணச் சந்தையில் யாழ்ப்பாணப் பண்பாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் அவுஸ்திரேலிய கலப்புப் பண்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புலம்பெயர்ந்து வாழும் முதியவர்களின் நோக்குநிலையில் சுவாரஸ்யமாக விபரிக்கின்றது. சாத்திரம் உண்டோடி பல்கலைக்கழகத்தில் படிக்கும் வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனான. ஐம்பது வயதைத் தண்டிய அவுஸ்திரேலியப் பிரஜையான சுந்தரமூர்த்தி மனைவியின் “பீரியட்“ தள்ளிப்போவதனால் அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை. கதைமுடிவில் வாசகருக்கு ஒரு நமுட்டுச் சிரிப்பு வருவதைத் தவிக்கமுடியாது.  நமது சமூகச் சூழலில் வயதான கணவர்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான் இது. யாழ்ப்பாணப் பணச்சடங்குப் பண்பாடு அவுஸ்திரேலியாவரை எவ்வாறு வியாபித்திருக்கின்றது என்பதை விபரிக்கும் கதைமட்டுமல்ல பணச்சடங்கு. அதைச் சொல்வதன் ஊடாக யாழ்ப்பாணத்தில் தன்வீட்டில் தொட்டாட்டு வேலைசெய்த வள்ளியம்மையுடன் தான் ஆடிய விளையாட்டின் அறுவடையை அவுஸ்திரேலியாவில் கண்டபோது நாகலிங்கம் மாஸ்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விபரிக்கும் கதை.

ஆசிரியரின் கீதயடி நீ எனக்கு என்னும் குறுநாவல் தொகுதியில் திரிவேணி சங்கமம் என்னும் தலைப்பில் ஒரு குறுநாவல் இடம்பெற்றுள்ளது. விவேகமும் திறமையும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையும் கொண்ட மூன்று இளைஞர்களின் எதிர்காலம் தங்கள் வாழ்வில் குறுக்கிட்ட பெண்களின் தொடர்பால் எதிர்பாராத வகையில் நிலைகுலைந்து சிறையில் கழியநேர்ந்த துர்ப்பாக்கிய நிலையை விபரிக்கும் குறுநாவல் அது. அந்த மூன்று இளைஞர்களின் கதைகளையும் தனித்தனியேசற்று மாற்றியும் விரித்தும் எழுதிய மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. காதல் ஒருவனைக் கைப்பிடித்துஆண்சுகம்முகமூடி மனிதர்கள். என்பன அவை. முதல் இரண்டும் பிறநாட்டு மனிதர்களையும்மூன்றாவது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களையும் பற்றியவை.

ஈரானிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி  கற்க வந்த அமீர் முகம்மது அவனது மனைவி றொஸ்நாக் ஆகிய இருவரும் இருவேறு கலாசாரங்களை எதிர்கொண்ட விதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றியது காதல் ஒருவனைக் கைப்பிடித்து என்ற கதை. திரிவேணி சங்கமத்தில் வரும் றொஸ்நாக் திறந்த பண்பாட்டின் சீரழிவுக்கு ஆளானவளாகச் சித்திரிக்கப்பட்டிருப்பாள்ஆனால் இக்கதையில் வரும் றொஸ்நாக் மேற்குலகின் பெண்ணுரிமை அம்சங்களைத் தழுவிக்கொண்ட அதேவேளைஇஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களிலிருந்து வழுவாதவளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். பாலியலும் மதமும் பண்பாடும் தனிமனிதர்களின் வாழ்வில் ஆடும் ஆட்டத்தைப் பற்றியது இக்கதை என்றால்ஆண்சுகம் என்பது ”பெண்களின் உடலில் சுரக்கும் பாலியல் ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் ஏற்படும் ஒருவகைப்” பாலியல் வேட்கையால் (Nymphomania) பாதிக்கப்பட்ட தன் காதலி மேரிஅவளுடைய சகோதரி லீசா ஆகியோரின் தொடர்பினால் அநியாயமாக விபத்துக்குள்ளாகி இறந்துபோகும் ரோனியின் கதை. ரோனியின் மரணம் விதிவசமானது என்றுதான் சொல்லவேண்டும். மிகவும் அரிதான ஒரு  உளவியல் நோயை மையமாகக் கொண்டு ஆசிரியர் இக்கதையைப் புனைந்திருக்கிறார். இவ்விரு கதைகளையும் விட முகமூடி மனிதர்கள் வாசகர்களை மிகவும் பாதிக்கக்கூடியது. புலம்பெயர்ந்த தமிழர்களின் சமூகதனிமனித நடத்தை பற்றிய ஒரு தீவிரமான விமர்சனமாக இக்கதையை வாசிக்கலாம். தம்பலகாமத்தில் கப்பம் கொடுக்க மறுத்த காரணத்தினால் போராளிக் குழு ஒன்றினால் வீடு எரிக்கப்பட்டு, தாயும் தகப்பனும் கொல்லப்பட்டடு அநாதையான ஒரு பையன். தனது திறமையினாலும் ஆசிரியர்களின் உதவியினாலும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் தேசிய நிலையில் முதலிடத்தில் சித்திபெற்று அவுஸ்திரேலிய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் மருத்துவக் கல்வி பயிலவந்து புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றின் மாப்பிள்ளை வேட்டையில் அகப்பட்டு சிறைசெல்ல நேர்ந்து சீரழிந்த கதை இது. குரூரமான சுயநலத்துக்கு ஆட்பட்டு மனிதத் தன்மையை இழந்துபோன சமூகத்தைப் பார்த்து இதற்கு யார் காரணம் என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்கிறது இந்தக் கதை.

 -4-

அ. முத்துலிங்கம் போல் ஆசி கந்தராஜாவும் பல நாடுகள் சுற்றியவர். அந்த அநுபவ வளத்தைத் தமிழ்ப் புனைகதைக்குள் கொண்டுவந்தவர். இத்தொகுப்பில் உள்ள ஆண் குழந்தைஎதிரியுடன் படுத்தவள்கையதுகொண்டு மெய்யது பொத்திதலைமுறை தாண்டிய காயங்கள் முதலியவை அத்தகையன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் முக்கியமானவை.

பெண்ணின் கருப்பையில் விருத்தியுறும் கருமுளையம் ஆணாகவா அல்லது பெண்ணாகவா விருத்தியுறவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்களே” என்ற அறிவியல் உண்மையை நிரூபிப்பதுபோல் அமைகின்றது ஆண் குழந்தை என்ற கதை. ஜோர்தானிய பலதார மணப் பண்பாட்டுப் பின்னணியில் அமைந்த இக்கதையில் தொடர்ச்சியாகப் பெண்குழந்தைகளுக்கே தகப்பனான யூசூப்பின் நான்காவது மனைவி நீனாவும் பெண்குழந்தை ஒன்றையே பெற்றெடுக்கிறாள். தனக்கு இன்னும் ஒரு பெண் பிறந்தால் தன்னுடைய இடத்துக்கு இன்னொருத்தி வந்துவிடுவாள் என்ற பயம் அவளுக்கு. ஆனால் அதிஷ்டவசமாக அடுத்ததாக அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. யூசூப் அதைப் பெரிதாகக் கொண்டாடுகிறான். ஆனால் தொடர்ந்தும் ஆண்குழந்தையே பெறும் யூசூப்பின் தம்பிதான் அதற்குக் காரணம் என்பதாகக் கதை முடிகிறது. அலிக்குத் தொடர்ந்து ஆண் குழந்தைகளும் யூசூப்புக்குத் தொடர்ந்து பெண் குழந்தைகளும் பிறப்பதுதான் இதில் விந்தை. இதற்கு ஏதும் விஞ்ஞான விளக்கம் இருக்கக் கூடும்.

பலஸ்தீனியனைத் திருமணம் செய்த ஒரு யூதப் பெண் ஜெருசலேத்தில் எதிர்நோக்கும் சமூக வெறுப்பை எதிரியுடன் படுத்தவள் உருக்கமாகச் சித்திரிக்கிறது. இலங்கையின் இனவாதச் சூழலில் மாற்றுத் திருமணம் செய்த பெண்களை இக்கதை நினைவுபடுத்தலாம். சிரிய யுத்தத்தால் இடம்பெயர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அலையும் படித்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைப்பற்றிய உருக்கமான கதை கையதுகொண்டு மெய்யது பொத்தி. நூறு அண்டுகளுக்கு முன் ஒட்டமான் சாம்ராச்சியத்தின்கீழ் துருக்கியர்களால் இன அழிப்புக்கு உள்ளான ஆர்மீனியர்களின் வழித்தோன்றலான ஹறூத் என்னும் ஆர்மீனிய இளைஞன் இன்னும் சுமந்துதிரியும் பழிவாங்கும் தேசியவாத உணர்வைப் பேசுகிறது தலைமுறை தாண்டிய காயங்கள் என்ற கதை. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்துத் தமிழரான கதைசொல்லி ஹறூத்தின் இன உணர்வினால் நெகிழ்ந்துபோகிறார். ”ஹறூத் என் ஆசான்போன்று நிமிர்ந்து நிற்பதை உணர்ந்த என் உடல் குறுகியது” எனக் கதையை முடிக்கிறார் கதைசொல்லி.

-5-

ஆசி கந்தராஜா ஒரு எளிமையான கதைசொல்லி. நவீனவாதப் பொறிக்குள் சிக்காதவர். தனக்கென்ற ஒரு நேரடியான கதைசொல்லும் பாணியை உருவாக்கிக்கொண்டவர்.. பெரும்பாலான கதைகளில் அவரே கதைசொல்லியாகவும் அமைகிறார். பெரும்பாலான பாத்திரங்கள் கதைசொல்லியோடு நெருக்கமான உறவுடையவை. அதனால் அவர் சொல்லும் கதைகள் அவரது சொந்த அநனுபவங்கள்தான் என்ற ஒரு பிரமையை வாசகருள் ஏற்படுத்துகின்றன. அவை ஒவ்வொன்றும் அப்படியே உண்மை அனுபவங்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால்வாழ்க்கையின் உண்மைகளைப்பற்றிப் பேசுபவை. பல்வேறு வகையான மனித ஆளுமைகளைபல்வேறு வகையான பண்பாடுகளைசமூக நெருக்கடிகளைமனிதர்களின் உயர்வுகளைவீழ்ச்சிகளைப் பேசுபவை அதனால் அவருடைய கதைகள் நமக்குள்.உண்மை அனுபவங்களாக இறங்குகின்றன.

மானுடம் இவ்வளவு தாழ்ந்ததை நான் என்றுமே அனுபவித்ததில்லை” என்பது பாவனை பேசலன்றி என்ற அவரது குறுநாவலில் வரும் ஒரு வசனம். அவருடைய பெரும்பாலான கதைகளில் மானுடத்தின் இந்த வீழ்ச்சியை நாம் காண்கின்றேம். மனித வாழ்க்கை பற்றிய அவருடைய விமர்சனமாக நாம் இவற்றைக் கொள்ளவேண்டும். மானுட மேன்மையில் அவருக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவே இந்த விமர்சனத்தை நாம் கருதவேண்டும். இலக்கியம் போதனைக்கான ஒரு கருவியல்லபதிலாக மனித வாழ்வைப் புரிந்துகொளவதற்கான ஒரு சாதனம். ஆசி கந்தராஜாவின் சில கதைகளில் போதனை அல்லது பிரசார நோக்கு சற்று முனைப்பாகத் தெரிந்தாலும்பொதுவாக அவரது கதைகள் எல்லாமே வாழ்க்கை பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவன.

இத்தகைய இன்னும் பல படைப்புகளை அவர் நமக்குத் தருவார் என்று நம்பலாம்.

எம். ஏ. நுஃமான்

பேராசிரியர்

ஹீறஸ்ஸகலகண்டிஇலங்கை

No comments:

Post a Comment