Tuesday 28 September 2021

கட்டையர்,  எம் ஊர் (கைதடி) கட்டையர்!

பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம் ‘Four pack, six pack’  உடம்புக்காக இளஞர்கள் ஜிம்முக்கு அலைவார்களே...? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும் குரக்கனும் சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு ‘six pack’ உடம்பு தானாகவே வந்தது.  அவர் கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார் ###

யாழ்ப்பாணத்தில் பல தோட்டங்களுக்கு நடுவில் ஒரு பொதுவான கிணறு இருக்கும். அறுபதுகள் வரை பட்டை இறைப்புத்தான். இதற்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். பெரிஐயா ஒரு விவசாயி. அவரின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும் நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.


பட்டைக் கொடி பிடித்து, கிணத்து மிதியடியில் நின்று தண்ணி இறைப்பது சோமர். பெரிஐயா பயிர்களுக்கு அளவாகத் தண்ணி விட்டு பாத்திகட்டுவார். கட்டையர், சோமர் போன்றவர்களை, ஊரிலுள்ள ஒவ்வொரு கமக்காரர்களும், பட்டை இறைப்புக்காகத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். இவர்களிடம் விவசாய நிலமில்லை. இவர்கள் தங்கள் உடலுழைப்பை நம்பி நிலமுள்ளவர்களைச் சார்ந்து வாழ்ந்தார்கள்.

இவர்களுக்கு நாள்கூலியோ மாதச் சம்பளமோ இல்லை. விளை பொருட்களும் சாப்பாடும் மட்டும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளையும் பார்த்துக் கொள்வார்கள்.

அநேகமாக பெரிஐயா அதிகாலை இறைப்பையே விரும்புவார். இறைப்பவர்களுக்கு அதிகாலையில் களைப்புத் தெரியாது. பெரிஐயா நாலுமணிக்கு எழும்பி, வீட்டு முற்றத்தில் நின்று உரத்துக் 'கூ...' என்பார். கட்டையரும் சோமரும் பதிலுக்கு, 'கூ...' என்பார்கள். அலை பேசியில்லாத அந்தக் காலத்தில் 'கூ...' தான், அவர்களின் தகவல் பரிமாற்றத்துக்கான சாதனம்.

பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம் ‘Four pack, six pack’ உடம்புக்காக இளஞர்கள் ஜிம்முக்கு அலைவார்களே...? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும் குரக்கனும் சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு ‘six pack’ உடம்பு தானாகவே வந்தது. அவர் கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார்.

யாழ் குடாநாட்டில் தோட்டங்களுக்கு அருகே அண்ணமார், வைரவர், புதிராயர், வீரபத்திரர் போன்ற ஏதோவொரு சுவாமிக்கு கோயிலிருக்கும். எண்பதாம் ஆண்டுகள் வரை இச்சுவாமிகள் கல்லாக, மரத்தின் கீழ் மழையில் நனைந்தோ அல்லது ஓலைக் கொட்டிலிலோ குடியிருந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை, அறுவடை காலங்களில் பொங்கலோ பூசையோ இக் கோவில்களில் நடைபெறும். கூடுதலாக அண்ணமார் கோயில்களிலே காத்தவராயன் கூத்தும் நடைபெறும். கைதடியில் காத்தவராயனாக வேஷம் கட்டுவது எங்கள் கட்டையரே. அவரிடமிருந்த நடிப்பாற்றல், பாடும் திறனெல்லாம் பெரியையாவுக்கு துலாமிரித்ததில் தொலைந்து போனதோ எனப் பிற்காலத்தில் நான் நினைத்ததும் உண்டு. இப்பெழுதெல்லாம் இந்த உபரிச்சுவாமிகள் 'இன்னாரின் உபயம்' என்ற பெயர் விலாசத்துடன், வெளிநாட்டுக் காசில், கோபுரத்துடன் கூடிய வர்ணக் கட்டிடங்களில், தினப் பூசைகள் கண்டு சுகமாக வாழ்வது தனிக் கதை.

புகையிலை வெட்டுவதற்கு முன்பு, எங்கள் ஊர் வழக்கப்படி பெரியையா தோட்டத்துக்கு நடுவே படையல் சடங்கினை மேற்கொள்வார். அன்று எங்கள் வீட்டு சமையல் அறை (குசினி) திமிலோகப்படும். பெரிய பெரிய மண் பானைகளில் வரகுச்சோறு, சாமைச்சோறு, மற்றும் எங்கள் வயலில் எங்களின் சாப்பாட்டிற்காகவே உரம் போடாமல், மாட்டுச் சாணமும் சாதாளையும் போட்டு விளைவித்த மொட்டைக்கறுப்பன் நெல்லரிசிச் சோறும் ஆக்கப்படும். வெங்கலப் பானையில் வரகு, சாமை, நெல் அரிசிகள் மூன்றும் கலந்து பனங்கட்டி வெல்லம் சேர்த்து புக்கை வைத்தல் சமையலிலே அம்மாவின் பங்கு. எங்களின் வயலில் விளைந்த அரிசிச்சோறு சமைக்கும்போது உப்புபோட பெரியம்மா அனுமதிக்கமாட்டார். உப்புப் போட்டால் வயல் உவர்பத்திப்போகும் என்பது அவரது யாழ்ப்பாண மண்ணின் கலாசாரம்.



படையலுக்காக பலவிதமான மீன் வகைகள் கோவிலாக்கண்டி கடற்கரையிலிருந்தும் சாவகச்சேரி சந்தையிலிருந்தும் பெரிஐயாவுடன் சந்தைக்குப் போகும் சோமர் வாங்கிவருவார். கோவிலாக்கண்டி கொய் மீன் பெயர் பெற்றது. கொய் மீனில் நிறைய முள்ளிருக்கும். ஆனாலும், அதில் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் அரிந்து போட்டு வைக்கும் தேங்காய்ப் பால் சொதியின் சுவை கலாதியானது. பெரிஐயா மீன் வாங்குவது மரியாதைக் குறைவு என்பது, பெரியம்மாவின் அபிப்பிராயம். அதனால் கூடப்போகும் சோமரே மீன் வாங்குவார்.

படையலுக்கு பெரியையாவின் தோட்டத்தில் விளைந்த பயத்தங்காய், பாகற்காய், கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, மற்றும் பல வகை மீன்கறிகள், குரக்கன் புட்டு, ஓடியல் புட்டு எல்லாம் அமர்க்களமாக எமது வீட்டுக் குசினியில் தயாராகும். இரவானதும், பனை ஓலைகளில் கோலிய தட்டுவங்களில் அவை பரிமாறப்பட்டு சுருட்டு, சாராயம், சுட்ட கருவாடு சகிதம் புகையிலைக் கன்றுகளுக்கு நடுவில் படைக்கப்படும். படையலிலே தண்ணீர் தெளித்ததும் அவை கட்டையருக்கும் சோமருக்குமுரியது. படையல் முடிந்து பெரிஐயா வீடு வந்ததும் நாங்கள் சாப்பிடலாம். சின்ன வயதில் பெரிஐயா வீடு வருவதற்கு முன்னர் நான் தூங்கிவிடுவேன்.

இப்பொழுதெல்லாம் நான் பேராசிரியராகி உலகமெல்லாம் சுற்றி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அரச செலவில் தங்கிச் சாப்பிட்டாலும், தோட்டத்துப் படையலின்போது நான் சாப்பிட்ட பெரியம்மாவின் மீன் கறிக்கும் அம்மாவின் புக்கையின் சுவைக்கும் ஈடு இணை எதுவுமில்லை என்று சத்தியம் செய்வேன்.

கட்டுரை முழுவதையும் வாசிக்க: 

https://aasikantharajah.blogspot.com/2021/01/1_21.html#more


No comments:

Post a Comment