Monday 27 September 2021

முந்தானை முடிச்சும் முருங்கைக்காயும்



யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. சிட்னியில் என்னுடன் அவர் இருபத்தைந்து வருடங்கள் சுகதேகியாக வாழ்ந்து, 92 வயதில் காலமாகும்வரை அவரது முப்பத்துரண்டு பற்களும் விழாமல் அப்படியே இருந்தன.

வீட்டில் முருங்கைக்காய் சமாசாரம் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அம்மா அடம் பிடிப்பார். கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.

உலாந்தா முருங்கைக்காய் மிக நீளமானது. இலங்கையின் ஏனைய பகுதிகளிலே 'யாழ்ப்பாண முருங்கை' என்று அழைக்கப்படும் இது, யாழ்குடா நாட்டில் மட்டுமே 'உலாந்தா முருங்கை' என்று அழைக்கப்படுகின்றது. 'உலாந்தா முருங்கை' என்ற பெயர் வந்த வர்த்தமானத்தை என்னுடைய பாட்டி சொல்லித் தெரிந்து கொண்டேன். ‘Surveyor’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நில அளவையாளர்' என்பது தமிழாக வழங்கும் பொழுது, யாழ்ப்பாணத்தில் மட்டும் 'உலாந்தா' என்று அழைக்கப்படுவதும் உண்டு.

ஆங்கிலேயருக்கு முன், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்டார்கள். இந்த 'உலாந்தர்களே' முதன்முதலில் இலங்கையில், முறைப்படி நிலஅளவை செய்தார்கள். அதைச் செய்தவனை யாழ்ப்பாணத்தில் 'உலாந்தா' என்று அழைத்தார்கள். இந்த 'உலாந்தர்' இந்தோனேசியத் தீவுகளையும் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அங்கே கண்ட நல்ல முருங்கை வகையை யாழ்ப்பாண விவசாயிக்கு அறிமுகப் படுத்தினார்களாம். இந்த வரலாற்றினை, முன்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், உலாந்தா முருங்கை என்று பெயர் வைக்கப்பட்டதாம்.

சும்மா சொல்லப்படாது!

எங்கள் வளவின் தென்மேற்கு மூலையிலுள்ள களிமுருங்கை, பருவ காலத்தில் இலை தெரியாமல் காய்க்கும். நான் ஊரில் வாழ்ந்த காலத்தில், எங்கள் வளவின் களிமுருங்கைக் காய்க் கறியும், மறவன்புலவு வயலில் விளைந்த மொட்டைக் கறுப்பன் நெல் அரிசிப்புட்டும் எனது விருப்பமான உணவு. சின்ன வயதிலும் ஒரு நீத்துப் பெட்டி புட்டு தனியாளாய்ச் சாப்பிடுவன் என்று சாட்சி சொல்ல, என்னுடைய அக்கா பிறிஸ்பேனில் இருக்கிறார்.

அம்மா முருங்கைக்காய்க் கறி சமைப்பது ஒரு பிரத்தியேகக் கலை!

துருவிய தேங்காயைப் பிழிந்து வரும் முதல் பாலில் அவியவிட்டு, தூள்போட்டு, கறி வறட்டல் பருவத்துக்கு வந்தவுடன், சொட்டு நல்லெண்ணை ஊற்றிப் பிரட்டி, பெருஞ்சீரகத் தூள் தூவி இறக்குவார். வாசனை ஒரு கட்டை தூரத்துக்கு அப்பாலும் காந்தமாய் இழுக்கும்.

விரதத்துக்கு அம்மா முருங்கைகாய் சமைக்க மாட்டார். தான் அனுஷ்டிக்கும் விரதங்களை நியாயப்படுத்த அம்மா ஒவ்வொரு புராணக்கதை வைத்திருப்பதுபோல, முருங்கைக் காய்க்கும் ஒன்று வைத்திருந்தார்.

சீதை தான் கற்புள்ளவள் என்பதை நிரூபிக்க தீயில் குதித்தாளாம். தடுக்க முயன்ற இராமனுக்கு கையில் அகப்பட்டது சீதையின் கூந்தல். இராமன் எறிந்த, அறுந்த கூந்தல் மரத்தில் தொங்கி முருங்கைக் காய்கள் ஆயினவாம். எனவே 'விரதச் சமயலுக்கு முருங்கைகாய் ஆகாது' என்பது அம்மாவின் ஆசாரம்.

இராமன் வட இந்தியாவில் பிறந்தாலும் அவன் இமயமலைப் பிரதேசத்தில் பிறந்ததாகவோ வாழ்ந்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் முருங்கையின் ஆதிமூலம் (Origin) இமயமலை அடிவாரம் என உசாத்துணை நூல்கள் சொல்லுகின்றன. இருப்பினும், இலங்கை இந்தியா தவிர்ந்த, இமய மலையைச் சூழவுள்ள மற்றைய நாடுகளில் முருங்கைக்காய் உணவுப் பாவணை குறைவு. இந்தியாவிலும் தென் இந்தியாவிலேயே அதிகளவில் அது சாப்பிடப்படுகிறது. இருப்பினும், இலங்கையைப் போல வகை வகையான முருங்கைச் சமையல், இந்தியாவில் இல்லை என்பது எனது அபிப்பிராயம். ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளமளவில் முருங்கைகாயை நறுக்கி சாம்பாருக்குள் போடுவதுடன் தென் இந்தியாவில் முருங்கைச் சமையல் பெரும்பாலும் நிறைவடைந்துவிடும்.

முருங்கைக் காயை மூன்று அல்லது நான்கு அங்குல நீளத்தில் வெட்டி தனித்தோ, இறால் போட்டுச் சுண்டவைக்கும் வறட்டல் கறியோ, கருவாடு சேர்த்த குழம்போ, தூளே மணக்காத வெள்ளைக் கறியோ, சரக்கு அரைத்து வைக்கும் பத்தியக் கறியோ அல்லது முருங்கை இலை போட்ட தேங்காய்பால் சொதியோ இலங்கையில் மட்டுமே நான் சுவைத்த கறி வகைள். முருங்கையிலே ஈழத்தமிழரின் குஷினி எத்தனை வகையான சுவைகளைக் கண்டு பிடித்தன என்பதைச் சொல்லத் தனி அகராதியே தொகுக்க வேண்டும்.



பி.கே.எம்.1, பி.கே.எம்.2, கே.எம்.1 போன்ற பல புதிய முருங்கை இனங்கள் கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. விஞ்ஞான ரீதியாக விருத்தி செய்யப்பட்ட இப் புதிய இனங்கள், உலாந்தா முருங்கை போன்று நீளமானதும், களிமுருங்கை போன்று சதைப் பிடிப்பானதுமானதும். இவை எல்லாவித மண்ணிலும் வளரும்.

மரமாக முருங்கை வளர்த்ததினால்தான், வேதாளம் மீண்டும்மீண்டும் முருங்கை மரம் ஏறியதாம். அவை எல்லாம் பழங்கதைகள். புதிய விவசாய முறையில், முருங்கையை மரமாக அல்லாது, செடிபோல வளர்க்க வேண்டும்.

பல இடங்களில் பசுமைக் கூடங்களில் சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் (Drip irrigation) முருங்கை இப்பொழுது சாகுபடி செயயப்படுகிறது. இந்த முறையில் 2.5 X 2.5 மீட்டர் இடை வெளியில் கொட்டைக் கன்றுகளை நட்டு, ஒரு மீட்டர் வளர்ந்ததும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இதனால் பக்கக் கிளைகள் வளர்ந்து பெருமளவில் காய்க்கும். காய்களைப் பறித்த பின், மீண்டும் ஒரு மீட்டர் உயரத்துக்கு கவ்வாத்துப் பண்ணி வளர்த்தால் வருடத்தில் இரண்டு முறை காய்க்கும். பசுமைக் கூடத்தில், மரத்துக்கு மரம், கவ்வாத்துப் பண்ணும் 'மாதங்களை' மாற்றுவதன் மூலம், வருடம் முழுவதும் முருங்கைக் காய் பெறலாம். இந்த வகையில் வெட்டுத் துண்டங்கள் நடப்படுவதில்லை. வெட்டுத் துண்டங்களில் (Cuttings) சல்லி வேர்களே வளரும். கொட்டைக் கண்டுபோல ஆணிவேர்கள் வளராதென்பதே இதற்குக் காரணம்.

இவ்வாறு முருங்கையைச் செடியாக வளர்த்து, கவ்வாத்துப் பண்ணி, சொட்டு நீர்ப்பாசனத்தில் வளர்க்கும் முறை, நான் பிறந்து நடைபயின்ற கைதடி மண் உட்பட எங்கும் பயிரிட வேண்டுமென்பது, என் அம்மா சார்பாக நான் காணும் கனவுகளில் மிக முக்கியமானது.

நிறைவாக, அந்தக் காலத்து பாக்கியராஜாவின் முந்தானை முடிச்சு படத்தில் வந்த முருங்கைக் காய் மகத்துவத்தையும் இங்கு சொல்லத்தான்வேண்டும்.

இதிலேதும் விஷயமிருக்கா என நான் உசாத்துணை நூல்களிலும் கட்டுரைகளிலும் முங்கி எழுந்தும் எனக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இது சிட்டுக்குருவி லேகிய கட்டுக் கதை போன்றது என்கிறான், என் பல்கலைக்கழக சகா. ஆனாலும் என்ன? தேவைப்படுவோர் சாப்பிட்டுப் பார்க்கலாம், வாச்சால் வாய்க்கட்டும் என்பதே எனது அறிவுரை.

எது எப்படி இருந்தாலும், முருங்கைக்காய்க்கு 'மவுசு' சேர்த்த திரைப்பட இயக்குனர் பாக்கியராஜாவை, நாங்கள் இதற்காகப் பாராட்டத்தான் வேண்டும்…!

முழுமையான கட்டுரையை வாசிக்க இணைப்பை அழுத்தவும்.

  https://aasikantharajah.blogspot.com/2021/01/1_52.html#more

No comments:

Post a Comment