Monday 6 May 2024

சிதைவுறும் கிடுகு வேலிகள்:

‘அகதியின் பேர்ளின் வாசல்’ காட்டும் சித்திரம்

-அலைமகன்-

ரு ஈழத்தமிழனுக்கு உலகம் என்பது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே ஆகும். இவர்களில் கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களை பெற்றவர்கள், அதனை முறையாக பதிவுசெய்தவர்கள் ஈழத்தில் மிகக்குறைவு. இருந்தாலும் இன்று உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் கிழக்கு ஐரோப்பா, அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியின் பங்களிப்பு மிக அதிகம். எனது சிறு பிராயத்தில் எனதூரில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எப்போதும் ஜெர்மனிக்கே செல்வது வழக்கம். அந்த மர்மத்தை சரியாக உணர்ந்துகொள்ள எனக்கு இரண்டு சகாப்தங்கள் தேவைப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் அனுபவங்களை பனிப்போர் சூழலின் பின்னணியில் விவரிக்கும் நாவல், அகதியின் பேர்ளின் வாசல்.



வரலாற்றில் சம்பவங்கள் திரும்பவும் நடக்கின்றன. முதல் தடவை அது சோகமாக முடிகிறது. அடுத்த தடவை அது கேலிக்கூத்தாக முடிகிறது என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் ஆய்வாளர்களிடையே பிரபலமானது. நாம் ஏன் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நியாயமான, தர்க்கபூர்வமான காரணங்கள்தான் மேற்கூறிய கூற்றுக்கள்.

வரலாறை மிக சுவாரஸ்யமாக அதே நேரம் முறையான தரவுகளுடன் தந்த நூல்கள் பல. அந்தவகையில் நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight) முக்கியமான ஒரு நூல். அதேபோல தமிழர்களின் விடுதலைப் போரில் நடந்த நிகழ்ச்சிகளை காய்தல் உவத்தல் இன்றி பதிவுசெய்த நூல்களில் ஒன்று புஸ்பராசாவால் எழுதப்பட்ட "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்".

இந்த வழிமுறைகளை தவிர்த்து ஆசி. கந்தராஜா அவர்கள் இன்னொரு வழியை பின்பற்றுகிறார். அதாவது வரலாற்றை ஒரு புனைகதையூடாக வெளிப்படுத்துவது. வரலாற்றுப் புனைவு என்று கூறும்போது நாம் அறிந்த சரித்திரப் புதினங்களுடன் இதனை குழப்பிக்கொள்ளக்கூடாது. நாவலாசிரியர் தனது நாவலில் சித்தரிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் கூடவே வாழ்ந்து பயணித்திருக்கிறார் என்பதுதான் இங்கே உள்ள சிறப்பம்சம்.

1990ற்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் தலைநகர் மாஸ்கோ "புரட்சியாளர்களின் புனித பூமி" என்று வர்ணிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கிழக்கு ஜெர்மனியின் சர்வகலாசாலையில் உயர் கல்வி கற்கவும் அங்குள்ள வாழ்க்கையை வாழவும், தொடர்ந்து மேற்கு ஜெர்மனியின் நேரடி வாழ்வனுபவங்களும், பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பேர்ளின் சுவர் தகர்க்கப்பட்டபோது நடைபெற்ற நிகழ்வுகளை காணும் நேரடி சாட்சியாகவும் இருக்கும் அரிய வாய்ப்புக்களை பெற்றவர். இவை ஒரு ஈழத்தமிழனின் வாழ்வில் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் என்பதை மறுக்கமுடியாது. எனவேதான் அவற்றை முழுமையாக பதிவு செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.