Thursday 6 April 2023

பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…!

கம்யூனிச கொள்கைளின் கேள்வி ஞானத்திலே, பொதுவுடமை சித்தாந்தம் பற்றி, முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே, முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவி’தத்தனத்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று இன்றும் மனதில் நிக்கிறது. ‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப்பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.

சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை, நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.

எனது இளமைப்பருவத்தில் ஏழு வருடங்கள் சோசலிஷ நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கிழக்கு ஜேர்மனியிலும், பின்பு எனது டாக்டர் பட்ட ஆராச்சிக்காக, முதலாளித்துவ பொருளதாரத்தைப் பயின்ற, மேற்கு ஜேர்மனியில் ஆறு ஆண்டுகளும் படித்திருக்கிறேன், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் ஜேர்மனி பிளவுபட்டதால் தோன்றிய இருநாடுகளும், ஒன்றுக்கொன்று பரமவிரோதம் பாராட்டிய காலம் அது!

எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டுமே என்பதை உணர, எனக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. இதே வேளையில், கம்யூனிசம் சோசலிஷம் என சோசலிஷ நாடுகளில் பொதுவுடைமை பேசித்திரிந்த கம்யூனிஸற் பிரமுகர்கள் பலர், அங்கு வாழும் மற்றவர்களைவிட வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள் என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களுக்கு எங்கிருந்தோ மேற்குலக ஆடம்பர பொருள்கள் கிடைத்த வண்ணமிருந்தன. கம்யூனிசம் என்ற மாயமான் கொள்கையில் அங்கு கஷ்டப்பட்டவர்கள் பாமர மக்களே.

ஜேர்மனியில் நான் கல்வி கற்ற காலங்களில், லெனின், கார்ல் மார்க்ஸ், எங்கிள்ஸ் போன்ற மேதைகள் எழுதிய கருத்துச் சாரங்களை, ஜேர்மன் மொழியிலேயே கல்வி கற்றுத் தேறும் வாய்ப்பு கிட்டியது. அத்துடன் இதில் பரீட்ஷை எழுதி, சிறப்பு சித்தியும் பெற்றுள்ளேன்.

கார்ல்மார்க்ஸ், ‘Das Kapital’ (The capital) என்னும் நூலை தன் தாய்மொழியாகிய ஜேர்மன் மொழியில் எழுதினார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புச் சம்பந்தமாக இதுவரை முன் மொழியப்படாத புதிய சித்தாந்தத்தை அது முன் வைத்தது. கம்யூனிச பொருளாதார வாதத்தின் விவிலிய நூல் இதுதான். இது குறித்த பல்வேறு விளக்கங்களை கார்ல் மார்க்ஸ், தமது தோழர் எங்கிள்ஸ் உடன் இணைந்தும் எழுதினார்.

சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு. இதுபற்றி எமது ஜேர்மன் பேராசிரியர் அமெரிக்க டொலர்களை உதாரணம் காட்டி மாதக்கணக்கில் எமக்கு விரிவுரையும் நிகழ்த்தியிருக்கிறார். அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன. அமெரிக்க டொலர்கள் ஆபிரிக்காவில் வாழும் கொங்கோ நாட்டு மக்களிடமும் இருக்கிறது. லற்றின் அமெரிக்காவிலுள்ள வெனின்சுவேலா பிரசையிடமும் இருக்கிறது. இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரேநேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்?

சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்!

அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.

சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).

சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.

படித்தவற்றை பிரயோகித்துப் பார்ப்பது எனது வழக்கம். இதனால் நான் பல தடவை சிக்கல்களில் மாட்டியதும் உண்டு. வட்டிக்கடை வரதராசாவும் நானும் ஒன்றாக ஊர் பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள். படிப்பில் அவனுக்கு அதிக நாட்டமில்லை. பத்தாம் வகுப்புடன் தகப்பனின் வட்டிக் கடையில் அமர்ந்துவிட்டான். இருப்பினும்: வெளிநாட்டுக்கு போகவேண்டு மென்று, அவனுக்கு தீராத ஆசை. நான் ஊருக்குச் சென்றபோது ஜேர்மன் வாழ்க்கைபற்றியும் எனது படிப்பு பற்றியும் கேட்டான்.

பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியது’ என்ற கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை கதையோடு கதையாக அவிழ்த்து விட்டேன்.

அடகு பிடித்த நகைகளை பத்திரப்படுத்தும் இரும்பு அலுமாரிகள் வைத்திருந்த, இரும்புக்கிறாதி அடித்த, அறைக்குள் இருந்து வரதராசாவின் தகப்பன் தனது பாரிய தொந்தியைத் தடவிக் கொண்டு வெளியே வந்தார்.

எனது கதை அவருக்கு பிடிக்கவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது. ‘வங்கி பூட்டப் போறாங்கள் காசு கொஞ்சம் எடுத்துவா…’ எனச் சொல்லி மகனை என்னிடமிருந்து பிரிப்பதில் அவசரம் காட்டினார். முடிவில், நான் அங்கிருந்து புறப்படுகையில், ‘படிச்ச பெடியன், பிழைக்கிற வழியைப் பார்’ எனச்சொல்லி கதவைச் சாத்தினார்.

சோசலிஷம் எங்களுக்கு சரிவருமோ? என அன்று எனக்கு ஏற்பட்ட ஐயத்துக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.

ஆசி கந்தராஜா (வீரகேசரி வாரமஞ்சரி 26 February 2017)

No comments:

Post a Comment