Friday, 16 May 2025

டயறிக் குறிப்பு:


விதைகள் இல்லாத திராட்சைக் கொடியின் பதியத் துண்டங்களை (Cuttings) பசுமைக் கூடத்தில் பதிவைத்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூட விடுமுறையை எம்முடன் கழிக்கவும் களிக்கவும் எமது வீட்டுக்கு வந்திருந்த மகன் வழி ஆறுவயதுப் பேத்தி, பொரிக்கவென மேசையில் வைத்திருந்த கோழிக்காலை (Chicken drumstick) அப்பம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்து, மண்ணுக்குள் புதைக்க முற்பட்டாள்.
தாவரத்தின் வெட்டுத் துண்டிலிருந்து புதிய தாவரம் உருவாகுமென்றால் கோழிக்கால்த் துண்டிலிருந்து முழுக் கோழியை உருவாக்கலாம் என்பது அவளது எதிர்பார்ப்பு.
தாவரங்கள் தவிர்ந்த மற்றைய உயர் உயிரினங்களில் கருக்கட்டிய கரு முளையத்திலிருந்தே இன்னொரு உயிரை உருவாக்க முடியும். தசைத்துண்டிலிருந்து புதிய உயிரை உருவாக்கமுடியாது. (குளோனிங் வேறு விஷயம்).
தாவரங்களில் மாத்திரம்தான் கருமுளை கொண்ட விதைகளிலிருந்து மாத்திரமல்ல பதியத் துண்டங்களில் இருந்தும் புதிய தாவரங்களை உருவாக்க முடியும். இது தாவரங்களுக்கு இறைவன் கொடுத்த ஒரு வரம்.
இந்த இயல்பை ஆங்கிலத்தில் Totipotency என்போம்.