மகாஜனா நாடக வரலாற்றின் பொற்காலம்.
ஆசி கந்தராஜா.
கோமகளும் குருமகளும்(1968)Kanthasamy, Kohila, Kantharajah
அதிபர் திரு ஜெயரட்ணம் மற்றும் ஆசிரியர் கவிஞர்
கதிரேசர்பிள்ளை ஆகியேரின் காலமே மகாஜனா நாடக வரலாற்றின் பொற்காலம் எனலாம்.
இக்காலத்தில் இலங்கைக் கலைக் கழகம், வருடாவருடம் அகில இலங்கை ரீதியில் நடாத்தி வந்த தமிழ்ப் பாடசாலைகளுக் கிடையேயான நாடகப் போட்டியில் தொடர்ந்து 5 வருடங்களாக மகாஜனா முதலிடம் பெற்றது.
காங்கேயன் சபதம் (1965), ஜீவமணி (1966), அம்பையின் வஞ்சினம் (1967), கோமகளும் குருமகளும்(1968), குரு தட்சனை (1969) என்பனவே வெற்றிபெற்ற 5 நாடகங்கள்.
முதல் நான்கு நாடகங்களிலும் குரும்பசிட்டி
கந்தசாமி, ஆசி கந்தராஜா, ஸ்ரீசிவகுமார், வரதா என்னும் வரதாட்ஷனி
கந்தையா, நாகேஸ்வரி, தெய்வானை, கோகிலா மகேந்திரன், ஆகியோர் முக்கிய
பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்கள்.
முதல் நான்கு நாடகங்களில்
நடித்தவர்கள் பாடசாலையிலிருந்து விலகிய பின் குரு தட்சனை என்னும்
நாடகம் (1969) மேடையேறி இலங்கைக்
கலைக்கழகப் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. இதில் நா. சண்முகலிங்கன், செ சுப்ரமணியம், இந்திரமதி, மாலினி, நடீன், தயாபரன், சுகுணசபேசன் ஆகியோர்
நடித்தார்கள்.
நாடக வெற்றிகளுக்கெல்லாம் ஆதார சுருதியாய்
பின்னணியில் இருந்து, மற்றவர்கள் தொட்டும்பார்க்காத
இதிகாச காப்பியங்களிலே வரும் கிளைக் கதைகளைத் தேடி எடுத்து மேடைக்கதை அமைத்து
வசனம் எழுதி நெறியாள்கை செய்து வழிகாட்டியாய்த் திகழ்ந்தது ஆசிரியர், செ. கதிரேசர்பிள்ளை
அவர்களே.
மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாகச் சேர்ந்து நடிப்பதென்பது (காதலன் காதலி, கணவன் மனைவி போன்ற பாத்திரங்களில்) ஏதோ மிகப்பெரிய தப்பென்றிருந்த அந்தக் காலகட்டத்திலேயே மாணவ மாணவிகள் சேர்ந்து நடித்த நாடகங்களை மேடையேற்றி முன்மாதிரியாய்த் திகழ்ந்தது மகாயனாக் கல்லூரியே...
அந்தவகையில் முதன்முதலாக பெண்பாத்திரம்
ஏற்று நடித்த மகாஜனா மாணவி, வரதா என்று அழைக்கப்பட்ட வரதாட்ஷனி கந்தையா.
கலைக்கழகம் நடாத்திய நாடகப் போட்டிகளில் 1969ம் ஆண்டே சிறந்த
நடிகருக்கான பரிசு முதன்முதலாக அறிமுகப் படுத்ப்பட்டது. அந்தவகையில் 1969 போட்டிக்கு மேடையேறிய
குரு தட்ஷனை நாடகத்தில் செ சுப்ரமணியத்துக்கு சிறந்த நடிகருக்கான
பரிசு கிடைத்தது.
இந்திய நாடக ஜாம்பவான்களான ஒளவை சண்முகம், ரி கே பகவதி ஆகியோர்
யாழ்பாணம் வந்தபோது, அவர்கள் முன்னிலையில்
நாடகக்கலையின் பிதாமகர் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் வேண்டுகோளின்படி, அம்பையின் வஞ்சினம் நாடகம் 1967ல் யாழ்ப்பாண நகரசபையின்
திறந்த கலையரங்கில் மேடையேறி பாராட்டைப் பெற்றது.
மகாஜனாக் கல்லூரியின் வைரவிழா, 1970ல் வந்தது. இவ்விழாவில் 3 மணித்தியால சமூக நாடகம்
மேடையேற்றப்பட்டது. பணம் செலுத்தி நுழைவுச்சீட்டெடுத்துப் பார்க்கின்ற நாடகமாக, பார்வையாளர்களின்
வேண்டுகோளுக்கிணங்க, வைரவிழாக் கொண்டாட்ட
காலமான 10 நாட்களுக்குள் 2 முறை அரங்கு நிறைந்த
நாடகமாக அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை செ சுப்ரமணியம் எழுதினார். அறிஞர்
அண்ணாவின் 'வண்டிக்காரன் மகன் கதையைத் தழுவி எமது
நாட்டுக்கு ஏற்ற விதத்தில் எழுதப்பட்டது இந்த நாடகம். 'ஏன் இந்த நாடகம்' என்னும் இந் நாடகத்தில், ஆசி கந்தராஜா, நா. சண்முகலிங்கன், செ சுப்ரமணியம், நளாயினி, நடீன் ஆகியோர் முக்கிய
பாத்திரங்களிலும் நிருபா,
சந்திரலிங்கம், மொஹமட் எம் ஜமீல், கருணாகரமூர்தி ஆகியோர்
உபபாத்திரங்களிலும் நடித்தார்கள். இந் நாடகம்
பார்வையாளர்களின் சிறப்பான பாராட்டைப் பெற்றது.
இல்லங்களுக்கிடையேயான ஆங்கில தமிழ் நாடகப்
போட்டியும் மாறிமாறிய வருடங்கள் நடைபெற்றன.
பெற்றோர் தின விழா 1968ல் மேடையேறிய 'கிளாக்கர்' என்னும் நகைச்சுவை நாடகம்
மகாஜனாவில் நீண்டகாலம் பேசுபொருளாகி 3 முறை மேடையேறியது. இதை செ
சுப்ரமணியமும் ஆசி கந்தராஜாவும் இணைந்து எழுதியிருந்தார்கள். முக்கிய
பாத்திரங்களில் ஆசி கந்தராஜா, செ சுப்ரமணியம், மொஹமட் எம் ஜமீல் ஆகியோர்
நடித்தார்கள். இது அரங்கு குலுங்கச் சிரித்ததொரு நாடகமாகும்.
கிடைக்கப்பெற்ற படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆசி கந்தராஜா (2024)
ஆசி கந்தராஜா (2024)
No comments:
Post a Comment