ஜீவநதி ஆசிரியர்
திரு பரணீதரன், 2025 ஜனவரி ஜீவநதி
ஆளுமைச் சிறப்பிதழுக்காக
எடுத்த செவ்வி.
1. உங்கள் பெற்றோர்,
பிறந்த ஊர், சகோதரர்கள், குடும்பம் பற்றி
அறிந்து கொள்ளலாமா?
இலங்கையின் வட மாகாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடி என்ற கிராமத்தில்,
ஆ. சின்னத்தம்பி - முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு 25 ஜனவரி 1950 அன்று
பிறந்தேன். எனது தந்தை ஆறுமுகம் சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத்
தேர்ந்த ஒர் தமிழ் ஆசான். எனக்கு மூன்று மூத்த சகோதரிகள். கடைக்குட்டி நான். எமது
முன்னோர்கள் விவசாயிகள். பெற்றோர், சகோதரிகள்,
நான் என எல்லோரும் கைதடியிலேயே மணம்முடித்தோம்.
இதனால் நாங்கள் எந்தவித கலப்புமற்ற தூய கைதடியார் எனச் சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுவதுண்டு.
2. இலங்கையில்
நீங்கள் கற்ற பாடசாலைகளைப் பற்றியும் உங்கள் திறமைகளை வெளிக்கொணரக் காரணமாக இருந்த
ஆசிரியர்கள் பற்றியும் கூறுங்கள்?
ஆரம்பக் கல்வியை, கைதடியிலுள்ள பாடசாலைகளில், குறிப்பாக நான்கு ஆண்டுகள் கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாiலையில் கற்றேன். பின்னர் கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரியிலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் படித்தேன். கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாலையில் எனது தந்தையே எனது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அந்தவகையில் சிறுவயதுமுதல் எனக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் அவரே.
