Saturday 16 January 2021

 ‘மொழி


ந்த திருமண மண்டபம் சற்றுச் சிறியது. பெருமளவில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் அலங்கரிக்கப்பட்ட வட்ட மேசைகள் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்தன. மேசையைச் சுற்றி பன்னிரண்டு கதிரைகள்.  முச்சுவிட இடமில்லை. நான் இருந்த மேசையில் எனக்குப் பக்கத்தில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். பதினாறு வயது மதிக்கலாம். பையனின் பெற்றோர் மணப் பெண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருக்கவேண்டும். மணப்பெண்ணை அழைத்துவர ஒப்பனை அறைக்குச் சென்றுவிட்டார்கள். பையன், திருமணத்துக்கு வந்த நேரம் முதல் ஐபோனை நோண்டிக் கொண்டிருந்தான். இன்றைய இளவல்கள் சதா ஐப்பாட்டுடனும் ஐபோனுடனும் காலத்தை கடத்துவது எனக்கு எரிச்சலைத் தரும் சமாச்சாரம். இதனால் ஐபோணிலிருந்து திசை திருப்ப அவனுடன் பேசினேன்.

சிட்னியிலுள்ள ஜேம்ஸ் றூஸ் விவசாய உயர் நிலைப் பாடசாலையில் பதினொராம் வகுப்பு படிப்பதாகச் கொன்னான். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள அதி புத்திசாலி மாணாக்கர்கள் கல்வி பயிலும் முதல் தர பாடசாலை அது. இங்கு கல்வி பயிலும் 95 விழுக்காடு மாணாக்கர்கள் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டிராத, ஆஸ்திரேலிய பிரசைகளான சீனர்கள், வியட்நாமியர்கள், கொரியர்கள், இந்தியர்கள் மற்றும் ஸ்ரீலங்கர்கள். இவர்கள் போட்டி பரீட்ஷை மூலம் வடிகட்டி எடுக்கப்பட்டவர்கள்.

இங்கு இன்னுமொரு கொசுறுச் செய்தியையும் பதிவு செய்ய வேண்டும்.

அடிப்படையில் ஆஸ்திரேலியா ஒரு விவசாய நாடு. ஆரம்பத்தில் நிலச் சுவாந்தர்களான வெள்ளையர்களே அதிகார மையத்தில் இருந்தார்கள். இவர்களின் பிள்ளைகள் விவசாய கல்வி பெறுவதற்காக சிட்னி றிச்மண்ட் என்னும் இடத்தில் 1891ம் ஆண்டு, ஹோக்ஸ்பெரி விவசாய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1989ம் ஆண்டு மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது.

இதே போல குவீன்ஸ்லாந்திலும் ஹற்றன் என்னுமிடத்தில் 1897இல் ஒரு விவசாயக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 2004இல் குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. ஜேம்ஸ் றூஸ் விவசாய உயர் நிலைப் பாடசாலையில், விவசாயத்தை ஒரு பாடமாக் கற்று, பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் மாணாக்கர்கள், ஹோக்ஸ்பெரி விவசாய கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொள்வது அன்றைய பாரம்பரியம். ஆனால், எனது (இன்றைய) 35 வருட ஆசிரிய அநுபவத்தில் ஒரேஒரு மாணவனே விவசாயம் படிக்கவென ஹோக்ஸ்பெரி விவசாய கல்லூரிக்கு வந்ததை, காலத்தின் கோலம் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்கள் மருத்துவம், சட்டம், கணக்கியல் போன்ற கியாதியுள்ள துறைகளையே நாடுவது வழக்கமாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பான பன்னிரண்டாம் வகுப்பு இறுதிப் பரீட்ஷைக்கு, தமிழையும் ஒரு பாடமாக எடுக்கலாம். ஒரு சில மாணவர்கள் இதில் சிறப்புச் சித்தியும் அடைந்திருக்கிறார்கள். இவர்களுள் ஜேம்ஸ் றூஸ் பாடசாலையில் படித்த மாணவனும் ஒருவன். இதனால் தமிழ் மொழி கல்வி பற்றிக் கருத்தறிய அவனது வாயைக் கிளறினேன்.

நக்கலும் பரிகாசமும் கலந்த தோரணயில் என்னைப் பார்த்தவன், 'ஒரு மொழியின் தலையாய கடமை என்ன?' என ஆங்கிலத்தில் கேட்டான்.

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் என்னைச் சுதாகரித்துக் கொண்டு, 'கருத்துப் பரிமாற்றம்' என பதில் சொன்னேன் .

கருத்துப் பரிமாற்றம் ஆங்கிலத்தில் எனக்கு நல்லபடியாக நிறைவேறுகிறது. பிறகு எனக்கேன் தமிழ்? தமிழ் படிப்பதால் எனக்கென்ன பிரயோசனம்?

தமிழ் எமது தாய் மொழி, தமிழ் எங்கள் அடையாளம், என நான் பதில் சொல்லி முடிக்க முன்னர் சம்பாஷனையைத் தொடர விரும்பாது அவன் எழுந்து சென்றுவிட்டான்.

தரையில் தவறி விழும் குடத்து நீர் வெவ்வேறு கோடுகளில் தன்பாட்டுக்குப் போவதுபோல, பையனுடைய கேள்விகளால் என் எண்ணங்கள் பல திசைகளிலும் சிதறி ஓடின.

புலம் பெயர் சூழலில்எமது என்பதற்கு அப்பால், எமது மொழியை கற்பதற்கு வேறு ஏதாவது நியாயம் உண்டா?

தமிழை, ‘எமது என்று உணராத எங்கள் பிள்ளைகளை, என்ன நியாயம் நிர்ப்பந்திக்கும்?

ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் நமது பிள்ளைகள் ஆங்கில மொழிச் சூழலில் வாழ்கிறார்கள். போகுமிடமெல்லாம் ஆங்கிலம். படிப்பதும் ஆங்கிலத்தில். சொந்த சமூகத்துப் பிள்ளைகளுடன் பேசுவதும் ஆங்கிலம்.

ஆங்கிலத்தில் பேசுவதும் ஆங்கிலத்தில் சிந்திப்பதும் அவர்களுக்கு இலகுவானதாகவும் சுலபமானதாகவும் இருக்கிறது. பின் எதற்காகத் தமிழ்? என்ற பையனின் கேள்வி இயல்பானதும் நியாயமானதும்.

தமிழ் மொழி, எங்கள் தனித்துவ அடையாளங்களுள் ஒன்று எனவும் அடையாளம் தெரியாதவர்களாக புலம் பெயர் சூழலில் எமது சந்ததியினர் தொடர்ந்து வாழ்வது அபாயகரமானது என்றும் நம் பிள்ளைகளுக்கு உணர்த்துவதற்கு முன்னர், புலம் பெயர் சூழலில் தமிழை ஒரு தொழில்பாட்டு மொழியாக (Functional Language) ஆக்குவது அவசியமும் அவசரமும் என எனக்குத் தோன்றுகிறது. அப்போதுதான் எமது வருங்கால சந்ததியினர் தமிழைக் கற்க தொடங்குவார்கள். தமிழைக் கற்பதற்கான தேவை அதிலிருந்துதான் ஆரம்பிக்கும். அன்றாட பாடசாலைக் கல்வியில் நமது பிள்ளைகள் காணும் கவர்ச்சியில் சிறிதளவாவது தமிழ் மொழிக் கல்வியில் அவர்கள் காணவேண்டும். இல்லையேல் தமிழ் ஒரு வறட்டுக் கல்வியாக பிள்ளைக்குத் தோன்றுவது தவிர்க்க முடியாதது!

தாயகத்தில் நாம் ஏன் ஆங்கில மொழியைக் கற்றோம்?

அது தொடர்பு மொழியாகவும் தொழிற்பாட்டு மொழியாகவும் இருந்த காரணத்தால். அதுவே வருமானத்துக்கு வழி கோலியதால்!

எனது தந்தை ஒரு தமிழ் ஆசான். எங்கள் வீட்டில் தமிழ் மட்டும்தான் கோலோச்சியது. ஆனாலும் தமிழ் ஆசிரியரான எனது தந்தைக்கு தமிழ் சோறு போடாது எனத் தெரியும். எனவே ஆங்கில மொழியில் விஞ்ஞானம் கற்கவென 1963ம் ஆண்டு என்னை கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.

ஆஸ்திரேலியாவில் வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் எப்படியோ அப்படியே எனக்கும் ஆங்கிலம் அங்கு வேப்பம் காயாக கசந்தது.

நான் ஒன்பதாம் வகுப்புக்கு வந்தவுடன் அரியபூஷணம் மாஸ்டர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார். ஐயாவைப் போல வேட்டி நாஷனல் அணிந்த ஒருவர் ஆங்கிலம் கற்பித்தது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நல்லாசிரியர் என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதியானவர். கல்விகற்கும் மாணவர்களின் தரமறிந்து ஆங்கில இலக்கணத்துடன் அவர் பாடங்களை ஆரம்பித்தார். நாங்களும் விருப்பத்துடன் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தோம். எங்களின் கால கஷ்டம் அவர் தனது சொந்த ஊரான மானிப்பாயிலுள்ள பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்ல, கொழும்பிலுள்ள பிரபல கல்லூரியொன்றிலிருந்து ஒருவர் எங்கள் பாடசாலைக்கு வந்தார். வந்ததும் மொழிகளில் தான் பாண்டித்தியம் பெற்றவராக தம்பட்டமடிதுக் கொண்டார். எல்லோரிலும் தான் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதில் வெகு முனைப்பாக இருந்தார். எங்களின் போதாத காலம் அவரே எங்களின் ஆங்கில வகுப்புகளை நடத்தினார். அடிப்படை ஆங்கில இலக்கணத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாத எம்மில் பலருக்கு அவர் கற்பித்தது Pride and prejudice என்ற ஆங்கில நாவல் இலக்கியமும், யொம்முக் கென்யாட்டா நிகழ்த்திய உரைகளும். வகுப்பிலுள்ள பெரும்பாலான மானவர்களுக்கு எதுவும் புரியவில்லை. முகட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தோம். Pride and prejudice புத்தகத்தை வாசிக்கும் போது அந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரமான எலிஷபெத் பெனற்றை ஆதியோடு அந்தமாக விவரிப்பதிலேயே எங்கள் பாட நேரம் முடிந்து விடும். அத்துடன் அவர் விட்டாரா...? யொம்முக் கென்யாட்டாவின் உரைகளை மனப்பாடம் செய்து வகுப்பில் ஒப்புவிப்பதைக் கட்டாயமாக்கினார். அகில இலங்கை ஆங்கில பேச்சுப் போட்டிக்கு எங்களை தயார் செய்வதாக அதற்கு அவர் காரணம் சொல்லிக் கொண்டார். இவ்வாறு எத்தனை ஆசிரியர்கள் தங்களின் பெருமைக்கும் அவதிக்கும் மாணவர்களைக் காலாதி காலமாகப் பலி கொடுத்தார்கள், இன்னும் பலி கொடுக்கிறார்கள் என்பது நான் ஆசிரியத் தொழிலுக்கு வந்த பின்புதான் சரியாகப் புரிந்து கொண்டேன். இதேவேளை, நல்லாசிரிய இலக்கணத்துக்கே உதாரணமாக விளங்கிய ஆசிரியர்களும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் என்பதையும் இப்பொழுது நன்றிப் பெருக்குடன் நினைவு கூருகின்றேன்.

கிராமத்திலிருந்து படிக்கச் சென்ற எனக்கும் அப்போது காதல் வந்தது. அது என் முதல் காதல். எங்கள் வகுப்பில், ஆங்கில மொழியை வீட்டுச் சூழலிலேயே தம் வசப்படுத்திய ஒரு சிலருள் அவளும் ஒருத்தி. அவள் முன்னால் அந்த ஆங்கில ஆசிரியரால் நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இவ்வளவுக்கும் நான் கடை நிலை மாணவனல்ல. பிற்காலத்தில் ஜேர்மனியில் நான் ஆறேமாதத்தில், முன் பின் தெரியாத ஜேர்மன் மொழியைக் கற்று, அந்த மொழியிலேயே டாக்டர் பட்டத்துக்குரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதுண்டு. அது மட்டுமல்ல, கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் உலக பல்கலைக் கழகமெங்கும் விரிவுரைகள் நிகழ்த்துகிறேன். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. 'ஆசிரியர்களே, மாணாக்கரின் தரமறிந்து படிப்பியுங்கள்' என்கிற என் அநுபவத்தைப் பகிர்து கொள்வதற்கே!

அரியபூஷணம் மாஸ்ட்டரைப் போன்று மாணவர்களுக்கு, கற்பதில் ஆர்வத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியம். ஒரு வகுப்பு முடிந்ததும் அடுத்த வகுப்பு எப்போது வருமென கல்வி கற்கும் மாணவர்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் பாடம் அவர்கள் வசப்படும். மொழியைப் பொறுத்த வரையில் புலம்பெயர் சூழலில் அதுவே மொழிக் கல்வியின் வெற்றிக்கு வழிகோலும்.

ஆஸ்திரேலிய அரசு பல் இன பல கலாசாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. பல இனங்கள் வாழும் இந்த நாட்டிலே இனங்களின் தனித்துவமான கலாசார இயல்புகளை வெளிப்படுத்தவும் மதிக்கவும் பலப்படுத்தவும் வேண்டுமென ஆஸ்திரேலிய அரசு விரும்புகிறது. அதற்கு மானியமும் வழங்குகிறது. எனவே இங்கு வாழும் நாம், இரு மொழி பேசும், இரு கலாசாரங்களைப் பின்பற்றும் இனமாக, நாட்டால் ஆஸ்திரேலியர்களாகவும் இனத்தால் தமிழராகவும் வாழ்வதே சாலச் சிறந்தது. 

 -ஆசி கந்தராஜா -

 

No comments:

Post a Comment