Tuesday 19 January 2021

முதல் பிரசவம்

சவாரித் தம்பர்…!

என்னை எழுத்தாளன் ஆக்கியவர்களுள் இவர் முக்கியமானவர். 

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், தினகரனில், திங்கள் முதல் வெள்ளிவரை சவாரித்தம்பர் என்னும், தொடர் கேலிச் சித்திரம் வெளி வந்தது. இதன் மறுவடிவம், வார மஞ்சரியில் சித்திர கானம் என்ற பெயரில் வந்தது. இவற்றை வரைந்தவர் சுந்தர் என அழைக்கப்பட்ட திரு சிவஞானசுந்தரம் அவர்கள். இவரது கேலிச் சித்திர நாயகர்களான சவாரித் தம்பர், சின்னக்குட்டி, பாறி மாமி, மைனர் மச்சான் ஆகிய அனைவரும், நாம் அன்றாடம் ஊரில் சந்திக்கும் பாமர மக்கள், சாதாரண மனிதர்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், இலங்கை அரசியல் மற்றும் சாதி வேறுபாடுகள், பிற்போக்குத் தனங்கள், மூடக் கொள்கைகளை நகைச் சுவையாக இவர்கள் நையாண்டி செய்தார்கள். சுந்தரின் திறமையை ஊக்குவித்தவர் திரு கைலாசபதி. கால ஓட்டத்தில் கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும், கார்டுநிஸ்ட் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவருடன் அவரது கேலிச் சித்திர பாத்திரங்களும் வீரகேசரிக்கு சென்றன. இவரே பின்னர் சிரித்திரன் என்ற கேலிச் சித்திர சஞ்சிகையை யாழ்பாணத்தில் ஆரம்பித்து நடத்தியவர். 

அப்போது நான் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சவாரித்தம்பரை வாசிக்காமல் படுப்பதில்லை என்னும் அளவுக்கு அதில் நான் ஊறிப்போயிருந்தேன். சவாரித்தம்பரை வாசிப்பதற்காகவே, நான் செய்தித்தாளுக்காக காத்திருந்த காலங்கள், இன்றும் என் நினைவில் சுழன்றடிக்கின்றன.

ஏழாம் வகுப்புவரை நான் என்னுடைய ஐயா படிப்பித்த தமிழ் பாடசாலையில் படித்தேன். அங்கு காலை பத்து மணியளவில் ஐயா வாங்கும் செய்தித்தாள் வரும். காத்திருந்து அதை நான்தான் வாங்குவேன். இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், இலவசமாக இலங்கைப் பாடசாலைகளில் ‘பணிஸ்’ கொடுத்தார்கள். இது தஹாநாயக்க கல்வி மந்திரியாக இருந்த காலத்தில், அமெரிக்க உதவியுடன் கொண்டுவரப்பட்ட இலவச திட்டம். இந்த ‘பணிஸ்’ இடை வேளையின் போது, செய்தித்தாளுடன் நண்பர்கள் புடை சூழ, வேப்ப மர நிழலில் அமர்வேன். அங்கு என்னுடைய சவாரித்தம்பர் ஓரங்க நாடகம், அமர்க்களமாக அரங்கேறும். அன்றைய செய்தித் தாளில் வந்த சவாரித்தம்பர் வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசி அங்கு நடித்துக் காட்டுவேன். அத்துடன் சவாரித்தம்பர் சாயலில், நான் சுயமாக எழுதி வைத்திருக்கும் கதை வசனங்களையும் அவ்வப்போது எடுத்து விடுவேன். நண்பர்களின் சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் பிடிக்கும். அவசரமாக ‘ஒண்டுக்கு’ இருந்துவிட்டு அந்த வழியால் வந்த அப்புத்துரை வாத்தியாரும் மாணவர்களுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தார். அடுத்த பத்து நிமிஷத்துக்குள் ஐயாவின் வகுப்பறைக்குள் போன அப்புத்துரை வாத்தியார், ‘சின்னண்ணை, உன்ரை மகன் நல்ல ‘புலுடா’க்காரனாய்தான் வரப்போறான். எட்டிப்பார், வேப்ப மரத்தடியிலை நடக்கிற சமாவை. இப்பவே கண்டிச்சுவை. பிறகு கவலைப் படாதை’ என வத்தி வைத்தார். ஐயா வகுப்பறையில் இருந்து எட்டிப் பார்க்கவும், ‘பணிஸ்’ இடைவேளை முடிந்து மணி அடிக்கவும் நேரம் சரியாய் இருந்தது. அப்போது எனக்கு பன்னிரண்டு வயது மட்டுமே. இந்த வயதில் மட்டுமல்ல எந்த வயதிலும் எழுத்து, நாடகம், இலக்கியம் என ஒரு மாணவன் ஆர்வம் கொள்வது, அபத்தம் என நினைத்த காலம். இவற்றில் ஈடுபாடு கொண்டவன் உருப்படமாட்டான் என வாத்திமாரும் பெற்றோரும் நம்பினார்கள்.

அன்று மாலை இரவுச் சாப்பாட்டின் பின்னர், நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுவரச் சொன்னார் ஐயா. பிரதிகளைக் கொடுத்த பின், அடி வாங்குவதற்கு ஆயத்தமாக பெருவிரலால் மறு உள்ளங்கையை, மாறிமாறி அழுத்தி மஸாஜ் செய்தபடி நின்றேன். எனது கையெழுத்துப் பிரதிகளை நிதானமாக வாசித்து முடித்தவர், சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தபடி நின்றார். பின்னர், ‘நித்திரை வந்தால் போய் படு தம்பி’ என அனுப்பிவிட்டார். ‘தம்பி’ என ஐயா விளித்தது நான் தொடர்ந்து எழுதுவதற்கு அவர் தந்த அநுமதி என எடுத்துக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில், பதின் பருவ காலங்களில் எனது சிறுகதைகள் ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும், குறிப்பாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் எனது ஆரம்ப கால கலை இலக்கிய ஆர்வத்துக்கு நிறையவே தீனிபோட்ட கல்லூரிகள். 1965ம் ஆண்டு, கோப்பாய் கிறீஸ்தவ கல்லுரியில் நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் நடந்த ஒரு இலக்கியத் திருட்டையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். நாடளாவிய ரீதியில் கலை இலக்கிய அமைப்பு ஒன்று நடத்திய சிறுகதைப் போட்டிக்கு, நான் எழுதிய சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன். போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் சில காலங்களின் பின்னர், என்னுடைய கதை வேறு ஒரு எழுத்தாளரின் பெயரில், இந்தியாவில் இருந்து வெளிவரும் கலைமகளில் வெளிவந்திருந்தது. இதற்கு சாட்சியாக, என் பள்ளிக்கூட நன்பன் சுகுணசபேசன் இன்றும் லண்டனில் வாழ்கிறான். இந்த இலக்கியத் திருட்டுக்கு எதிராக, பதினைந்து வயது பள்ளி மாணவனான என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எமக்கு தமிழ் இலக்கியம் கற்பித்த ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். ‘ஐந்து சதத்துக்கும் பெறுமதி இல்லாத, இந்த வேலையை விட்டிட்டு பத்தாம் வகுப்பு சோதினை வருகுது, படி’ என்றார். இருந்தாலும், ‘கலைமகளில் வெளிவருமளவுக்கு எனது கதை தகுதி பெற்றுள்ளது என, எனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டு, பத்தாம் வகுப்பு இறுதிச் சோதனைக்கு படிக்க ஆரம்பித்தேன். அந்த எழுத்தாளர் இன்றும் (2017) உயிர் வாழ்கிறார் என்பது கொசுறுச் செய்தி.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியே எனது கலை, இலக்கிய, எழுத்து முயற்சிகளை பட்டை தீட்டியது எனலாம். கல்பிட்டியில் இப்போது வைத்தியராக பணிபுரியும் டாக்டர் செ. சுப்ரமணியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன், நாடக கலாவித்தகர் கோகிலா மகேந்திரன், குரும்பசிட்டி கந்தசாமி ஆகியோருடன் இணைந்து, நானும் அரங்க கலைகள் மற்றும் இலக்கிய முன்னெடுப்புக்களுக்கு பணி புரிந்த நாள்கள், இன்றும் என் மனதில் சாயம் போகாமல் நினைவில் நிற்கின்றன.

எனது பாடசாலை நாள்களின் கடைக்கூறில் ஐயா சுகவீனமுற்று படுத்த படுக்கையானார். அவர் ஒரு தமிழ் ஆசிரியர். அவரே கோவில்களில் புராணப் படிப்புக்கு பயன் செல்பவர். பொருள் சேர்க்காவிட்டாலும் நேர்மையான மனுஷன் என ஊரில் பெயர் வாங்கி இருந்தார். பயிற்றப் பட்ட தமிழ் ஆசிரியர்களுக்கு, அப்பொழுது பயிற்றப் பட்ட ஆங்கில மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களிலும் பார்க்க சம்பளம் குறைவு. இந்த நிலை இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகள் வரை நீடித்தது. எங்கள் ஊருக்கு அப்பொழுது மின்சாரம் வரவில்லை. அரிக்கன் ‘லாம்பு’தான். சிமிலியைத் துடைத்து எண்ணை விட்டு விளக்கை கொழுத்தி, ஐயா அருகே வைக்கப் போனேன். தன் அருகே அமருமாறு சைகையால் அழைத்தவர், சிறிது நேரம் சிந்தனை வயப்பட்ட முகத்துடன் என்னைப் பார்த்தபடி படுத்திருந்தார். பின்னர் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

தம்பி, கலையும் இலக்கியமும் தரும் நிலையான இன்பத்தை அநுபவிக்க, முதலில் பொருள் வளம் அமைய வேண்டும். முதலில் படி, பொருள் சேர். அதன் பின்னர் உனக்குள் புதைந்திருக்கும் இலக்கியம் தானாகவே உன்னை உயர்த்தி வைக்கும்’ எனறார். அப்போது ஐயாவின் கண்களிலே, கரைகட்டி நின்ற கண்ணீரை நான் அவதானிக்கத் தவறவில்லை. உண்மைதான்! தமிழ் ஆசிரியரான ஐயாவுக்கு தமிழ் சோறு போடாது என நன்றாகவே தெரிந்திருந்தது. இது நடந்து ஒரு சில நாள்களுக்குள், ஐயா காலமானார். அப்போது பள்ளியில் படிக்கும் நான், மேலே மூன்று மூத்த சகோதரிகள், அம்மா என நாங்கள் ஐந்து பேர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர்களின் விதவைகளுக்கு, அப்போது வழங்கப்பட்ட விதவைப் பென்சன் பணம், மிகச் சொற்பமே. அப்பொழுதுதான் வாழ்க்கை என்றால் என்ன? என்பதை முழுதாகப் புரிந்து கொண்டேன். இதன் பின்னர் என் கலை இலக்கிய முயற்சிகளை மூட்டை கட்டிவிட்டு, படிக்க ஆரம்பித்தேன். இடையிடையே, கலை இலக்கிய நினைவுகள் என்னுள் சுழன்றடிக்கும் போதெல்லாம், ஐயா சொன்ன வார்த்தைகள் மின்னலடித்து அதை அடக்கிவிடும்.

ஐயாவின் மரணத்தை தொடர்ந்து இருபது வருடங்கள், தமிழில் நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் நிறைய வாசித்தேன். தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் என பல மொழிகளில் வாசித்தேன். ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய ஆராச்சிக் கட்டுரைகள் எழுதினேன். ஜேர்மன் மொழியில் உயர் கல்வி கற்றதால், அந்த மொழி தமிழ் மொழிபோல என்னுள் வசப்பட்டது. கல்வியும் ஆராச்சிக் கட்டுரைகளும் என்னை நல்ல நிலைக்கு உயர்த்தி வைத்ததுடன் பொருளாதார வலுவையும் சேர்த்தது. ஒரு விஷயம் எப்படி சொல்லப்பட வேண்டும், எப்படி சம்பவங்களை கோர்வைப் படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களை, நான் எழுதிய ஆராச்சிக் கட்டுரைகள் படிப்படியாக கற்றுத் தந்தன. அதேவேளை நான் வாசித்த பிற மொழி இலக்கியங்கள், என்னை புதிய தளத்துக்கு கொண்டு சென்றன.

பதின் மூன்று வருட ஜேர்மன் வாழ்க்கையை நிறைவு செய்து கொண்டு, 1987ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்னர், படிப்படியாக தமிழில் எழுத ஆரம்பித்தேன். எனது சிறுகதைகள் காலச்சுவடு, இந்தியா ருடே, குமுதம் தீராநதி, கணையாழி, வீரகேசரி, தினக்குரல், ஞானம், மல்லிகை, மலேசிய நண்பன், தமிழ் முரசு (சிங்கப்பூர்) ஆகிய தமிழ் பேசும் உலகத்து சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

எனது புனைவுகளில் அதிகம் காணப்படுவதாகச் சொல்லப்படும் நளினமும் நையாண்டியும், நான் சவாரித் தம்பரிடம் கற்றுக் கொண்டவையே.

1990ம் ஆண்டு, முதுபெரும் எழுத்தாளர் ‘எஸ்போ’வை நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தது எனது அதிர்ஸ்டம் என்றே சொல்ல வேண்டும். எஸ்போவின் எழுத்துக்களை இலங்கையில் நான் வாழ்ந்த காலங்களிலில் வாசித்திருக்கிறேன். கீழ்சாதி எழுத்தாளன், காமசூத்திர எழுத்தாளன், குதர்க்கவாதி என்று நான் வளர்ந்த சூழலில் அவர் முத்திரை குத்தப்பட்டிருந்தார். இதனால் அவரது சடங்கு நாவல் உட்பட அவரது படைப்புக்கள் பலவற்றை நான் ஒளித்து வைத்தே வாசிக்க நேர்ந்தது. அவரது சடங்கு நாவலை, பாடப் புத்தகங்களுடன் வைத்திருந்தமைக்காக பாடசாலை அதிபரால் நான் தண்டிக்கப் பட்டதுமுண்டு.

எஸ்போ ஆஸ்திரேலியாவில் இருந்த காலங்களில் எனது பல்கலைக்கழக பணிகளுக்கு மத்தியிலும், வாராவாரம் அவரைச் சந்திப்பதை வழமையாக்கிக் கொண்டேன். தமிழ் மொழி, இலக்கியம், அரசியல், சமூகம் என பலதையும் பேசுவார். எழுத்து நுணுக்கங்களையும், சொல் ஆழுமையையும் முறைப்படி எனக்குச் சொல்லித் தந்தவர் எஸ்போ அவர்களே. அவரை சரியான முறையில் அணுகினால் அவரிடம் நிறையவே கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு நான் ஒரு சாட்சி.

எஸ்போவே, எனது சிறந்த பத்து சிறுகதைகளை தெரிவு செய்து, ஒரு சிறுகதை தொகுப்பாக வெளிக் கொணர வேண்டுமென்ற யோசனையை முன் மொழிந்தவர். பணப் பிரச்சனை எனக்கு இல்லாத காரணத்தால், உடனடியாக எனது முதலாவது நூல், சென்னையிலுள்ள எஸ்போவின் மித்ர பதிபகத்தினூடாக ‘பாவனை பேசலன்றி…’ என்ற பெயரில், நவம்பர் மாதம் இரண்டாயிரமாம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலின் வெளியீடு முதலில் சென்னையிலும் பின்னர் சிட்னி, கொழும்பிலும் நடந்தன. சென்னையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் நடந்த முதலாவது வெளியீட்டு விழாவில், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வாசந்தி, செயப்பிரகாசம், எஸ்போ, ஓவியர் மருது, கவிஞர் யுகபாரதி, கலைப்புலி தானு, வீ ரி கே பாலன், இளம்பிறை ரஃமான் என பலர் நூலை வாழ்த்தியும், சிலாகித்தும், விமர்சித்தும் பேசினார்கள். கொழும்பில் இராமகிருஸ்ண மிஷனில் நடந்த வெளியீட்டு விழாவை, தினக்குரல் வாரமஞ்சரி ஆசிரியர் பாரதி சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார். சிட்னியில் நடந்த விழா ஒரு ‘சாமத்தியச் சடங்கு’ போன்றது. இலக்கியத்தில் ஆர்வமில்லாதவர்களும் எனக்காக வந்து மண்டபத்தை நிரப்பினார்கள்.

எனது வாழ்க்கையை வளமாக்கியது மட்டுமல்ல, எனது இலக்கிய முன்னெடுப்புக்களை இலகுவாக்கியதும், அன்று ஐயா இறப்பதற்கு முன்னர் சொன்ன ‘பொருளாதார கோட்பாடே’. இன்றைய இளம் எழுத்தாளர்களும் இதை மனம் கொள்ள வேண்டும் என்பதே, இக்கட்டுரை வாயிலாக நான் கேட்டுக் கொள்வது.

பாவனை பேசலன்றி…’ என்ற எனது முதலாவது நூலுக்கு 2001ம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுதிக்கான இலங்கை அரசின் சாகித்திய விருதும், ரூபா ஒரு லட்சமும் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து நான் நிறைய எழுதினேன். அவற்றை நூல் தொகுதிகளாகவும் வெளியிட்டேன். அவற்றுக்கு விருதுகளும் கிடைத்தன. இருந்தும் எனக்குள்; இன்றுவரை ஒரு நெருடல். தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, நேர்மையான தமிழ் ஆசிரியராக வாழ்ந்து, எனக்குள்; தமிழ் உணர்வையும், இலக்கிய தாகத்தையும் ஊட்டி வளர்த்த எனது தந்தை ஆ. சின்னத்தம்பி அவர்கள், எனது நூல்களை வாசிக்க உயிருடன் இல்லை என்பதே! அவரின் நினைவாகவே, அவரின் முதல் ஏழுத்துக்களான ‘ஆ’ ‘சி’ என்ற எழுத்துக்களை முன் நிறுத்தி, அவரின் ஆசி வேண்டி, ‘ஆசி கந்தராஜா’ என்ற பெயரில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆசி கந்தராஜா (வீரகேசரி 25 Feb 2017)



 

No comments:

Post a Comment