Wednesday 4 November 2020

வித்துவான் வேந்தனாருடன் ஒரு சந்திப்பு...!

லக்கியம் என்பது உயிர்ச் சாயலைத் தொட்டு ஊறிப் பாயும் உணர்ச்சி வெள்ளம். கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் உணர்ச்சிகளையும் இனி வருங்கால மக்களின் வாழக்கை முறைகளையும் நிகழ்காலத்தில் நின்று நோக்க வைக்கும் நிலைக் கண்ணாடி...

இது நான் 1965ம் ஆண்டு பேசிய ஒரு மேடைப் பேச்சின் துவக்கம். ஐம்பத்து நாலு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் இந்த மேடைப்பேச்சு முழுவதும் அச்சரம் பிசகாமல் என் நினைவில் நிற்கிறது. நான் பத்தாம் வதுப்பு படித்த காலம் அது. பாடசாலை மட்டத்தில், அந்த வருடம் நடந்த பேச்சுப் போட்டிக்கு 'இலக்கியத்தின் பயன்கள்' என்னும் தலைப்புத் தந்திருந்தார்கள். எமது பாடசாலையில் தமிழுக்கு 'எல்லாமுமாக' இருந்த பண்டிதருக்கும் எனக்கும் அவ்வளவாக ஒத்துவரவில்லை. நான் ஒரு அதிகப்பிரசங்கி என்பது அவரின் அபிப்பிராயம். பண்டிதரின் அறிவுறுத்தலின்படி, போட்டிகள் முடிந்தபின் மத்தியஸ்தர்களே முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை எமது பாடசாலையில் அப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. எனக்கு அன்றும் நல்ல குரல்வளம். ஏற்ற இறக்கத்துடன் பொருளுணர்ந்து வசனம் பேசுவேன். இருந்தாலும் பேச்சுப் போட்டிகளில் எப்போதும் எனக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. இம்முறை இதைச் சும்மா விடுவதில்லை எனத் தீர்மானித்து, களத்தில் இறங்கினேன். நண்பர்களும் உசுப்பேத்த, 'இலக்கியத்தின் பயன்கள்' என்ற தலைப்பில் யாரைக்கொண்டு எழுதுவிக்கலாம்? என, மூளையைக் கசக்கியபோது, என் நினைவுக்கு வந்தவர் வித்துவான் வேந்தனார் அவர்கள். காரணம் அவர் பொழிப்புரை எழுதிய கம்பராமயணம் மற்றும் இந்து சமய நூல்களே எமக்கு அப்போது பாடப் புத்தகங்களாக இருந்தன.

நான் வாழ்ந்த கைதடி (வடக்கு) கிராமத்திலிருந்து திருநெல்வேலியிலுள்ள வித்துவான் வேந்தனாரின் வீடு பதினைந்து கிலோமீட்டர்கள். நேரடி பஸ் வசதியில்லை. என்னுடைய தந்தை அப்போது நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்த காரணத்தால், அவரின் 'றலி' பைசிக்கிள் என் பாவனைக்கு வந்தது. துணிந்து பதினைந்து கிலோமீட்டர்கள் சைக்கிளோடி வேந்தனார் வீட்டுக் கதவைத் தட்டினேன். வித்துவான்தான் கதவைத் திறந்தார். விக்கி விழுங்கி விபரம் சொன்னேன். கதையைக் கேட்டதும் புன்சிரிப்புடன் என்னை ஏறஇறங்கப் பார்த்தார். முன் பின் தெரியாத விடலைப் பெடியனான என்னை, அவர் 'ர்' விகுதியில் அழைத்துப் பேசியது எனக்கு ஆச்சரியம் தந்தது. எனது ஆர்வம் அவருக்குப் பிடித்திருக்கவேண்டும்.

சைக்கிளிலிலை, தனித்தோ வந்தனீர்? எனக் கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார். பித்தளை மூக்குப் பேணி நிறைய பால்த் தேத்தண்ணி வந்தது. புளியும் சாம்பலும் கலந்து போட்டு மூக்குப் பேணியை விளக்கியிருக்க வேண்டும். மூக்குப் பேணி மினுமினுத்தது. சிந்தி விடுவேனோ என்ற பயத்தில் வலு கவனமாக அண்ணாந்து குடித்து முடித்தவுடன் வேந்தனார் சொல்லத் துவங்கினார்.      

இலக்கியம் என்பது உயிர்ச் சாயலைத் தொட்டு ஊறிப் பாயும் உணர்ச்சி வெள்ளம்...'

அவர் மேடைப் பேச்சை எழுதி வைப்பார், இன்னொரு நாள் அவரிடம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் போன என்னிடம், பேப்பரும் இல்லை பென்சில், பேனாவும் இருக்கவில்லை. வித்துவான் இதற்காகக் கோபப்படவில்லை. தன்னிடமிருந்த பேப்பரையும் பேனாவையும் தந்து எழுதச்சொன்னார்.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்

போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர்கொடாது அங்குப்போகேன்

தார்க்கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி ஆகின்

கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி.

 

தமிழ் இலக்கியத்தில், செய்நன்றி அறிதலுக்கு எடுத்துக்காட்டாக, கும்பகர்ணன் விபீஷணனுக்குச் சொல்லும் இச் செய்யுளை, பேச்சின் நடுவே மேற்கோள் காட்டிய வித்துவான் பின்னர்,

நாட்டை நினைப்பாரோ? - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ? - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்

கேட்டிருப்பாய் காற்றே!

என, பிஜித்தீவின் கரும்பத் தோட்டங்களிலே, இந்திய தொழிலாளர்கள் படும் துன்பங்களைச் சொல்லும் பாரதி பாடல் வரிகளையும் சொல்லி நிறைவு செய்தார். இந்த நிகழ்வும், அவர் அன்று காட்டிய அன்பும் இன்றும் என் மனப் பத்தாயத்தில் அழியாத சித்திரமாக அப்படியே கிடக்கிறது. இதுதான் அவரது சுபாவம் என பின்னாளில் அறிந்து கொண்டேன்.

ன்று மேற்பிரிவு மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி!

வேந்தனாரின் பேச்சுக்கு உயிரூட்டி, ஏற்ற இறக்கங்களுடன் நான் பேசி முடித்தபோது, மண்டபம் கரகோசத்தால் அதிர்ந்தது. மேடையால் இறங்கி வந்தபோது, யார் இந்தப் பேச்சை எழுதியது? எனப் பண்டிதர் கேட்டார். வித்துவான் வேந்தனார் என்றேன். எதுவும் பேசாது பண்டிதர் முகத்தை திருப்பிக்கொண்டார். எதிர்பார்த்தபடி எனக்கே அந்த வருட பேச்சுப் போட்டியில் முதலாம் இடம் கிடைத்தது. பாடசாலையில் முதலாவதாக வருபவர் பிரதேச மட்டத்திலான பேச்சுப் போட்டிக்கு செல்லலாம். அந்த வகையில் பிரதேச, மற்றும் மாவட்ட ரீதியிலான போட்டிகளில் கலந்து முதலாவதாக வந்தமை, இன்றும் என் நினைவில் முகம்காட்டி மறைவதுண்டு.

துர்ரதிஸ்டவசமாக, இதுவே வித்துவான் வேந்தனாருடனான எனது முதலும் கடைசியுமான சந்திப்பாக அமைந்தது. அடுத்த ஆண்டு 1966, செப்டம்பர் 18ம் திகதி, வேந்தனார் காலமான செய்தி கேட்டு தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் விட்டு அழுதது.

பத்தாம் வகுப்புக்கான அரச பொதுப் பரீட்சையில் தமிழ் இலக்கியத்திலும் இந்துசமய பாடத்திலும் நான் அதிவிசேட சித்திகள் பெற்றமைக்கு வேந்தனார் எழுதிய பாடப்புத்தகங்களே காரணம் என்பது உண்மையான வார்த்தைகள். கம்பராமாயணத்தில் எமக்கு மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்வினைப் படலம் முதலான சில படலங்கள் பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. கம்பராமாயணப் பாடல் ஒவ்வொன்றுக்கும் விளக்கவுரை, பொழிப்புரை, நயப்புரை என்றும் சில பாடல்களுக்கு ஒன்றாக சுருக்கவுரை என்றும் வேந்தனார் தான் எழுதிய பாடப்புத்தகத்தில் பாமரனுக்கும் விளங்கும் வண்ணம் பிரித்து மேய்ந்திருப்பார். நான் படித்த பாடப்புத்தகங்களுள், விரும்பிப் படித்த புத்தகங்கள் வேந்தனார் எழுதிய பாடநூல்களே, என இங்கு எழுதுவது மிகையான தகவலல்ல.

வேந்தனார் தனது வித்துவான் சோதனைக்குத் தோற்றுவதற்காக தமிழ்நாடு சென்றிருந்த வேளை, தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளுடன் சில காலம் தங்கியிருந்ததாகவும், அவரிடமிருந்து பெற்ற ஆழ்ந்த தமிழ் பற்றே பிற்காலங்களில் தன் குழந்தைகளுக்கு கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளம்வேள் எனத் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கத் தூண்டின என, அவரது முத்த மகன் இளங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன். இளங்கோவும் நானும் ஜேர்மனியில் டாக்டர் பட்டத்துக்கான ஆராச்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் தோன்றிய நல்ல நட்பு, சிட்னிவரை தொடர்ந்ததும் திருமதி கலையரசி சின்னையாவுடனான எனது மனைவி குடும்பத்தின் நெருக்கமும் இன்றும் வேந்தனார் குடும்பத்தினருடனான எமது உறவின் இனிமையான பக்கங்கள்.

வேந்தனார், மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டத்தையும் சைவசித்தாந்த சமாசத்தில் சைவப் புலவர் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தையும் பெற்றவர். வாழுங் காலத்திலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் 'தமிழ்ப்பேரன்பர்' என்ற பட்டமும் (1947), ஸ்ரீலங்கா சைவாதீனத்தினரின் 'சித்தாந்த சிரோமணி' (1964) என்ற பட்டமும் பெற்றதாக, உசாத்துணை நூல்கள் சொல்கின்றன.

கம்பராமாயணம் மற்றும் இந்து சமய பாட நூல்கள், திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும், கவிதைப் பூம்பொழில், குழந்தை மொழி (சிறுவர் பாடல்கள்), தன்னேர் இலாத தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) ஆகியன இவரது நூல்களுள் சில. இவைபற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடிய அறிவோ, தகுதியோ எனக்கில்லை என்பதால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.

மனித வாழ்வையும் சாவையும் காலம்தான் நிர்ணயிக்கிறது. அது நல்லவர்களையும் புத்திஜீவிகளையும் நீண்ட காலம் வாழவிடுவதில்லை என்பது கசப்பான உண்மை. அந்த வகையில் வித்துவான் வேந்தனார் தனது நாற்பத்தெட்டாவது வயதில் காலமானது, தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பு. இருப்பினும் அவர் வாழ்ந்த காலத்தில் செய்த இலக்கியப் பங்களிப்பும் எழுதிய நூல்களும் காலம் கடந்தும் நிலைத்து நின்று அவரது பெயரைச் சொல்லும் என்பது நிஜம்.

பேராசிரியர் ஆசி கந்தராஜாசிட்னி.

No comments:

Post a Comment