Tuesday 10 November 2020

தலைவராவது எப்படி…?


வங்கள் என்னை சும்மா இருக்க விடுகிறாங்களில்லை, இந்த முறையும் கொம்மிற்றியில் போட்டிருக்கிறாங்கள்’ என்ற வாசகத்தை அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்படியான தமாஷா கதைகளை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. இருந்தாலும் பல அமைப்புக்களில் மாறிமாறி, ‘சங்கீத நாற்காலியில்’ இடம் பிடிப்பது போல, பதவிகளில் அமர பலர் அலைந்து திரிவது, அனைவரும் அறிந்த விஷயம்.

இந்தவகையில், புலம்யெர்ந்து வந்து இங்கு குடியேறியபின் வேலை, வீடு, கார், பிள்ளைகளின் படிப்பு பின்னர் கலியாணம் என்ற வரிசையில் ஏதாவது ஒரு அமைப்பின் நிர்வாக சபையில் அங்கத்தவராகி முடியுமானால் பின்னர் தலைவராகவும் வரவேண்டுமென்ற அவா, எம்மில் பலருக்கும் உண்டு.

தலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி தொண்டர்களை வழி நடத்திச் செல்கின்றவர், என்ற உண்மை எங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்?

அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவதும் தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுப்பதும் அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்கி சிந்தித்து செயலாற்றுவதும் நல்ல தலைமைத்துவப் பண்பாகக் கருதப்படுகிறது.

ஆனால் நம்மவர்கள் மத்தியில் மேலே குறிப்பிட்ட தலைமைத்துவப் பண்பில் பல மாறுதல்கள் செய்யவேண்டியது அவசியம் என்பதை ஐயம்பிள்ளை வாத்தியாரிடமிருந்து நான் படிப் படியாகத் தெரிந்து கொண்டேன். கூட்டுறவு இயக்கம், ஆசிரியர் சங்கம் என்று ஊரில் அவருக்கு எலெக்ஷன் தண்ணீர்பட்டபாடு. இங்கும் பல அமைப்புக்களின் ‘கிங் மேக்கர்’ இவர்தான். வாத்தியார் எப்பொழுதும் பிரபல்யமான ஒருவரைத் தூண்டிவிடுவார். அந்த ஆள் வெற்றி பெற்றதும் தன் பிரயாசைகளுக்காக ஒரு சிறிய பதவியை ‘தட்டிப்’ பறித்துக் கொள்வார். திரை மறைவு அதிகாரங்கள் அவருக்குப் போதும். ‘சுழியன்’ என்றாலும் ஐயம்பிள்ளை வாத்தியார் விபரம் அறிந்தவர்!

சமீபத்தில் மெல்பனில் நடந்த நன்பன் ஒருவனின் ஐம்பதாவது பிறந்த நாள் விழாவின் போது வாத்தியாரை மீண்டும் சந்தித்தேன். இத்தகைய விழாக்களின்போது அவர் சொல்லும் ‘பொழிப்பான’ ஊர்ப் புதினம் கேட்க அவரைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அன்றும் அப்படித்தான். சமீபத்தில் நடந்த தமிழர் அமைப்பொன்றின் நிர்வாக சபைத் தேர்தல் பற்றி அங்கு அச்சுவேறு ஆணிவேறாக பிரிச்சு மேயப்பட்டது. விஷயம் தெரிந்த யாரோ கதை கேட்கும் சுதியில் சற்று அதிகமாவே அவருக்கு ஊற்றிக் குடுத்துவிட்டார்கள். அந்தக் கணகணப்பில் வாத்தியார் மிதந்தபோது தலைவராவது எப்படி? என்ற பேச்சை ஆரம்பித்தான் பற்பன். அடுத்த எலெக்ஷனிலாவது அவன் ஏதோ ஒரு அமைப்பின் தலைவராகவேண்டும். அந்த அளவுக்கு வீட்டில் அவனுக்கு நிர்ப்பந்தம். அதுவும் மனைவியிடமிருந்து. கந்தோரில் அவளுடன் வேலை செய்யும் பூங்கொடியின் புருஷன்தான் பிரபல அமைப்பொன்றின் நடப்பாண்டுத் தலைவர். இந்த சந்தர்ப்பத்தில்தான் பற்பன் தலைவராவதற்கான கம்ப சூத்திரத்தையும் நெளிவு சுழிவுகளையும் ஐயம்பிள்ளை வாத்தியார் அவிட்டுவிடார்.

அங்கிருந்த மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் தமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி பற்பனை கோதாவில் இறக்கிவிட்டார்கள்.

எதிர்காலத்தில் எம்மில் பலருக்கும் இவை பிரயோசனப்படலாம் என்ற நல்லெண்ணத்தில் வாத்தியாரும் மற்றவர்களும் அங்கு சொன்ன ஆலோசனைகளை சுருக்கமாக இங்கு புள்ளி வடிவில் தருகிறேன்.

தலைமைப் பதவிக்கு வர பேச்சின் மூலம் அனைவரையும் கவரவேண்டும் என்று எம்மில் பலர் எண்ணுகிறார்கள். அது தவறு. எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி, சிறந்த பேச்சாற்றலோடு இருப்பவர்களெல்லாம் அறிவாளிகள் அல்ல. தலைவர்களின் உண்மையான பலம் பேசுவதில் அல்ல, கேட்பதில் இருக்கிறது. அப்போதுதான் அவர்களால் மற்றவர்களுடைய எண்ணங்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

நமது ஆட்களைக் கவர சுலபமான வழி கூட்டத்தில் குறைவாகப் பேசுவதுதான். எவ்வளவு அவசியமோ அவ்வளவு, அல்லது அதற்கும் குறைவாகப் பேசவேண்டும். உங்கள் பேச்சு புதிர் மாதிரி அரைகுறையாக அபத்தமாக இருந்தால் மிகவும் நல்லது. அப்போதுதான் மற்றவர்கள் குழம்பி தங்களுக்குள் அதுபற்றி வியாக்கியானங்கள் செய்யத் துவங்குவார்கள்.

இடையிடையே அமெரிக்க, ஆங்கிலேய, ரஷ்ய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி அவர்கள் சொன்னதாக மேற்கோள்காட்டி சில நியாயங்களை எடுத்துவிடுங்கள். நீங்கள் இவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கத் தேவையில்லை. இவர்களை மேற்கோள்காட்டி நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கவும் தேவையில்லை. நிச்சயம் யாரும் இதை சரிபார்க்கப் போவதில்லை. பிறமொழி எழுத்தாளர்களின் பெயரை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது.

கூட்டங்களுக்கு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரின் புத்தகம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். வசதியானபோது புத்தகத்தைவிரித்து வாசிப்பதுபோல பாவனை செய்யுங்கள். இது உங்கள் செல்வாக்கையும் மதிப்பையும் அதிகப்படுத்தும்.

தலைவராக வர விரும்பினால் முக்கியமாக பிறரை நையாண்டி செய்வதை நிறுத்தவேண்டும். நையாண்டி செய்யும்போது ‘எவ்வளவு கிண்டலாகப் பேசுகிறோம்’ என நீங்கள் சந்தோஷப்படக்கூடும். ஆனால் பின்னர் அதற்கு பெரும் விலை கொடுக்கவேண்டிவரும்.

நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம். நண்பர்களுக்குத்தான் உங்களிடம் பொறாமை கொள்ள அதிகம் வாய்ப்புண்டு. எப்போது உங்களைக் கவிழ்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஜாக்கிரதை!

பதவியைப் பிடிக்கவிரும்பினால் உங்கள் நாணயத்தை அவசியம் மூட்டைகட்டி வைக்கவேண்டும். உங்கள் நோக்கம் என்ன விருப்பம் என்ன என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தாது மற்றவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதையே உங்கள் கருத்தாகச் சொல்லுங்கள். முக்கிய பதவியில் அமர்ந்திருக்கும் பலர் செய்வதும் இதைத்தான்.

இதுதான் விஷயம்! மேலே சொன்ன தகவல்களுடன் உங்கள் புத்தியையும் பாவித்து அடுத்தமுறை ஏதாவது ஒரு பதவிக்கு வரமுடிகிறதா பாருங்கள்.

ஆசி கந்தராஜா

No comments:

Post a Comment