Tuesday, 13 June 2023

 

சீட்லெஸ் மாம்பழங்கள், சாத்தியமா?

ஆசி கந்தராஜா.





2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். முதிய விவசாயி ஒருவர் தக்காளி விதைகள் வாங்க, கடைக்குப் போவார். வியாபாரி தக்காளி விதைகளைக் காட்டி இது ஹைபிறிட் விதை, கொத்துக் கொத்தாய்க் காய்க்கும், கூடைகூடையாய் அள்ளலாமெனச் சிலாகித்துச் சொல்வார்.

அப்படியா, அடுத்தமுறை நான் விதை வாங்க கடைக்கு வரவேண்டாமல்லவா. அறுவடைசெய்யும் பழங்களில் இருந்து விதைகளை எடுத்துப் போடலாம், என்பார்.

இல்லை, வந்துதான் ஆகணும். இதிலை விதையே இருக்காது.

அதெப்படி? ஈச்சமரம், எலந்தைமரம், மாமரம் எல்லாத்திலும் விதையிருக்கு. எப்படித் தக்காளிக்கு விதையில்லாமல்போகும்? இது முதியவரின் கேள்வி.

இது கலப்பு விதை, வெள்ளைக்காறன் செஞ்சது. விதை இருக்காது, என்பார் வியாபாரி.

அவனுக்குமாத்திரம் எப்படி விதை கிடைச்சுது? இந்த விதையைக் கண்டுபிடிச்சவனுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்து, அதுக்கு விதைக்கொட்டை இல்லாமல் இருந்தால், அப்ப தெரியும் அவனுக்கு, எனச் சொல்லிவிட்டு விதையை வாங்காமலே போய்விடுவார் முதியவர்.

இந்தக் காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்து இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணம் கொட்டையில்லாத பழங்களுக்கான மக்களின் அங்கலாய்ப்பும் அதை விருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் ஆராச்சி முனைப்புக்களுமே.

காலதிகாலமாக விதையில்லாத வாழை, அன்னாசிப் பழங்களையே நாம் சாப்பிட்டிருக்கிறோம். இதேவேளை ஒரு சில வாழை, அன்னாசி இனங்களில் விதைகள் இருப்பது பலருக்குத் தெரியாதது.

விதைகளற்ற தர்பூசணி (Water Melon) மற்றும் திராட்சை இனங்கள், பிற்காலத்தில் இனவிருத்தி ஆராச்சிகள் மூலம் உருவாக்கப்பட்டன.

தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவரும் சீனமொழி வீடியோ பதிவொன்றில், விதை இல்லாத மாம்பழம் என்று ஒரு காட்சி வரும்.

இணைய வசதிகளைப் பாவித்து, யாரும் எதையும் பதிவிடலாம் என்ற நிலையே இன்று காணப்படுகிறது. இதில் உண்மையும், பொய்யும், போலியும் கலந்திருப்பது தவிக்கமுடியாதது.

அறிவியல் கோட்பாடுகளின்படி விதையில்லாத மாம்பழங்களை இனவிருத்தி செய்வது சாத்தியமே. ஆனால் நடைமுறையில் இது லேசுப்பட்ட விஷயமல்ல. எனது தீவிர அறிவியல் தேடுதலின்படி விதையில்லாத மாம்பழம் இற்றைவரை இனவிருத்தி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. விதையில்லாத மாம்பழம் சந்தைக்கு வந்ததற்கான தகவல்களும் இல்லை.

கடைசி விவசாயி திரைப்படத்தை என்னுடன் பார்த்த மனைவி, படத்தில் முதிய விவசாயி, வியாபாரியிடம் கேட்ட கேள்வியை என்னிடம் கேட்டார்.

விதையில்லாத காய்களும் கனிகளும் எப்படி இனவிருத்தி செய்யப்படுகின்றன? விதைகள் இல்லாத தக்காளி விதைகளை விற்பவர்களுக்கு அந்த விதைகள் எப்படிக் கிடைத்தன?

இந்தக் கேள்விகள் உங்கள் மனங்களிலும் எழுவது நியாயமானதே.

'இருமடிய' (Diploid) தாவரங்களில் விதைகள் இருக்குமென்றும் 'மும்மடிய' (Triploid) தாவரங்கள் விதைகளற்ற பழங்களைக் கொடுக்குமென்றும், மேலெழுந்தவாரியாகப் பதில் சொன்னேன்.

எனது சுருக்கமான பதிலால் எரிச்சலடைந்த மனைவி, ஊர் உலகத்திலை உளள்வைக்கு ஆறஅமர இருந்து விலாவாரியாகப் பதில் சொல்லுங்கோ, எனக்குமட்டும் சொல்லேலாது எனக் கோபப்பட்டார்.

ஒரு உயிரினம் எப்படி அமையவேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் கலத்தினுள்ளே (Cell) நூல் போன்ற அமைப்புடைய குரோமசோம்களில் (நிறமூர்த்தம் - Chromosome) பதியப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் சோடிசோடியாக இருக்கும். இவற்றை இருமடிய (Diploid) தாவரங்கள் என்போம். உலகில் பெரும்பாலானவை இந்த வகையே.



இதேவேளை மூன்று நிறமூர்த்தங்கள் சேர்ந்திருந்தால் அவை மும்மடியம் (Triploid) என்பர்.

இரண்டடுக்கு குரோமசோம் கொண்ட இருமடிய தாவரங்களில் விதைகள் இருக்கும். அவற்றை மூன்றடுக்கு குரோமசோம்கள் கொண்ட தாவரங்களாக மாற்றிவிட்டால், அவைகள் விதைகளற்ற காய் கனிகளைக் கொடுக்கும், அப்படித்தானே? என, எனது விளக்கத்தை இலகுவாக்கினாள் மனைவி. அவளும் அடிப்படை விஞ்ஞானம் படித்தவள்.

உண்மைதான். ஆதிகாலத்தில் எல்லா வாழைப்பழத்துக்கும் விதைகள் இருந்தன. அவை இன்றும் காடுகளிலும் மலைகளிலும் வளர்கின்றன.

ஓஹோ...!

கால ஓட்டத்தில் விதைகொண்ட வாழைகள், இனவிருத்தியடைந்து விதைகளற்றவை ஆகின.

எப்படி? இயற்கையாகவா செயற்கையாகவா?

அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் அல்லது இடி, மின்னல், வெப்பம் காரணமாக மிகமிக நீண்ட காலங்களுடாக, மூன்றடுக்கு குரோமசோம்கள் கொண்ட, விதைகளற்ற வாழைகள் இயற்கையாக விருத்தியடைந்தன.

மற்றத் தாவரங்களில்?

அவை செயற்கை முறையில் குறுகிய காலத்துக்குள் மாற்றப்படடவை. தர்பூசனி, பப்பாளி போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள்.

அப்போ, விதைகளற்ற தாவரங்களின் இனப்பெருக்கம்?

பதிய முறைகளின் மூலம்தான். வாழையில் குட்டிகள் மூலமும் திராட்சையில் தண்டுகள் மூலமும் பதியமுறை இனிப்பெருக்க முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் பப்பாளி, தர்பூசனி ஆகியனவற்றின் மும்மடிய விதைகளை வியாபார நிலையங்களில் வாங்கலாம். இந்த விதைகளைத்தான் திரைப்படத்திலுள்ள காட்சியில் முதிய விவசாயிக்கு, வியாபாரி விற்க முனைந்தது. இவ்விதைகளிலிருந்து முளைத்து வளரும் தாவரங்கள், காய்கனிகளைக் கொடுக்கும். ஆனால் அவற்றில் விதைகள் இருக்காது.

என்ன அதிசயமாய் இருக்கு! அவங்கள் விதை விக்கிறாங்கள். ஆனால் அற்றிலிருந்து வளர்பவை விதைகளைக் கொடுக்காது? இது கொஞ்சமும் லொஜிக்காக இல்லையே. இதைத்தானே அந்த முதிய விவசாயி படத்தில் கேட்டார்.

உண்மைதான். உதாரணத்துக்கு தர்பூசனியை எடுப்போம். இதன் விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம், நாலடுக்கு (Tetraploid) குரோமசோம்கள் கொண்ட தர்பூசனித் தாவரம் இருக்கிறது. பெரும் பணம் செலவு செய்து, அதை ஆராச்சி முலம் விருத்தி செய்திருப்பார்கள். இது அவர்களின் பணம்காய்க்கும் மரம். இதை அவர்கள் வெளியில் விடமாட்டார்கள். இதனுடன் இரண்டடுக்கு குரோமசோம்கள் (இருமடியம்) கொண்ட சாதாரண தர்பூசனியை, மகரந்தச் சேர்கை முலம் கலப்பார்கள்.

ஓ...!

இக்கலப்பின் மூலம் உருவாகும் தாவரம், விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகளைத்தான் விவசாயிகளுக்கு விற்பார்கள்.

இந்த விதைகளை விதைத்தால்?

அவை முளைத்து, வளர்ந்து பழம் கொடுக்கும். ஆனால் அதில் விதைகள் இருக்காது. இதுதான் நாமெல்லோரும் விரும்பும் சீட்லெஸ் தர்பூசனி! இது ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்கள், உலக விவசாயத்தியில் செலுத்தும் ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.

எனது இந்த விளக்கம் மனைவிக்குப் புரியவில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. இதிலும் இலகுவாக என்னால் இந்த விஷயத்தைச் சொல்ல முடியவில்லை.

உலகம் அழியப்போகுது. வேறொன்றுமில்லை, என பொதுவாகச் சொன்ன மனைவி, பிள்ளைகள் விரும்பி உண்ணும் சீட்லெஸ் தர்பூசனியை நறுக்கத் துவங்கினார்.

 

ஆசி கந்தராஜா

விவசாய பேராசிரியர்

சிட்னி

No comments:

Post a Comment