Wednesday 7 June 2023

அகதியின் பேர்ளின் வாசல்நாவல் பற்றிய என்னுரை.



அடொல்ஃப் ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரந்துபட்ட ஜேர்மன் பிரதேசம், இரண்டு நாடுகளாயின! 

1949 தொடக்கம் 1990 வரை சோவியத்தின் கண்காணிப்பின் கீழே, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் கிழக்குஜேர்மனியும் அமெரிக்கா, பிரான்ஸ், பெரியபிரித்தானியா, ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழே, மேற்குஜேர்மனி என அழைக்கப்பட்ட பிரதேசம் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசாகவும் பிளவுபட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில், 1974 முதல் 1980 வரை, கிழக்கிலும் பின்னர் தொடர்ந்து 1986 இறுதிவரை மேற்கிலும் வாழ்ந்து, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படித்திருக்கிறேன். பணிபுரிந்திருக்கிறேன். அந்தவகையில் எனது கல்வி அங்கு ஜேர்மன் மொழியில் அமைந்திருந்தது. இதன் காரணமாக, முதுகலை மற்றும் முனைவர் (கலாநிதி) பட்டங்களுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை, ஜேர்மன் மொழியிலேயே எழுதினேன்.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்னும் கிழக்குஜேர்மனி, சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றிய ஒரு நாடு. அங்கு கல்வி கற்பவர்கள் பிரதான கல்வியுடன் கம்யூனிச சித்தாந்தங்களையும் கற்கவேண்டுமென்பது பொதுவான விதி. அதற்கமைய கார்ல்மார்க்ஸ் (Karl Marks), ஜேர்மன் மொழியில் எழுதிய 'மூலதனம்' (Das Kapital) என்னும் நூல்முதல், வேறும்பல கம்யூனிச சித்தாந்தங்களை விளக்கும் புத்தகங்களைப் படித்துப் பரீட்சையிலும் சிறப்புச் சித்தி பெற்றிருக்கிறேன்.

பிளவுபட்ட ஜேர்மனிகளுக்கிடையிலே மறைமுகமாக நடந்த பனிப்போர், தனிப்பட்டரீதியில் எனக்கும் சாதகமாக அமைந்தது. கிழக்கு ஜேர்மனியில் தொழில்க் கல்வியுடன் கம்யூனிச பாடங்களில் சிறப்புச் சித்திபெறும் வெளிநாட்டு மாணாக்கர்களுள் சிலரைத் தெரிந்தெடுத்து, முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்பற்றிய மேற்குஜேர்மனி, தங்கள் நாட்டில் மீண்டும் உயர் கல்விகற்கும் வாய்ப்பைக் கொடுத்தது. கிழக்குஜேர்மனியில் படித்த கம்யூனிச சித்தாந்தங்களை  மறக்கவைக்க,  மேற்குஜேர்மனி முன்னெடுத்த மூளைச்சலவையின் செயற்பாடே இது. இதன் நீட்சியாக மேற்குஜேர்மன் ஆளுகைக்குட்பட்ட மேற்குபேர்ளின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (கலாநிதி) பட்ட ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் (ஸ்கொலஷிப்) எனக்குக் கிடைத்தது. கிழக்குஜேர்மனியில் நான் கற்ற சோசலிச, கம்யூனிச படிப்பறிவும் மேற்குஜேர்மனியில் நான் பெற்ற முதலாளித்துவ பட்டறிவும், பிளவுபட்ட ஜேர்மனி பற்றிய பூரண விளக்கத்தை எனக்குத் தந்தது.

1977 ஆம் ஆண்டு ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இலங்கையில் இனக்கலவரம் நடத்தப்பட்டது. 1958 இனக் கலவரத்துக்குப் பின்பு இலங்கையில் இடம்பெற்ற நாடளாவிய இனக்கலவரம் இதுவாகும். 1977 ஓகஸ்ட் பதினைந்தாம் திகதியிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட இக்கலவரத்தில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள், உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பல பாதிப்புக்களைச் சந்தித்தார்கள். இதனைத் தொடர்ந்தே இலங்கைத் தமிழர்கள் படிப்படியாகப் பூமிப் பந்தெங்கும் புலம்பெயரத் தொடங்கினார்கள்.

இதன் பின்னர் நடந்ததுதான் கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் எனப் பரவலாக அறியப்பட்ட 1983ம் ஆண்டு இனக்கலவரம். இதுவே தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய, பாரதூரமான இனக்கலவரமாகும். இதன் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் மேற்கு ஐரோப்பாவை நோக்கி புலம்பெயரத் துவங்கினார்கள். இதற்கு வசதியாக அமைந்தது உலக அகதிகள் இறங்குதுறையாக அக்காலத்தில் செயற்பட்ட கிழக்குபேர்ளின் நகரம். இதுவே கிழக்குஜேர்மனியின் தலை நகரமாகவும் விளங்கியது.

சோவியத்தின் செல்வாக்கின் கீழிருந்த கிழக்குஜேர்மனியின் பொருளாதாரத்தில், மேற்குஜேர்மனி புகுந்து விளையாடி நெருக்கடி கொடுக்க, வந்திறங்கும் அகதிகள் மூலம் மேற்குஜெர்மனிக்குத் தொல்லை கொடுத்தது கிழக்குஜேர்மனி. இதற்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்பும், பேர்ளின் நகரம் குறித்த பொட்ஸ்டம் உடன்படிக்கை விதிகளும், வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தன.

மேற்குபேர்ளின் நகரம் கிழக்குஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்குஜேர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டதால், மேற்குபேர்ளினுக்குள் வந்து சேர்ந்துவிட்டால், மேற்குஜேர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்துக் கோருதல் சாத்தியமாக அமைந்துவிடும். பின்னர் அங்கிருந்து வேறு பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், தரை எல்லையை கடந்து சென்றடைதல் அப்போது சாத்தியமாக இருந்தது. 1980ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த ஐரோப்பிய நாடுகளின் குடிவரவு விதிகளில், தற்போது புகுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் இருக்கவில்லை. எனவே அகதிகள் பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, டென்மார்க் நோர்வே என்றும், பின்னர் அங்கு தமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்டு பிரித்தானியா, கனடா என ஆங்கிலம் பயிலும் நாடுகளுக்குப் பெயர்தல் சாத்தியமாயிற்று.

பிளவுபட்ட ஜேர்மனிகள் 1990ம் ஆண்டு இணையும்வரை பூமிப்பந்தெங்கும் தமிழன் புலம்பெயர்வதற்கு நுழைவாயிலாக அமைந்தது கிழக்குபேர்ளினும், அதனுடன் இணைந்த மேற்குபேர்ளினின் பூகோள அமைப்புமே என்பது இதுவரை பதிவு செய்யப்படாத உண்மையாக உள்ளது. மேற்கு பேர்ளின் Tegal என்னுமிடத்தில் துவங்கும் ஆறாம் இலக்க சுரங்க இரயில் பாதையொன்று, கிழக்கு பேர்ளின் நிலப்பரப்பின் கீழாகச் சென்று மேற்கு பேர்ளினிலுள்ள Alt Mariendorf என்னுமிடத்தில் முடிவடைந்தது. (இப்பாதையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன). இச்சுரங்க இரயில் பாதையில் கிழக்கு பேர்ளினுக்குள் வரும் ஒரு சில சுரங்க இரயில் நிலையங்களுள், Friedrich Strasse என்னுமொரு நிலையத்தை தவிர மற்றைய நிலையங்களை கிழக்கு ஜேர்மன் அரசு மூடிவிட்டது. Friedrich Strasse சுரங்க நிலையத்தூடாக வெளிநாட்டவரும், பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மூத்த பிரஜைகள் என அழைக்கப்பட்ட அறுபத்தைந்து வயதை தாண்டிய கிழக்கு ஜேர்மன் முதியவர்களும் மாத்திரம், மேற்குபேர்ளினுக்குப் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

சோவியத் விமானங்கள் மூலம் பெருந்தொகையாக, கிழக்கு பேர்ளின் சோர்ணபெல்ட் விமான நிலையம் வந்திறங்கும் உலக அகதிகளுக்கு கிழக்குஜேர்மன் அரசு ஒரு நாள் விசா கொடுத்து Friedrich Strasse சுரங்க ரயில் நிலையத்துக்கு வழிகாட்டி மேற்குபேர்ளினுக்கு செல்ல அனுமதித்தது. போக வழி தெரியாது, கிழக்குஜேர்மனிக்குள் அலைந்து திரிந்த அகதிகளை விசா காலாவதியாகமுன் தேடிப்பிடித்து Friedrich Strasse சுரங்க நிலையத்திற்கு கொண்டுவந்து வழிகாட்டும் பொறுப்பினையும் கிழக்குஜேர்மன் பொலீசார் ஏற்றிருந்தார்கள். ஐந்து நிமிடங்களுக்கு ஒன்றாக, ஆறாம் இலக்கப் பாதையூடாகச் செல்லும் சுரங்க இரயில் ஊடாகவும், S-Bahn எனப்படும் தரைவழி இரயில் மூலமாகவும், மேற்குபேர்ளின் மக்களோடுமக்களாகச் செல்லும் அகதிகளை, மேற்குபேர்ளின் எல்லையில் தடுத்து நிறுத்த மேற்குபேர்ளின் அரசால் முடியவில்லை. அகதிகளின் வரவை கட்டுப்படுத்துவதாயின் இந்தச் சுரங்க இரயிலில் பிரயாணம் செய்யும் ஜேர்மனியர்கள்  உட்பட எல்லாப் பிரயாணிகளையும் சோதனையிட வேண்டும். ஐந்து நிமிட இடைவெளியில் வரும் இரயில்களிலே முழுமையான தேடுதல் சாத்தியப்படவில்லை. பேர்ளின் நகர் பற்றி பொட்ஸ்டம் உடன்படிக்கையில் உள்ள ஓட்டைகள், அகதிகளின் இலகுவான புலப்பெயர்வுக்கு இவ்வாறு வழிவகுக்கும் என, கொள்கை வகுத்தோர் அன்று உணர்ந்திருக்க நியாயமில்லை. சோவியத்யூனியனும் கிழக்குஜேர்மனியும் அகதிகள் விடயத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்ததை ஊன்றிக் கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். பெருந்தொகை அகதிகள் ரூஷ்ய Aeroflot விமானத்தில் பறந்ததின் மூலமும், ஒருநாள் கடவை விசாவுக்கு கிழக்குஜேர்மன் அரச நிர்வாகம் அமெரிக்க டொலரில் பணம் அறவிட்டதின் மூலமும் பெருந்தொகையான வருமானம் பெற்றார்கள். கிழக்குஜேர்மனிக்குள் இருக்கும் குப்பைத் தொட்டியாக மேற்குபேர்ளினைப் பாவித்து பல்லாயிரக்கணக்கான உலக அகதிகளை வகை தொகையின்றி மேற்குபேர்ளினுக்குள் தள்ளித் தொல்லை கொடுத்தார்கள். இதனால் எண்பதாம் ஆண்டுகளில் சுற்றி வர மதில்சுவரால் தனிமைப்படுத்தப்பட்ட மேற்குபேர்ளின் நகரம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. அகதிகளின் இத்தகைய படையெடுப்பு மேற்குஜேர்மன் அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது.

உழைக்க வந்தவர்கள், முன்பின் தெரியாதவனை மணம் முடிக்க வந்த இளம் பெண்கள், கணவனுடன் சேரவந்த மனைவிகள், அவர்களின் பிள்ளைகள், வெளிநாட்டில் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்றே அறியாத இளைஞர்கள், இராணுவ முகாமில் விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுப் பின் விடப்பட்டவர்கள், தேடப்பட்டவர்கள், போராளிகளாக இருந்தவர்கள் என நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்ட கோலத்தில் கிழக்குபேர்ளின் சோர்ணபெல்ட் விமான நிலையத்தில் வகைவகையாக வந்து இறங்கினார்கள். இவர்கள் எல்லோருக்குமான பொதுவான நோக்கம், அரசியல் தஞ்சம் கோரி  விசா எடுப்பதே!

அகதிகளாக வந்தவர்களில் பலருக்கு இதுவே முதலாவது விமானப் பறப்பாக இருந்தது. மேற்குபேர்ளினின் மையப் பகுதியான சூலோகிச-கார்டன், கூபெஸ்டர்டம் என்பன அருகருகே இருக்கும் பிரதான வணிக இடங்கள். இங்குதான் மேற்குபேர்ளினிக்குள் நுழைந்த அகதிகள் ஒருகட்டத்தில் ஆயிரக் கணக்கில் வந்து குவிந்தார்கள். ஜேர்மன் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பொட்ஸ்டம் உடன்படிக்கையை முன்னிறுத்தி சாதகமாகவும் பாதகமாகவும் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டன. சில ஊடகங்கள் வெறுப்பை உமிழ்ந்தன. அகதிகள் வீதியோரம் அமர்ந்திருந்த காட்சி உலகமெங்கும் ஒளிபரப்பப்பட்டது. அகதிகள் மீது ஊடக வெளிச்சம் பட்டவுடன் மேற்குஜேர்மன் அரசும் மேற்குபேர்ளின் நிர்வாகமும் விழித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் தனித்தனியான முகாம்களை அமைத்து இவர்களை அப்படியே அள்ளிக் கொண்டுபோய் விட்டன.

இந்நாவலில் மேலே சொல்லப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் புனைவு கலந்து கதைமாந்தர்கள் ஊடாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஜேர்மனியின் சிக்கலான நில அமைப்பைப் புரிந்துகொள்ள, மூன்று வரைபடங்கள் நூலின் முன் பின் அட்டைகளின் உட்பக்கங்களில் தரப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து வந்தவர்களுள் பெரும்பாலானோருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரிந்திருக்கவில்லை. ஜேர்மனியில் ஜேர்மன்மொழி தவிர்ந்த எந்த மொழியும் செல்லாக்காசு. இத்தகைய நிலைமையைச் சமாளிக்கவும் அரசியல் தஞ்ச விசாரணைகளை மேற்கொள்ளவும் ஜேர்மன் அரச நிர்வாகத்துக்கு, தமிழும் ஜேர்மன் மொழியும் நன்கு தெரிந்த ஒருவர் தேவைப்பட்டார். மேற்குபேர்ளின் பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டத்துக்கான படிப்பையும் ஆராய்ச்சியையும் ஜேர்மன் மொழியில் மேற்கொண்டிருந்த நான் பல்கலைக்கழக அனுமதியுடன் மொழிபெயர்ப்புப் பணிக்கு அமர்த்தப்பட்டேன். இந்தவகையில் எண்பதுகளில் புலம் பெயர்ந்தோரில் கணிசமானவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் இலாகாக்களிலும் சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களிலும் அரச மொழிபெயர்ப்பாளராக நான் பணிபுரிந்திருக்கிறேன்.

கிழக்குபேர்ளின் இறங்குதுறையைப் பாவித்து மேற்குபேர்ளினூடாக பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்போ அல்லது தங்கள் நுழைவுக்கு வசதி செய்த பொட்ஸ்டம் உடன்படிக்கை பற்றியோ, இன்றுவரை தெரியாதிருக்கலாம். இந்த வரலாற்றுத் தகவல்கள் தமிழ்மொழியில் பதியப்படாதவை. இதனை மனங்கொண்டே இவ்வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. நாவலில் வரும் பல சம்பவங்களுக்கு நான் நேரடி சாட்சியாக இருந்துள்ளேன்.

இந்நாவல் ஞாயிறு தினக்குரலில் வாரம்தோறும் தொடர்ச்சியாக வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. நான் அனுப்பிய மறுவாரம் தொடக்கம் தினக்குரலில் வெளியிட்ட வாரமலர் பொறுப்பாசிரியர் திரு லெப்ரின் ராஜ் அவர்களுக்கும் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்துக்கும் என் நன்றிகள்.

நான் கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் சிறந்த அணிந்துரை எழுதித்தந்த பேராசிரியர் அ. ராமசாமி அவர்களுக்கும் நல்லதொரு முகவுரை எழுதிய டாக்டர் செல்லையா சுப்ரமணியத்துக்கும் நூலின் பின்மட்டைக்கு, நறுக்குத் தெறித்தாற்போன்ற குறிப்பை எழுதிய டாக்டர் ரஞ்ஜனி சுப்ரமணியத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

'எங்கடபுத்தகம்' நிறுவனம் வெளியிடும் எனது இரண்டாவது நூல் இதுவாகும். அவர்கள் பதிப்பித்த எனது 'பணச்சடங்கு' என்னும் சிறுகதைத்தொகுப்பு 2022ம் ஆண்டு இலங்கை அரச சாகித்திய விருதுபெற்றது. அந்நூலுக்கு அட்டைப்படம் வடிவமைத்தவர் 'எங்கடபுத்தகம்' அதிபர் திரு குலசிங்கம் வசீகரன் அவர்கள். அவரது அட்டைப்பட வடிவமைப்பு சாகித்திய விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட மூன்றுக்குள் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரும் அவரது நிறுவனமும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நிறைவாக எனது கலை இலக்கிய முயற்சிகளுக்கு என்றும் பூரண ஆதரவு தரும் எனது குடும்பத்தினருக்கு என் அன்பை இச்சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அன்புடன்,

ஆசி கந்தராஜா.

2023.  

  

 

 

 

No comments:

Post a Comment