Thursday 21 September 2023

 

 

“... , சோனியின் வெற்றியைக் கண்டால் ஏற்காது”

 - திரு அப்துல் ஹமீட் -



ஆசி கந்தராஜா - திரு அப்துல் ஹமீட் செவ்வி பற்றி, வானொலியாளர், கவிதாயினி, சமூக செயற்பாட்டாளர் சௌந்தரி கணேசன் எழுதி, ஆசிமுற்றம் இணையத் தளத்தில் பிரசுரமாகும் எதிர்வினை.

-சௌந்தரி கணேசன்-

செவ்வியை செவிமடுத்தேன். உங்களது கேள்விகளுக்குள் உள்ள சிறப்பான நோக்கத்தைக் காணமுடிகிறது. இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளை உருவாக்குவதை பார்க்கின்ற போது மிகவும் சங்கடமாகவுள்ளது. விளக்கங்களை மறுத்து, பேச்சில் வெறுப்பை உமிழும் திரு அப்துல் ஹமீத் அவர்கள், உங்கள் கேள்வியின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறாரோ தெரியவில்லை. செவ்வி என்பது தனிமனிதனின் புகழை மட்டும் பரப்புவதாகவோ பகிர்வதாகவோ இருக்காது நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு நேயரும் இதே கேள்வியைக் கேட்க விரும்பியிருப்பார் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.  நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே விலகி நிற்கும் ஒவ்வாமை திரு அப்துல் ஹமீத்தின் உடல் மொழியில் நிலையாகக் குடி கொண்டிருந்ததையும் தெளிவாக உணரமுடிகிறது.

ஒருவரின் கருத்து ஏற்பிற்குரியதா அல்லது விமர்சனத்திற்குரியதா என்பது வேறு, ஆனால் உரையாடலின் முறைமையை தன் வசதிக்கேற்ப எத்தருணத்திலும் வளைத்து விடக்கூடாது. 

“...சோனியின் வெற்றியைக் கண்டால் ஏற்காது” 

- என்று போகிற போக்கில் அடித்து விட்டுப் போவதற்கு திரு அப்துல் ஹமீத் அவர்களுக்கு அசாத்தியத் துணிவு வேண்டும். எவ்வளவு காலம் சென்றாலென்ன, எவ்வளவுதான் சிந்தனையில் வளர்ச்சி டைந்தாலென்ன, அடிப்படையான மனக்காழ்ப்பு இல்லாமல் அந்த வார்த்தை வெளிவராது. ஒற்றைப் படையான, குத்து மதிப்பான உளப் பதிவின் மூலம், தர்க்க அடிப்படை ஏதும் இன்றி தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கின்றார், திரு அப்துல் ஹமீத் அவர்கள்.  உங்களைத் தாக்கும் வெறியில், அல்லது உங்களை எதிர்க்கும் வகையில் மிக எளிதாக ஒட்டுமொத்தச் சமூகத்தையே எதிர்ப்பக்கம் தள்ளிவிடுகிறார். அவரது இந்தக் கூற்றை அல்லது அவரது இந்த உளப்பதிவை வெறும் கோவம் என்று நிராகரிப்பது மிகவும் கடினம். 

தட்டையான சிந்தனைகளில் அழுந்திப்போயிருக்கும் சமூகப்பரப்பில் ஒரு அசல் படைப்பை முன்வைப்பது என்பது மிகவும் சிக்கலானது. ஆனாலும் நீங்கள் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறீர்கள். மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறேன். சில இடங்களில் உங்களது சங்கடங்களைப் பார்க்கும் போது மனம் இளகுகின்றது. இதே பாதிப்பு அறிவிப்பாளர் திரு அப்துல் ஹமீத்தின் அபிமானிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஓர் செவ்வி நடைபெறும்போது அடிப்படை மரியாதை அத்தளத்தில் நிலவவேண்டும். இருவருக்கும், இருவரதும் கல்வி, நுண்ணுணர்வு, நேர்மை மீதான நம்பிக்கை இருக்கவேண்டும். மட்டம் தட்டுவதில் வெற்றி காணும் செவ்விகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல செவ்வியென்பது இருதரப்புக்கும் நலமளிக்கவேண்டும். கவனிப்பவர்களுக்கும் பயனளிக்கவேண்டும். ஆனால் இந்தச் செவ்வியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அவசரப்பட்டுச் சிந்திப்பதும், சிந்தனையில் நிதானம் இல்லாததும், தன்னை மையமாக்கி வைத்துப் பேசுவதும் எரிச்சலடைய வைக்கிறது. இதை எனது பொது அவதானமாக முன்வைக்கின்றேன். எந்தக் காரணத்திற்காகவும் எனது கருத்துக்களை பதுங்கியும் மழுப்பியும் சொல்ல வேண்டிய அவசியம் என்னிடம் இல்லை என்பதையும், கடந்த 25 ஆண்டுகளாக  ஊடகவியலாளராகப் பணியாற்றும் அனுபவத்திலும் இதை என்னால் பதிவுசெய்ய முடிகிறது. 

மதிப்பீடு என்பது பெரும்பாலும் அதை முன்வைப்பவனின் இயல்பையும் திறனையும் நோக்கத்தையும் சார்ந்துதான் இருக்கும்.

பேராசிரியரின் கேள்விகளும் திரு அப்துல் ஹமீத்தின் பதில்களும் முற்றிலும் வேறு வேறு திசைகளில் போய்க்கொண்டிருந்தன. அவற்றை இதற்கு மேல் விவாதிப்பதில் பயன் இல்லை.  ஆனாலும் பேராசிரியரின் ஆளுமையை அறியாமல் இந்தப் பதிவைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகின்றேன். காரணம், பேராசிரியர்மீது அன்பும், அபிமானமும், மரியாதையும் கொண்டவள் நான்.

பொதுவாகவே நடிகர்கள், கலைஞர்கள் போன்றோர்களைத் தலைமேல் கொள்ளும் ரசிகர்களும் வாசகர்களும் இருப்பார்கள். அதற்காக அவர்கள் ஒன்றும் அனைத்தும் கடந்த புனிதர்கள் அல்ல.  இருவரும் மிகப்பெரிய ஆளுமைகள், இவர்களது மாண்பைக் குலைக்கும் எண்ணமும் என்னிடமில்லை என்பதைக் கூறிக்கொண்டு, நிகழாத விவாதத்தை இங்கே இத்துடன் இறுதிப் பதிவாக்கி நிறைவு செய்கிறேன்.

பேராசிரியர் அவர்களே!

மெல்லிய புன்னகையுடன் கடந்து போக வேண்டிய விஷயங்கள் இவை, இதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் நீங்கள் இல்லை, நலமாக இருங்கள்.


சௌந்தரி கணேசன்

சிட்னி,  20 செப்டம்பர் 2023.

ஆசி கந்தராஜா - திரு அப்துல் ஹமீட், செவ்வியை முழுமையாகக் கேட்க ஆசி கந்தராஜாவின் முகநூலிலுள்ள (A S Kantharajah), 14. செப்டம்பர் 2023 பதிவைப்பார்க்கவும்.





No comments:

Post a Comment