Wednesday 7 February 2024

சயந்தனின் ஐமிச்சங்கள்.

 

ஐமிச்சம் 1:

பூக்காமல் காய்க்கும் மரமெது?

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி எதையும், சயந்தன் தவற விடுவதில்லை. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூக்காமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது. சயந்தனும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை. அவனது ஆச்சியும் அது உண்மைதான் என எண்பித்தார். இது எப்படிச் சாத்தியம்? என அறிய, மாகாண விவசாய அதிகாரியாகப் பணிபுரிந்த வேதவல்லி அக்காவைக் கேட்டான்.

பலா பூக்குமடா, எவர் சொன்னவர் பூக்காதென்று? பலாவின் பூக்கள் பச்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறுவேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல்க் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்'.

பெண் பூக்கள்?

பொறுடா, அவசரக் குடுக்கை. பொறுமையாய்க் கேள். பலா மரத்தில் பெண்பூக்கள் பெரும்பாலும் அடி மரத்திலும் கொப்பின் அடிப் பாகத்திலும் தோன்றும். சில சமயங்களில் மேல் கிளைகளிலும் குறைவான எண்ணிக்கையில் தோன்றுவதுண்டு. பலாவில் பெண் பூக்கள் என்பது ஒரு மஞ்சரி. இதையே வேறு விதமாகச் சொன்னால், பல பெண் பூக்கள் சேர்ந்த கூட்டுக் காம்பிலியே, மஞ்சரி. மரத்தின் மேலேயுள்ள ஆண்பூக்களின் மகரந்த மணிகள், காற்றின் மூலம் பெண்பூக்களுக்கு கடத்தப்பட, கருக்கட்டல் நடைபெற்று, காய் தோன்றி, பழமாகும் என்றவர், கைத்தொலை பேசியில் வந்த அழைப்பை ஏற்றுப் பேசியபின், தொடர்ந்தார்.

பலாப் பழத்தை ஒரு திரள் பழம் அல்லது கூட்டுப் பழம் எனச் சொல்வார்கள். உள்ளே காணப்படுகின்ற ஒவ்வொரு சுளையும், மஞ்சரியிலுள்ள ஒவ்வொரு பூவிலிருந்து தோன்றியவை. பூக்களின் அல்லியும் புல்லியும் சேர்ந்த பூவுறை, சதைப்பற்றான சுளைகளாக மாற, நடுவே விதை, விருத்தி அடைந்திருக்கும்.

பிலாப் பழத்துக்குள் இருக்கும் பொச்சு...?

அவை மஞ்சரியிலுள்ள கருக்கட்டாத பூக்களில் இருந்து வந்தவை என சயந்தனுக்கு விளக்கம் தந்தார், வேதவல்லி அக்கா.

 

ஐமிச்சம் 2:

அடிக்காத மாடு படிக்காதா?

சயந்தன் சிறுவனாக இருந்த காலங்களில், வீட்டில் அவனுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் அடி விழுவதுண்டு. வளவில் எந்த மரமாவது காய்க்காமல் டிமிக்கி விட்டால், அடிக்காத மாடு படிக்காது என்ற கொள்கைப்படி,  அவனது ஆச்சி கோடாலியின் பின் புறத்தால் நாலு சாத்து சாத்துவார். அவரின் தியறி பலா மரத்தில் வேலை செய்ததை அவன் நேரில் பார்த்திருக்கிறான்.

இதன் சூக்குமம், அவன் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் வரை விளங்கவில்லை. கோடாலியால் அடிவாங்கிய நோவினால் மரங்கள் காய்க்கவில்லை என்றாலும், அடி வைத்தியத்தில் ஆச்சிக்குத் தெரியாத அறிவியல் விளக்கங்கள் பல புதைந்து கிடப்பதை பின்னர் தெரிந்து கொண்டான்.

ஒரு தாவரத்தில் நீரையும் ஊட்டச் சத்தையும் இலைகளுக்கு கடத்துவது, காழ்க் கலங்கள் (Xylem Cells). இதற்கு வெளியேயுள்ள உரியக் கலங்கள் (Phloem Cells), இலையிலே தயாரிக்கப்பட்ட உணவை, வேருக்கும் தாவரத்தின் மற்றைய பகுதிகளுக்கும் கடத்துகிறது.

கோடாலியால் மரத்தை அடிக்கும்போது, உணவைக் கடத்தும் உரியக் கலங்கள் சிதைக்கப்பட, தயாரித்த உணவின் பெரும்பகுதி தாவரத்தின் கிளைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் அங்கு உடல் தொழில் மாற்றங்கள் ஏற்பட்டு, தாவரம் பூக்கத் துவங்கும்.

இதற்கும் மேலாக, பலா மரத்தில் இன்னொரு விஷயமும் நடக்கிறது. பலாவில், புதிய அரும்பில் இருந்தே பூக்கள் தோன்றும். கோடாலியால் பலாவில் அடித்த காயம் மாறும் போது, அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி பூக்களாகி, காயாவதையும் சயந்தன் கண்டிருக்கிறான்.

இதே வேளை மரத்தைச் சுற்றி நிறைய அடி போட்டால், உரியக் கலங்கள் முற்றாக அறுபட, சில வருடங்களில் மரம் செத்துவிடும். விவசாய பண்ணைகளில், கூரிய கத்தியால் அடிமரத்து மரப் பட்டையை அரை சென்ரி மீட்டர் அகலத்துக்கு 'இடையிடையே' வெட்டி விடுவார்கள்.

மரம் நிறையக் காய்க்கட்டும் என்ற பேராசையில், பக்கத்து வீட்டுத் தாத்தா மரத்தைச் சுற்றியுள்ள பட்டையை முழுமையாக வெட்டி (வரைந்து) விட்டதால், அடுத்த வருடம் அவரது பலா, விறகுக்குத்தான் பயன்பட்டது.

இதைவிடுத்து, வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மந்திர உச்சாடனம் செய்தபடி கோடாலியால் மரத்தை அடிக்க வேண்டுமென்பதோ, நடு இரவில் நிர்வாணமாகச் சென்று அடிக்கவேண்டும் என்பதோ, வெறும் கட்டுக் கதைகளே!

 

ஐமிச்சம் 3:

வேரில் பலா பழுக்குமா?

பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடங்களுடன் சயந்தன் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும், இந்துசமயமும் படித்தான். இலக்கியத்தில் பாரதி பாடலுடன் பாரதிதாஸன் பாடல்களையும் சிற்றம்பலம் மாஸ்டர் படிப்பித்தார்.

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே, இங்கு வேரிற் பழுத்த பலா, எனத் துவங்கும் பாரதிதாஸன் பாடலை, அன்றைய இலக்கிய வகுப்பில் வாசித்து, சிற்றம்பலம் மாஸ்டர் பொழிப்புரை சொன்னார்.

சயந்தனுக்கு எப்பொழுதும் குறுக்குப் புத்தி. வேரில் கிழங்குதானே விழும், எப்படிக் காய்காய்த்துப் பழுக்கும்? என அவனது மூளை, குறுக்குச் சால் ஓடியது. இதை தாவரவியல் படிப்பித்த வேதவல்லி அக்காவின் புருஷன் சுந்தரமூர்த்தி மாஸ்டரிடம் கேட்கப் பயம். அந்தாள் ஒரு சுடுதண்ணி. ஏன்தான் வேதவல்லி அக்கா இந்தாளைக் கட்டினவர், எனச் சயந்தன் பல சந்தர்ப்பங்களில் கவலைப் பட்டிருக்கிறான். இந்த விஷயத்தில் அவனும் சின்னப் பிழை விட்டிருக்கிறான். 

வேதவல்லி அக்கா செம்பாட்டன் மாம்பழ நிறமும் நல்ல வடிவும். சயந்தனுக்கு கிட்டடிச் சொந்தம் மட்டுமல்ல பக்கத்து வீடும். பல்கலைக் கழகத்தில் வேதவல்லி அக்கா விவசாயம் படித்து வெளியேறியபோது சயந்தன் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். சுந்தரமூர்த்தி மாஸ்டருக்கு வேதவல்லி அக்கா மீது ஒரு கண். ஒருதலைக் காதல் என்றும் சொல்லலாம். அப்போது கைத்தொலைபேசி, வற்சப், வைபர் எதுவும் இல்லாத காலம். சயந்தனை வளைத்து அவனிடம்தான் காதல் கடிதம் கொடுத்துவிடுவார். ஊரில் அப்போது அவர்தான் ஒரேயொரு விஞ்ஞானப் பட்டதாரி. பிறகென்ன. நாலு கூட்டம் மேளம் பின்னியெடுக்க, வாணவேடிக்கை, முத்துச்சப்பறம் பூட்டிய காரில் ஊர்வலம் என கலியாணம் தடல்புடலாக நடந்தது. வேதவல்லி அக்கா, ஒரே பிள்ளை என்பதால் சயந்தன்தான் மாப்பிளைத் தோழன். செட்டியின் காரில் பள்ளிக்கூட வாத்தியின் அருகில் இருந்து ஊர்வலம் போனபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. கலியாணத்துக்குப் பிறகு, வாத்தி அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதனால்த்தான் பலா வேரில் காய்க்குமா? என்று விவசாயம் படித்த வேதவல்லி அக்காவிடம் கேட்டான்.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் Underground stem என்பார்கள். இதிலிருந்து தோன்றிய முகை அரும்பாகி, மண்ணுக்கு வெளியே எட்டிப் பார்த்து, காயாக மாறும்போது அது வேரில் காய்த்தது போலத் தோன்றும். இதைத்தான் வேரில் பழுத்த பலா என்பார்கள். எந்த மரத்திலும் வேரிலிருந்து காய்கள் தோன்றுவதில்லை, என்றவர் மேலதிகமாக இன்னுமொரு தகவலையும் சொன்னார்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பார்கள் பலரும். இது உண்மைதான், அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக் கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை. அவை மண்ணுள் புதைந்திருக்கும் தண்டில் உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், கிழங்குகள் அடித் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருப்பதைக் காணலாம். இந்த இயல்பின் அடிப்படையிலதான், ஆய்வு கூடத்தில் அறிவியல் ரீதியாக இளைய வளர்ப்பின் மூலம் தண்டில், நோய்களற்ற விதை உருளைக் கிழங்குகள் பெறப்படுகிறது.

அப்போ, மரவெள்ளி, வத்தாளை?

இவைகளில் வேரிலேதான் கிழங்கு வரும். மரவெள்ளியில் வேர்போன பக்கமெல்லாம் கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக் கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை எனப் பொறுமையாக விளக்கிய வேதவல்லி அக்கா அன்றைய இரவுச் சாப்பாடுக்கு அடுக்குப் பண்ண அடுக்களைக்குள் நுளைந்தார்.

 

ஐமிச்சம் 4:

பலாக் கொட்டையா? அல்லது கட்டையா?

செண்பகவரியன் பலாப்பழம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. இதில் இளம் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறைய சுளைகள் இருக்கும். மிகவும் இனிப்பான, நார்த்தன்மை அற்ற இச் சுளைகளைக் கடித்தால் தொதல் போல இரண்டு துண்டாகும். சயந்தனின் வளவிலும் செண்பகவரியன் பலாக் கட்டையை, சாவகச்சேரி சந்தையில் ஐயா வாங்கிவந்து நட்டார். அது கிசுகிசுவென வளர்ந்து வஞ்சகம் செய்யாமல் காய்த்தது. பலாக் கட்டை என்ற பதம் சற்று விசித்திரமானது. பலா மரத்தின் நீண்ட கிளையை வெட்டிப் பதிவைத்த வெட்டுத் துண்டை, பலாக் கட்டை என்கிறார்கள்.

பதிவைத்த நிலத்தை வைக்கோலால் அல்லது வாழைத் தடலால் மூடித் தண்ணீர் ஊற்றும்போது, காற்றின் வெப்ப நிலையிலும் மண்ணின் வெப்பம் கூடுவதால், மேலே குருத்துவரமுன்னர் கீழே சல்லி வேர்கள் அரும்பும்.

தாவரங்களின் வெட்டுத் துண்டங்களை (Cuttings) பதியனிடும்போது மேலே கிளைகள் வளர முன்பு, கீழே வேர்கள் வளரவேண்டும். அதற்காகத்தான் விவசாய பண்ணைகளில் பதியன்களை இளம்சூடுள்ள மேசையில் (Heated bench) வைப்பது.

இதேவேளை காற்றின் வெப்பநிலை, மண்ணின் வெப்ப நிலையிலும் கூடுதலாக இருந்தால், வேர்கள் வரமுன்பு கிளைகள் வளர்ந்து, பதியன்களின் சத்தை உறுஞ்ச, பதியன்கள் செத்துவிடும். இது றோசா உட்பட எந்த பதியன்களுக்கும் பொருந்தும்.

Soil temperature > Air temperature = Roots

Air temperature > Soil temperature = Shoots

இந்த வகையில் வேர்வைத்த பலாக் கட்டையை (வெட்டுத்துண்டை) மண்ணுடன் கிளப்பி ஒரு சாக்குத் துண்டால், வேரையும் மண்ணையும் சேர்த்து, பொட்டளி போலக் கட்டி, சந்தையில் விற்றதையே ஐயா வாங்கிவந்தார்.

ஏன் இந்த வில்லங்கம்? செண்பகவரியன் பலாக் கொட்டையை முளைக்க வைக்கலாமே? அதற்கு நல்ல ஆணிவேர் இருக்குமல்லவா? என வஞ்சகமில்லாமல்க் கேட்டான் சயந்தன்.

கொட்டைக் கண்டுக்கு ஆணிவேர் இருக்குமென்பது உண்மைதான். ஆனால், விதையில் முளைக்கும் தாவரத்தில், தாய் மரத்தின் இயல்புகள் இருக்குமென்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் பதியன்களில், தாய்மரத்தின் இயல்புகள் சகலதுமிருக்கும். அத்துடன் அது தாய்மரத்தின் முத்திய தண்டாதலால் விரைவில் காய்க்கும் திறனும் கொண்டது.

சயந்தனின் வீட்டுக் கிணத்தருகே சடைபரப்பி நிற்கும் கூழன் பலா, விதையில் முளைத்ததுதான். அது கூழன் பழம் காய்க்குமென முன்னரே தெரிந்திருந்தால் ஐயா அதை நட்டிருக்கமாட்டார். அதில் பிடிக்கும் பிஞ்சுகளை முற்றமுன்னரே ஆய்ந்து அரிந்து ஆட்டுக்கு வைத்துவிடுவார் ஆச்சி.

இப்படியாக எத்தனையெத்தனை ஐமிச்சங்களுக்கு விளக்கம் தேடவேண்டியிருக்கிறது சயந்தனுக்கு!

-ஆசி கந்தராஜா-

 

No comments:

Post a Comment