Monday 6 May 2024

சிதைவுறும் கிடுகு வேலிகள்:

‘அகதியின் பேர்ளின் வாசல்’ காட்டும் சித்திரம்

-அலைமகன்-

ரு ஈழத்தமிழனுக்கு உலகம் என்பது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே ஆகும். இவர்களில் கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களை பெற்றவர்கள், அதனை முறையாக பதிவுசெய்தவர்கள் ஈழத்தில் மிகக்குறைவு. இருந்தாலும் இன்று உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் கிழக்கு ஐரோப்பா, அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியின் பங்களிப்பு மிக அதிகம். எனது சிறு பிராயத்தில் எனதூரில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எப்போதும் ஜெர்மனிக்கே செல்வது வழக்கம். அந்த மர்மத்தை சரியாக உணர்ந்துகொள்ள எனக்கு இரண்டு சகாப்தங்கள் தேவைப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் அனுபவங்களை பனிப்போர் சூழலின் பின்னணியில் விவரிக்கும் நாவல், அகதியின் பேர்ளின் வாசல்.



வரலாற்றில் சம்பவங்கள் திரும்பவும் நடக்கின்றன. முதல் தடவை அது சோகமாக முடிகிறது. அடுத்த தடவை அது கேலிக்கூத்தாக முடிகிறது என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் ஆய்வாளர்களிடையே பிரபலமானது. நாம் ஏன் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நியாயமான, தர்க்கபூர்வமான காரணங்கள்தான் மேற்கூறிய கூற்றுக்கள்.

வரலாறை மிக சுவாரஸ்யமாக அதே நேரம் முறையான தரவுகளுடன் தந்த நூல்கள் பல. அந்தவகையில் நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight) முக்கியமான ஒரு நூல். அதேபோல தமிழர்களின் விடுதலைப் போரில் நடந்த நிகழ்ச்சிகளை காய்தல் உவத்தல் இன்றி பதிவுசெய்த நூல்களில் ஒன்று புஸ்பராசாவால் எழுதப்பட்ட "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்".

இந்த வழிமுறைகளை தவிர்த்து ஆசி. கந்தராஜா அவர்கள் இன்னொரு வழியை பின்பற்றுகிறார். அதாவது வரலாற்றை ஒரு புனைகதையூடாக வெளிப்படுத்துவது. வரலாற்றுப் புனைவு என்று கூறும்போது நாம் அறிந்த சரித்திரப் புதினங்களுடன் இதனை குழப்பிக்கொள்ளக்கூடாது. நாவலாசிரியர் தனது நாவலில் சித்தரிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் கூடவே வாழ்ந்து பயணித்திருக்கிறார் என்பதுதான் இங்கே உள்ள சிறப்பம்சம்.

1990ற்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் தலைநகர் மாஸ்கோ "புரட்சியாளர்களின் புனித பூமி" என்று வர்ணிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கிழக்கு ஜெர்மனியின் சர்வகலாசாலையில் உயர் கல்வி கற்கவும் அங்குள்ள வாழ்க்கையை வாழவும், தொடர்ந்து மேற்கு ஜெர்மனியின் நேரடி வாழ்வனுபவங்களும், பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பேர்ளின் சுவர் தகர்க்கப்பட்டபோது நடைபெற்ற நிகழ்வுகளை காணும் நேரடி சாட்சியாகவும் இருக்கும் அரிய வாய்ப்புக்களை பெற்றவர். இவை ஒரு ஈழத்தமிழனின் வாழ்வில் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் என்பதை மறுக்கமுடியாது. எனவேதான் அவற்றை முழுமையாக பதிவு செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

ஏன் அந்த வரலாற்றை புனைவுக்கூடாக சொல்லவேண்டும்? பொதுவாகவே வரலாற்றைத் தெரிந்துகொள்ள தமிழர்களுக்கு பெரிதளவு அக்கறையில்லை என்பது பரவலான விமர்சனம். மாறாக ஒரு சில பெருமிதங்களை மட்டும் தேர்வுசெய்து அதனையே முழு வரலாறாக காட்ட விரும்புகிறார்கள். இது ஒருவிதமான தாழ்வுச்சிக்கலின் அடையாளம். வரலாற்றை தெரிந்துகொள்வது அதனை போற்றித் துதிக்க அல்ல. மாறாக எதிர்காலத்தை சரியாக எதிர்வு கூறி அழிவுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளவே. இன்று உலகம் முழுவதும் பரவி வாழும்

நிலையில் அவர்களின் கடந்த கால வரலாறு தமிழர்களுக்கு மிகவும் முக்கியம். எனவேதான் தமிழர்களுக்கு கசப்பு மருந்தாக இருக்கும் வரலாற்றை புனைவு எனும் இனிப்பைத் தடவி ஆசிரியர் தருகிறார்.

கிழக்கு மேற்கு ஜேர்மனி இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தபோது வல்லரசுகள் தங்கள் நலன்களுக்காக செய்துகொண்ட பொட்ஸ்டம் உடன்படிக்கை இருபகுதி ஜெர்மனியர்களுக்கும் நன்மை பயத்ததோ இல்லையோ, நிச்சயமாக ஈழத்தமிழர்களுக்கு பெரும் நன்மை பயத்தது. அக்காலப்பகுதியில் உருவான உள்நாட்டுப்போர், இடம்பெயர்வை தூண்டியதுதான் என்றாலும் ஏன் எல்லோரும் முதலில் ஜெர்மனிக்கு போனார்கள் என்பதன் மர்மத்தை விளங்கிக்கொள்ள இந்த நாவலை வாசிக்கவேண்டும். அந்த உடன்படிக்கையின் சரத்துக்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வெகு தந்திரமாக முடிந்தவர்கள் தப்பிக்கொண்டார்கள். இந்த புலம்பெயர்வு ஈழத்தமிழர்கள் வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார, கலாச்சார மாற்றங்களுக்கு வழிவகுத்தது. ஈழத்தமிழர்கள் தமது புலத்திலிருந்து இடம் பெயரும்போது என்ன காரணங்களை கூறினாலும் நினைப்பதுபோல அது இலகுவானதாக இருந்ததில்லை. எனது சிறு வயதில் புலம்பெயரும்போது இடம்பெறும் எவ்வளவோ அவலங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாவலில் வளர்மதி என்ற பெண் சந்திக்கும் பிரச்சினைகள் அச்சொட்டாக எனக்கு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டன. யுத்தம் முடிவடைந்த இக்காலத்திலும் இந்த அவலம் தொடர்வதைக் காண முடிகிறது. புலம்பெயரும்போது ஏற்படும் கலாச்சார அதிர்ச்சிகள் தப்பிப்பிழைத்தல் எனும் அடிப்படையான உயிரின செயற்பாட்டில் மறைக்கப்பட்டு விடுகின்றன அல்லது நியாயப்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் கிடுகுவேலி கலாச்சாரத்தில் கடுமையாக கண்காணிக்கப்படுவந்த பெண்களின்

உடல்சார் புனிதம், கற்பு, கவுரவம் போன்ற கற்பிதங்கள், புலப்பெயர்வின் தவிர்க்கமுடியாத தேவைப்பாட்டில் தகர்வதை நாவலில் காணமுடிகிறது. யாழ்ப்பாணத்தின் கீழ்மைப்பண்பாக பல சமூக ஆய்வாளர்களால் சுட்டப்படும் இந்த கிடுகுவேலி கலாச்சாரம் (Thatched Fence Culture) ஏறத்தாழ சிதைந்து போனதில் புலப்பெயர்வின் பங்கு மறுக்கமுடியாதது.

தமிழ்த்தேசிய அரசியலுக்கு புலம்பெயர் சமூகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பு நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பது ஒரு விவாதத்துக்குரிய கேள்வி. அதனை முடிவுசெய்ய இன்னும் சற்று காலமிருக்கிறது என்றே கருதுகிறேன்.

பாலமுருகன், தவராசா எனும் இரண்டு இளைஞர்களை சுற்றி கதை ஆரம்பித்து நகர்கிறது. முதலாவது பகுதியில் அந்தக்கால யாழ்ப்பாண வாழ்வியலின் கோலங்கள் விவரிக்கப்படுகின்றன. அசலான யாழ்ப்பாணத்தை அதன் உண்மையான பலம், பலவீனகளுடன் சித்தரிக்கும் வழக்கம் கொண்ட ஆசிரியர் இந்த நாவலிலும் அதனைக்காட்டத் தவறவில்லை.

1970களின் பிற்பகுதியில் வெளிநாட்டுக்கு போய் வந்தவர்கள் மீதான மோகம் மிக அதிகமாக இருந்தது. அவ்வாறு திரும்பி வந்தவர்களின் பெற்றோர் அவர்களை வைத்து சமூகத்தில் காட்டிய வீண் பெருமிதமும், நடத்தையும் பிற்காலத்தில் அதிகளவான தமிழர்கள் வெளிநாடு சென்றபோது அவ்வாறே அவர்களும் இங்கித குறைவாக நடந்துகொள்ள முன்மாதிரியானது.

இயக்க மோதல்கள் புலப்பெயர்வை தூண்டியது பற்றியும் நாவல் சில இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இங்கே இயக்க மோதல்கள் மட்டும்தான் இடப்பெயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறமுடியாது. அது ஒரு உப காரணம் மட்டும் தான். தமிழர்கள் இலங்கையை விட்டு

வெளியேறியமைக்கான மூல காரணங்கள் மிகத்தெளிவானவை. அவை பல முறை விவாதிக்கப்பட்டு விட்டன.

கம்யூனிச தத்துவத்துக்கு உலகளாவிய மானுடக்கனவு ஒன்று இருந்தது. அதனாலேயே எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் மிகஉயர்ந்த கல்வியை மூன்றாம் உலக நாடுகளுக்கு அவர்கள் இலவசமாக வழங்கினார்கள். அந்தக்கல்வியை பெற கிழக்கு ஜெர்மனிக்கு சென்ற மாணவர்கள் எவ்வாறு அந்த நாட்டை சுரண்டினார்கள் என்பது நாவலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகம் முழுவதும் இலட்சியவாதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அதன் பல அறிகுறிகளையும் இந்த நாவலில் காண முடிகிறது.

யாழ்மண்ணில் ஏன் கம்யூனிச தத்துவம் வேரூன்றவில்லை என்பது விவாதிக்கப்படவேண்டிய இன்னொரு கேள்வி. சாதியம், மதம், அரை நிலமானிய சமூகம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் யாழ் சமூகம் ஒரு வலதுசாரி சமூகம்தான். அந்த சமூகத்தில் இருந்து வரும் இளைஞன் முற்றிலும் மாறுபட்ட ஒரு கலாச்சார, அரசியல் பின்னணி கொண்ட நாட்டுக்கு படிக்கப்போகும்போது ஏற்படும் தடுமாற்றங்கள், ஏக்கங்கள், வேதனைகள் என்பவற்றை நாவல் முழுவதும் காண முடிகிறது. ஈழ தமிழர்களின் முக்கியமான காலகட்டத்தை பனிப்போர் பின்னணியில் விவரிக்கும் விறுவிறுப்பான இந்த நாவலை வாசிக்கும் போது நீங்கள் காலயந்திரத்தில் பின்னுக்குச்சென்று கிழக்கு ஜெர்மனியின் குளிரை அனுபவிக்கலாம்; சுவையான வோட்காவை ருசிக்கலாம்; நீங்கள் இரவு விடுதியில் சக வெளிநாட்டு மாணவியுடன் நடனமாடிவிட்டு விடுதிக்கு திரும்பும்போது கிழக்கு பேர்ளின் வீதிகளில் வழி தெரியாமல் குளிரில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தை சந்திக்க நேரலாம். சூரிய உதயத்துக்கு முன்னர் அவர்கள்

விரைவாக எல்லையை கடந்து மேற்கு ஜெர்மனிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

அலைமகன்

 

No comments:

Post a Comment