Thursday, 6 June 2024

சைவமுட்டை  சாத்தியமா?

அறிவியல் புனைகதை இலக்கியத்தில் ஒரு மைல் கல்

ஆசி கந்தராஜாவின் 'சைவமுட்டை'யை  குடைந்து ஒரு பார்வை.

-செல்லையா சுப்ரமணியம்-



ந்த நாள்களில் (ஏன் இன்றும்கூட இருக்கலாம்) எங்கள் ஊரில் கோயில் கொடியேறிவிட்டால் ஊர்ப் பக்கம் ஒரு மீன் வியாபாரியையோ இறைச்சிப் பெட்டிக்காரரையோ மருந்துக்குத்தானும் காணக்கிடைக்காது. திருவிழா எல்லாம் முடிந்து வைரவர் மடையும் முடிந்தபின்தான் மச்சக்கறியொலி எங்கள் காதில் இன்பத்தேன் வந்து பாய்ச்சும். அதுவரை மரக்கறிதான். எங்களைப் போன்ற மாமிச பட்சணிகள் தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ள 'என்ன கறி வீட்டிலை' என்று கேட்டால், மரக்கறியை 'மரைக்கறி' என்போம்.  அப்படி ஒரு திருவிழாக்காலத்தில், கெலி தாங்கேலாமல் அவித்த முட்டையொன்று நான் சாப்பிடப்போய் அதைக்கண்ட சகோதரி குய்யோ முறையோவென்று கத்த 'முட்டை சைவம்தானே. மாட்டிலையிருந்து வாற பால் சைவமெண்டால் கோழியிலையிருந்து வாற முட்டையும் சைவம்தான். நீ சாப்பிடு மோனை' என்று முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டு அம்மா சமாளித்த நிகழ்வு,  ஆசி கந்தராஜாவின்  இந்த 'சைவமுட்டை'யைப் பார்க்கும்போது மனதுள் எட்டிப்பார்க்கிறது.

அப்படி அன்றைக்கு முட்டை சைவமென்று சமாளித்த கதையும் இன்றைக்கு  இந்த 'சைவமுட்டை'யே ஒரு கதையாகிப்போனதுவும் விந்தைதான்! அறிவியல் புனை கதைகளின் தொகுப்பான  இந்தப் புத்தகத்தின் தலைப்பே ஒருவருக்கு விவகாரமாக தோன்றலாம். அதாவது முட்டையில் சைவ முட்டையும் உண்டா? முட்டையே மச்சமென்கிற போது  சைவமுட்டை எங்கே எப்போது  எப்படி வந்தது என்ற ஒரு ஐயப்பாடு தோன்றலாம். இப்படி விவகாரமான விஷயங்களை எடுத்துப்போட்டு தர்க்க ரீதியாக அவற்றை பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விரித்துச் சொல்லி உண்மைகளை வெளிக் கொணர்வது தான் ஆசி கந்தராஜாவின் முத்திரை!  

Creative essays அல்லது imaginative essays என்று ஆங்கில இலக்கியத்திலே மிகவும் பிரபலமாக பேசப்படுகின்ற புனைவுக்கட்டுரை என்ற ஒரு விஷயம் தமிழுக்கு முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இந்த எழுத்தாளருக்கு முக்கிய வகிபாகம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது எனது எண்ணம். கட்டுரை வடிவம் வாசகனுக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்தும் என்பதால் அதன் நீட்சியாக இந்த அறிவியல் புனைகதைகளின் பிரசவம் நிகழ்ந்திருக்க வேண்டும்.