சைவமுட்டை சாத்தியமா?
அறிவியல் புனைகதை
இலக்கியத்தில் ஒரு மைல் கல்
ஆசி கந்தராஜாவின் 'சைவமுட்டை'யை குடைந்து ஒரு பார்வை.
-செல்லையா சுப்ரமணியம்-
அந்த நாள்களில் (ஏன் இன்றும்கூட இருக்கலாம்) எங்கள் ஊரில் கோயில் கொடியேறிவிட்டால் ஊர்ப் பக்கம் ஒரு மீன் வியாபாரியையோ இறைச்சிப் பெட்டிக்காரரையோ மருந்துக்குத்தானும் காணக்கிடைக்காது. திருவிழா எல்லாம் முடிந்து வைரவர் மடையும் முடிந்தபின்தான் மச்சக்கறியொலி எங்கள் காதில் இன்பத்தேன் வந்து பாய்ச்சும். அதுவரை மரக்கறிதான். எங்களைப் போன்ற மாமிச பட்சணிகள் தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ள 'என்ன கறி வீட்டிலை' என்று கேட்டால், மரக்கறியை 'மரைக்கறி' என்போம். அப்படி ஒரு திருவிழாக்காலத்தில், கெலி தாங்கேலாமல் அவித்த முட்டையொன்று நான் சாப்பிடப்போய் அதைக்கண்ட சகோதரி குய்யோ முறையோவென்று கத்த 'முட்டை சைவம்தானே. மாட்டிலையிருந்து வாற பால் சைவமெண்டால் கோழியிலையிருந்து வாற முட்டையும் சைவம்தான். நீ சாப்பிடு மோனை' என்று முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டு அம்மா சமாளித்த நிகழ்வு, ஆசி கந்தராஜாவின் இந்த 'சைவமுட்டை'யைப் பார்க்கும்போது மனதுள் எட்டிப்பார்க்கிறது.
அப்படி அன்றைக்கு முட்டை சைவமென்று சமாளித்த
கதையும் இன்றைக்கு இந்த 'சைவமுட்டை'யே ஒரு
கதையாகிப்போனதுவும் விந்தைதான்! அறிவியல் புனை கதைகளின்
தொகுப்பான இந்தப் புத்தகத்தின் தலைப்பே ஒருவருக்கு விவகாரமாக
தோன்றலாம். அதாவது முட்டையில் சைவ முட்டையும் உண்டா? முட்டையே மச்சமென்கிற போது
சைவமுட்டை எங்கே எப்போது எப்படி
வந்தது என்ற ஒரு ஐயப்பாடு தோன்றலாம். இப்படி விவகாரமான விஷயங்களை எடுத்துப்போட்டு தர்க்க ரீதியாக அவற்றை பாமரர்களுக்கும்
புரியும் வண்ணம் விரித்துச் சொல்லி உண்மைகளை வெளிக் கொணர்வது தான் ஆசி
கந்தராஜாவின் முத்திரை!
Creative essays அல்லது imaginative essays என்று ஆங்கில இலக்கியத்திலே மிகவும் பிரபலமாக பேசப்படுகின்ற புனைவுக்கட்டுரை என்ற ஒரு விஷயம் தமிழுக்கு முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இந்த எழுத்தாளருக்கு முக்கிய வகிபாகம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது எனது எண்ணம். கட்டுரை வடிவம் வாசகனுக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்தும் என்பதால் அதன் நீட்சியாக இந்த அறிவியல் புனைகதைகளின் பிரசவம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
அறிவியல் புனைகதைகள் என்றதும் எங்களுக்கு ஞாபகம் வருகின்ற இன்னொரு பெயர்
தமிழ்நாட்டின் மிகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள். ஆனால் அவர்
எழுதியதெல்லாம் கொஞ்சம் அமானுஷ்யமான, ஓரளவு படித்தவர்களே
புரிந்து கொள்ளக்கூடிய தீர்க்கதரிசனம் மிக்க விஞ்ஞான மற்றும் செயற்கை நுண்ணறிவு
சம்பந்தமான புனைகதைகள் என்று சொல்லலாம். ஆனால் ஆசி எழுதியதெல்லாம்
சாதாரண பாமரனுக்கும் புரியக்கூடிய அவர்களுடைய மனதிலே அன்றாட வாழ்க்கையிலே எழுகின்ற
சந்தேகங்களை தீர்த்து வைக்கக்கூடிய, நிதம் எழும் பிரச்சனைகளை
நிவர்த்தி செய்கின்ற ஒரு சிறப்பான பார்வை. அந்தவகையில் ஆசியின் மக்கள் மொழி மனதைத்
தொடுகிறது.
இந்த அறிவியல் புனைகதைத் தொகுதியிலே 'வைரஸ் புராணம்' பாடத் தொடங்கியவர்
முத்தாய்ப்பாய் 'சைவமுட்டை' என்ற ஒரு புதுப்பதத்தை
எடுத்து புனைகதைக்குள் ஒரு புதினத்தை குசும்பாகச் சொல்லி மொத்தம் 16 தலைப்புகளில் கதைகள் படைத்திருக்கிறார்.
விந்தைமிகு விஞ்ஞானத்தை வியப்போடு பார்க்கின்ற
ஒரு சாதாரண மனிதனின் வீட்டு வாசலுக்கு அதைக் கொண்டுவந்து அதன் சூட்சும
முடிச்சவிழ்த்து ஆச்சர்யத்தால் அவர்களை வாய்பிளக்க வைக்கும் ஒரு முன்மாதிரியான வித்தியாசமான எழுத்தாளர்தான் ஆசி கந்தராஜா என்பதை இக்கதைகள் சுட்டி நிற்கின்றன.
அங்கதச்சுவையின் இங்கித எழுத்திற்கு பெயர்
பெற்ற இந்த எழுத்தாளரின் கதைகளில் நக்கல்
நையாண்டி ஊர் மொழி வழக்கு என்று அத்தனையும் மேலதிக போனஸ். அவை இங்கும் நிறையவே
விரவிக்கிடக்கிறது. எனவே இவரது கதைகளுக்குள் வாசகனுக்கான ஊடாட்டம் என்பது ஒரு
வரம்.
புனைவு என்பது இலக்கிய மொழியில் 'கற்பனை' பாமரத் தமிழில் 'பொய்' – கட்டுக்கதை எனலாம்.
புனைவுகள் கலக்காத கதைகள் சாத்தியமா
என்றால் இல்லை என்பதே பதில். இந்தக் கதைகளிலே வருகின்ற
கதை மாந்தர்கள் கற்பனை. ஆனால் கதையிலேயே வருகின்ற விஷயம் – உட்கருத்து - நிச்சயமான உண்மை. அது மற்றவர்களுக்கு விளங்காத உண்மையாக
இருக்கின்ற பொழுது அதை விளங்க வைப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒரு ஊடகம்தான் இந்தப்
புனைகதைகள்.
அண்மையில் உலகையே ஆட்டம் காண வைத்த கொரோனா
பெருந்தொற்று பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு மூல காரணமாக இருந்த
கிருமி வைரஸ். இந்த வைரஸ் ஒரு உயிரியா? அல்லது சடப்பொருளா? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது அது சடப்பொருள்தான் என்று விளங்க வைத்து
மற்றும் அது எப்படி தன்னை விருத்தி செய்து கொள்கின்றது என்பதையும் 'வைரஸ் புராணம்' என்ற புனைவு சொல்லிச்
செல்கிறது.
ஒவ்வொரு கதையையும் அக்கு வேறு ஆணிவேறாக
பிரித்து மேய்கின்ற எண்ணம் எனக்கு இல்லை. பொதுவாக இந்தக் கதைகள் சொல்லும் விஷயம்
என்ன, அதை சொல்லுகின்ற விதத்திலே ஆசி கந்தராஜா எப்படி மற்ற
எழுத்தாளர்களை விட வேறுபட்டு நிற்கின்றார் என்பதை புடம் போட்டுக் காட்டுவதே
என்னுடைய எண்ணம்.
ஆசி கந்தராஜா அவர்கள் அடிப்படையில் ஒரு
விவசாயப் பேராசிரியர். அவர்சார் துறையில் விஞ்ஞானி. ஆனால் புத்தகத்தின் முன்னுரையிலே குறிப்பிட்ட அவருடைய பன்முக ஆளுமைகள் உங்களை வியக்க வைக்கும். பொதுவாக இவருடைய ஏனைய கதைகளிலே காணக்கிடைக்கின்ற, எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் மக்களின் வாழ்க்கை முறைகள் அவர்களுடைய
எண்ணப்பாடுகள் அதற்கு பின்னாலே இருக்கின்ற வரலாற்று நுணுக்கங்கள் என்பன இவ்வறிவியல் புனை கதைகளிலும் இடைக்கிடை ஊடு பாய்ந்து உங்களை உற்சாகப்படுத்துகின்றன.
அஜினமோட்டோ என்ற ஒரு செயற்கைப் பதார்த்தத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதை ருசிக்காக கறிகளிலே சேர்த்துமிருப்போம். ஆனால் தக்காளியில் அது உண்டு
என்று எத்தனை பேருக்குத் தெரியும் ஆசியின் 'அஜினமோட்டோ' கதையை வாசிக்கும்வரை?
அதேபோல,G கள்ளிலே என்ன போஷணைப் பதார்த்தங்கள் மற்றும் விற்றமின்கள்
இருக்கிறன. அத்துடன் பதநீரை எப்படி எடுப்பது என்று 'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' என்ற தலைப்பில் ஒரு பாடம்
எடுத்தவர் எதிலீன் என்னும் ஹோமோன் வாயு பழங்கள் பழுப்பதிலே செய்யிற விளையாட்டால்
ஒரு அப்பாவி அம்மான் (வேலுப்பிள்ளை) செத்த கதை என்று 'காய்களை கனியவைக்க...'வில் இன்னொரு பாடம்
எடுத்துவிட்டு Gout எனப்படுகின்ற வியாதியின் தாத்பரியத்தை எடுத்துச் சொல்வதற்கு
'வெடுக்குப்பத்தனை' உதாரணமாக்கி அப்புறம்
குறட்டை விடுபவர்களுக்கு வருகின்ற விளைவுகளை சொல்வதற்கு 'சிலீப் அப்னியா'வில் ஒரு பயப்பிராந்தியை
ஏற்படுத்திவிட்டு, பூக்கள் காய்களாகி
கனிகளாக வேண்டும் என்றால் மகரந்த சேர்க்கை நடைபெற
வேண்டும். இயற்கையாக அது நடைபெறாவிட்டால் 'பூக்களே காதல் செய்யுங்கள்' என்று ஒன்றையொன்று தழுவச் செய்யுங்களென கூறிவிட்டு இறுதியாக 'சைவமுட்டை' என்று வருகின்ற பொழுது
சேவல் மிதிக்காத பேடு பெற்றெடுத்த 'பிள்ளை' தான் சைவமுட்டை என்று முடிக்கின்றார்.
இதிலே சிறிய ஒரு முரண் எனக்கு இருக்கின்றது.
சேவல் சேராத பேடிட்ட முட்டையென்றாலும் அதனுள்ளே கருக்கட்டாத கலம் (ovum) ஒன்று நிச்சயமாக உண்டு அந்த கலம் (ovum) உயிர் உள்ளதுதானே. எனவே
இது உண்மையில் சைவமுட்டை தானா என்பது ஒரு கேள்வி. (கூகிளாண்டவர் இரண்டு
விதமாகவும் – கருக்கட்டக் காத்திருக்கும் கலத்திற்கும் (ovum) உயிருண்டு என்றும் இல்லை, கருக்கட்டிய
கலத்திற்குத்தான் (முளையம்) உயிருண்டு என்று மறுதலித்தும் – சொல்கிறார்) எது எப்படியோ நகைச்சுவைக்காகவும் மேலெழுந்த வாரியாகவும் கருக்கட்டின
முட்டையையும் கருக்கட்டாத முட்டையையும் வேறுபடுத்துவதற்காகவும் இந்த சைவமுட்டை
என்ற பதத்தை ஆசிரியர் பயன்படுத்தியிருக்ககூடும் என்பது என்னுடைய எண்ணம்.
மற்றப்படி கைக்கடக்கமான அழகான இப்புத்தகத்தின்
அட்டைப்படமே படுஜோர். 'இது நான் இட்ட முட்டைதானா
அல்லது உண்மையில் சைவமுட்டைதானா அல்லது இரண்டுமே இல்லையென்றால் இதை உதைத்துப்
பந்தாடிவிடவா' என்று கால்பந்தாட்ட வீரன்
பாவனையில் ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு அந்தக் கோழி பார்க்கின்ற பார்வையே
அலாதியானது.
பொதுவாக ஒரு சிறுகதையோ அல்லது ஒரு நாவலோ, நாங்கள் வாசிக்கின்ற பொழுது அதன்
புனைவை அதன் கதை மாந்தர்களின் நடவடிக்கைகளை வியந்து பார்த்து ரசித்துக்
கொள்ளுவோம். அதன்பின் அப்பால் நகர்ந்துவிடுவோம். ஆனால் இந்த அறிவியல் புனைகதைகள்
அப்படியல்ல. எங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானவை என்ற விதத்தில்
எல்லோரும் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசித்து பயன்பெற வேண்டும் என்பது என்னுடைய
அவா. சந்தேகங்கள் வரும்போதெல்லாம்
மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டிய உசாத்துணை ஏடிது!
என்னைப் பொறுத்தவரை இது மாணவர்களுக்கு
மாத்திரம் அல்ல சகலருக்குமான ஒரு பாடப்புத்தகம். படித்துப் பயன் பெறுங்கள்.
சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். நகைச்சுவையை ரசித்து உண்மையை
உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
நிறைவாக, இந்தப்புத்தகத்தின் மொத்த அமைப்பையும்
பார்க்கின்ற பொழுது மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வடிவமைத்த
ஜீவநதி அச்சகத்தின் பரணீதரன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும்
வாழ்த்துகளும்!
No comments:
Post a Comment