Wednesday, 23 October 2024

ரொம்--ஜேசியும் கறுத்தக் கொழும்பானும்.

ஆசி கந்தராஜா



ரொம்--ஜேசி (Tom E JC) மாமர இனம், இலங்கையின் எல்லாவெல என்னும் இடத்தில், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து இனவிருத்தி செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ரொம் (Tom) என்பது இலங்கை நாட்டவரின் பெயர்ச் சுருக்கம். E, எல்லாவெல என்ற இடத்தைக் குறிப்பது. ஜேசி (JC) என்பது பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி Dr. Juan Carlos என்பவரின் முதல் எழுத்துக்கள்.

ரொம்--ஜேசி மாமரத்தை எப்படி இனவிருத்தி செய்தார்கள் என்பது வெளியில் சொல்லப்படவில்லை. அதை அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லவும் தேவையில்லை. அது அவர்களின் ஆய்வு இரகசியம்.

எனது அபிப்பிராயப்படி, இது அயல்மகரந்தச் சேர்க்கையின் மூலம் இனவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மரபணு மாற்றத்தினூடாகவோ அல்லது விகார முறைமூலமோ இனவிருத்தி நடைபெற்றதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு.

எனக்கு கிடைத்த தகவல்களின்படி, இது அவுஸ்திரேலியாவில் பெருமளவில் வளரும் Kensington Pride (Bowen) மாமரத்துடன் இலங்கை (கறுத்தக்கொழும்பானாக(?) இருக்கலாம்) அல்லது பிலிப்பீன் நாட்டு மாமரத்துடன் அயல் மகரந்தச் சேர்க்கை செய்ததன் மூலம் இனவிருத்தி செய்திருப்பதாகத் தெரியவருகிறது.


ரொம்-ஈ-ஜேசி


ரொம்-ஈ-ஜேசி மாம்பழத்தின் சிறப்பானஇயல்புகளாகப் பட்டியலிடப்படுபவை:

கவர்ச்சிகரமான, தங்கநிறமான தோல். மென்மையான, சுவையான, நார்த்தன்மை அற்ற சதை. அரைக்கிலோ(?) வரையான பழம். சிறிய விதை(?). விளைபொருட்கள் சந்தைக்கு வருவதற்கு நேரம் கொடுத்து பழங்கள் மெதுவாகப் பழுக்கும் இயல்பு. அதிக விளைச்சல்.

எனது அபிப்பிராயத்தின்படி, கறுத்தக் கொழும்பானின் மென்மையான. நார்த்தன்மையற்ற சதையின் அற்புதமான சுவைக்கு எதுவும் கிட்டநிற்காது என்பேன். தோல் கறுப்புத்தான். ஆனால் அதுதானே நமக்குப் பிடிச்ச கலரு!

இற்றைவரையில் இலங்கையிலே, எவரும் கறுத்தக் கொழும்பான் அல்லது மற்றைய லோக்கல் இனங்களை முறைப்படி கவ்வாத்துப் பண்ணி, அறிவியல் ரீதியாக வளர்த்ததாகவோ அல்லது அதுபற்றி ஆய்வு செய்ததாகவோ நான் அறியவில்லை. இந்நிலையில் இவ்வினங்கள் அதிகம் காய்க்காது எனச் சொல்வது நகைப்புக்கிடமானது.

ரொம்-ஈ-ஜேசி இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டு நல்லமுறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதுவே சிறந்தது என்ற விவாதத்தை என்னால் ஏற்கமுடியாதுள்ளது.

ரொம்-ஈ-ஜேசி மாமரத்தையும் நடுங்கள். அதேபோல கறுத்தக் கொழும்பான் போன்ற லோக்கல் இனங்களையும் கவ்வாத்துப் பண்ணி முறைப்படி வளருங்கள். பலன் கிடைக்கும்.

என்னதான் இருந்தாலும் கறுத்தக்கொழும்பான், வெள்ளைக்கொழும்பான், செம்பாட்டான், அம்பலவி போன்றவை எமது அடையாளமல்லவா.

கொசுறுச் செய்தி:

### அவுஸ்திரேலியாவில் பெரும் விளைச்சலைக் கொடுக்கும் Kensington Pride (Bowen), R2E2 என்பனவும் இலங்கை உலர்வலயச் சுவாத்தியத்துக்கு உகந்தது. நன்கு காய்க்கும் ###

No comments:

Post a Comment