Friday, 21 February 2025


ஜீவநதி, தை 2025ளுமைச் சிறப்பிதழ்.

கந்தராஜா - பரணீதரன் செவ்வி.


1.  உங்கள் பெற்றோர், பிறந்த ஊர், சகோதரர்கள், குடும்பம் பற்றி அறிந்து கொள்ளலாமா?

இலங்கையின் வட மாகாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடி என்ற கிராமத்தில், ஆ. சின்னத்தம்பி - முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு 25 ஜனவரி 1950 அன்று பிறந்தேன். எனது தந்தை ஆறுமுகம் சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒர் தமிழ் ஆசான். எனக்கு மூன்று மூத்த சகோதரிகள். கடைக்குட்டி நான். எமது முன்னோர்கள் விவசாயிகள். பெற்றோர், சகோதரிகள், நான் என எல்லோரும் கைதடியிலேயே மணம்முடித்தோம். இதனால் நாங்கள் எந்தவித கலப்புமற்ற தூய கைதடியார் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதுண்டு.

 

2. இலங்கையில் நீங்கள் கற்ற பாடசாலைகளைப் பற்றியும் உங்கள் திறமைகளை வெளிக்கொணரக் காரணமாக இருந்த ஆசிரியர்கள் பற்றியும் கூறுங்கள்?

ஆரம்பக் கல்வியை, கைதடியிலுள்ள பாடசாலைகளில், குறிப்பாக நான்கு ஆண்டுகள் கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாiலையில் கற்றேன். பின்னர் கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரியிலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் படித்தேன். கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாலையில் எனது தந்தையே எனது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அந்தவகையில் சிறுவயதுமுதல் எனக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் அவரே.

 

3.   பாடசாலைக் காலத்தில் உங்களிடம் கலை இலக்கிய உணர்வு ஏற்படக் காரணம்?

தமிழ் இலக்கிய சூழலிலேயே நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் எல்லாமே தமிழில்த்தான் நடந்தன. இதனால் தமிழ்மொழி எனக்கு இயல்பாகவே வாலாயப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் (1960களில்), தினகரன் பத்திரிகையில், திங்கள் முதல் வெள்ளிவரை சவாரித்தம்பர் என்னும், கேலிச் சித்திரம் தொடராக வெளிவந்தது. இதன் மறுவடிவம், வார மஞ்சரியில் சித்திர கானம் என்ற பெயரில் பிரசுரமானது. இவற்றை வரைந்தவர் சுந்தர் என அழைக்கப்பட்ட திரு சிவஞானசுந்தரம் அவர்கள். இவரது கேலிச் சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, பாறிமாமி, மைனர் மச்சான் ஆகிய அனைவரும், நாம் அன்றாடம் ஊரில் சந்திக்கும் பாமர மக்கள், சாதாரண மனிதர்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், இலங்கை அரசியல் மற்றும் சாதிவேறுபாடுகள், பிற்போக்குத் தனங்கள், மூடக் கொள்கைகளை, நகைச் சுவையாக இவர்கள் நையாண்டி செய்தார்கள். சுந்தரின் திறமையை ஊக்குவித்தவர் திரு கைலாசபதி அவர்கள்.அவர் அப்போது பேராசிரியரல்ல. பின்னரே பல்கலைக்கழகத்தில் இணைந்தார். கால ஓட்டத்தில் திரு கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும், கார்டுநிஸ்ட் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவருடன் அவரது கேலிச் சித்திரப் பாத்திரங்களும் வீரகேசரிக்கு வந்தன. இவரே பின்னர் சிரித்திரன் என்ற கேலிச் சித்திர சஞ்சிகையை யாழ்பாணத்தில் ஆரம்பித்து நடத்தியவர்.

அப்போது நான் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சவாரித்தம்பரை வாசிக்காமல் படுப்பதில்லை என்னும் அளவுக்கு அதில் ஊறிப்போயிருந்தேன். சவாரித்தம்பரை வாசிப்பதற்காகவே, நான் செய்தித் தாளுக்காக காத்திருந்த காலங்கள், இன்றும் என் நினைவில் சுழன்றடிக்கின்றன. ஐயா படிப்பித்த தமிழ் பாடசாலைக்கு காலை பத்து மணியளவில் அவர் வாங்கும் செய்தித்தாள் வரும். காத்திருந்து அதை நான்தான் வாங்குவேன்.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், இலவசமாக இலங்கைப் பாடசாலைகளில் 'பணிஸ்' கொடுத்தார்கள். இது தஹாநாயக்க கல்வி மந்திரியாக இருந்த காலத்தில், அமெரிக்க உதவியுடன் கொண்டுவரப்பட்ட இலவச உணவுத் திட்டம். இந்த 'பணிஸ்' இடைவேளையின் போது, செய்தித்தாளுடன் நண்பர்கள் புடைசூழ, வேப்ப மர நிழலில் அமர்வேன். அங்கு என்னுடைய சவாரித்தம்பர் ஓரங்க நாடகம், அமர்க்களமாக அரங்கேறும். அன்றைய செய்தித் தாளில் வந்த சவாரித்தம்பர் வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்துக் காட்டுவேன். அத்துடன் சவாரித்தம்பர் சாயலில், நான் சுயமாக எழுதி வைத்திருக்கும் கதை வசனங்களையும் அவ்வப்போது எடுத்து விடுவேன். நண்பர்களின் சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் பிடிக்கும். அவசரமாக 'ஒண்டுக்கு' இருந்துவிட்டு அந்த வழியால் வந்த அப்புத்துரை வாத்தியாரும் மாணவர்களுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தார். அடுத்த பத்து நிமிஷத்துக்குள் ஐயாவின் வகுப்பறைக்குள் போன அப்புத்துரை வாத்தியார்சின்னண்ணை, உன்ரை மகன் நல்ல 'புலுடா'க்காரனாய்தான் வரப்போறான். எட்டிப்பார், வேப்ப மரத்தடியிலை நடக்கிற சமாவை. இப்பவே கண்டிச்சுவை. பிறகு கவலைப் படாதை' என வத்திவைத்தார். ஐயா வகுப்பறையில் இருந்து எட்டிப் பார்க்கவும், 'பணிஸ்' இடைவேளை முடிந்து மணி அடிக்கவும் நேரம் சரியாய் இருந்தது. அப்போது எனக்கு பதினொரு வயது மட்டுமே. இந்த வயதில் மட்டுமல்ல எந்த வயதிலும் எழுத்து, நாடகம், இலக்கியம் என ஒரு மாணவன் ஆர்வம் கொள்வது, அபத்தம் என நினைத்த காலம். இவற்றில் ஈடுபாடு கொண்டவன் உருப்படமாட்டான் என வாத்திமாரும் பெற்றோரும் நம்பினார்கள்.

அன்று மாலை இரவுச் சாப்பாட்டின் பின்னர், நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுவரச் சொன்னார் ஐயா. பிரதிகளைக் கொடுத்த பின், அடி வாங்குவதற்கு ஆயத்தமாக பெருவிரலால் மறு உள்ளங்கையை, மாறிமாறி அழுத்தி மஸாஜ் செய்தபடி நின்றேன். எனது கையெழுத்துப் பிரதிகளை நிதானமாக வாசித்து முடித்தவர், சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தபடி நின்றார். பின்னர், 'நித்திரை வந்தால் போய்ப் படு தம்பி' என அனுப்பிவிட்டார். 'தம்பி' என ஐயா விளித்தது நான் தொடர்ந்து எழுதுவதற்கு அவர் தந்த அநுமதி என எடுத்துக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில், பதின்பருவ காலங்களில் எனது சிறுகதைகள் ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளில் வெளிவந்தன. எனது புனைவுகளில் இன்றும் அதிகம் காணப்படுவதாகச் சொல்லப்படும் நளினமும் நையாண்டியும், நான் சவாரித்தம்பரிடம் கற்றுக் கொண்டவையே.

கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும், குறிப்பாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் எனது ஆரம்பகால கலை இலக்கிய ஆர்வத்துக்கு நிறையவே தீனிபோட்ட கல்லூரிகள். 1965ம் ஆண்டு, கோப்பாய் கிறீஸ்தவ கல்லுரியில் நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் நடந்த ஒரு இலக்கியத் திருட்டையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். நாடளாவிய ரீதியில் கலை இலக்கிய அமைப்பு ஒன்று நடத்திய சிறுகதைப் போட்டிக்கு, நான் எழுதிய சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன். போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் சில காலங்களின் பின்னர், என்னுடைய கதை வேறு ஒரு எழுத்தாளரின் பெயரில், இந்தியாவில் இருந்து வெளிவரும் கலைமகளில் வெளிவந்திருந்தது. இதற்கு சாட்சியாக, என் பள்ளிக்கூட நன்பன் சுகுணசபேசன் இன்றும் லண்டனில் வாழ்கிறான். இந்த இலக்கியத் திருட்டுக்கு எதிராக, பதினைந்து வயது பள்ளி மாணவனான என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எமக்கு தமிழ் இலக்கியம் கற்பித்த ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். 'ஐந்து சதத்துக்கும் பெறுமதி இல்லாத, இந்த வேலையை விட்டிட்டு பத்தாம் வகுப்பு சோதினை வருகுது, படி' என்றார். இருந்தாலும், 'கலைமகளில் வெளிவருமளவுக்கு எனது கதை தகுதி பெற்றுள்ளது' என, எனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டு, பத்தாம் வகுப்பு இறுதிச் சோதனைக்கு படிக்க ஆரம்பித்தேன்.

 

4. மகாஜனாக்கல்லூரியில் கற்ற காலத்தில் நீங்கள் நடித்த நாடகங்கள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

சிறுவயதிலேயே தமிழை ஒழுங்காக உச்சரிக்கவும் வசனங்களை ஒழுங்காகப் பண்பேற்றத்துடன் ஏற்றி இறக்கிப் பேசக்கூடியவனாகவும் இருந்த காரணத்தால் பாடசாலை, மாவட்ட, மாகாண பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றேன். இதனால் இயல்பாகவே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன. நான் முதன் முதலில் வேஷம் கட்டியது கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் ஒரு பெண்ணாக. எழுத்தாளர் ஆசிரியர் நாவேந்தன் எழுதி இயக்கிய நாடகம் அது.

கலை இலைக்கிய ஆர்வமும் திறமையும் கொண்ட என்னை மகாஜனக் கல்லூரி மேலும் பட்டைதீட்டியது. கல்லூரிக்கு வந்து சேர்ந்த முதலாவது வருடமே ஆசிரியர் கவிஞர் செ கதிரேசம்பிள்ளை, அகில இலங்கை கலைக்கழக நாடகப் போட்டியில் (1967) முதல் பரிசுபெற்ற 'அம்பையின் வஞ்சினம்' நாடகத்தில், முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்வாங்கிக்கொண்டார். இந்தவகையில் 1968 கலைக்கழக நாடகமான 'கோமகளும் குருமகளும்' நாடகத்திலும் எனது நடிப்பு வெளிப்பட்டது. இந்திய நாடக ஜாம்பவான்களான ஒளவை சண்முகம், ரி.கே. பகவதி ஆகியோர் யாழ்பாணம் வந்தபோது, அவர்கள் முன்னிலையில், 'அம்பையின் வஞ்சினம்'  நாடகம் 1967ல் யாழ்ப்பாண நகரசபையின் திறந்த கலையரங்கில் மேடையேறியது. அவர்களால் இந்த நாடகம் நயந்துரைக்கப்பட்டதுடன் எனது நடிப்புப்பற்றியும் மேடையில் சொல்லப்பட்டது. மகாஜனாக் கல்லூரியின் வைரவிழா, 1970ல் வந்தது. இவ்விழாவில் 3 மணித்தியால சமூக நாடகமான 'ஏன் இந்த நடிப்பு' இரண்டு முறை அரங்கு நிறைந்த நாடகமாக அரங்கேற்றப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது. இதில் நான் முக்கிய பாத்திரமேற்றேன். வருடந்தோறும் நடைபெற்ற இலங்களுக்கிடையேயான நாடகப் போட்டியிலும் எனது பாரிய பங்களிப்பு இருந்தது. பெற்றோர் தினவிழா 1968ல் மேடையேறிய 'கிளாக்கர்' என்னும் நகைச்சுவை நாடகம், மகாஜனாவில் நீண்டகாலம் பேசுபொருளாகி 3 முறை மேடையேறியது. நான் எழுதி, முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்த நாடகம் அரங்கு குலுங்கச் சிரித்த, நீண்டகாலம் நினைவில் நின்ற நாடகமாகும்.

 

5. உங்கள் பல்கலைக்கழகக் கல்வி பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

நான் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்ஷை எழுதிய காலத்திலேதான் இலங்கையில் சேகுவேரா கிழர்ச்சி நடந்தது. இதனால் பல்கலைக்கழக அனுமதி தொடக்கம் எல்லாமே காலதாமதமாகியது. அந்த இடைப்பட்ட காலத்தில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் (கிழக்கு ஜேர்மனி) கல்விகற்பதற்கான புலமைப்பரிசில் பெறுவதற்கு, இலங்கை கல்வி இலாகா மூலம் விண்ணப்பித்திருந்தேன். இலங்கையில் இளமானிக் கல்வி ஆரம்பித்த காலத்தில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் கல்விகற்பதற்கு  எனக்கு ஸ்கொலஷிப் கிடைத்தது. இதனால் எனது இளமானி, முதுமானி பட்டப்படிப்புக்களை கிழக்கு ஜேர்மனியிலும் டாக்டர் பட்டத்துக்கான ஆராச்சிப் படிப்பை ஜேர்மன் சமஷ்டிக்குடியரசு என்று சொல்லப்பட்ட மேற்கு ஜேர்மனியிலும் ஸ்கொலஷிப் பெற்று, மேற்குபேர்ளினில் மேற்கொண்டேன். இக்காலத்தில் எனக்கு கிடைதடைத்த அனுபவங்களை வைத்தே 'அகதியின் போளின் வாசல்' என்னும் நாவலை எழுதினேன்.  எனது கல்வி, ஆராச்சி, ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ஜேர்மன் மொழியிலேயே அமைந்தன. இந்தவகையில் மொத்தம் 13 ஆண்டுகள் ஜேர்மன் அரச ஸ்கொலஷிப் பெற்ற வெகுசிலரில் நானும் ஒருவன். இதன்பின்னர் டாக்டர் பட்டப் பின் பயிற்சியை யப்பான் சுக்குபா பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டேன். இவையெல்லாம் தானாக எனக்கு ஆகாயத்திலிருந்து வீழ்ந்தவையல்ல. எனது கடின உழைப்பால் பெற்றுக்கொண்டவை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.  

 

6.      எப்போது, ஏன் புலம்பெயர்ந்து சென்றீர்கள்?

1974ம் ஆண்டு ஜேர்மன் ஸ்கொலஷிப் பெற்று ஜேர்மனிக்கு கல்விகற்கச்சென்றேன். பின்னர் 1987ம் ஆண்டு திறமைசாலிகளுக்கான குடிவரவாளனக ஆஸ்திரேலியா புலம்பெயர்ந்தேன்.

 

7.      புலம்பெயர் வாழ்வு பற்றிச் சொல்லுங்கள்.

நான் ஜேர்மனிக்குச் சென்ற எழுபதாம் ஆண்டுகளின் காலப்பகுதியில் அங்கு தமிழர்கள் குறைவு. கிழக்கு ஜேர்மனியில், மேற்குஜேர்மனியிலும் மிகக் குறைவு. எனது பல்கலைக்கழகத்தில் நான் ஒருவன்தான் தமிழன். ஒருசில சிங்கள மாணவர்கள் இருந்தார்கள். எனக்குச் சிங்களம் தெரியாததால் நாம் ஜேர்மன் மொழியில் பேசிக்கொள்வோம். ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஆங்கிலம் செல்லாக்காசு. ஆங்கிலப் பத்திரிகைகள் புத்தகங்கள் குறைவு. இப்போதைய இணையத் தொடர்புகள், வற்சப், ஈமெயில் என்பன இல்லை. இதனால் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் நான் தமிழில் எதையும் எழுதவில்லை. ஆனால் நிறைய ஜேர்மன் மொழியில் வாசித்தேன். ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய ஆராச்சிக் கட்டுரைகள் எழுதினேன். ஜேர்மன் மொழியில் உயர் கல்வி கற்றதால், அந்த மொழி தமிழ்மொழிபோல என்னுள் வசப்பட்டது. கல்வியும் ஆராச்சிக் கட்டுரைகளும் என்னை நல்ல நிலைக்கு உயர்த்திவைத்ததுடன் பொருளாதார வலுவையும் சேர்த்தது. ஒரு விஷயம் எப்படி சொல்லப்படவேண்டும், எப்படி சம்பவங்களை கோர்வைப் படுத்தவேண்டும் என்ற நுணுக்கங்களை, நான் எழுதிய ஆராச்சிக் கட்டுரைகள் படிப்படியாகக் கற்றுத் தந்தன. அதேவேளை நான் வாசித்த பிற மொழி இலக்கியங்கள், என்னை புதிய தளத்துக்கு கொண்டு சென்றன. ஜேர்மன் வாழ்க்கையை நிறைவு செய்து கொண்டு, 1987ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்னர், படிப்படியாக தமிழில் எழுத ஆரம்பித்தேன். எனது சிறுகதைகள் காலச்சுவடு, இந்தியா ருடே, குமுதம் (முத்திரைக் கதை), விகடன், கல்கி (தீபாவளிமலர்), அம்ருத்தா, ழுகரம், தீராநதி, கணையாழி, வீரகேசரி, தினக்குரல், ஜீவநதி, ஞானம், மல்லிகை, மலேசிய நண்பன், தமிழ் முரசு (சிங்கப்பூர்) ஆகிய தமிழ் பேசும் உலகத்து சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.


8.      உங்களின் முதல் நூல் எது? வெளியிட்ட பதிப்பகம்?

1990ம் ஆண்டு, முதுபெரும் எழுத்தாளர் 'எஸ்பொ'வை நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தது எனது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். எஸ்பொவின் எழுத்துக்களை இலங்கையில் நான் வாழ்ந்த காலங்களிலில் வாசித்திருக்கிறேன். கீழ்சாதி எழுத்தாளன், காமசூத்திர எழுத்தாளன், குதர்க்கவாதி என்று நான் வளர்ந்த சூழலில் அவர் முத்திரை குத்தப்பட்டிருந்தார். இதனால் அவரது சடங்கு நாவல் உட்பட அவரது படைப்புக்கள் பலவற்றை நான் ஒளித்து வைத்தே வாசிக்க நேர்ந்தது. அவரது சடங்கு நாவலை, பாடப் புத்தகங்களுடன் வைத்திருந்தமைக்காக பாடசாலை அதிபரால் நான் தண்டிக்கப் பட்டதுமுண்டு. எஸ்பொ ஆஸ்திரேலியாவில் இருந்த காலங்களில் எனது பல்கலைக்கழக பணிகளுக்கு மத்தியிலும், வாராவாரம் அவரைச் சந்திப்பதை வழமையாக்கிக் கொண்டேன். தமிழ் மொழி, இலக்கியம், அரசியல், சமூகம் என, பலதையும் சலிக்காது பேசுவார். எழுத்து நுணுக்கங்களையும், சொல் ஆழுமையையும் முறைப்படி எனக்குச் சொல்லித் தந்தவர் எஸ்பொ அவர்களே. அவரை சரியான முறையில் அணுகினால் அவரிடம் நிறையவே கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு நான் ஒரு சாட்சி. எஸ்பொவே, எனது சிறந்த பத்து சிறுகதைகளை தெரிவு செய்து, ஒரு சிறுகதை தொகுப்பாக வெளிக் கொணர வேண்டுமென்ற யோசனையை முன் மொழிந்தவர். பணப் பிரச்சனை எனக்கு இல்லாத காரணத்தால், உடனடியாக எனது முதலாவது நூல், சென்னையிலிருந்த எஸ்பொவின் மித்ர பதிபகத்தினூடாக 'பாவனை பேசலன்றி' என்ற பெயரில், நவம்பர் மாதம் இரண்டாயிரமாம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலின் வெளியீடு முதலில் சென்னையிலும் பின்னர் சிட்னி, கொழும்பிலும் நடந்தன. சென்னையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் நடந்த முதலாவது வெளியீட்டு விழாவில், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வாசந்தி, செயப்பிரகாசம், எஸ்பொ, ஓவியர் மருது, கவிஞர் யுகபாரதி, கலைப்புலி தானு, வீ ரி கே பாலன், இளம்பிறை ரஃமான் என பலர் நூலை வாழ்த்தியும், சிலாகித்தும், விமர்சித்தும் பேசினார்கள். கொழும்பில் இராமகிருஸ்ண மிஷனில் நடந்த வெளியீட்டு விழாவை, தினக்குரல் வாரமஞ்சரியின் அப்போதைய ஆசிரியர் பாரதி இராசநாயகம் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார். சிட்னியில் நடந்த அறிமுக விழா ஒரு 'சாமத்தியச் சடங்கு' போன்றது. இலக்கியத்தில் ஆர்வமில்லாதவர்களும் எனக்காக வந்து மண்டபத்தை நிரப்பினார்கள்.


9.      உங்களது கதைகள் மூலம் எதனைச் சொல்ல வருகின்றீர்கள் ?

நவீன இலக்கியத்தில் எனது எழுத்துக்கள் சிறுகதை, அறிவியல்சிறுகதை, குறுநாவல், நாவல், புனைவுக்கட்டுரைகள், நனைவிடை தேய்தல் என்று பலவகையில் விரிந்துள்ளன. பல்கலைக்கழக பணி நிமிர்த்தம் பயணித்த நாடுகளில் நான் கண்ட வாழ்வின் தரிசனங்களே எனது ஆக்கங்கள். கதைகளின் கருக்கள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால்தான் யதார்த்தமெது, கற்பனையெது என்று பிரித்தறிய முடியாத சேர்மானமாக அவை இருக்கின்றன.

கதை எழுதுபவனுக்கு, கவனிப்பு முக்கியம். தொழில் காரணமாகவோ என்னவோ, விருப்பு வெறுப்பின்றி நான் எல்லாவற்றையும் கவனிப்பேன். கவனித்தவற்றுள், மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என நான் நினைப்பவை, கதைகளாகின்றன. பொருத்தம் கருதி, எனது தரிசனங்கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்த்தும் கதைகளை எழுதியுள்ளேன். மற்றவர்களுக்குப் புரியாத வகையில், கடினமான மொழிநடையைப் பாவித்துக் கதை எழுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு சிறுகதை இறுதிவரை வாசகரை வாசிக்கத் தூண்டவேண்டும். சிறிது காலமாவது நினைவில் நிற்க வேண்டும். வாசிப்பை இடையில் நிறுத்திவிட்டால் அது, அந்த எழுத்தின் தோல்வி. படைப்பாளி ஒருபோதும் தீர்ப்புச் சொல்லக்கூடாது என நம்புவன் நான். அது படைப்பாளியின் வேலையும் இல்லை. தீர்ப்பைச் சொல்ல வேண்டியவர்கள் வாசகர்களே. அதனால், எனது கதைகளின் முடிவில், தீர்வு என எதுவும் இருக்காது. எனது ஆக்கங்கள் எதையும் நான் ஒரேமுறையில் எழுதியது கிடையாது. அவை திரும்பத் திரும்ப எழுதப்பட்டவை. அவற்றில் உண்மை கலந்த, நம்பகத் தன்மை உள்ளதா எனப் பார்க்கப்பட்டவை. ஏற்ற சொற்களைப் பாவித்து, முடிந்தவரை எளிமையான உரை நடையில் விபரிக்கப்பட்டவை.

 

10. உங்கள் நூல்கள் பற்றியும் அவற்றுக்கு கிடைத்த விருதுகள் பற்றியும் அறியலாமா?

'பாவனை பேசலன்றி' என்னும் எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை மித்ர பதிப்பகம் வெளியிட்டது. இந்த நூலுக்கு 2001ம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுதிக்கான இலங்கை அரசின் சாகித்திய விருதும், ரூபா ஒரு லட்சமும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 14 நூல்கள் வெளிவந்துள்ளன. ஒரு சில நூல்கள் விரைவில் வெளிவர பதிப்பகத்தில் காத்திருக்கின்றன. எனது நூல்களுக்கு, உயரிய விருதுகளான தமிழக அரசின் மதுரை தமிழ்ச்சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இலங்கை அரசின் சில சாகித்திய விருதுகள், பணமுடிப்புகள் போன்றவை கிடைத்துள்ளன. இவற்றை நான் தகுதிகளாகக் கருதவில்லை. ஆனால் அவை எனக்கு ஊக்கம் தருவன.


11.  உங்களது நாவல் பற்றிச் சொல்லுங்கள்.

1949 தொடக்கம் 1990 வரை சோவியத்தின் கண்காணிப்பின் கீழே, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் கிழக்குஜேர்மனியும் அமெரிக்கா, பிரான்ஸ், பெரியபிரித்தானியா, ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழே, மேற்குஜேர்மனி என அழைக்கப்பட்ட பிரதேசம் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசாகவும் பிளவுபட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில், 1974 முதல் 1980 வரை, கிழக்கிலும் பின்னர் தொடர்ந்து 1986 இறுதிவரை மேற்கிலும் வாழ்ந்திருக்கிறேன்.

சோவியத்தின் செல்வாக்கின் கீழிருந்த கிழக்குஜேர்மனியின் பொருளாதாரத்தில், மேற்குஜேர்மனி புகுந்து விளையாடி நெருக்கடி கொடுக்க, வந்திறங்கும் அகதிகள் மூலம் மேற்குஜெர்மனிக்குத் தொல்லை கொடுத்தது கிழக்குஜேர்மனி. இதற்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்பும், பேர்ளின் நகரம் குறித்த பொட்ஸ்டம் உடன்படிக்கை விதிகளும், வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தன. மேற்குபேர்ளின் நகரம் கிழக்குஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்குஜேர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டதால், மேற்குபேர்ளினுக்குள் வந்து சேர்ந்துவிட்டால், மேற்குஜேர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்துக் கோருதல் சாத்தியமாக அமைந்துவிடும். பின்னர் அங்கிருந்து வேறு பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், தரை எல்லையை கடந்து சென்றடைதல் அப்போது சாத்தியமாக இருந்தது. 1980ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த ஐரோப்பிய நாடுகளின் குடிவரவு விதிகளில், தற்போது புகுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் இருக்கவில்லை. எனவே அகதிகள் பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, டென்மார்க் நோர்வே என்றும், பின்னர் அங்கு தமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்டு பிரித்தானியா, கனடா என ஆங்கிலம் பயிலும் நாடுகளுக்குப் பெயர்தல் சாத்தியமாயிற்று. பிளவுபட்ட ஜேர்மனிகள் 1990ம் ஆண்டு இணையும்வரை பூமிப்பந்தெங்கும் தமிழன் புலம்பெயர்வதற்கு நுழைவாயிலாக அமைந்தது கிழக்குபேர்ளினும், அதனுடன் இணைந்த மேற்குபேர்ளினின் பூகோள அமைப்புமே என்பது இதுவரை பதிவு செய்யப்படாத உண்மையாக உள்ளது. கிழக்குபேர்ளின் விமான இறங்குதுறையைப் பாவித்து மேற்குபேர்ளினூடாக பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு, பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்போ அல்லது தங்கள் நுழைவுக்கு வசதி செய்த பொட்ஸ்டம் உடன்படிக்கை பற்றியோ, இன்றுவரை தெரியாதிருக்கலாம். இந்த வரலாற்றுத் தகவல்கள் தமிழ்மொழியில் பதியப்படாதவை. இதனை மனங்கொண்டே இவ்வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. நாவலில் வரும் பல சம்பவங்களுக்கு நான் நேரடி சாட்சியாக இருந்துள்ளேன்.

 

12.  ஈழத்தில் அறிவியல் சார்ந்த சிறுகதைகளை எழுதுபவர்கள் மிகச் சிலரே அவற்றுள் குறிப்பிடக்கூடிய எழுத்தாளராக விளங்குபவர் நீங்கள் என்ற வகையில் அறிவியல் கதைகளை எழுதும் போது நீங்கள் கவனத்தில கொள்பவை எவை?

அறிவியலைப் பின்புலமாக வைத்து, கற்பனை கலந்து ஆக்கப்படும் படைப்புக்களே அறிவியல் புனைவு என்பது பொதுவான கருத்து. காலப்பயணம், எதிர்காலக் கோட்பாடுகள், கண்டுபிடிக்கப்படக்கூடிய தொழில் நுட்பங்கள், வேற்றுக்கிரக வாசிகளின் தகவல்கள், ஊழிக்காலப் பேரழிவு என்பனவே பெரும்பான்மையான அறிவியல் புனைகதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன. இங்கு, இவைகுறித்த அச்சமும் இவற்றினால் ஏற்படும் தாக்கங்களும் தீங்குகளுமே அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், எனது அறிவியல் புனைகதைகள் இவற்றிலிருந்து மாறுபட்டவை. இவை சமுதாயத்துக்குத் தேவையான அறிவியல் விஷயங்களை பாமர மொழியில் நேரடியாகச் சொல்வன. இவ்வாறு இருக்கலாம் என்ற ஊகத்தில் எழுதப்படாதவை, எளிமையான நேரடி மொழியில் வாசகர்களுக்குச் சொல்லப்படுபவை.

எனது கறுத்தக்கொழும்பான், செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய், மண்ணளக்கும் சொல் போன்ற புனைவுக்கட்டுரைத் தொகுப்புக்கள் வேளாண் அறிவியலையும் சமகால வாழ்க்கையையும் வெவ்வேறு வகைகளில் தொடர்புபடுத்தி எழுதப்பட்டவை. இவை தமிழுக்குப் புதுவரவு. இவை தமிழிலில் இதுவரை பதிவு செய்யப்படாத தாவரஉலகமொன்றிற்கான திறப்பாக அமைந்தவை எனச் சொல்லப்படுகின்றன.

 

13. பேராசிரியராக விளங்கும் நீங்கள்  பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் செய்திருக்கின்றீர்கள். அந்தவகையில் இலங்கைக் கல்வி முறை பற்றி உங்கள் கருத்து?

சோஷலிசத்தைப் பின்பற்றிய கிழக்கு ஜேர்மனியிலும் முதலாளித்துவக் கொள்கைகளைக் கடைப்பிடித்த மேற்கு ஜேர்மனியிலும் நான் 13 வருடங்கள் படித்தவன் பணிபுரிந்தவன். இதன் பின்னர் ஜப்பானில் தொழில் பயிற்சி பெற்றவன். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களிலும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்திலும் பேராசானாக இருந்தவன். நான்கு வருடங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட்சபை அங்கீகாரம்பெற்ற வருகைதரு பேராசிரியனாக நியமிக்கப்பட்டவன். அவ்வப்போது தேவைகருதி யாழ்ப்பாணப் பல்கலைகககழகத்தில் விரிவுரை நிகழ்த்துபவன்.

ஆஸ்திரேலிய அரசசார்பிலும் ஆய்வுமையங்கள், நிறுவனங்கள் சார்பிலும் கென்யா, யுகண்டா, தன்சானியா, எதியோப்பியா, தென்ஆபிரிக்கா, சீனா, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், வியட்நாம், தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுரை நிகழ்த்தவும் தொழில் பயிற்சி அளிக்கவும் சென்றிருக்கிறேன். இந்த அனுபவங்களிலிருந்து நான் சொல்வது என்னவென்றால், அரைத்த மாவையே வருடாவருடம் மீண்டும்மீண்டும் அரைக்காமல், வாழ்க்கைமுறைக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ற வகையில் இலங்கையில் கல்விமுறைகளும் பாடத்திட்டங்களும் அமையவேண்டும். இத்தகைய மாற்றங்கள் இலங்கையில் தற்போது படிப்படியாகத் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

 

14. நீண்ட காலமாக அவுஸ்திரேலியாவில் வானொலி ஒலிபரப்பாளராக உள்ளீர்கள். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

இதுபற்றி சௌந்தரி கணேசன் அவர்கள், இவ்விதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

 

15. இந்தியாவில் உங்களது நூல்கள் சில பதிப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அங்கு உங்களது நூல்களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?


இந்தியாவில் மித்ர பதிப்பகத்திலும் காலச்சுவடு பதிப்பகத்திலும் எனது நூல்கள்
பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இலங்கையில் ஞானம்பண்ணை, கொடகே, எங்கடபுத்தகங்கள், ஜீவநதி ஆகிய பதிப்பகங்கள் மூலம் எனது புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் பதிப்பிக்கபடும் புத்தகங்கள் கிண்டிள், அமெசோன் போன்ற இணையத்தளங்கள் மூலமும் விற்பனையாகும். காலச்சுவடு பதிப்பிக்கும் புத்தகங்களுக்கு நாம் பணம் கொடுக்கத்தேவையில்லை. தகுதியான நூல்களை அவர்களே தங்கள் செலவில் பதிப்பித்து வினியோகித்து, விற்பனையாகும் நூல்களுக்கு ஒழுங்காக புத்தக ராயல்டி பணம் தருவார்கள். எழுத்தாளரக்குத் தேவையான நூல்களை 40 வீத கழிவு விலையில் வாங்கிக்கொள்ளலாம். இது இந்தியாவிலுள்ள எல்லாப் பதிப்பகங்களும் பின்பற்றும் நடைமுறையல்ல.

 

16.  உங்களுடைய Master piece?

பலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் எனக்கு முழுத்திருப்திதந்த ஆக்கம் ஜூலாய் 2020 காலச்சுவடு இதழில் வந்த 'நரசிம்மம்' என்ற எனது சிறுகதை.

 

17. இன்னும் எழுத வேண்டும் என நினைத்து எழுதப்படாமல் ஏதாவது வைத்திருக்கின்றீர்களா?

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளான அபொறிஜினி மக்களை, கதை மாந்தர்களாகக் கொண்ட ஒரு நாவல் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளிவரும்.

 

18.  நிறைவாகச் சொல்ல விரும்புவது?

இளமைப் பருவத்திலே தமிழ் உணர்வையும் இலக்கிய தாகத்தையும் ஊட்டி இன்று என்னைத் தமிழ் ஊழியக்காரனாக வளர ஊக்கம் தந்தவர் எனது தந்தை ஆ சின்னத்தம்பி வாத்தியார். அவர் எனது பதின்பருவ காலத்தில் மறைந்தார். பொருள் சோக்காவிட்டாலும் நல்ல மனிதர் என்ற பெயருடன் வாழ்ந்தவர்.

எனது நூல்கள் தற்போது பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது எனது கணிப்பு. அவற்றுக்கு விருதுகளும் கிடைத்துள்ளன. இருந்தாலும் எனக்குள் இன்றுவரை ஒரு நெருடல். தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, நேர்மையான தமிழ் ஆசிரியராக வாழ்ந்த எனது தந்தை, எனது நூல்களை வாசிக்க உயிருடன் இல்லை என்பதே. அவரின் நினைவாகவே, அவரின் முதல் ஏழுத்துக்களான '' 'சி' என்ற இரண்டு எழுத்துக்களை முன் நிறுத்தி, அவரின் ஆசி வேண்டி, 'ஆசி கந்தராஜா' என்ற பெயரில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எனது சிறப்பிதழை, எனது 75வது அகவையில் (25. 01. 1950) ஜீவநதி பதிப்பகம் வெளிக்கொணர்வதையிட்டு மகிழ்ச்சி. அதற்கு ஜீவநதி ஆசிரியரும் பணிப்பாளருமான திரு பரணீதரனுக்கு எனது நன்றிகள். இவரின் தந்தையார் முனைவர் த. கலாமணி அவர்கள் எனது நல்ல நண்பர். திறமைசாலி, கலைஞர், அறிவாளி, கல்வியாளர். ஆஸ்திரேலியா வூலொன்கொங் பல்கலைக் கழகத்துக்கு முதுமானிப் பட்ட ஆராச்சிக்கு ஸ்கொலஷிப் பெற்று வந்தவர். அவரது புத்திக்கூர்மை காரணமாக டாக்டர் பட்ட ஆராச்சிக்கு தரமுயர்த்தப்பட்டு முனைவரானவர். அவர் விரும்பியிருந்தால் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் தங்கி வாழ்ந்திருக்கலாம். மண்பற்றுக் காரணமாக இலங்கை திரும்பினார். பரணீதரன் அப்பொழுது சிறு பையன். சிட்னியில் ஆரம்ப பாடசாலைக்கு புத்தகப் பையுடன் போன பரணீதரனை எனக்குத் தெரியும். அவரது இன்றைய அயராத உழைப்பும் அசுர வளர்க்சியும் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. கலாமணி எப்பொழுதும் தனது தந்தையார் திரு தம்பியையாவை முன்னிறுத்தி வாழ்ந்தவர். அதேபோல பரணீதரனும் இப்பொழுது தனது தந்தைக்கு பெருமைசேர்த்து வாழ்பவர். வாழ்த்துகள் பரணீ. தொடரட்டும் உங்கள் அயராத உழைப்பு. ஆசி கந்தராஜாவின் ஆசிகள்!

 

 

 

 


No comments:

Post a Comment