Friday, 21 February 2025


ஜீவநதி, தை 2025ளுமைச் சிறப்பிதழ்.

கந்தராஜா - பரணீதரன் செவ்வி.


1.  உங்கள் பெற்றோர், பிறந்த ஊர், சகோதரர்கள், குடும்பம் பற்றி அறிந்து கொள்ளலாமா?

இலங்கையின் வட மாகாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடி என்ற கிராமத்தில், ஆ. சின்னத்தம்பி - முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு 25 ஜனவரி 1950 அன்று பிறந்தேன். எனது தந்தை ஆறுமுகம் சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒர் தமிழ் ஆசான். எனக்கு மூன்று மூத்த சகோதரிகள். கடைக்குட்டி நான். எமது முன்னோர்கள் விவசாயிகள். பெற்றோர், சகோதரிகள், நான் என எல்லோரும் கைதடியிலேயே மணம்முடித்தோம். இதனால் நாங்கள் எந்தவித கலப்புமற்ற தூய கைதடியார் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதுண்டு.

 

2. இலங்கையில் நீங்கள் கற்ற பாடசாலைகளைப் பற்றியும் உங்கள் திறமைகளை வெளிக்கொணரக் காரணமாக இருந்த ஆசிரியர்கள் பற்றியும் கூறுங்கள்?

ஆரம்பக் கல்வியை, கைதடியிலுள்ள பாடசாலைகளில், குறிப்பாக நான்கு ஆண்டுகள் கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாiலையில் கற்றேன். பின்னர் கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரியிலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் படித்தேன். கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாலையில் எனது தந்தையே எனது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அந்தவகையில் சிறுவயதுமுதல் எனக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் அவரே.

 

3.   பாடசாலைக் காலத்தில் உங்களிடம் கலை இலக்கிய உணர்வு ஏற்படக் காரணம்?

தமிழ் இலக்கிய சூழலிலேயே நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் எல்லாமே தமிழில்த்தான் நடந்தன. இதனால் தமிழ்மொழி எனக்கு இயல்பாகவே வாலாயப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் (1960களில்), தினகரன் பத்திரிகையில், திங்கள் முதல் வெள்ளிவரை சவாரித்தம்பர் என்னும், கேலிச் சித்திரம் தொடராக வெளிவந்தது. இதன் மறுவடிவம், வார மஞ்சரியில் சித்திர கானம் என்ற பெயரில் பிரசுரமானது. இவற்றை வரைந்தவர் சுந்தர் என அழைக்கப்பட்ட திரு சிவஞானசுந்தரம் அவர்கள். இவரது கேலிச் சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, பாறிமாமி, மைனர் மச்சான் ஆகிய அனைவரும், நாம் அன்றாடம் ஊரில் சந்திக்கும் பாமர மக்கள், சாதாரண மனிதர்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், இலங்கை அரசியல் மற்றும் சாதிவேறுபாடுகள், பிற்போக்குத் தனங்கள், மூடக் கொள்கைகளை, நகைச் சுவையாக இவர்கள் நையாண்டி செய்தார்கள். சுந்தரின் திறமையை ஊக்குவித்தவர் திரு கைலாசபதி அவர்கள்.அவர் அப்போது பேராசிரியரல்ல. பின்னரே பல்கலைக்கழகத்தில் இணைந்தார். கால ஓட்டத்தில் திரு கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும், கார்டுநிஸ்ட் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவருடன் அவரது கேலிச் சித்திரப் பாத்திரங்களும் வீரகேசரிக்கு வந்தன. இவரே பின்னர் சிரித்திரன் என்ற கேலிச் சித்திர சஞ்சிகையை யாழ்பாணத்தில் ஆரம்பித்து நடத்தியவர்.

அப்போது நான் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சவாரித்தம்பரை வாசிக்காமல் படுப்பதில்லை என்னும் அளவுக்கு அதில் ஊறிப்போயிருந்தேன். சவாரித்தம்பரை வாசிப்பதற்காகவே, நான் செய்தித் தாளுக்காக காத்திருந்த காலங்கள், இன்றும் என் நினைவில் சுழன்றடிக்கின்றன. ஐயா படிப்பித்த தமிழ் பாடசாலைக்கு காலை பத்து மணியளவில் அவர் வாங்கும் செய்தித்தாள் வரும். காத்திருந்து அதை நான்தான் வாங்குவேன்.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், இலவசமாக இலங்கைப் பாடசாலைகளில் 'பணிஸ்' கொடுத்தார்கள். இது தஹாநாயக்க கல்வி மந்திரியாக இருந்த காலத்தில், அமெரிக்க உதவியுடன் கொண்டுவரப்பட்ட இலவச உணவுத் திட்டம். இந்த 'பணிஸ்' இடைவேளையின் போது, செய்தித்தாளுடன் நண்பர்கள் புடைசூழ, வேப்ப மர நிழலில் அமர்வேன். அங்கு என்னுடைய சவாரித்தம்பர் ஓரங்க நாடகம், அமர்க்களமாக அரங்கேறும். அன்றைய செய்தித் தாளில் வந்த சவாரித்தம்பர் வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்துக் காட்டுவேன். அத்துடன் சவாரித்தம்பர் சாயலில், நான் சுயமாக எழுதி வைத்திருக்கும் கதை வசனங்களையும் அவ்வப்போது எடுத்து விடுவேன். நண்பர்களின் சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் பிடிக்கும். அவசரமாக 'ஒண்டுக்கு' இருந்துவிட்டு அந்த வழியால் வந்த அப்புத்துரை வாத்தியாரும் மாணவர்களுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தார். அடுத்த பத்து நிமிஷத்துக்குள் ஐயாவின் வகுப்பறைக்குள் போன அப்புத்துரை வாத்தியார்சின்னண்ணை, உன்ரை மகன் நல்ல 'புலுடா'க்காரனாய்தான் வரப்போறான். எட்டிப்பார், வேப்ப மரத்தடியிலை நடக்கிற சமாவை. இப்பவே கண்டிச்சுவை. பிறகு கவலைப் படாதை' என வத்திவைத்தார். ஐயா வகுப்பறையில் இருந்து எட்டிப் பார்க்கவும், 'பணிஸ்' இடைவேளை முடிந்து மணி அடிக்கவும் நேரம் சரியாய் இருந்தது. அப்போது எனக்கு பதினொரு வயது மட்டுமே. இந்த வயதில் மட்டுமல்ல எந்த வயதிலும் எழுத்து, நாடகம், இலக்கியம் என ஒரு மாணவன் ஆர்வம் கொள்வது, அபத்தம் என நினைத்த காலம். இவற்றில் ஈடுபாடு கொண்டவன் உருப்படமாட்டான் என வாத்திமாரும் பெற்றோரும் நம்பினார்கள்.

அன்று மாலை இரவுச் சாப்பாட்டின் பின்னர், நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுவரச் சொன்னார் ஐயா. பிரதிகளைக் கொடுத்த பின், அடி வாங்குவதற்கு ஆயத்தமாக பெருவிரலால் மறு உள்ளங்கையை, மாறிமாறி அழுத்தி மஸாஜ் செய்தபடி நின்றேன். எனது கையெழுத்துப் பிரதிகளை நிதானமாக வாசித்து முடித்தவர், சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தபடி நின்றார். பின்னர், 'நித்திரை வந்தால் போய்ப் படு தம்பி' என அனுப்பிவிட்டார். 'தம்பி' என ஐயா விளித்தது நான் தொடர்ந்து எழுதுவதற்கு அவர் தந்த அநுமதி என எடுத்துக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில், பதின்பருவ காலங்களில் எனது சிறுகதைகள் ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளில் வெளிவந்தன. எனது புனைவுகளில் இன்றும் அதிகம் காணப்படுவதாகச் சொல்லப்படும் நளினமும் நையாண்டியும், நான் சவாரித்தம்பரிடம் கற்றுக் கொண்டவையே.

கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும், குறிப்பாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் எனது ஆரம்பகால கலை இலக்கிய ஆர்வத்துக்கு நிறையவே தீனிபோட்ட கல்லூரிகள். 1965ம் ஆண்டு, கோப்பாய் கிறீஸ்தவ கல்லுரியில் நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் நடந்த ஒரு இலக்கியத் திருட்டையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். நாடளாவிய ரீதியில் கலை இலக்கிய அமைப்பு ஒன்று நடத்திய சிறுகதைப் போட்டிக்கு, நான் எழுதிய சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன். போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் சில காலங்களின் பின்னர், என்னுடைய கதை வேறு ஒரு எழுத்தாளரின் பெயரில், இந்தியாவில் இருந்து வெளிவரும் கலைமகளில் வெளிவந்திருந்தது. இதற்கு சாட்சியாக, என் பள்ளிக்கூட நன்பன் சுகுணசபேசன் இன்றும் லண்டனில் வாழ்கிறான். இந்த இலக்கியத் திருட்டுக்கு எதிராக, பதினைந்து வயது பள்ளி மாணவனான என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எமக்கு தமிழ் இலக்கியம் கற்பித்த ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். 'ஐந்து சதத்துக்கும் பெறுமதி இல்லாத, இந்த வேலையை விட்டிட்டு பத்தாம் வகுப்பு சோதினை வருகுது, படி' என்றார். இருந்தாலும், 'கலைமகளில் வெளிவருமளவுக்கு எனது கதை தகுதி பெற்றுள்ளது' என, எனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டு, பத்தாம் வகுப்பு இறுதிச் சோதனைக்கு படிக்க ஆரம்பித்தேன்.

 

4. மகாஜனாக்கல்லூரியில் கற்ற காலத்தில் நீங்கள் நடித்த நாடகங்கள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?