Wednesday, 9 April 2025

டயறிக் குறிப்பு 219:

மனத் தெறிப்பு. அமைப்புக்களை உரிமை கோருதல்!


தமிழர்கள் மத்தியில், குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் புற்றீசல்கள் போல அமைப்புக்கள் தோன்றுகின்றன. இவற்றுள் பல, தோன்றிய வீச்சில் மறைந்தும் போகின்றன. ஒரு சில அமைப்புக்கள் வளர்ந்து சமூகத்தில் பிரபல்யமானால், பின்னாளில் அதை உரிமைகோரப் பலர் முன்வருவார்கள். ‘நான்தான் துவங்கினேன், நான்தான் முதல் தலைவர்’ எனச் சொந்தம் கொண்டாடுவார்கள். இவர்களில் பலர், ஆரம்பத்தில் பூட்டைத் திறந்து பூட்டியவர்களாக, சந்தர்ப்பவசத்தால் தலைவராகி ஒரிரு கூட்டங்களுக்கு வந்து ஊமையாக இருந்து நித்திரை கொண்டவர்களாக இருப்பார்கள். இதைத்தவிர இவர்கள் அமைப்பின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாதவர்கள், பின்னாளில் அமைப்புடன் எந்தவித தொடர்புமில்லாமல் இருப்பவர்கள், அமைப்புபற்றிய தெளிதல் இல்லாதவர்கள் என்கிறார் உண்மையான ஒரு சமூக உழைப்பாளி.

இதேவேளை, இவர்களுக்குப் பின் அமைப்பை வளர்த்தெடுக்க கடினமாக உழைத்தவர்கள், உழைப்பவர்கள், தொடர்ந்தும் தமது பங்களிப்பைச் செலுத்துபவர்கள் என சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கதவைப்பூட்டி மூடியவர்களும் அதிகபட்சம் ஆரம்பத்தில் ஒருசில கூட்டங்களுக்கு வந்தவர்களும் பின்னாளில் அமைப்புக்கு உரிமை கோருவது பொதுவாழ்வின் முரண்நகை.

எழுத்தாளர் சுஜாத்தா சொன்னது நினைவில் வருகிறது. 'அவரவர், தங்கள் தங்கள்செருப்புடன் நின்று கொள்வது சமூகத்துக்கு நல்லது!'

No comments:

Post a Comment