Sunday 10 January 2021

எஸ்.பொ: ஒரு நனவிடை தோய்தல்…!


நான் செத்தால், இந்தியாவுலதான் சாகவேணுமடா தம்பி…’ என்று சிட்னியில் நடந்த மரணச் சடங்கொன்றில் கலந்துவிட்டு, எஸ்.பொ என்னுடன் காரில் வரும்போது சொன்னார்.

ஏன் அப்படி?’ என்று கேட்டேன்.

இந்தியாவிலென்றால் எஸ். பொ. செத்தார் எனச் செய்திவரும். ஆனால் ஆஸ்திரேலியாவில் டாக்டர் பொன் அனுராவின் அப்பா காலமானார் என்பதுடன் என்னுடைய கதை முடிந்துவிடும்’ எனச் சொல்லிச் சிரித்தார். நீண்டகாலமாக அவருடன் ஆரோக்கியமான இலக்கிய நட்புப் பாராட்டியவன் என்ற வகையில் இதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்தது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, காடாறு மாதம் நாடாறு மாதம் என எஸ்.பொ இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறிமாறி வாழ்ந்தவர். இருப்பினும் எழுத்தாளராக அவர் ஆஸ்திரேலியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்று சொல்வதற்கில்லை. அதற்கான காரணிகள் பல.

எஸ்.பொ’வை நான் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் சந்தித்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

நிர்பந்த காரணிகளால் பூமிப்பந்தெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்தகாலம் அது. படகுகளில் அகதிகளாக ஆஸ்திரேலியா வரும் கலாசாரம் அப்போது இல்லை. தூதுவராலயத்தின் மூலம் படித்தவர்கள், தொழில் வல்லுனர்கள் என வசதியுள்ளவர்கள் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு வடிகட்டி விடப்பட்டார்கள். வந்தவர்கள் இங்கும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாக நினைத்தார்கள். பல்கலாசார சூழலில் தங்களின் அடையாளம் தொலைந்துவிடுமோ என்ற அச்சம் இங்குள்ள ஒரு சில தமிழ்ப் பற்றாளர்கள் மனதில் தோன்றி இருக்க வேண்டும். இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பெருநகரங்களில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட்டது. இருப்பினும் நிர்வாகசபைக் கூட்டங்கள் மற்றும் கலைவிழாக்கள் போன்றவை பெரும்பாலும் அவர்களால் ஆங்கிலத்திலேயே நடாத்தப்பட்டன. ஆங்கிலச் சூழலில் ஆங்கிலம் தெரிந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது கௌரவம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

அது 1992ம் ஆண்டு கோடை காலம் என்று நினைவில் நிற்கிறது. புலம்பெயர் தமிழர்களால் சிட்னியில் நடாத்தப்பட்ட தமிழ்ப்பாடசாலை ஒன்றில் விளையாட்டுப் போட்டி நடந்தது. ஓலிபரப்பில் எனக்கு அனுபவம் இருந்த காரணத்தால், விளையாட்டு நிகழ்ச்சிகளை அங்கு வர்ணனை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆங்கில வார்த்தைகள் எதையும் கலக்காது தனித் தமிழில் அங்கு ஒலிபரப்புச் செய்தேன். இடை வேளையின்போது புன்முறுவலுடன் ஒருவர் என்னிடம் வந்தார்.

உன்னுடைய தமிழைக் கேட்க எனக்கு சந்தோசமாய் இருக்கடா தம்பி…, நான்தான் எஸ்.பொ’ எனத் தன்னை அறிமுகப் படுத்தினார்.

இச் சந்திப்பைத் தொடர்ந்துதான் எங்களின் கலை இலக்கிய நட்பு சிட்னியில் ஆரம்பமாகியது. அவருடைய எழுத்துக்களை அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நான் வாழ்ந்த காலங்களிலில் வாசித்திருக்கிறேன். கீழ்சாதி எழுத்தாளன், காமசூத்திர எழுத்தாளன் என்று நான் வளர்ந்த சூழலில் அவர் முத்திரை குத்தப்பட்டிருந்தார். இதனால் அவரது சடங்கு நாவல் உட்பட அவரது படைப்புக்கள் பலவற்றை நான் ஒளித்து வைத்தே வாசிக்க நேர்ந்தது. சடங்கு நாவலை பாடப் புத்தகங்களுடன் வைத்திருந்தமைக்காக பாடசாலை அதிபரால் நான் தண்டிக்கப் பட்டதுமுண்டு. சடங்கு நாவல் ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான நூல். சராசரி யாழ்ப்பான மனிதனின் எலியோட்ட வாழ்கையை அங்கமங்மாக புட்டு வைக்கும் நாவல். எதையும் மூடி மறைத்து இடுக்கு வழியாகப் பார்த்து ரசிக்கும் நம்மவர் மத்தியிலே அது ஒரு கொச்சையான நூலாகக் கணிக்கப் பட்டது. சடங்கு நாவலை நான் பதின்பருவ காலத்திலும் வாசித்திருக்கிறேன். நாற்பது ஐம்பதுகளிலும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது எழுத்தின் வெவ்வேறு பரிமாணங்களை புரிந்துகொண்டேன். அந்த நாவலின் கதா பாத்திரங்களான செல்லப்பாக்கிய ஆச்சியும், அவரது மருமகன் செந்தில்நாதனும் யாழ்ப்பாணத்தின் வாழும் சுவடுகள். செல்லப்பாக்கிய ஆச்சி போன்ற கைம்பெண்கள் இன்றும் எமது கலாசாரத்தின் சாட்சிகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிட்னியில 1992ம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்டதுதான் ‘அரங்க கலைகள் சக இலக்கியப்பவர்’ என்ற அமைப்பு.

அதென்ன ஐயா ‘பவர்’…, அது ஆங்கிலச்சொல் இல்லையா? இதற்குப் பதிலாக பேரவை என்று வைக்கலாமே’ எனக் கேட்டேன்.

எட தம்பி, ‘பவர்’ என்பது தனித்தமிழ்ச் சொல். கொடிகொண்டு முன் எடுத்துச் செல்பவர்கள் என்பது அதன் பொருள். முன்னொரு காலத்தில் சு.சி செல்லப்பா அவர்களும் ‘பவர்’ என்றதொரு இலக்கிய அமைப்பைத் துவங்கி வழிநடத்தியவர்’ என்று புதியதொரு தகவலைச் சொன்னார் எஸ்.பொ.

இலக்கியப்பவர் அமைப்பின் மூலம், இலங்கை அரசியலையும் ஈழத்தமிழர் பிரச்சனையையும் உலகுக்கு சொல்லும் ஈடு, வீடு, காடு என்ற மூன்று நாடகங்களை மேடையேற்றத் தீர்மானித்தோம். இலங்கையில் ஆங்கிலேயர்களின் ஆட்சி முதல் பண்டா செல்வா ஒப்பந்தம் வரையான வரலாற்று உண்மைகள்வரை சொல்லும் ‘ஈடு’ என்ற நாடகம் 1992ம் ஆண்டின் பிற்பகுதியில் கோலாகலமாக சிட்னியில் நடந்த உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் மேடையேற்றப்பட்டது. அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாகுமார் இந்நாடகத்தை சிலாகித்து நீண்ட நேரம் பேசினார்.

வழமைபோல் குட்டி இலக்கியவாதிகள் ஆஸ்திரேலியாவிலும் தோன்றி தங்களைத்தாங்களே இலக்கிய ஐம்பவான்களாக எண்ணத் துவங்கினார்கள். இதனால் இங்கும் அழுத்தங்கள் அதிகரிக்கவே எஸ்.பொ இந்த அமைப்பிலிருந்து தானாகவே ஒதுங்கினார். இதனால் வீடு, காடு என்ற மற்றைய நாடகங்கள் செப்பனிடப்படாமலும் மேடையேற்றப்படாமலும் கிடப்பில் போடப்பட்டது. இதன் பின்பு எஸ்.பொ ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருசில மாதங்களில் வானப்பிரஸ்த நிலையிலேயே வாழ்ந்தார். வருடத்தின் மிகுதி மாதங்கள் இந்தியாவில் அவர் செய்யும் அயராத இலக்கியப்பணிக்கு அதை விடுமுறையாக எடுத்துக் கொள்வதாக ஒரு சந்தர்பத்தில் சொன்னார்.

எஸ்.பொ’வை, ‘எஸ்.பொ’வாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரிடம் இலக்கிய விஷயங்களை நிறையக் கற்றுக் கொண்டார்கள். வளரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி கைதூக்கி விடுவதில் அவர் என்றும் பின்தங்கியது கிடையாது. எழுத்து இலக்கியத்தின் பல நுட்பமான விஷயங்களை அவர் எனக்கு வஞ்சகமில்லாமல் கற்றுத் தந்தவர்.

எஸ்.பொ ஒரு ஆஸ்திரேலியப் பிரசை. இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு மேலான தொழில்சார் விசாவை வருடாவருடம் பெறுவது மிகவும் கடினமானது. இதற்கு உதவிசெய்வதற்கு கன்பராவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அவரையும் அவரது மனைவியையும் எனது காரில் அழைத்துச் செல்வேன். முன்னூறு கிலோ மீற்றர் தூரப்பயணமது. அங்கு போய்வர எடுக்கும் ஒவ்வொரு மணித்தியாலங்களும் மிகவும் பயனுள்ள மணித்துளிகள். மொழி, இலக்கியம், அரசியல், சமூகம் என பலவற்றையும் பேசிக் கொண்டு வருவார். அப்பொழுதெல்லாம் அவரது நினைவாற்றலை நினைத்து நான் ஆச்சரியப் பட்டிருக்கின்றேன். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்த காலங்களில் எனது பல்கலைக்கழக பணிகளுக்கு மத்தியிலும் வாராவாரம் அவரைச் சந்திப்பதை வழமையாக்கிக் கொண்டேன். அவரை சரியான முறையில் அணுகினால் அவரிடம் நிறையவே கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு நான் ஒரு சாட்சியாகும். இறப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்புவரை மிகப்பழைய பல விஷயங்களைக்கூட திகதி மாதம் வருடம் தப்பாது நினைவில் வைத்திருந்து என்னுடன் உரையாடினார்.

கன்பராவுக்கு இந்திய விசாவுக்காக அவரை அழைத்துச் சென்றபோது இலங்கைப் பல்கலைக் கழகங்கள் பற்றி பேச்சு வந்தது. அப்போது பேராசிரியர் சிவத்தம்பி பற்றியும் சொன்னார்.

ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டேன்.

எனது வாழ்க்கையில் நான் தோல்விகளையும் அவமானங்களையும் நிறையவே சந்தித்திருக்கின்றேன். பெருமளவு அவமானங்கள் திட்டமிட்டே செய்யப்பட்டது. I am a ‘one-man army’. என்னால் எனக்கு சாதகமான குழுவைச் சேர்த்து அரசியல் செய்யத் தெரியாது. ஆனால் சிவத்தம்பி செய்ததெல்லாம் தனக்குச் சாதகமான மாணவர் குழாமை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தனது வளர்ச்சிக்காக வேண்டாதவர்களைத் தாழ்த்தியும் வேண்டியவர்களக்கு சகாயம் செய்தும் வாழ்ந்ததுதான். இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே இளமானிப் பட்டப்படிப்பில் சிறப்புப் பட்டமும் சிறப்புச் சித்தியும் பெறாமல் விரிவுரையாளராக சேர்ந்தவர் சிவத்தம்பி’ எனச் சொன்னவர் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டார். (பல்கலைக்கழக மட்டத்தில் இத் தகவல் உண்மையெனச் சொல்லப்பட்டது!).

இதற்கும் உங்கள் இருவருக்குமிடையிலான பிரச்சனைக்கும் என்ன தொடர்பு ஐயா…?’

இதை நான் இங்கு சொல்வதன் காரணம், தனது சொந்த நலனுக்காக சிவத்தம்பி எதையும் செய்யக்கூடியவர் என்பதைக் காட்டத்தான். அந்தக் காலங்களில் இலங்கையில், கொழும்பிலும் பேராதனையிலும் இரண்டு பல்கலைக் கழகங்கள் மாத்திரம் இருந்தன. உலகத் தரம் வாய்ந்தனவாகக் கணிக்கப்பட்ட இப் பல்கலைக் கழகங்களின் தமிழ்ப் பீடங்கள், பேராசிரியர்கள் செல்வநாயகம், வித்தியானந்தன் போன்றவர்களால் அலங்கரிக்கப்பட்டன. First class Honours பட்டம் பெற்றவர்களே விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுவது அப்போதைய பல்கலைக் கழக மரபு. இவை யெல்லாவற்றையும் தனது உள்ளடி வேலைகளால் உடைத்தெறிந்து பேராசிரியராக உயர்ந்தவர் சிவத்தம்பி. மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடைபிடிக்கும் அவரது குணாதிசயங்களால் அவருடன் எனக்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டது. என்னுடன் முன்பு முரண்பட்ட பல விஷயங்களையே சிவத்தம்பி தனது கடைசிக் காலங்களில் சரியென ஏற்றுக்கொண்டு கதை பேசியவர்’ என பழைய நினைவுகளில் உணர்ச்சி வசப்பட்டார் எஸ்.பொ.

உங்களையும் கலகக்காரன், பிரச்சனைக்குரியவன், இலக்கியச் சண்டியன் என்று பலரும் சொல்கிறார்களே?’

இதை யார் சொல்கிறார்கள்? ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்!

காலம் காலமாக என்னைப் பற்றி எதிர்மறை விமர்சனம் செய்வதன் மூலம் தங்கள் எழுத்து இருப்பிடத்தை தக்கவைக்க அவர்கள் முயற்சித்தார்கள். என்னை இந்திரிய எழுத்தாளன், காம எழுத்தாளன், கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளன், கலகக்கார எழுத்தாளன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். கலகம் என்பது நிச்சயமாக தர்மத்தை நிலைநாட்டுமாயின் அந்த கலகக்காரனாக இருப்பதில் நான் பெருமைப்படுகின்றேன். உண்மைகள் கலகத்தில்தான் மலர்கின்றன. உலகத்தின் சுதந்திரமே கலகக்காரனால்தான் விடிந்திருக்கிறது. ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு விடிவு என்னால் தோன்றியது என்பதை அவர்கள் மறைமுகமாக சொல்வதாகவே, அவர்களின் வசைபாடல்களை நான் எடுத்துக் கொள்கிறேன்’.

ஐயா, நீங்கள் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். அதனால் இலக்கிய ரீதியாக அடக்கு முறைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் தலித்துக்களின் உரிமைக்கு குரல் எழுப்பாதவராகவும் தலித் இலக்கியத்துக்கு பங்களிப்பு செய்யாதவராகவும் பார்க்கப்படுகின்றதே?’

எட தம்பி, நீயே உன் கேள்வியில் யாழ்ப்பாணத்தின் ‘தாழ்த்தப்பட்ட சமூகம்’ என்ற சொல்லடையே பாவித்தாய். ‘தலித்’ இலக்கியம் என்பதே ஒரு போலி சொல்லாடல். ஈழத்தில் தலித் இலக்கியம் இல்லை. அது இந்தியாவிலிருந்து ஈழத்துக்கு தொண்ணூறுகளின் பின்பு வலிந்து புகுத்தப்பட்டது. தலித்தாக நோவடைந்தேன் என்று நான் என்றுமே பிரகடனப்படுத்தியது கிடையாது. நான் சம்பத்தரிசியார் கல்லூரியில் பாதிரிமாரிடம் படித்த காலத்திலோ அல்லது தமிழ் நாட்டில் படித்த காலங்களிலோ நான் தாழ்த்தப் பட்டவன், எனக்கு உதவி செய்யுங்கள் என்று யாசித்தது கிடையாது. ஒரு வகையில் ஈழத்தில் பிறந்த அத்தனை தமிழர்களும் தலித்துக்கள்தான். தாங்கள் தலித் இலக்கியம் படைப்பதாகவும் அவர்களுக்காகவே பாடுபடுவதாகவும் ஈழத்தில் கூறிக்கொண்ட அத்தனைபேரும் அதனால் ஆதாயம் பெற்றவர்கள். அதை வைத்து அவர்கள் தங்கள் இலக்கிய இருப்பை தக்க வைத்தவர்கள்’ என்றார் எஸ்.பொ.

எஸ்.பொ’வை இன்றும் தமிழ்ச் சட்டம்பி என்றே பலரும் எண்ணிக் கொள்கின்றனர். அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் ஆங்கிலம் மற்றும் சரித்திரப் பாடங்களில் பட்டம் பெற்றவர். நைஜீரியாவில் பணிபுரிந்த காலங்களில் அவர் ஆங்கிலத்துறை தலைவராக விளங்கியவர். மட்டக்கிளப்பில் எவ். எஸ். சி. நடராஜாவிடம் முறைப்படி தமிழ் இலக்கணம் படித்தவர். இலங்கை பாடவிதான சபையில் மாத்திரமல்லாது, ஆஸ்திரேலியாவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்கு ஆஸ்திரேலிய அரசின் ‘தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்துக்குமான மொழிக்கொள்கை’ அடிப்படையில் தமிழ்ப் பாடப்புத்தகங்கள் எழுதும் பணியில் பாரிய பங்களிப்புச் செய்தவர். இப்படி புலம்பெயர் மண்ணில் அவரது தமிழ்ப் பணிகளை நீண்ட பட்டியலாக எழுதலாம்.

செனகல் நாட்டு எழுத்தாளரான செம்பென் ஒஸ்மேனுடைய ‘ஹால’ என்ற குறுநாவல், தியோங்கோ என்ற கென்ய நாட்டு எழுத்தாளரின் ‘தேம்பி அழாதே பாப்பா’ என்ற நாவல் உட்பட பல ஆபிரிக்க எழுத்தாளர்களின் எழுத்துக்களை எஸ்.பொ சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளில் ஆளுமையுடன் செயல்பட்டு நூற்றுக்கணக்கான படைப்புகளைத் தந்தவர். தனது வீரியம் மிக்க எழுத்துக்களால், அரசியல் ஊழல்களையும் முகமூடி மனிதர்களின் வெற்றுக் கோஷத்தையும் தொடர்ந்து எதிர்த்தவர். இலக்கிய ஊழியம் என்பது உண்மையின் தேடல் என்று அவர் கோஷத்திற்காகச் சொல்லவில்லை. அத்தகைய தேடலை அவர் தன்னுடைய வாழ்க்கையாக்கிக் கொண்டவர்.

 

போர்க் குணமிக்க, வெளிநோக்கிய (LATERAL) சிந்தனை கொண்ட, நவீன படைப்பாளி என்பதே ‘எஸ்பொ’வின் அடையாளம். ‘ஆஸ்திரேலியத் தமிழன்’ என்ற சொல்லாடல் தவறு என்பதைச் சொல்லி, ஆஸ்திரேலியாவில் பிரஜா உரிமை எடுத்த நாமெல்லோரும் ‘தமிழ் ஆஸ்திரேலியர்கள்’ என்றே சொல்லப்பட வேண்டும் என்று அரச மட்டத்தில் விளக்கியவர்.

சமூகத்தின் மீது அவர் செலுத்தும் பார்வை கூர்மையானது. இதனால் அவப்போது அவர் சர்ச்சைக்குரியவராக கருதப்பட்டார். இருப்பினும் ஈழத்து இலக்கியங்களுக்கும் புலம் பெயர் எழுத்துக்களுக்கும் சர்வதேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தவர்.

சமூகத்தில் அவர் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்களுக்கு என்ன காரணமென நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ‘நட்பை அவரால் தொடர்ந்து பாராட்ட முடியாததே’ இதற்கான பதில் என்பது எனது அநுமானம்.

பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ என்று அழைக்கப்படும் முதுபெரும் எழுத்தாளர் சண்முகம் பொன்னுத்துரை அவர்கள், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலுள்ள கொன்கோட் வைத்திய சாலையில், 26ம் திகதி நவம்பர் 2014 இரவு பதினொரு மணிக்கு காலமானார். அவர் இறந்த இரண்டு மணித்தியாங்களுக்குள் BBC தமிழ் ஓசை மூலம் அச்செய்தி உலகமெல்லாம் பரவியது. இந்தியாவில் மாத்திரமல்ல, ஆஸ்திரேலியாவில் அவர் இறந்தாலும் அவரது விருப்பப்படி ‘எஸ்.போ’ காலமானார் என்றே ஆஸ்திரேலியாவிலும் சொல்லப்பட்டது.

ஆசி கந்தராஜா, குமுதம் தீராநதி (ஜனவரி 2015)

No comments:

Post a Comment