Wednesday 6 January 2021

சமையல் ஒரு கலை.

சமைப்பதற்கு நிறையக் கற்பனை தேவை. இதற்கு, வீட்டில் சமையல் பொருட்களும் மளிகைப் பொருட்களும் 'மட்டுமட்டாக' இருக்க வேண்டும், தட்டுப்பாடு நிலவவேண்டும். அப்போதுதான் அதனுடன் இதைக் கலந்து, காணாவிட்டால் இன்னுமொன்றையும் கலந்துசமைக்கும் கிறியேற்றிவிற்றி (Creativity) ஏற்படும். இதனால் உணவும் சுவைக்கும் மளிகைப் பொருட்களும் விரயமாகாது. ஊரில், கீரைக்குள் பருப்புப் போடுவதும், வறைக்குள் தேங்காய்த் துருவல் கலப்பதும், இறைச்சிக்கு உருளைக் கிழங் கு சேர்ப்பதும் இதனால்தான்.

'என்னடா? பல்கலைக் கழகத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பவன் சமையலைப் பற்றிச் சொல்கிறானே' என நீங்கள் எண்ணலாம்.

நான் நன்றாகச் சமைப்பேன். 🤪😜😝

எனது சமையலில் கற்பனை இருக்கும். இது நானாகவே கற்றுக் கொண்ட கலை. ‘Well done Kantharajah. நல்ல சமையல்’ என, என்னை நானே சமைக்கத் துவங்கிய காலத்தில் பாராட்டிக் கொள்வேன். எம்மை நாமே பாராட்டிக் கொள்வதில் தப்பில்லை. அது நிச்சயம் முன்னேற்றத்துக்கு வழி சமைக்கும் என்பார் ஜேர்மன் பேராசிரியர் ஒருவர்.

எனக்கு மூன்று அக்காமார். நாலாவதாகப் பிறந்த நான்தான் கடைசி, வீட்டில் ஒரேயொரு ஆண்பிள்ளை. ஊரில் இருந்தவரை அம்மா என்னைக் குசினிப்பக்கம் விட்டதே கிடையாது.

உயர் கல்விக்காக 1973ம் ஆண்டு, நான் புலமைப்பரிசில் பெற்றுச் சென்றது, பாஷை தெரியாத ஜேர்மன் நாட்டுக்கு. அங்கு இறங்கியதும் முதலில் தேடியது 'சோத்தை'. அது இன்றைய ஜேர்மனியல்ல. அப்போது எனது வளாகத்தில் வெளிநாட்டு மாணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சோற்றுப்(!) பசி தாங்க முடியாமல்தான், முதலில் நான் சமைக்கத் துவங்கினேன். எனக்குச் சோறு வேண்டும், இன்றும்தான்.

நிறைவாக இங்கு சொல்வது இதுதான்...!

சமையுங்கள். தயவுசெய்து அவியாதீர்கள். இரண்டுக்கும் நிறைய வழத்தியாசம் உண்டு.

அவியலில் ஒருவகைதான் குழம்பு என்ற பெயரில் மிளகாய்தூள் போட்டு சுடுதண்ணி வைப்பது!

No comments:

Post a Comment