Friday, 5 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (2)

ஆசி கந்தராஜா


2. இனக் குரோதம்

மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுள் பெரும்பாலானோர் பசுபிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் காவா மயக்கத்தில் இருந்தார்கள். பேராசிரியர் சுந்தரமூர்த்திக்கு நேரம் போகவில்லை. மெல்ல எழுந்து சேகரின் அருகே வாங்கில் அமர்ந்து வலிந்து புன்னகைத்தார்.

சேகர், தான் சம்பாசனையின் நடுவே திடீரென எழுந்து வந்ததை நினைத்து நெளிந்தான். பின்னர் சிறிதுநேர இடைவெளி விட்டு, குறை நினைத்துக் கொள்ளாதீர்ள். இங்குள்ள இந்தியர்களின் நிலமை அப்படி என்றான்.

அப்படி என்றால் எப்படி? என்று புருவத்தை உயர்த்தினார் சுந்தரமூர்த்தி.

சுற்றும் முற்றும் பார்த்து ஒருவரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டபின் சேகர் பேசத்துவங்கினான்.

பிஜித் தீவில் இரண்டாயிரமாம் ஆண்டு மே மாதம், பிஜி-இந்தியர் மகேந்திர சௌத்ரி, ஜனநாயக முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். சனத்தொகை எண்ணிக்கையில் அப்போது இந்தியர்கள், பூர்வீக பிஜியர்களிலும் பார்க்கச் சற்று அதிகமாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று. இந்தியர் ஒருவர் பிஜி நாட்டின் பிரதமராவதை, சுதேசிகளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இராணுவத்தில் சுதேசிகளான பிஜியர்கள் மாத்திரம் இருந்தார்கள். இதன் நீட்ச்சியாக இராணுவ புரட்சிக்காரர்களால் மகேந்திர சௌத்ரி கைதுசெய்யப்பட்டார். அவர் சிறை வைக்கப்பட்ட பின்பு, புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் அட்மிரல் பைனமராமா இருவரும், இதே காவா பானத்தை சேர்ந்து அருந்தி, தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களாம். இதுபற்றிப் பல விமர்சனங்கள், கட்டுரைகள் அப்போது உலக ஊடகங்களில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான துவேச உணர்வுகள், சௌத்ரியின் வெற்றியைக் காரணம்காட்டி கூர்மை அடையத் துவங்கியது, எனச் சொன்னவன் தொடர்ந்து பேசாது தன் கைகளால் முகத்தை அழுத்தித்துடைத்து சற்று நேரம் அமைதியானான்.

அப்புறம்? எனக் கேட்டு சுந்தரமூர்த்தி கதையைத் தொடர அடியெடுத்துக் கொடுத்தார். 

இந்தியர்களுடன் சம்மந்தப்பட்ட சங்கதி ஒன்று சொல்கிறேன், என விட்ட இடத்திலிருந்து அவன் தொடர்ந்தான்.

ஆண் பெண் என்ற பேதமில்லாமல் காவாவை குடித்து, வேலைவெட்டி எதுவுமில்லாமல் தென்னை மரங்களின் கீழ் இவர்கள் மயங்கிக் கிடந்த காரணத்தால்தான், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களைப் பிரித்தானியர்கள் பிஜித் தீவுகளுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது வந்தவர்களில் பெரும்பாலானோர் தென் இந்தியர்களே. அதன்பின்னரே குஜராத்திலிருந்து பலர் வியாபார நோக்குடன் பிஜிக்கு வந்து குடியேறினார்கள்.

கரும்புத் தோட்டத்துக்கு கூலியாக வந்த இந்தியர்களின் சொல்லொணாத துன்பங்களைப் பாரதி பாடலில் சுந்தரமூர்த்தி படித்திருக்கிறார். தன்னுடைய மூதாதையர்கள் தற்போதைய தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என சேகர் சொன்னான். கரும்புத் தோட்டக் கூலியாக கொண்டுவரப்பட்ட ஒரு இந்திய வம்சாவளியின் வாரிசான அவன், பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புவரை முன்னேறியுள்ளது பெருமையே. இதனால் அவனுடைய குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது. எனவே 'உன் மூதாதையர்கள் பற்றி சற்று விபரமாகச் சொல்லு' எனக் கேட்டார்.

எங்கள் வம்சாவளியில் நான் நாலாவது தலைமுறை. மூதாதையர்கள் தஞ்சாவூர் பக்கமிருந்து வந்ததாக என்னுடைய தாத்தா சொன்னார். எங்களுடன் இன்றும் வாழும் அவர், நன்கு தமிழ் கதைப்பார். அப்பாவுக்குத் தமிழ் புரியும், ஆனால் சரளமாக பேசவராது. எனக்கோ தமிழ் சுத்தமாகத் தெரியாது. அதற்குரிய சந்தர்ப்பங்கள் இங்கு இல்லை. ஒரு மொழி தொழிற்பாட்டு மொழியாக இல்லாது, அதன் தேவை சமூகத்தில் வலுவிழந்து போகும் போது, அது முற்றாக அழிந்துவிடும் என்ற சொல்லடைக்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் 'இந்தியர்கள்' என்ற கொடியின் கீழ் இணைந்து கொண்டார்கள். அவர்களுக்கென ஒரு பொதுவான மொழி தேவைப்பட்டபோது, அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட மொழிதான் 'பிஜி ஹிந்தி'. இது இந்தியாவில் பேசப்படும் ஹிந்தியிலும் சற்று வித்தியாசமானது. இதில் எல்லா இந்திய மொழிகளின் சொற்களும் கலந்திருக்கும். இந்தியா எங்களுக்கு ஒரு கனவு நாடு. கொள்ளுப்பாட்டன் காலத்திலிருந்து எங்கள் பரம்பரையில் யாரும் இந்தியாவுக்கு சென்றதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதுதான் யதார்த்தம். நான் எனது பூர்வீக மண்ணை ஒருமுறை தரிசிக்க விரும்புகிறேன். அதற்கு பணம் சேர்க்கவே காவா பானம் தயாரிப்பு வேலையில் இப்பொழுது ஈடுபட்டுள்ளேன். இது சர்வதேச மாநாடென்றபடியால் எனது வேலைக்கு நல்ல பணம் தருவார்கள் அல்லவா? என சுந்தரமூர்த்தியைக் கேட்டான்.

தன்னுடைய வேர்களைத் தேடும் அவனது ஆர்வம் சுந்தரமூர்த்தியின் மனதைத் தொட்டது. டொலர்களில் சம்பாதிக்கும் அவருக்கு பிஜியிலிருந்து இந்தியாவுக்கான விமானச் சீட்டு பெரிய தொகையல்ல. பிஜித் தீவில் வாழும் இந்தியர்களின் வரலாறு பற்றிய பூரண அறிவு அவனுக்கு இருப்பதை அவனிடம் பேசிய குறுகிய நேரத்தில் தெரிந்து கொண்டார். பிஜியின் இந்திய வம்சாவழி புத்திசாலி இளைஞன் ஒருவன், தங்களின் வரலாற்றை எப்படிப் பார்க்கிறான் என்பதையும், அவன் வாழும் சூழலையும் தெரிந்துகொள்ள அவர் விரும்பினார்.

உன்னுடைய வீட்டுக்கு என்னை அழைப்பாயா? உன்னுடைய தாத்தாவுடன் பேச விரும்புகிறேன். வரும்பொழுது உனக்கு எனது அன்பளிப்பாக இந்தியா போவதற்கான பயணச் சீட்டுக்குரிய பணத்தையும் கொண்டு வருகிறேன்' என்றார் சுந்தரமூர்த்தி.

உண்மையாகவா சார். என மகிழ்ச்சியுடன் ராகம் இழுத்தான் சேகர்.

உண்மைதான். தனது தாய் மண்ணைத் தரிசிக்க விரும்பும் ஒரு புத்திசாலி இளைஞனுக்கு, என் அன்பளிப்பு இது என்றார் பேராசிரியர் சுந்தரமூர்த்தி.

அவனுக்கு மிகுந்த மகிழச்சி. 'மாநாடு முடிந்த மறு நாள், எமது வீட்டுக்கு மதிய உணவுக்கு வாருங்கள். நானே உங்கள் ஹோட்டலுக்கு வந்து அழைத்துப்போகிறேன். என்று கைகுலுக்கி விடைபெற்றான்.

(தொடரும்)



No comments:

Post a Comment