வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.
நாட்டை நினைப்பாரோ...' (3)
ஆசி கந்தராஜா
3: இந்திய மைனாக்கள்
வார்த்தை தவறாது, மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை பத்து மணிக்கே
சுந்தரமூர்த்தியைக் கூட்டிப்போக வந்திருந்தான் சேகர். தென் இந்தியாவில் இருந்து
கரும்புத் தோட்ட வேலைக்கு வந்த குடும்பத்தின் வாரிசான சேகரிடம் சொந்தமாக காரை
எதிர்பார்க்க முடியாது. பிஜித் தீவுகளில் றெயில் வண்டிகளும் கிடையாது. எனவே
வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக் கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றார்கள்.
சேகரின் பெற்றோர்கள் தலைநகர் சூவாவிலிருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள நௌசோறி என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அங்குதான் சர்வதேச விமான
நிலையம் உள்ளது. போகும் வழியில் மிகப்பெரிய சர்க்கரை ஆலை ஓன்று இயங்காமல்
மூடப்பட்டிருந்ததைப் பார்த்தார். அது பற்றி அவனிடம் கேட்டார்.
என்னுடைய மூதாதையர்களின் பிழைப்பு இந்த ஆலையை
நம்பியே இருந்தது. 1882ம் ஆண்டு துவங்கப்பட்ட
இந்த ஆலை 1959இல் மூடுவிழா கண்டது.
எல்லாம் தெரிந்தவர்களாக, தங்களைத் தாங்களே எண்ணிக்
கொண்ட பிரித்தானியர்கள், பிஜித்தீவில் செய்த
தப்புத்தாளங்களில் இதுவும் ஒன்று!
அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.
பிஜியின் பாவு தீவைச் சேர்ந்த, ‘சேரு-எபெனிசா-சாக்கோபாவு’ என்பவன் பிஜியில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை தன்னுடைய கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, பிஜியின் அரசனாக தன்னை அறிவித்தான். 1874 ஆம் ஆண்டு பிஜி பிரித்தானியரின் கட்டுப்ப்பாட்டில் வரும் வரை இவனே பிஜியை ஆண்டு வந்தான். பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர், பிஜியின் சர்க்கரைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களைத் தருவித்தனர். அப்போது இளைஞனாக வந்தவர்தான் என்னுடைய முப்பாட்டன். அவரும் என்னுடைய தாத்தாவும் 1959ம் ஆண்டு, இந்த ஆலை மூடப்படும்வரை ஆலையைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டத்திலேயே அடிமைகளாக உழைத்தார்கள்.
இதைச் சொல்லும்போது சேகர் சற்று உணர்ச்சிவசப் பட்டான்.
பிரித்தானியர்கள் பிஜித்தீவில் செய்த
தப்புத்தாளங்கள், என்று சொன்னாயே, அதைக் கொஞ்சம்
விளக்கமாகச் சொல்லு. எனக் கொக்கிபோட்டு மீண்டும் அவனை சம்பாஷனைக்குள் இழுத்தார்.
இது அவனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமையட்டும் என்ற காரணத்தாலுமே சுந்தரமூர்த்தி
இவ்வாறு நடந்துகொண்டார்.
பிஜித்தீவின் சூவா கடற்கரையில் வந்து இறங்கிய
ஆங்கிலேய துரைமார்களுக்கு கரும்பு விவசாயம் பற்றிய ஞானம் இருந்திருக்க
நியாயமில்லை. சூவாவை சூழ்ந்த பிரதேசம் மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு
பன்னிரண்டு மாதங்களும் மழை பெய்யும். கரும்பு வளர, முதலில் மாரி மழையும் பின்னர் கரும்பு முற்றுவதற்கும்
அறுவடைக்கும் கோடை வெய்யிலும் தேவை என்பதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்து
கொண்டார்கள். இதனால் மலை சூழ்ந்த மத்திய பிரதேசங்களிலுள்ள சர்க்கரை ஆலைகள்
படிப்படியாக மூடப்பட்டன. அதன்பின்னரே மேற்குப் பிரதேசங்களில் கரும்புத் தோட்டங்கள்
உருவாக்கப்பட்டன.
இப்படியாக அவர்களது உரையாடல் நிறைவு பெற
முன்னரே வீடு வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் வாசல்வரை வந்து வரவேற்றார்கள்.
வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து தனது பெயர்
சிங்காரம் பிள்ளை என அறிமுகப் படுத்திக் கொண்டார் தாத்தா. சேகரின் தாய் நீத்துப்
பூசனிக்காயில் கற்பூர ஆராத்தி காட்டி பேராசிரியர் சுந்தரமூர்த்தியை வீட்டுக்குள்
அழைத்துச் சென்றார். மொழி அழிந்தாலும் மூன்று தலை முறைகளுக்குப் பின்பும் அவர்கள்
வீட்டில் தென் இந்திய கலாசாரம் வாழ்வதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் வளவில்
இலந்தை, நாவல் முதல் இலங்கை
இந்தியாவில் காணப்படும் எல்லா மரங்களும் நின்றன. மாவும் பலாவும் முருங்கையும்
காய்த்து குலை குலையாகத் தொங்கின. கூட்டம் கூட்டமாக மைனாக்கள் அங்கு இரை தேடிக்
கொண்டிருந்தன. மைனாக்கள் பிஜித் தீவுகளெங்கும் பெருகிப் பரவி இருப்பதை தனது
பிரயாணத்தின் போது சுந்தரமூர்த்தி பார்த்திருக்கிறார். அது பற்றி சேகரிடம்
கேட்டார்.
ஆஸ்திரேலியாவிலே, நியூசீலந்திலிருந்து வந்தவர்களை 'கீவி' என்றும் பிரித்தானியர்களை
'பொமி' என்றும் இந்தியர்களை 'கறி' என்றும் அழைப்பார்கள்.
இவை எல்லாம் காரணப் பெயர்கள். கறி சாப்பிடுவதனால் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில்
கறிகளானார்கள். ஆனால் பிஜியில் இந்தியர்களை மைனாக்கள் என்று அழைக்கிறார்களே, காரணம் என்ன? எனக் கேட்டார்
சுந்தரமூர்த்தி.
மைனாக்களை இங்கு இந்தியர்களே கொண்டு வந்ததாக
பிஜியர்கள் நம்புகிறார்கள். மைனாக்கள் மிகவும் சுறு சுறுப்பான பறவை. விரைவில் இனப்
பெருக்கம் செய்யும். மைனாக்கள் இங்கு பல்கிப் பெருகி, தங்களின் பூர்வீகப்
பறவைகளை காடுகளுக்குள் துரத்திவிட்டதாக பிஜியர்கள் சொல்லுகிறார்கள். இருபதாம்
நூற்றாண்டின் இறுதியில், பிஜி பழங்குடியினரைவிட
இந்தியர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதனால்தான் இரண்டாயிரமாம்
ஆண்டு, ஜனநாயக முறைப்படி
பிஜி-இந்தியரான மகேந்திர சௌத்ரி பிரதமராக வரமுடிந்தது. இராணுவப் புரட்சியின் பின்
அவர் சிறை வைக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து பெருமளவு இந்தியர்கள் நாட்டை விட்டு
வெளியேறியதும் தனிக்கதை. அதன் பின்பு பணமில்லாத எங்களைப் போன்ற இந்தியர்களே
பிஜியில் தங்கினார்கள். இந்தியர்களின் எண்ணிக்கை கூடியதை பொறுக்க முடியாமல், நாங்களும் மைனாக்கள்
போலப் பெருகிவிட்டோம் எனச் சொல்லத் துவங்கினார்கள். காவா போதையில் எந்த நேரமும்
இவர்கள் மரநிழலில் படுத்திருந்தால் எப்படி வம்ச விருத்தி செய்வது?
இந்த வீடும் வளவும் என்னுடைய பாட்டனும்
தாத்தாவும் வெள்ளையர்களின் கீழ் அடிமைகளாக உழைத்து, சிறுகச் சிறுக சேர்த்த சம்பாத்தியத்தில் வாங்கியது. இதன்
பின்னணியில் பல கண்ணீர் கதைகளும் உண்டு. என்றான் சேகர் சற்று சூடாக.
சேகரும் பேராசிரியர் சுந்தரமூர்த்தியும்
ஆங்கிலத்திலேயே கதைத்தார்கள். தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது. இருப்பினும் இவை
எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாக அவர் அருகே அமைதியாக நின்றார். தாத்தா தனக்கு 87 வயதென்றும் ஐந்து
வருடங்களுக்கு முன்பு பாட்டி இறந்து விட்டதாகவும் சொன்னார். இப்பொழுது அவருக்குத்
தமிழ்பேச அங்கு ஆள் இல்லை. மகனுடனும் பேரனுடனும் பிஜி ஹிந்தியிலே பேசிக்
கொள்கிறார்.
பேராசிரியர் சுந்தரமூர்த்தியைக் கண்டது
தாத்தாவுக்கு மகா சந்தோஷம். பிஜியில் தாங்கள் கடைப் பிடிக்கும் இந்திய சடங்கு முறை
பற்றி வாய் ஓயாது அவருடன் தமிழில் பேசினார்.
மதிய உணவு முடிந்து விடைபெறும் நேரம் வந்தது.
தாத்தா, இந்தியாவுக்கு ஒருமுறை போக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இல்லையா? என ஏதோ ஒரு உந்துதலில்
கேட்டார் சுந்தரமூர்த்தி.
நிலத்தைப் பார்த்தவாறு எதுவும் பேசாது மொனமாக
நின்றார் தாத்தா. அவருடைய உணர்ச்சிகளைத் தீண்டிவிட்டேனோ என்ற குற்ற உணர்வு
சுந்தரமூர்த்திக்கு ஏற்பட்டது.
இந்த வயதிலை நான் அங்கை போய் என்னத்தைக்
காணப்போறன் தம்பி. என்னுடைய பேரன் அங்கு போய்வருவதற்கு நீ பணம் கொடுத்தியே, அதுவே பெரிய காரியம்' என்றார் தாத்தா, பேராசிரியர்
சுந்தரமூர்த்தியின் கைகளைப் பிடித்தபடி. அப்பொழுது தாத்தாவின் கண்களிலே சுரந்து
நின்ற கண்ணீரை சுந்தரமூர்த்தி அவதானிக்கத் தவற வில்லை.
நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதைக்
காண்பதென்றே, அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மிவிம்மி
விம்மிவிம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே.
என்ற பாரதியார் பாடலின் வரிகள்தான் அவர்களிடமிருந்து
விடைபெறும் போது பேராசிரியர் சுந்தரமூர்த்தியின் ஞாபகத்துக்கு வந்தன.
(முற்றும்)
No comments:
Post a Comment