Friday, 26 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (2)

ஆசி கந்தராஜா


2. வெள்ளையர்கள் பழக்கிய குடி.

அன்று முழு நிலவு. அதுவும் சித்திரைப் பூரணை!

அன்றைய தினத்தை தங்களின் மூதாதையர்களின் தினமாக ஆட்டம் பாட்டத்துடன் அநுஷ்டித்தார்கள். பகல் முழுவதும் ஒருவித போதை மயக்கத்திலும் உறக்கத்திலும் இருந்தவர்கள், மாலையானதும் 'யுக்கலிப்ரஸ்' மரத்தின் கீழ் ஒன்று கூடினார்கள். கருக்கல் நேரத்தில், பைன் மர ஊசி இலைகளையும், யுக்கலிப்ரஸ் மர இலைகளையும் எரித்துப் புகை போட்டு, பாட்டுப் பாடினார்கள். வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் கொழுத்த 'கங்காரு'க்களை தோளில் சுமந்து வந்தார்கள். அவற்றைத் தோலுடன் நெருப்பில் கருக்கி, யுக்கலிப்ரஸ் இலைகளை எரித்த புகையில் பதப்படுத்தி, மூதாதையர்களுக்குப் படைத்தார்கள். அதன் பின்னர் விருந்தும் ஆட்டமும் துவங்கியது. இப்படியான ஒரு சூழலில், அபொர்ஜினி குழுத் தலைவரை, மாணவர்கள் சுந்தரமூர்த்திக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது இயல்பாகவே அபொர்ஜினி மக்களின் வரலாறு பற்றிப் பேச்சு வந்தது.

'தன்னுடைய பெயர் அக்காமா (Akama), திமிங்கிலத்தின் பலம் கொண்டவன் என்பது அதன் பொருள்' என்று, தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் ஒரு பழுத்த அநுபவசாலி என்பது பேச்சில் தெரிந்தது. 'பாம்' மர இலை ஒன்றால் காத்து விசிறியபடி, தங்களது வரலாற்றில் நடந்த சோக அத்தியாயங்களை, தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் சொல்லத் துவங்கினார்.



1770ம் ஆண்டு கப்டன் குக் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர்களின் வருகை (1788), ஆதிவாசிகளின் வாழக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. முதலில் குற்றவாளிகளும் அவர்களின் காவலர்களும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்டார்கள். பின்னர் பிரித்தானியாவில் வாழ லாயக்கற்ற காவாலிகளும், 'கடைப்புலி'களும் வந்தார்கள். வரும்போது அவர்கள் 'சும்மா' வரவில்லை! விஷக் காச்சல், அம்மை போன்ற நோய்களையும் கொண்டு வந்தார்கள். அதுவரை ஆதிவாசிகளிடம் இல்லாத பால்வினை நோய்களை, பரப்பியவர்களும் வெள்ளையர்களே. காலப் போக்கில் நாடு விருத்தியடைய, ஐரோப்பிய வெள்ளையர்களின் குடியேற்றம் படிப்படியாக ஆரம்பமாகியது.

ஆதிவாசிகளின் விஷயத்தில், குடியேறியவர்களின் மன ஓட்டம் எப்படி இருந்தது? எனத் தகவல் அறியக் கேட்டார் சுந்தரமூர்த்தி.

இங்குள்ள விலங்குகளையும் எங்களையும் அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. அதுவரை நாங்கள் மீன் பிடித்த, வேட்டையாடிய இடங்களிலிருந்து எங்களைத் துரத்தி அடித்தார்கள். எங்களின் பூர்வீக நிலங்களை புடுங்கி, அங்கு தங்களுக்கு ஏற்றவகையில் பாரிய விவசாய, மற்றும் விலங்குப் பண்ணைகளை அமைத்தார்கள்.

இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் என்ற வகையில், இதை நீங்கள் எதிர்க்கவில்லையா?

வில் அம்பு வைத்துக் கொண்டு எமது மூதாதையர்கள் போராடினார்கள். வெள்ளையர்கள், குருவி சுடுவது போன்று அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள்.

ஐயோ, கடவுளே...!

சிறிது நேரம் கண்களை மூடி மௌனமானார் பெரியவர். தமது மூதாதையர்கள் அநுபவித்த கொடுமைகள் அவர் நினைவில் வந்திருக்க வேண்டும். திடீரென அருகிலிருந்த பியர் கானை உடைத்து ஒரே மடக்கில் குடித்தவர், மீண்டும் தொடர்ந்தார்.

குடியேற வந்தவர்களுக்கு கேளிக்கை வேண்டுமல்லவா? ஆங்காங்கே பாரிய மதுசாலைகளை நிறுவினார்கள். இறைச்சிக்காக வேட்டை நாய்களுடன் குதிரையிலே மிருகங்களைத் தேடி காட்டுக்குச் சென்றவர்கள், வேட்டையாடிய குஷியில் மிருகங்களுடன் மிருகங்களாக ஆதி வாசிகளையும் சுட்டுத் தள்ளினார்கள். அபொர்ஜினிகளைச் சுட்டுக் கொல்வது வெள்ளையர்கள் மத்தியில், அப்போது ஒரு வீர விழையாட்டாக கணிக்கப்பட்டது. மாலை வேளைகளில் வேட்டையாடிய மிருகங்களை நெருப்பில் வாட்ட, அவர்கள் திறந்த வெளியில் கூடுவார்கள். அங்கு அதிக எண்ணிக்கையில் ஆதிவாசிகளைச் சுட்டவர், ஹீரோவாகக் கணிக்கப்பட்டுவார்.

இதைச் சொல்லும் போது உணர்ச்சி வசப்பட்ட பெரியவர், சங்கடத்துடன் எழுந்து, சிறுநீர் கழித்து வருவதாகச் சொல்லி பற்றைக்குள் போய் வந்தார்.

மது, மற்றும் போதைப் பொருள்கள், அபொர்ஜினிஸ் சமுதாயத்தை அழித்தொழித்த சமாச்சாரங்கள். இவை மோசமான உடல் ஊனத்தை ஏற்படுத்தி அவர்களின் சராசரி வாழ்க்கைக் காலத்தை அரைவாசியாகக் குறைத்தது என புள்ளி விபரம் சொல்கிறது. பெரியவர் அக்காமாவுடன் பேசிய ஒரு மயணித்தியால நேரத்துக்குள், அவர் ஆறு பியர் கான்களை அசால்டாக காலி பண்ணியதை சுந்தரமூர்த்தி அவதானித்தார். எனவே மது பாவனைப் பழக்கம் பற்றி அக்காமாவிடம் கேட்டார்.

ஒரு சமூகத்தை ஏமாத்திப் பிழைக்க வேண்டுமென்றால், அவர்களை போதைக்கு அடிமையாக்க வேணுமென்பார்கள். எங்கள் விஷயத்திலும் அவர்கள் இதைத்தான் செய்தார்கள். வெள்ளையர்கள் பெரும்பாலும் குடியை, கொண்டாட்டத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களால்; அதிலிருந்து வெளியேற முடியவில்லை. அவர்கள் எமக்கு பழக்கிய குடி, எங்கள் வாழ்வின் மரணத்தின் குடி' என வெள்ளையர்கள் மேலே முழுக் குற்றத்தையும் சுமத்திய பெரியவரை, சைகையால் நிறுத்தி, வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு ஆதிவாசிகள் மத்தியில் போதைப் பழக்கம் இருந்ததில்லையா? எனக் கேட்டார் சுந்தரமூர்த்தி.

ஆதிகாலம் தொட்டு, சில தாவரங்களின் வேர்களையும், விதைகளையும், இலைகளையும் உடலில் கிளர்ச்சி ஊட்டுவதற்காக நாங்கள் உண்பதுண்டு. ஆனால் அவை போதைப் பொருள்கள் அல்ல.

இந்த சந்தர்ப்பத்தில், பெரியவரின் உரையாடலில் பக்குவமாக நுழைந்த மாணவன் மேலே தொடர்ந்தான். 'நமது மூதாதையர்கள் பாவித்த இலைகளும் விதைகளும், இந்தியர்களின் வெற்றிலை பாக்கைப் போன்றவை. ஆனால் வெள்ளையர்கள், எமது மூதாதையர்களை படிப்பறிவு இல்லாத சோம்பேறிகளாக்க, மதுவையும் போதைப் பொருள்களையும் தாராளமாக அறிமுகம் செய்தார்கள். அதற்கும் அப்பால், மதுவை தொடர்ந்து வாங்குவதற்கு, பல கொடுப்பனவுகளையும் பண உதவிகளையும் தாராளமாக கொடுத்தார்கள்.

ஓ...! நல்ல அரசியல்தான்.

நில உரிமைகளுக்குப் போராடாதவாறு ஆதிவாசி இளைஞர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது அப்போது வெள்ளையர்களுக்கு அவசியமாயிற்று. இதற்காக எங்கள் பதின்ம வயது இளவல்களுக்கு, மதுவை மட்டுமல்ல, மேலதிக போதைக்காக Gasoline> Paint Thinner போன்ற வேதிப் பொருள்களை நுகரப் பழக்கியவர்களும் அவர்களே. என மாணவன் ஆத்திரப்பட்டான்.

அவன் இதைச் சொல்லும்போது ஈழத் தமிழர் மத்தியில் மதுவும், போதைப் பொருள்களும், திட்டமிட்ட வகையில் அறிமுகம் செய்யப்படுவதை நினைத்து, சுந்தரமூர்த்தி உணர்ச்சி வசப்பட்டார்.

(தொடரும்)


No comments:

Post a Comment