Friday 19 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (1)

ஆசி கந்தராஜா

 

1. தப்புத்தாளங்கள்

ந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. அதற்கும் மேலாக அந்த முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது அவரது மனதைச் சுட்டெரித்தது. மற்றவர்களுடன் ஒத்துப் போவதென்றால், போலிகளுக்குத் துணை போவதுதானோ?

'அபொர்ஜினி' என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச் சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, சுந்தரமூர்த்திக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின் ஆஸ்திரேலியா வந்தவர் சுந்தரமூர்த்தி. அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பது பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. சுமார் நாற்பத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. கடுமையான வறட்சியினால் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, பிழைப்புக்காக புதிய பூமி தேடி, இந்தோனேசியத் தீவுகளின் வழியாக இவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்கள் என்ற கருத்தும் உண்டு. 1974ம் ஆண்டு, நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 'முங்கு குளத்தருகில்' (Mungo Lake) கண்டெடுக்கப்பட்ட மனிதச் சுவடுகளின் மரபணுக்கள், இந்திய பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலே பல பேச்சு மொழிகள் உண்டு. இவர்கள் ஆதி காலத்தில் தனித்தனி குழுக்களாக, தொடர்பின்றி வாழ்ந்ததினால் இது ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் தோற்றத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் சாயல், மற்றும் சடங்கு சம்பிரதாயம் என்பன பெரிதும் ஒத்திருப்பதுடன், பேச்சு மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களும் கலந்திருக்கின்றன. இதனால், அகண்டு பரந்த ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரு மூலையிலே, திராவிட தேசமொன்றை சுந்தரமூர்த்தி கற்பனை பண்ணி, மகிழ்ந்த காலங்களும் உண்டு.

முதல் முறையாக சுந்தரமூர்த்தி பணிபுரியும் கல்விச் சாலைக்கு ஒரு ஆதிவாசி இளைஞன் படிக்க வந்தான். சப்பை மூக்கும் இருண்ட உருவமுமாக அவன், தம்பித்துரை அண்ணரின் மகன் இராசதுரையை 'அச்சுஅசலாக' ஒத்திருந்தான். அடுத்த ஆண்டு அதே சாயலில் இன்னும் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும், கல்வி வசதிகளற்ற சூழலில், புதர்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் என, அழைத்து வந்த செஞ்சிலுவைச் சங்கத்தினர் சொன்னார்கள். இதனால் விரிவுரைகளுக்கு அப்பால், அறிவியல் பாடங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. இந்தப் பணிக்கு கல்விச் சாலை சுந்தரமூர்த்தியை நியமித்தது. 'நியமித்தது' என்பதிலும் பார்க்க, கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதே சரியாக இருக்கும். இதற்கும் காரணம் உண்டு. கல்விச்சாலையில் அந்த வருடம் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் ஆதிவாசிகளின் நடனம் இடம் பெற்றது. கன்னத்திலும் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றால் குறிவைப்பது போன்று, வெள்ளை நிற மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு, கையிலே யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளைகளுடன் ஆதிவாசிகள் அரங்கிற்கு வந்தார்கள். Didgeri-doo எனப்படும் நீண்ட, நாதஸ்வரம் போன்ற, குழாய் வடிவில் அமைந்த கருவி, இசை எழுப்பியது. Clapping Sticks தாளம்போட்டது. வாத்திய இசையும் தாளமும் இணைந்த ஒரு உச்ச நிலையில், ஆட்டக்காரர்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆடத் துவங்கினார்கள். சுந்தரமூர்த்தி சிறு வயதில் பாட்டுக் காவடி பழகி, ஊர்க் கோவில்களில் ஆடி அசத்தியவர். ஆதிவாசிகளின் தாளத்துக்கு கால்கள் துருதுருக்க, தன்னை மறந்து அவரும் ஆடத் துவங்கினார். இதைக் கண்ட வெள்ளையர்கள் அதையும் இதையும் முடிச்சுப் போட்டு 'கொமன்ற்' அடித்தார்கள். வேறு சிலர் சுந்தரமூர்த்தியின் ஆட்டத்தை ரசித்தார்கள். இதிலிருந்து ஆசிவாசிகளுடன் நல்ல நட்பு, சுந்தரமூர்த்திக்கு ஆரம்பமாகியது.

அபொர்ஜினி மக்கள், இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்கள். ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்கள். இவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா கண்டம் முழுவதும் சொந்தமானது. இருப்பினும், சுவாத்தியம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வெப்ப வலயங்ளான வட பிராந்தியம் (NT), குவீன்ஸ்லாந்து (QLD), நியுசவுத்வேல்ஸ் (NSW) மாநிலங்களில் மட்டும்; செறிந்து வாழ்கிறார்கள். இயற்கையே தம்மைக் காக்கும் தெய்வம் என்றும், அங்கிருந்தே தமது மூதாதையர்கள் தம்மை ஆசீர்வதிப்பதாகவும் எண்ணுகிறார்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எங்கும் தங்களை மீறிய ஒரு சக்தி நிறைந்திருப்பதாகவும் நம்புகிறார்கள்.

அபொர்ஜினி ஆதிவாசிகள், 'பூமரங்' (Boomerang) எனப்படும் ஒரு கருவியை, வேட்டைக்குப் பயன்படுத்துவார்கள். குத்துமதிப்பாக இது, 120 பாகை கோணத்திலமைந்த, ஒரு வளைந்த தடி. இது அபொர்ஜினிகளுக்கே உரித்தான தனித்துவமான வேட்டையாடும் கருவி. இதை எறிந்தால் இலக்கைத் தாக்கிய பின்னர் எறிந்தவனிடம் தானாகவே வந்துவிடும். 'பூமரங்'கை ஒத்த ஒரு வளைந்த தடி பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பெயர் 'வளரி'. ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால் நடைகளை திருடிச் செல்லும் திருடர்களைப் பிடிக்கவும், பண்டைய தமிழரால் இது பயன்படுத்தப்பட்டதாம். உசாத்துணை நூல் தகவல்களின்படி, வளரிக்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்று அழைத்தனராம். வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்திருக்கும். வளரிகளை இரும்பிலும் செய்வார்கள். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வளரியை வீசிவிட வேண்டும். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக் கூடிய இலக்காக இருந்தால் அவற்றைச் சீவித்தள்ளி விடும். ஆனால் ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியை மாத்திரம் பயன்படுத்துவார்கள். இதில் கவனிக்க வேண்டியவ விஷயம் என்னவென்றால், பூமராங்போல, வளரி எறிந்தவனிடம் மீண்டும் வருவதில்லை.

கோடுகளாலான ஓவியங்கள், அபொர்ஜினிஸ் சமூகத்தின் கலாசார அடையாளங்கள். ஆதிகாலங்களில் ஓவியங்களை கற்பாறையில் வரைந்தார்கள். இப்பொழுது இவர்களின் ஓவியங்கள் துணியிலும் மரப் பலகையிலும் கிடைக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான  Rock Art எனப்படும் ஓவியங்களும், மரப் பட்டையில் வரைந்த Bark Art எனப்படும் ஓவியங்களும், ஆதிவாசிகளின் தேசியப் பூங்காக்களில் UNESCO உதவியுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இத்தகைய ஓவியக்காட்சி ஒன்றுக்கு அபொர்ஜினி மாணவர்கள் சுந்தரமூர்த்தியை அழைத்தார்கள். ஓவியக் கண் காட்சி முடிந்த பின்னர் அபொர்ஜினி சமூகத்துடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எண்ணி, வெகு சந்தோசமாக அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

(தொடரும்)


No comments:

Post a Comment