'களவாடப்பட்ட குழந்தைகள்' (3)
ஆசி கந்தராஜா
ஆஸ்திரேலியாவில் வாழும்
பல்லின சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது அபொர்ஜினி சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், என்பன இன்றும் மிகவும்
கீழ் நிலையிலேயே உள்ளன. இதனால் இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகமாவதால், பொலீசாரால்
கைதுசெய்யப்படும் வீதமும்,
ஒப்பீட்டளவில்
அதிகமாக உள்ளது. விகிதாசார எண்ணிக்கையின்படி சிறையிலிருப்போரில் அதிகமானோர்
அபொர்ஜினிஸ் மக்களே என புள்ளி விபரம் சொல்கிறது. சிறையில் இவர்கள் காவலர்களால்
பாரபட்சமாக நடத்தப்படுவதும், சிறை மரணங்களும் இன்றும் நடக்கின்றன.
காலம் எப்பொழுதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பத் துவங்கினார்கள். வெள்ளையர்களின் அரசுக்கு எதிராக இவர்களின் எதிர்ப்புக்கள் படிப்படியாக வலுவடைய, பூர்வ குடிமக்களுக்கு தாங்கள் செய்த அநீதிகளை, மெல்ல மெல்ல ஒத்துக்கொள்ளத் துவங்கினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில், மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிமக்களுக்கு, இன்றுவரை முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் 1990ம் ஆண்டு 'பூர்வீக காணி உரிமைச் சட்டம்' வெள்ளையர்களின் அரசால் இயற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2008ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் கெவின்-ரட், அபொர்ஜினி ஆதிவாசிகளிடமிருந்து, பலவந்தமாக பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். காலம் கடந்து கேட்கப்பட்ட இந்த மன்னிப்பை, அபொர்ஜினிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய சமயம் பார்த்து கொக்கி போட்டார், சுந்தரமூர்த்தி.
வெள்ளையர்களுக்கு காமம் தலைக்கேறும் போது, அதற்கு வடிகால் அமைக்க
முடியாதவர்கள், ஆதிவாசி பெண்களுடன்
வல்லுறவு கொண்டார்கள். இதனால்தான் வெள்ளைத் தோலும், சப்பை மூக்கும் கொண்ட 'கலப்பினம்' உருவாகியது. வெள்ளைத்
தோல் குழந்தைகள், கறுப்பு நிற ஆதிவாசித்
தாயுடன் வாழ்வதை, வெள்ளையர்கள்
விரும்பவில்லை. இதனால், பெரும்பாலான கலப்பின
குழந்தைகள், ஆதிவாசி
பெற்றோரிடமிருந்து களவாடப்பட்டார்கள். சிலர் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டார்கள்.
கொடுமைதான், வெள்ளையர்கள் பாராழுமன்றத்தில் மன்னிப்புக் கோரியது, இந்தக் குழந்தைகளுக்காகவா?
ஆம், இவர்களுக்காகத்தான். ஆனால் இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், ''களவாடப்பட்ட குழந்தைகள்' என அழைக்கப்பட்ட
இவர்களின் சந்ததியினரே, பின்னர் வெள்ளையர்களின்
அரசுக்கு தலையிடியாய் இருப்பார்கள் என, வெள்ளையர்கள் அப்போது நினைக்கவில்லை.
அதெப்படி...? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
சுந்தரமூர்த்தியின் கேள்வியை பெரியவர் காதில்
வாங்கவில்லை. மீண்டும் ஒரு பெரிய பியர்கானை உடைத்து ஒரே மூச்சில் குடித்தவர், வெறுப்புடன் கானை நசுக்கி
எறிந்தார். பின்னர் சிறுநீர் கழிக்கவென எழுந்து, தள்ளாடியபடி பைன் மரத்தின் பின்னே ஒதுங்கினார். இதனால், பெரியவர் வரும்வரை
காத்திராமல், இன்னொரு மாணவன் அவர்
விட்ட இடத்திலிருந்து சொல்லத் துவங்கினான்.
கலப்பின குழந்தைகள் தூர இடங்களிலுள்ள விடுதிகள், மற்றும் தேவாலயங்களில்,
பெற்றதாயுடன்
தொடர்பற்ற வகையில்
வளர்க்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி புகட்டப்பட்டு, ஆங்கில கலாசாரத்தில்
வாழப் பழக்கப்பட்டது.
குழந்தைகளின் தாய் அபொர்ஜினியாகவும், தந்தை முன்பின் தெரியாத
வெள்ளையனாகவும் இருந்தது போல, தாய் வெள்ளைக்காரியாகவும் தந்தை அபொர்ஜினியாகவும் இருந்ததுண்டா?
சுந்தரமூர்த்தியின் இந்தக் கேள்விக்கு
அதிரச் சிரித்தான் மாணவன்.
குடியேறிய வெள்ளைக்காரிகள், தங்களை எஜமானிகளாகவும்
புனிதமானவர்களாகவும் கருதினார்கள். கறுப்பு நிறம், அவர்களுக்கு அழுக்கின் அடையாளம். அவர்கள் எப்படி அபொர்ஜினி
ஆணுடன் உடலுறவு கொண்டிருக்க முடியும்? அதுமட்டுமல்ல குடியேறியவர்களுள் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் இருந்ததினால்
வெள்ளைக்காரிகள் உடலுறவுக்காக வெளியே போகவேண்டிய தேவை இருக்கவில்லை என்றவன், சுந்தரமூர்த்தியின் றெஸ்போன்ஸுக்கு
காத்திராமல், கலப்பின குழந்தைகள்
பற்றிய விஷயத்துக்கு வந்தான்.
கலப்பினக் குழந்தைகள் மேற்கத்திய சூழலில்
வளர்ந்து கிறீஸ்தவர்கள் ஆனார்கள். இவர்களுள் எவருமே பின்னர் கறுப்பு நிற, அபொர்ஜினி சமூகத்தில்
கலந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களை மணந்து ஆங்கிலேயர்களாகவே வாழத்
துவங்கினார்கள். இவர்களுக்கு இருந்த அபொர்ஜினி அடையாளம், சப்பை மூக்கு மட்டுமே.
நிறம், பேச்சு மொழி உட்பட மற்றவை
எல்லாம் பெரும்பாலும் வெள்ளையர்களதே.
இவர்களுள் சிலர் எமது கல்விச் சாலையிலும்
படிக்கிறார்களே? நான் அறிந்தவகையில்
இவர்கள் படுபயங்கர பச்சோந்திகள் என வெறுப்பை உமிழ்ந்தார் சுந்தரமூர்த்தி.
உண்மைதான். கால ஓட்டத்தில் அழுத்தங்களைத்
தாக்குப் பிடிக்க முடியாத வெள்ளையர்களின் அரசு, ஆதிவாசிகளுக்கு பல சலுகைகளை அள்ளித் தெளித்தார்கள். ஆனால் இன்றுவரை இந்தச்
சலுகைகளை அநுபவிப்பது பெரும்பாலும் கலப்பின அபொர்ஜினி சந்ததியினரே.
இது எப்படிச் சாத்தியமாகிறது? புரியும்படி விளக்கமாகச்
சொல்லு' என தூபம் போட்டார்
சுந்தரமூர்த்தி. இது சம்பந்தமாக கல்விச்சாலை மட்டத்திலே நடப்பனவற்றை, சுந்தரமூர்த்தி அறிவார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட அபொர்ஜினி
இளைஞன், இதுபற்றி என்ன
நினைக்கிறான் என்பதை அறிய,
இவ்வாறு
கேட்டார்.
பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும்
விலாங்கு மீன் ரகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கலப்பின, அபொர்ஜினி சந்ததியிலுள்ள
பலருக்கு, முப்பாட்டி அல்லது
கொள்ளுப்பாட்டி மாத்திரம் கறுப்பு நிற, தூய அபொர்ஜினி பெண்ணாக இருப்பார். இதே வேளை, பாட்டியின் சந்ததியினர் வெள்ளையர்களை மணம்
முடித்திருப்பார்கள்.
ஓ...!' என ஆச்சரியப்பட்டார் சுந்தரமூர்த்தி.
இதிலுள்ள இன்னொரு சுவராசியமான விஷயம்
என்னவென்றால், இவர்கள் அனைவரும் தங்கள்
இரத்தத்தில் இன்னமும் அபொர்ஜினி மரபணு இருப்பதாக உரிமை கோரி, அங்கீகாரம் பெற்றுள்ளதே!
இதனால் இவர்களுக்கு என்ன லாபம்?
மேற்கத்திய கலாசாரத்தில் கல்வி கற்று, முற்று முழுதாக
ஆங்கிலேயர்களாக வாழும் இவர்களுக்கு, மேலதிகமாக அபொர்ஜினி சலுகைகளும், கொடுப்பனவுகளும் கிடைக்குமல்லவா?
உஷாரான ஆக்கள்தான்! ஆஸ்திரேலிய அரசு இதை அங்கீகரித்ததா?
ஆம், போராடிப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுள் சிறந்த சட்ட வல்லுனர்கள்
இருந்தார்கள். இவர்களே அபொர்ஜினி மக்களை பல சபைகளில் பிரதிநிதித்துவப்
படுத்தினார்கள். அதனால் அங்கீகாரம் பெறுவது இலகுவாயிற்று. அது மட்டுமல்ல, இவர்களே அபொர்ஜினிகளின்
உரிமைகளுக்காக உரத்துப் பேசி அரசியல் செய்தார்கள். இதில் பெரும்பாலும் இவர்களின்
நன்மைகளே மேலேங்கி உள்ளன. ஆனால்...?
ஆனால் என்ன? இது மனித சுபாவம்தானே?'
இது எங்களை, இன்று வரை பாதிக்கின்ற விஷயம். பூர்வ குடி மக்களுக்காக, அரசாங்கத்தால்
வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்களையும், வேலை வாய்ப்பு முன்னுரிமைகளையும் பெரும்பாலும் தட்டிச்
செல்வது இவர்களே. இது உங்களுக்குத் தெரியாத விஷயமா? என ஆத்திரப்பட்டான் மாணவன்.
அவனது கோவம் நியாயமானதே. இம்முறை கல்விச்
சாலையில் கோரப்பட்ட பூர்வ குடிமக்களுக்கான கல்வி புலமைப் பரிசில்களுக்கு (Schlorship) ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவற்றுள் பெரும்பாலானவை, அபொர்ஜினி 'கலப்பினத்தவர்'களதே. கற்பூரம் அணைத்து
சத்தியம் செய்தாலும், அவர்கள் அபொர்ஜினி என்று
நம்ப முடியாதவர்கள். ஆனாலும் தாங்கள் ஒரு தூய அபொர்ஜினித் தாயின் சந்ததி என்று
சான்றிதழ் சமர்ப்பித்தார்கள். ஆங்கிலச் சூழலில், வசதியாக வாழ்ந்த கலப்பின அபொர்ஜினிகளின் கல்விச்
சான்றிதழ்களுக்கு முன்னால்,
புதர்களுக்கு
மத்தியிலிருந்து வந்த 'கறுப்பு' அபொர்ஜினி மாணாக்கர்களின்
விண்ணப்பங்கள் அடிபட்டுப்போயின.
வேலை வாய்ப்பு விஷயங்களிலும் நிலமை இதுதான் என
ஆரம்பித்த இளைஞன், திடீரென நீண்டு வளர்ந்து, கிளை பரப்பி நின்ற, பைன் மரத்தை நோக்கி
ஓடினான். அங்கு பெரியவர் அக்காமா உட்பட ஆண்களும் பெண்களும் போதை தலைக்கேறிய
நிலையில், குப்புறப்
படுத்திருந்தனர். சிலர் வாந்தி எடுத்தனர்.
அபொர்ஜினிகளின் இந்தக் குடி, வெள்ளையர்கள் பழக்கிய
குடி! இதுவே இவர்களுள் பலர் அல்பாயுசில் போவதற்கான காரணம். கட்டுப்பாடற்ற
இவர்களின் குடி உடலையும்,
கல்வியையும், பொருளாதாரத்தையும்
தின்றுவிடுகிறது. பெரியவர் அக்காமாவையும் கோமாளியாக்கி விடுகிறது.
சுந்தரமூர்த்திக்கு முன்னால், பெரியவர்கள் போதையில்
விழுந்ததை, மாணவர்கள் விரும்பவில்லை.
இதனை அவர்களின் உடல் மொழி மூலம் சுந்தரமூர்த்தி புரிந்து கொண்டார். எனவே மெல்ல
எழுந்து தனது தங்குமிடம் நோக்கி நடந்தார்.
கல்விச் சாலையில் பூர்வ குடிமக்களின் புலமைப்
பரிசில்களைத் தீதுமானிக்கும் நிர்வாக சபையில், இம்முறை சுந்தரமூர்த்தியும் ஒருவர். நிர்வாக சபை தீர்மானித்த முடிவில், அவருக்கு சிறிதும்
உடன்பாடில்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் படி
மற்றவர்களுடன் அவர் ஒத்துப்போக வேண்டியதாயிற்று. இதனால் புலமைப் பரிசில்
கொடுப்பனவுகள், மற்றும் சலுகைகள்
அனைத்தும், விதிகளின் பிரகாரம்
கலப்பின அபொர்ஜினிகளுக்கு கொடுக்கத் தீர்மானித்தார்கள். இதுவே சுந்தரமூர்த்தியின்
மன வேதனைக்கும் தூக்கம் இன்மைக்கும் காரணமாயிற்று.
தாங்கள் தலித்துக்கள், தாங்கள்
தாழ்த்தப்பட்டவர்கள், அதனால் பெரிதும்
பாதிக்கப் பட்டுள்ளோம் எனக் கூப்பாடு போடுபவர்கள் அனைவரும், அதைவைத்து ஆதாயம்
அடைந்தவர்களே என்பார் முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ. இது தமிழருக்கு மட்டுமல்ல, கலப்பின ஆதிவாசிகளுக்கும்
எப்படி பொருந்துகிறது என சுந்தரமூர்த்தி நினைத்துப் பார்த்தார்.
No comments:
Post a Comment