ஆசி கந்தராஜாவின் 'ஓர் அகதியின் பேர்ளின் வாசல்' வரலாற்றுத் தொடர் நவீனத்தையொட்டிய பின்னுரை...!
ஒரு பசுக்கன்றுக்கும்
தெரிந்த தேற்றம்
- செல்லையா சுப்ரமணியம்-
-1-
பாடசாலையில் நான் படித்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில்தான் தூயகணிதம் அறிமுகம். எட்டாம் வகுப்புவரை
எண்கணிதம்தான். தூயகணிதத்தில் இரண்டு பிரிவுகள். அட்சரகணிதம், கேத்திரகணிதம். இதில் கேத்திரகணிதம்தான் கொஞ்சம் சில்லெடுப்பு. பைதகரஸ் அது இது என்று பல தேற்றங்கள் உண்டு. ஏற்கனவே நிறுவப்பட்ட இவற்றை ஆதார சுருதியாய்க் கொண்டு கேட்கப்படும் கணக்குகளை நிறுவவேண்டும். இந்தத் தேற்றங்களை எமது
மண்டையில் ஏற்ற எல்லா ஆசிரியர்களாலும் முடிவதில்லை. ஒரு ஆசிரியர் மட்டும் உபகதை
சொல்லி வாழ்நாள் முழுக்க மறக்காதபடி உருவேற்றிவிடுவார்.
ஒரு தேற்றம் - முக்கோணியொன்றின் இரண்டு
பக்கங்களை ஒன்று சேர்த்தால் அதன் நீளம் அடுத்த பக்கத்தைவிடக் கூடியது.
இதை ஒரு பசுக்கன்றுகூட நிறுவிவிடும். பசுவை அந்த முக்கோணத்தின் ஒரு மூலைப்புள்ளியிலும் கன்றை இன்னொரு மூலைப்புள்ளியிலும் கொண்டுபோய் விட்டால் கன்று தூரம் குறைந்த வழியால்தான் தாயை நோக்கியோடும். முக்கோணியின் இரண்டு பக்கங்களை சேர்க்கும் நீளத்தைவிட மற்றப்பக்க நீளம் குறைவென்று அந்தக் கண்ணுக்குட்டிக்கே புரிகின்றபோது உங்களுக்குத் தெரியாதா என்ன? என்று அந்த ஆசிரியர் சொன்னபோது, அட இவ்வளவுதானா என்று கேத்திரகணிதம் லேசானது.
அதேபோல ஜெர்மனியின் பின்புலம், பூகோள அமைப்பு, ஹிட்லரின் பேராசை, அதனால் அவர் புரிந்த அடாவடித்தனம், எதிராக அணிதிரண்ட ஏனைய மேற்குலக நாடுகள், அவற்றின் ராஜதந்திரங்கள், இறுதியில் பேர்ளின் வாசல் அகதிகளுக்காய் எப்படித் திறந்தது என்ற அரசியல் பாடத்தை ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த கதையோடு பின்னிப் பிணைத்து வகுப்பெடுத்த அசாத்தியத் திறமை படைத்த பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்களால் சிக்கல் நிறைந்த புவியியல் பாடத்தின் இலகுத்தன்மை எமக்குச் சாத்தியமானது.
தொடர்ந்து 19 வாரங்கள் வரலாற்றுத் தொடராக ஞாயிறு தினக்குரலில் வந்த ஆசி கந்தராஜாவின் 'ஓர் அகதியின் பேர்ளின்
வாசல்' முழுநீள நவீனம்
எமக்குச்சொன்ன பாடம் இது.
‘பொட்ஸ்டம்’ உடன்படிக்கை என்றால் என்ன? அது அகதிகளின்
பரம்பலுக்கு எப்படி வரம் கொடுத்தது? என்று பலதும் பத்தையும்
பங்குக்காணிக்குள் நடுக்கிணறு வைத்து விளக்கியதெல்லாம் நாவலாசிரியரின் நயமான
எழுத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. உதட்டிலே நெளிந்து வளைந்து முறுவலித்தோடும்
புன்னகையைத் தோற்றுவிக்கும் இங்கிதமான அங்கதச்சுவை நிறையவே கதைமுழுக்கப்
பரவிக்கிடக்கிறது.
‘ஜெர்மனி ஏதோ நாலு
பரப்புக்காணி என்ற நினைப்பில் பாலமுருகனைத் தேடிப்பிடிக்கலாம். அவனோடிருந்து
தினமும் சோறு தின்னலாம் என்று தவராசா கனவு கண்டான்’ - இதுதான் ஆசி.
பிரச்சினைக்குள் சிக்கித்திணறும் கதைமாந்தர்கள்
உலவும் இக்கதைக்குள் இப்படி அநாயசமான நையாண்டிச்சுவை இடைக்கிடை நகைத்துக்கொண்டே
பயணிக்கிறது. அது மட்டுமல்ல, ஆண்களும் பெண்களும் ஆடும்
டிஸ்கோ நடனத்தில் ‘பாபிலோன் பாடலுக்கு
தோளில் ஒரு இடி. மார்பில் பக்கவாட்டில் அடுத்த இடி. பின்னர் சுழன்றடித்து
பிட்டத்தில் இடி என ஆட்டம் அமர்க்களப்படும்’ என்று போகும் சிருங்கார ரஸமாகட்டும், தவராசா ஒரு சிக்கலில் மாட்டி நிற்க ஆபத்பாந்தவனாக பால்ய நண்பன் பாலமுருகன் வந்த காட்சியின்போது,
‘தமிழ் கேட்டுக் குரலுடைந்தான்’
‘கைகள் நடுங்கியதால்
கைவிலங்கு சத்தமிட்டது’
‘விக்கலும் கேவலும்
ஒருங்கே வெடித்துக்கிளம்ப பாலமுருகா என விம்மினான்’
‘கண்ணீர், காற்றாடியின் வேகத்தில் துளிகளாய் காற்றில் கலந்தது’ போன்ற சோகம் கப்பிய எழுத்துக்களாகட்டும் அனைத்துமே சிறப்புடன் கையாளப்பட்டிருக்கின்றன.
-2-
ஒரு ஏழாம் எட்டாம்
வகுப்புப் பையன் அந்தக்காலத்தில் வீரகேசரியில் தினந்தோறும் வந்த ‘சவாரித்தம்ப’ரின் நக்கல் நையாண்டி
நகைச்சுவையால் ஈர்க்கப்பட்டு அவற்றை ஏனைய மாணவர்கள் மத்தியில் நின்று பேசி
நடித்துக்காட்டி சமா வைக்க,
அதைக்கண்ட வாத்தியொருத்தர்
அம்மாணவனின் தந்தையான சக ஆசிரியரிடம் அள்ளிவைக்க, சம்பவம் சேடம் இழுக்கத்தான் போகுது இண்டைக்கு என்று பயந்துபோய்
வத்திவைத்த வாத்தியை மனதுக்குள் திட்டிக்கொண்டே அந்தப்பையன் தகப்பன்முன் போய்
நிற்கிறான். அன்று அவனது தந்தை, ஒரு சிறிய அறிவுரையோடு காட்டிய பச்சை விளக்கு இன்று அவனை
எழுத்துலகில், இலக்கிய வலயத்தில், கலைக்கடலில் உச்சத்தில்
வைத்து உச்சாடனம் செய்கிறது. அன்று ஆசியின் தகப்பன் சின்னத்தம்பி வாத்தியார் 'உதெல்லாம் கவைக்குதவாது
தம்பி. வயித்துக்குச் சோறு போடாது. நீ படிக்கிற வேலையை மட்டும் பார்' என்று உறுக்கியிருந்தால்
இன்று எமக்கொரு இலக்கிய வள்ளல் கிடைத்திருக்கமாட்டார். தமிழுக்கு புனைவுக் கட்டுரை என்றொரு
புதுத்தளம் திறந்திருக்காது. அனைத்து ஏனைய எழுத்தாளர்களிலுமிருந்து வேறுபட்டு
கனகச்சிதமாய் கட்டுக் கோப்போடு கதை சொல்லும்
பாங்கை ரசிக்கும் பாக்கியம் எமக்குச் சித்தித்திருக்காது.
இவையெல்லாம் வீரகேசரி பத்திரிகையின் சங்கமம் பகுதியில் முன்னர் வெளிவந்த ஆசி கந்தராஜாவின் 'முதல் பிரசவம்' என்னும் கட்டுரையில் நான்
வாசித்து அறிந்துகொண்டவை.
-3-
இயல்பாகவே ஆசி அவர்கள் நகைச்சுவையுணர்வு
மிக்கவர். அவரது எழுத்திலே அது கரைபுரண்டு ஓடுவதால்தான் கதைக்குள் வரும் சிக்கலான
உலக விவகாரங்கள் மற்றும் பல்லினப் பண்பாடுகளின் முரண்கள், ஒத்திசைவுகள்
என்பவற்றையெல்லாம் ஒரு புன்னகையோடு விளங்கிக்கொள்ள முடிகிறது.
இதுவரை இவர் எழுதிய சிறுகதைகள், குறுநாவல்கள், புனைவுக்கட்டுரைகள், நாட்குறிப்புகள் ஏராளம்.
பெற்ற விருதுகளும் அப்படியே. அந்த வரிசையில் இந்தப் புதினமும் எடுத்தாளப்பட்ட
கருப்பொருளால் தனித்துவம்மிக்கதாக மிளிர்கிறது.
இங்கேயும் தன் கதைசொல்லும் உத்தியென்னும் முத்திரையைக் குத்தி உலக வரைபடமெல்லாம் எப்படி உடைகிறதென்று கதை சிருஷ்டித்து, ஈழத்தமிழனது
அகதிவாழ்வுக்கு அது எப்படிக் கைகொடுத்தது என்று முடிச்சவிழ்க்கிறார்.
இவர் ஒரு பேராசிரியர், விஞ்ஞானி, எழுத்துலக ஜாம்பவான்
என்பதையெல்லாம் தாண்டி வானொலியாளர், நாடகவிற்பன்னர், சிறந்த மேடைப்பேச்சாளர் என்பவையெல்லாம் அவரது மணிமகுடத்திற்கு மேலும் அணிசேர்ப்பன
மட்டுமல்லாமல் அவை அவரது எழுத்தையும் ஏதோவொரு வித்தியாசமான கோணத்தில்
செதுக்கிச்செல்வதாகவும் படுகிறது.
அகதியாய்ப்போன தவராசாவின் தறிகெட்ட வாழ்வை, வளர்மதியின் அவலத்தை
அலசுகின்ற கதை படிக்கப்போன பாலமுருகனின் நிழலாய்த் தொடரும் பட்டும் படாத காதலின் மென்மையையும் மேன்மையையும்கூட அடிநாதமாய்த்
தொட்டுச்செல்கிறது. இடையில் நந்தினியின் வருகைகூட அவனது கனவுக் காதலைக் கலைக்க முடியவில்லை என்பது
கதைக்கொரு மதிப்பைக் கொடுக்கிறது.
‘ஒரு கதையென்றால் அதன் கரு, கருக்கட்டிய உயிராய்த்
திடமாக இருக்கவேண்டும். நல்லதோ கெட்டதோ படிப்பினையொன்றைக் கூறவேண்டும்.
வரலாற்றையொட்டிய விஷயமென்றால் அதன் எல்லாப் பக்கத்தையும்
அலசவேண்டும். இல்லையெனில் எதிர்காலச் சந்ததிக்கு உண்மையை
மறைத்த ஒரு சரித்திரச்சறுக்கலாகிவிடும்’ - இது பேராசிரியரின்
அசைக்கமுடியாத நிலைப்பாடாகத்தோன்றுகிறது. இந்தத் தார்மீகச் சிந்தனை சரியென்றே எனக்கும் படுகிறது. அதனால் ‘எல்லோரும் நல்லவரே’ என்ற எடுகோள்
அடிபட்டுப்போக இந்தப் பூமிப்பந்தில் நல்லதும்
உண்டு கெட்டதும் உண்டு என்ற யதார்த்தம் அவர் எழுத்தில் மேலோங்கிச்செல்வதைக்
காணலாம்.
கார்ல்மார்க்ஸின் பொருளாதாரத் தத்துவத்தின்படி, ‘பணம் என்பது
சுற்றிச்சுழலவேண்டிய ஒரு பொருள்’ என்று இக்கதையிலே வரும் கிழக்கு ஜெர்மன் பேராசிரியர் சொல்வதுபோல் இந்த நாவலும்
ஒரு வரலாற்றுத்தொடர் என்ற வகையில் ஈழத்தில் சூல்கொண்டு வீசிய இனவழிப்பு என்ற
காற்றலையால் இந்தியா, மொஸ்கோ,
கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியென்று சுற்றிச் சுழன்று அடித்துச் செல்லப்பட்ட மேகமாய்
இறுதியில் உடைந்து ஒரு நெருப்பு மழையாய்ப் பொழிந்தபோது, எமது சமூகவிழுமியத்துக்கு
முரணான, ஆனால் தமிழுக்கு ஒரு
புதிய ஆச்சரியமிக்க முடிவைக் கொடுத்தது. இது சிலரால் ஜீரணிக்கமுடியாமலும்
இருக்கலாம். ஆனால் உலகம் எப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை
ஜீரணித்தே ஆகவேண்டுமென்ற நிலையில் இன்றைக்கு மனிதசமுதாயம் இருக்கிறது என்பதுதான்
நிஜம்.
நிறைவாய் ஒன்று!
ஏனைய பத்திரிகைகளுடன் ஒப்பிடுகையில் ‘தினக்குரல்’ தொடர் ஆக்கங்களுக்கு
கணிசமான இடம் ஒதுக்கி பிரசுரிப்பதை பாராட்டவேண்டும். தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டு எதிர் காலத்திலும் தரமான
பயனுள்ள தொடர் நவீனங்களைப் பிரசுரிக்க வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment