Sunday, 12 December 2021

12. 12. 2021 உதயன் சஞ்சீவியில்

பணச்சடங்கு:

யாழ்மண்வாசம் வீசும் அந்நிய நிலங்கள்

-அலைமகன்-



ஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசி கந்தராஜா அவர்கள் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். புனைவுக்கட்டுரைகள், சிறுகதை, குறுநாவல் என பல பரிமாணங்களில் படைப்புக்களை தந்துள்ள அவரின் சமீபத்திய வரவு பணச்சடங்கு எனும் சிறுகதைத் தொகுப்பு. நூலாசிரியர் உலகம் சுற்றியவர். விவசாய நிபுணராக உலகின் பல பல்கலைக்கழகங்களில், பல்வேறுபட்ட கலாச்சார வெளிகளில் மனிதர்களை சந்திக்கும், அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். தான்கண்டறிந்த, அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக புனைவுகளாகவும், புனைவுக்கட்டுரைகளாகவும் கொடுக்கும் இலக்கிய தாகம் நிறைந்தவர்.

பொதுவாகவே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய அவதானம் ஒன்றுண்டு. அதாவது தங்களின் தாயகத்து வாழ்க்கையைப்பற்றி தங்கள் படைப்புக்களில் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் அது. இந்த நனவிடைதோய்தல் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தங்களின் இளம் பருவத்தை வடிவமைத்த  நினைவுகளே ஒரு மனிதனில் ஆழ்மன உணர்வுகளில் அவனது வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. அந்த நினைவுகளை இலக்கியத்தில் வடிக்க முடியாதவர்கள் அல்லது அந்த நினைவுகளை வாழ்க்கைப்போட்டியின் அவசரத்தில் தொலைத்துவிட்டவர்கள் தூரதிஷ்டசாலிகள்.

முதலில் இந்தபணச்சடங்கு சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் பல சிறுகதைகளில் கதாபாத்திரங்களின் நனவிடைதோய்தல் உண்டு. அந்த வகையிலே இது புலம்பெயர் தமிழனின் கதைதான். கதை நடைபெறும் நிலங்கள் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் இந்த சிறுகதைகளில் உள்ள ஒரு முக்கியமான விடயம் நுணுக்கமாக அவதானிக்கப்பட வேண்டியது. இவற்றை வெறுமனே நனவிடைதோய்தல் என்று மட்டுமே சுருக்கிவிடமுடியாது.

யாழ் சமூகத்தைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு விமர்சனம் அது ஒரு கிடுகு வேலி கலாச்சாரம் (Thatched fence culture) என்பது. அது தானாகவே “மற்றவர்களிடமிருந்து" அந்நியமயமாகி இருக்கும் அதேவேளை மற்றையவர்களின் வெளிக்குள் பிரவேசிக்கும் "பனம்கொட்டை" குணமும் கொண்டது. யுத்தமும் இடப்பெயர்வும் கிடுகுவேலியை கிழித்துப்போட்டுவிட்டது மகிழ்ச்சியே. ஆனாலும் வடபகுதி தமிழர்களின் பல மரபான குணங்கள், அவற்றின் கீழ்மைகள், ஆசாபாசங்கள் பற்றி நாம் இன்றுவரை பெரிதாக சுயவிமர்சனம் செய்வதில்லை.

ஏற்கனவே "பாவனை பேசலன்றி" எனும் குறுநாவல் மூலம் தமிழ்க்கலாச்சாரத்தின் போலித்தனங்களை விமர்சனத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் பல சிறுகதைகளில் இங்கும் அவற்றை வெளிப்படுத்துகிறார். வேதிவிளையாட்டு, பணச்சடங்கு, எதிலீன் எனும் ஹோர்மோன் வாயு போன்ற சிறுகதைகள் சிறந்த உதாரணங்கள். யாழ்ப்பாண குடும்ப அமைப்பும் உறவுகளும் ஏனைய கலாச்சாரங்கள் போலவே கீழ்மைகள், தந்திரங்கள், அறமீறல்கள் கொண்டதுதான் என்பதை இவை சுவாரசியமான நடையில் அறைந்து சொல்கின்றன.

இரண்டாவதாக இந்த நூலில் காணப்படும் சில கதைகளில் முன்னைய தொகுப்புகளில் தமிழ் அரசியலும், உலக அரசியலும் சற்றுத் தூக்கலாக வெளிப்படுகின்றன. தலைமுறை தாண்டியகாயங்கள், நரசிம்மம் போன்ற சிறுகதைகள் நல்ல உதாரணம். எதிரியுடன் படுத்தவள் கதை பலஸ்தீன இளைஞனை காதல் மணம் புரிந்த அவீவா எனும் யூதப்பெண்மணியின் கதை. வழமையான கலப்பு மணங்களில் காணப்படும் சமூகச்சிக்கல்களுக்கு அப்பால் இக்கதை இன்னொரு பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது. ஜெர்மனிய நாஜிகளால் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட யூத இனம் இப்போது சியோனிச தாக்கத்துக்கு உட்பட்டு மோசமாக பஸ்தீனியர்களை ஒடுக்குவது துயரகரமான யதார்த்தம். பலஸ்தீனியர்களை மட்டுமன்றி சமூக ஓரங்களில் இருக்கும் யூதர்களைக்கூட அது பாரபட்சமாக நடத்துகிறது. வரலாற்றுக்கு முன்னால் நீதிக்கு பொருள் இல்லை என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது.

நூல்முழுவதும் பரவிக்காணப்படும் யாழ்ப்பாணச் சொல்வழக்குகளும், பண்பாட்டு அவதானிப்புக்களும் பனங்கூடலுக்குள் நுழைந்துவிட்ட களிப்பைத்தருகின்றன. என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் புலம்பெயர்ந்த நிலங்களில் நமது பண்பாட்டுக்கூறுகளை சந்திக்க நேரிடும்போது அவற்றின் மீதான விமர்சனங்கள்  மறைந்து நமக்கு உவகை பெருகுகிறது. பணச்சடங்கு தொகுப்பு எல்லா வயதினருக்கும் வாசிப்பின்பத்தை அளிக்கும் அதேவேளை இளையோருக்கு பல புதிய தகவல்களையும் அளிக்கிறது.

இது இலங்கை 'எங்கடபுத்தகங்கள்' வெளியீடு.

No comments:

Post a Comment