Wednesday 8 March 2023

மரங்களும் நண்பர்களே!

பேராசிரியர் ஆசி கந்தராஜா.

மனிதர்கள் மட்டுமல்ல, மரம் செடி கொடி பூண்டு யாவும் எமது நண்பர்களே.


எங்கள் ஊருக்கு அப்போது மின்சாரம் வரவில்லை. துலாக் கிணறு, அரிக்கன் லாம்பு, விறகடுப்புடன்தான் வாழ்க்கை. நாங்கள் குடியிருந்த காணி, ஒரு சொரியல் காணி. அடி வளவிலுள்ள துலாக் கிணறும் சொரியல் கிணறுதான். இது அயல் வீட்டாருக்கும் சொந்தமானதால், குளிக்கிற தண்ணி எந்த வாய்க்காலில் பாய்வதென்பதில் சண்டைவரும். எங்களுடன் வாழ்ந்த ஆச்சி, அம்மாவின் அம்மா, வலு கெட்டித்தனமாக இதைச் சமாளிப்பார். அவர் ஒரு கைம்பெண். எத்தனையோ விஷயங்களைத் தனித்து நின்று சமாளித்ததால் வைரம் பாய்ந்த மனுஷி. வெற்றி தோல்விகளை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை ஆச்சியிடம்தான் கற்றுக்கொள்ள வேணும். இப்படிப்பட்ட ஆச்சியின் வழி காட்டலில் நாங்கள் கூட்டுக் குடும்பமாகக் குடியிருந்தோம்.

எங்கள் ஊர், ஒரு கலட்டிப் பாங்கான பூமி. இருந்தாலும் பலர் கமத்தை நம்பியே வாழ்ந்தார்கள். பாட்டன், பூட்டன் காலத்தில், கல்லுக் கிளப்பி, மண்கொட்டி, இருவாட்டி மண்ணாக்கப்பட்ட தோட்டங்களில், காசுப் பயிர்களான தறிகாம்பு புகையிலையும், மிளகாயும், பட்டை இறைப்பிலும், மாட்டெருவிலும் அமோகமாக வளர்ந்தன. மேலதிகமாக, கலட்டி நிலங்களை உழுது, விவசாயிகள் வரகு விதைத்தார்கள். புகையிலை வெட்டிய கையோடு தோட்டத்தில் சாமையும் குரக்கனும் பயிரிட்டார்கள்.

நான் ஊரிலிருந்த காலங்களில் வீட்டைச்சுற்றி ஆச்சி நிறைய மரங்களை நட்டிருந்தார். அவற்றுக்கு நானே அடிவளவுக் கிணற்றிலிருந்து தண்ணி அள்ளி, ஊற்றுவேன். அவற்றின் வளர்ச்சி என்னைப் பூரிக்க வைத்தது. பாட்டன் காலத்தில் நட்ட தென்னை மரங்கள் நிறையக் காய்த்தன. இடையிடையே கமுக மரங்கள். கிணத்தைச் சுற்றி கதலி, கப்பல், மொந்தன், என வாழை மரங்களை பெரியம்மா நட்டிருந்தார். இவைகளுக்கு குளிக்கிற தண்ணீர் ஒழுங்காகப் பாய்தது.

அடி வளவில் இரண்டு பலா மரங்கள் நின்றன. அதில் ஒன்று, கிணத்தையொட்டிச் சடைத்து நின்ற செண்பகவரியன் இனம். சோக்கான பழம், தேன் ஒழுகும். மற்றது கூழன் பலா. இதன் சுளைகள் சிதம்பிய நிலையில் இருக்கும். தொண்டையால் இறங்காது. இதனால் பழுக்க முதலே அதை பிஞ்சிலே ஆய்ந்து, அரிந்து ஆச்சி ஆட்டுக்கு வைத்துவிடுவார். ஆட்டுக் கொட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு கறுத்தக் கொழும்பான் மாமரம், அரைப் பரப்புக் காணியை ஆக்கிரமித்திருந்தது.

வீட்டுக் குசினியை அண்டி, சட்டி பானை கழுவும் இடத்தில் அம்மா இதரை வாழைகளை நட்டிருந்தார். அது யாழ்ப்பாணத்து இனம். பழம் சிறிது, ஆனாலும் சுவை அதிகம். இதரை வாழை மர மடலுக்குள்த்தான் ஆச்சி வெத்திலை, இஞ்சி போன்றவற்றை வைத்து மரத்துடன் மடலைச் சேர்த்துக் கட்டிவிடுவார். மின்சாரம் இல்லாத அன்றைய காலங்களில் அதுதான் எமது குளிர்சாதனப் பெட்டி. யாழ்ப்பாணத்து இதரை இனத்தை 'குருக்கன்' எனப்படும் வைரஸ் நோய் தாக்காது. இருந்தாலும் இந்த இனம் இப்பொழுது பராமரிப்பின்றி அழிந்துவிட்டதால், கொழும்பு இதரையே குடாநாட்டிலும் பயிரிடப்படுகிறது. இவற்றின் பழம் பெரிதென்றாலும், சுவையில் யாழ்ப்பாண இதரைக்கு கிட்டவும் நிக்காது.

ஊரிலுள்ள மரங்களெல்லாம், பெரும்பாலும் 'காடுவசாரி'யாய், கட்டுப்பாடின்றி வளர்ந்தனவே. மரங்களை முறைப்படி கவ்வாத்துப் பண்ணி வளர்த்தால், ஒரு மரம் நின்ற இடத்தில் பல மரங்களை நட்டு நிறைய பலன் பெறலாம்.

மா மரங்கள் உலர் வலயத்துக்கே உரித்தான பயிர். அவை குளிர் பிரதேசத்தில் நல்ல விளைவைக் கொடுக்கமாட்டா. விஞ்ஞானரீதியாக பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை, நிறைகுளிர் வகை, குளிர் தேவையற்ற வகை, தாவர உடற்கூறு இயல்பின்படி அப்பிள் போன்ற தாவரங்கள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் குளிர் தேவை. ஆனால், மாமரம் பூப்பதற்கு குறிக்கப்பட்டளவு வெப்பம் தேவை.

ஐரோப்பாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளை யாழ்ப்பாண சுவாத்தியத்தில் வளர்த்தால் அவை நல்ல விளைவைக் கொடுக்கமாட்டாது. இதே போல, நுவரேலியாவில் வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

இலங்கையில், மா மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பின்வளவிலேயே நிக்கும். தன்னிச்சையாக வளர்ந்து பெரிய இடத்தை பிடித்துக் கொள்ளும். மாமரங்களை வரிசையாக நடவேண்டும். கறுத்தக் கொழும்பான் மாமரங்களை நடும்போது, வரிசைகளுக்கு இடைப்பட்ட தூரம் ஏழு மீட்டரும், வரிசையிலுள்ள மரங்களுக்கிடையில் ஆறு மீட்டரும் இருக்க வேண்டும் என்கிறது உசாத்துணை நூல்கள். இது கறுத்தக் கொழும்பான் ஒட்டுக் கண்டுகளுக்கே பொருந்தும்.

பாரம்பரிய மா மர இனங்களை எவரும் கவ்வாத்துப் பண்ணுவதில்லை. இலங்கையில் மாம்பழத்துக்குப் பெயர்போன யாழ்ப்பாணத்திலே வணிக ரீதியாக, தோட்டத்தில் அல்லது தோப்பில் மாமரங்கள் வளர்க்கப் படுவது குறைவு. அது மட்டுமல்ல இலங்கையில் ரொம் ஈ.ஜே.சி (ரீஜேசி) என்ற புதிய மாமர இனம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு எமது பாரம்பரிய இனங்களான கறுத்தக் கொழும்பான், செம்பாட்டான, அம்பலவி போன்ற மாமரங்களை நடுவதும் பராமரிப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளது. அத்துடன் பாரம்பரிய இனங்கள் அதிகம் காய்பதில்லை என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுவதுண்டு. இது மரத்தின் குற்றமல்ல. மாமரங்களைப் பராமரிக்காத மனிதர்களின் குற்றமே. 

மாமரத்தில் இளம் கிளைகளின் நுனிக்குருத்தே பூக்களாக மாறும். பெரிய மா மரங்களின் கிளைக்கூடலின் உட்பகுதியில் இளம் குருத்துக்கள் இல்லாததால் மாமரத்தின் கிளைக்கூடலின் வெளிப்பகுதியில் மாத்திரம், பூக்கள் தோன்றி மாங்காய் காய்க்கும். உட்பகுதிக் கொப்புக்களிலுள்ள கிளைகளில் மிக அரிதாகவே பிஞ்சுகள தோன்றும். மாமரத்தைக் காட்டு மரங்கள்போல வளரவிடின், ஒரு பரப்புக் காணியில் ஒரு மாமரம் வளரவே இடம் காணும். இதுவே நாம் நமது பாரம்பரிய மாமர வளர்ப்பில் விட்ட தவறு. 

மாங்காய் பிடுங்கியவுடன் மரத்திலுள்ள அரைவாசிக் கிளைகளை, குத்து மதிப்பாக நான்கு சென்றி மீற்ரர் கீழே வெட்டிவிடவேண்டும். இந்த 'வெட்டு' கிளையிலுள்ள கணுவுக்கு மேலே இருக்கவேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் மாரி மழைக்கு, கணுவில் இருந்து பக்க அரும்புகள் தோன்றி வளர்ந்து, அதன் நுனிக் குருத்து அடுத்த வருடம் பூக்காம்பாகும். இதேபோல அடுத்த வருடமும் மிகுதிக் கிளைகளை வெட்டிவிட வேண்டும். இந்தவகையில் ஒரு பெரிய மரத்தின் கிளைக் கூடலின் வெளிப்புறத்தில் காய்க்கும் மாங்காய்களைவிட, சிறிய கிளைக்கூடல்கள் கொண்ட பல மாமரங்களில் அதிக மாங்காய்களைப் பெறமுடியுமென்பதை அனுபவ ரீதியாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

கொய்யா, அவக்காடோ, மாதுளை போன்ற மரங்களில் பக்க கணுவிலிருந்தே பூக்கள் தோன்றுவதால், இவற்றை ஆழமாகவும் கவ்வாத்து பண்ணலாம். வருடாவரும் கொஞ்சம் கொஞ்சமாக கிளைகளைக் கவ்வாத்துப் பண்ணினால், பழங்களின் எண்ணிக்கை சீராக இருக்கும்.

கவ்வாத்து என்பது அந்த தாவரத்தின் உடற் தொழிற் பாட்டுக்கும் கால நிலைக்கும் இயைந்ததாக இருக்கவேண்டும். கண்டபடி கிளைகளை வெட்டி எறியக்கூடாது. கவ்வாத்துப்பண்ணுவதற்கு முன்பு கமத்தொழில் இலகா உத்தியோகத்தர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். கண்டபடி வெட்டிவிட்டு, காய்க்கேல்லை என்று என்னைக் குற்றம் சாட்டவேண்டாம்.

தற்போது புதிய இனமான ரீஜேசி மாமரங்களை கவ்வாத்துப் பண்ணுவதை இலங்கையில் கண்டிருக்கிறேன். அந்த முறையையே, நமது பாரம்பரிய இனங்களுக்கும் பாவிக்கலாம்.

புதிய இனங்களை வரவேற்கும் அதே வேளை நமது பாரம்பரிய இனங்களையும் அழியவிடாது காப்போம். என்னதான் இருந்தாலும் எங்கடை யாழ்ப்பாணத்துக்கு பெருமை சேர்த்த கறுத்தக் கொழும்பான் மாம்பழமும், கொடிகாமத்து பிலாப்பழமும், நீர்வேலி மண்ணில் விளைந்த இதரை வாழைப்பழமும் எமது இனத்துவ அடையாளமல்லவா?

 

No comments:

Post a Comment