சீட்லெஸ் மாம்பழங்கள், சாத்தியமா?
ஆசி கந்தராஜா.
2022ம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் ஒரு
காட்சி வரும். முதிய விவசாயி ஒருவர் தக்காளி விதைகள் வாங்க, கடைக்குப் போவார்.
வியாபாரி தக்காளி விதைகளைக் காட்டி இது ஹைபிறிட் விதை, கொத்துக் கொத்தாய்க்
காய்க்கும், கூடைகூடையாய் அள்ளலாமெனச்
சிலாகித்துச் சொல்வார்.
ஓ… அப்படியா, அடுத்தமுறை நான் விதை
வாங்க கடைக்கு வரவேண்டாமல்லவா. அறுவடைசெய்யும் பழங்களில்
இருந்து விதைகளை எடுத்துப் போடலாம், என்பார்.
இல்லை, வந்துதான் ஆகணும். இதிலை விதையே இருக்காது.
அதெப்படி? ஈச்சமரம், எலந்தைமரம், மாமரம் எல்லாத்திலும்
விதையிருக்கு. எப்படித் தக்காளிக்கு விதையில்லாமல்போகும்? இது முதியவரின் கேள்வி.
இது கலப்பு விதை, வெள்ளைக்காறன் செஞ்சது. விதை இருக்காது, என்பார் வியாபாரி.
அவனுக்குமாத்திரம் எப்படி விதை கிடைச்சுது? இந்த விதையைக்
கண்டுபிடிச்சவனுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்து, அதுக்கு விதைக்கொட்டை இல்லாமல் இருந்தால், அப்ப தெரியும் அவனுக்கு, எனச் சொல்லிவிட்டு விதையை
வாங்காமலே போய்விடுவார் முதியவர்.
இந்தக் காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்து இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணம் கொட்டையில்லாத பழங்களுக்கான மக்களின் அங்கலாய்ப்பும் அதை விருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் ஆராச்சி முனைப்புக்களுமே.