Thursday 4 April 2024


அப்பிள் இலங்கையின் உலர்வலயத்தில் பூத்துக் காய்க்குமா?

இல்லை என்பதே இதற்கான பதில்.

நல்ல இன அப்பிள் விதைகளை ஐரோப்பாவில் வாங்கிச் சென்று இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விதைத்து வளர்க்கும் முயற்சியில் சிலர் முயன்றுள்ளதாக அறிகிறேன். இவர்களின் ஆர்வத்தைப் பாராட்டும் அதேவேளை, ஐரோப்பிய அப்பிள் இனங்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில கிளைவிட்டு வளர்ந்தாலும் அவை ஒருபோதும் மொட்டரும்பி பூத்துக் காய்க்காது. வீணாக நட்டமடையாதீர்கள்!

அப்பிள் மரங்கள் கடும்குளிர் சுவாத்தியத்துக்கே உரித்தான பயிர்.

விஞ்ஞானரீதியாக பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை (Low Chill – பீச், பிளம்ஸ்), நிறைகுளிர் வகை (High Chill -அப்பிள்), குளிர் தேவையற்ற வகை (No Chill - மா பலா).

தாவர உடற் கூறு இயல்பின்படி அப்பிள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் (freezing temperature hours) தேவை.

எனவே ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளை, இலங்கையின் வெப்மான வலயத்தில் வளர்த்தால் அவை கிளைவிட்டு வளரும் ஆனால் பூத்துக்காய்க்காது.

அப்பிள் மரங்கள் வின்ரர் (Winter) காலங்களில் இலைகளை முற்றாக இழந்து அதன் நுனி மொட்டுக்கள் உறைந்துபோய் இருக்கும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் Winter காலங்களில் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் அப்பிளுக்குத் தேவை. பின்னர் வசந்த காலங்களில் (Spring) வெப்பநிலை கூட மொட்டுக்கள் அரும்பி பூவாகி காய்க்கத் துவங்கும். குறிப்பாகச் சொன்னால் வின்ரரில் கிடைத்த உறைகுளிர் நிலையின்போது, அப்பிள் தாவரத்தின் கலங்களுக்கு உள்ளே மொட்டரும்பி பூப்பதற்கான  ஹோமோன் ஆயத்தங்கள் நடக்கும். (உறைகுளிர் கிட்டத்தட்ட 5 பாகை சதமளவுக்கு (C) கீழே. இது அப்பிள் இனத்துக்கு இனம் மாறுபடும்).

இந்தியா காஸ்மீரில் வளரும் அப்பிள், குறை குளிர் வகை (Low chill variety). அவை நுவரெலியாவின் மலை உச்சிகளில் காய்க்கும். ஆனால் ஐரோப்பிய வகை பூக்காது, காய்க்காது.

இதே போல, நுவரேலியாவில் நன்கு வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் நன்கு பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

ஆசி கந்தராஜா. சிட்னி.

 


No comments:

Post a Comment