காலச்சுவடு ஜூன் 2024 இதழில், அறியப்பட்ட பெரும் எழுத்தாளர் பெருமாள் முருகன்...
மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்
2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே.முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். நேரம் அதிகம் கிடைக்கும் டாக்டர் போல, ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சாதாரணமாக நினைத்துவிட்டேன்.
ஊருக்கு வந்து அந்நூலைப் புரட்டினேன். அவர் எழுதிய பதினான்கு
நூல்களின் பட்டியல் கடைசிப் பக்கத்தில் இருந்தது. அதில் ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ என்னும் நூல் தலைப்பைப்
பார்த்ததும் பரவசமானேன். அந்த அருமையான நூலை எழுதிய மருத்துவரா இவர்? 1994இல் என் மனைவி
கருவுற்றிருந்த போது தனித்துச் சென்னையில் வசித்த எங்களுக்கு வழிகாட்டும் கையேடாக அந்நூல்
விளங்கியது. அப்போது வைகறைவாணன் அடையாறில் பொன்னி அச்சகமும் சிறுபுத்தகக் கடையும் நடத்தி
வந்தார். என் ‘நிழல்முற்றம்’ நாவல் அங்கே அச்சாயிற்று. அதற்காகச் செல்லும்போது இந்த
நூலைக் கண்டு வாங்கி வந்தேன்.
மருதுவின் கைவண்ணத்தில் அழகான அட்டையும் நல்ல வடிவமைப்பும்
கொண்ட நூல். இலங்கையில் ஒருபதிப்பும் தமிழ்நாட்டில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக
மூன்று பதிப்புகளும் வந்திருப்பதாகத் தகவல் தெரிந்தது. நான் 1994இல் வாங்கிய நூல் சென்னையில்
அச்சாகி இலங்கையில் வெளியான முதற்பதிப்பாக இருக்கலாம். இலங்கை தேசிய சாகித்திய விருது
பெற்ற நூல். அதை நாங்கள் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் பலருக்கும் வாங்கிப் பரிசளித்திருக்கிறோம்.
சமீபத்தில்கூட அந்நூலைப் பற்றி நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம். பலருக்குப்
பரிசளித்தும் பரிந்துரைத்தும் வந்த நூலின் பிரதி
இப்போது கைவசம் இல்லை. யாருக்கோ இரவல் கொடுத்துத் திரும்பி வரவில்லை. இப்போது
அச்சில் இருப்பதாகவும் தெரியவில்லை.
2024இல் தான் சந்தித்தாலும் தம் நூல் வழியாக முப்பது ஆண்டுகளுக்கு
முன்னரே அறிமுகமான டாக்டர் ஆயிற்றே, சந்திக்கும்
வாய்ப்பு அமைந்தும் அந்நூலைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசாமல் வந்துவிட்டேனே என்னும்
வருத்தம் ஏற்பட்டது. அந்நூலாசிரியர் இவராகத்தான் இருப்பார் என்று சிறுசந்தேகம்கூட ஏற்படவில்லை.
என்னையே நொந்துகொண்டு பரிகாரமாக ‘டாக்டரின் தொணதொணப்பு’ நூலை வாசித்தேன். தம் மருத்துவ
அனுபவங்களைச் சிறுசிறு கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பு இது. அன்றாடம் பலரைச் சந்திக்கும்
வேலை அவருடையது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஆனால் மனதில் ஒருவர் பதிவதற்கு ஏதேனும்
தனிக் காரணம் இருக்க வேண்டும். அத்தகையவர்களை எல்லாம் நினைவில் நிறுத்தி வெகுசுவையாகக்
கட்டுரைகளை டாக்டர் எழுதியிருக்கிறார்.
மருத்துவருக்கு இருக்கும்
முதன்மைச் சிக்கல் மக்களில் பெரும்பான்மையோர் தம்மைத் தாமே மருத்துவராகப் பாவித்துக்
கொள்வதுதான். அதேபோலச் சக மனிதர்களை அணுகும் அடிப்படை அறிவுகூட அற்றவர்களாகப் பலர்
இருக்கிறார்கள். வாழ்வைப் பற்றிய சுயபார்வை சிறிதுகூட இல்லாதவர்கள் ஏராளம். இத்தகையோருக்கு
மருத்துவம் பார்க்கும்போது டாக்டருக்கு இயல்பாகக் கோபம் வரத்தான் செய்யும். தமக்கு
இயல்பாகக் கைவரும் கேலியும் கிண்டலுமான மொழியைக் கொண்டு கோபத்தைச் சமாளிக்கும் வித்தை
தெரிந்திருக்கிறார். எழுத்தாற்றலும் இலக்கிய வாசிப்பும் உள்ளவர் என்பதால் மக்கள் மனதைப்
படிக்கும் உளவியல் பார்வை நன்கு கைவரப் பெற்றிருக்கிறார்.
அரசு மருத்துவராகப் பணியாற்றிய இவர் சாதாரண மக்கள் பலரைச்
சந்தித்தவர். தேயிலைத் தோடத்தில் வேலை பார்க்கும் ஒருபெண் தனக்கு அட்டை அட்டையாக மலம்
கழிவதாகச் சொல்லி மருத்துவத்திற்கு வருகிறார். அவரைப் போலப் பலர். அவர்களது சூழல் அத்தகைய
உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதை டாக்டர் மிகுந்த அனுதாபத்தோடு காண்கிறார். பலரது உடல்
நோய் என்பது உறுப்பு தொடர்பானது அல்ல, உள்ளம் தொடர்பானது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப
எளிய வழிகளைப் பரிந்துரைத்து நோயை நீக்குகிறார்.
பலவகை மருத்துவங்களைக் கையாண்டு பார்த்ததில் ஓமியோபதி மருத்துவமே
சிறந்தது என்னும் முடிவுக்கு வந்திருப்பவன் நான். அலோபதி உட்பட பிற மருத்துவங்களின்
சாத்தியங்கள் பற்றி எனக்குக் குறையொன்றும் இல்லை. எதையும் புறக்கணிக்கும் எண்ணமும்
இல்லை. மனிதர்களை அணுகும் முறையிலும் மருந்துகளைத்
தேர்வு செய்வதிலும் படைப்பாற்றல் மிக்க மருத்துவம் என்பதே ஓமியோபதியை நான் தேர்வு செய்ய
முக்கியமான காரணம். டாக்டர் எம்.கே.முருகானந்தம் போல ஒருவர் அமைவார் என்றால் அலோபதி
மருத்துவம் பார்ப்பதும் எனக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்திருக்கும் என்று இந்நூலை
வாசிக்கும்போது தோன்றியது. பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார். வலைத்தளத்தில் தொடர்ந்து
பலவற்றை எழுதிவருகிறார். வாசிப்பு விருப்பத்தை
மிகுவிக்கும் எழுத்துத்தான் எல்லாம். இந்த நூல் தமிழ்நாட்டுப் பதிப்பாகவும் வந்தால்
நல்லது.
மருந்துகளைப் பரிந்துரைக்கும் டாக்டருக்கு நானுமோர் பரிந்துரை
செய்கிறேன். நூல் அட்டையில் ‘டாக்டரின் தொணதொணப்பு’; உள்ளே முதல் பக்கத்தில் ‘டாக்குதரின்
தொணதொணப்பு’; நூல் விவரக் குறிப்பில் ‘டாக்குத்தாரின் தொணதொணப்பு’; அவரது முன்னுரையில்
‘டொக்டரின் தொணதொணப்பு.’ இருபத்தெட்டுக் கட்டுரைகளைக் கொண்ட நூலில் ஒரு கட்டுரையின்
தலைப்பு ‘டொக்டரின் மருந்துச் சிட்டை மகத்துவம்’ என்பது. எழுதிய டாக்டருக்கே புரியாத
மருந்துச் சிட்டையைக் கேலி செய்யும் கட்டுரை. அதை அவரவர் விருப்பத்திற்கேற்பப் பொருள்
கொள்ளலாமாம். இந்த நூலின் தலைப்பும் அப்படித்தானா டாக்டர்? அடுத்த பதிப்பில் எல்லா
இடத்திலும் ஒரே தலைப்பு இருக்கும்படி அச்சிட டாக்டருக்குப் பரிந்துரைக்கிறேன்.
நூல் விவரம்: எம்.கே. முருகானந்தன்,
டாக்டரின் தொணதொணப்பு, 2021, அல்வாய், இலங்கை, ஜீவநதி வெளியீடு, விலை: ரூ.400/- (இலங்கை
ரூபாய்).
000
டாக்டர் நோயல் நடேசன் கால்நடை மருத்துவர். இலங்கையைச் சேர்ந்த
இவர் அங்கும் தமிழ்நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தவர்.
இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். நாவல், சிறுகதை முதலியவற்றை எழுதும் புனைகதை
ஆசிரியர். அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு ‘வாழும் சுவடுகள்.’ மார்ச் 2024இல் ஆஸ்திரேலியா சென்ற போது அவரைச் சந்திக்கும்
நல்வாய்ப்பைப் பெற்றேன். கடந்த சில ஆண்டுகளாக வளர்ப்பு விலங்குகளை மையப்படுத்திக் கதைகள்
எழுதிக் கொண்டிருப்பதால் அவற்றைப் பற்றிய நூல்களை ஓரளவு வாசித்திருக்கிறேன். ‘வாழும்
சுவடுகள்’ நூலையும் அப்படித்தான் வாசித்தேன். அவரை நேரில் சந்தித்தபோது இந்நூலைப் பற்றிச்
சில வார்த்தைகள் பேசவும் முடிந்தது.
ஐம்பத்தாறு கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் மனித வாழ்வின் இன்னொரு
பகுதியைக் காட்டுகிறது. அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு கதைதான். அதில்
முதன்மை இடம்பெறுவது விலங்குகளா மனிதரா என்பதைத் தீர்மானிப்பது அத்தனை எளிதல்ல. விலங்குகளுக்குத்
தம் பிரச்சினையைச் சொல்லத் தெரியாது. வளர்ப்பவர்களே அதைப் புரிந்துகொண்டு மருத்துவரிடம்
அழைத்துச் செல்ல வேண்டும். தம் வாழ்வின் ஒருபகுதியை இட்டு நிரப்புபவை வளர்ப்பு விலங்குகள்
எனக் கருதும் மனிதர்கள் அவற்றைக் கையாள்வதில் விதவிதமான மனோபாவங்களைக் கொண்டவர்களாக
இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுச் சூழலும் ஒவ்வொரு மாதிரி. ஆஸ்திரேலியச் சம்பவங்கள்
மிகுதியும் இடம்பெற்றுள்ளன.
கால்நடை மருத்துவம் பயின்றவர் தம் பணியனுபவத்தில் மனிதர்களைப்
பயிலும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். கட்டுரைகளிலும் மருந்து வாடை நிரம்ப அடிக்கவில்லை.
சிகிச்சை முறைகள் பற்றியும் மருந்துகள் பற்றியும் எழுத வாய்ப்புள்ள இடங்களிலும் ரொம்பவே
அடக்கி வாசிக்கிறார் டாக்டர். போகிறபோக்கில்
சில வரிகளில் எளிதாகச் சொல்லிச் செல்வதோடு சரி.
அவர் எழுதும் முறையில் விலங்குகளைவிட மனிதர்கள் மீது இரக்கம் தோன்றும் சந்தர்ப்பங்கள்
பல. நாய்களையோ பூனைகளையோ வளர்ப்போர் மனப்பாங்கை அறிந்துணர்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து
அதற்கேற்பத் தம் அணுகுமுறையை வைத்துக் கொள்கிறார். அச்சுறுத்தும் சூழலைக்கூடத் தம்
அணுகுமுறையால் மாற்றிவிட முடிகிறது.
‘வார்த்தைகளால் இரத்தம் வராமல் கொலைகூடச் செய்ய முடியும்’
என்று ஓரிடத்தில் சொல்கிறார். சொற்களின் பயன்பாட்டை அந்த அளவு அறிந்திருப்பதால் டாக்டர்
குறைவான சொற்களையே பேசுகிறார். அது எதிரில் இருப்பவருக்கு எதை உணர்த்த வேண்டுமே அதை
உணர்த்திவிடுகிறது. பரபரப்பான நிலையிலும் பொறுமை காக்கும் மருத்துவருக்கான மனநிலையிலிருந்து
பிறழ்வதில்லை. அதனால் தான் மாபியாக்காரர்களையே மன்னிப்பு கேட்க வைக்க முடிந்திருக்கிறது.
சில சந்தர்ப்பங்களில் தம் பேச்சு செய்ய முடியாத மாற்றத்தைச் செயல் நிறைவேற்றித் தருகிறது.
ஆகவே செயல் முடியும்வரை பேசுவதையும் விளக்கம் சொல்வதையும் தவிர்க்கிறார்.
தம் தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவும் வெளிப்படைத் தன்மையும்
டாக்டருக்கு இருக்கிறது. எருமை ஒன்றுக்கு அறுவை செய்து கன்றை எடுக்க வேண்டிய இக்கட்டான
நேரத்தில் இடப்பக்கத்திற்குப் பதிலாக வலப்பக்கம் மாற்றி அறுத்துவிட்ட சம்பவத்தைச் சொல்கிறார்.
நடந்த தவறைப் பிறர் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ மருத்துவருக்கு ஏற்படும் குற்றவுணர்வு
நிலைத்திருக்குமே, அதற்கு என்ன செய்வது? என்ன நடந்தாலும் சரி, அதை வெளிப்படுத்திவிடுவது
நல்லது. முடியாத போது இப்படி எழுத்தையாவது தேர்ந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம்தான்.
விலங்குகளுக்கு வரும் நோய்கள் பற்றிப் பொதுவாகவே விழிப்புணர்வு
இல்லை. பலவிதமான அறியாமைகள் நிலவுகின்றன. சிலவற்றையேனும் மாற்றி இக்கட்டுரைகள் அறிவைத்
தருகின்றன. ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’ என்று ஒரு கவிதை
நூலில் வைரமுத்து எழுதியிருக்கும் வரியை எடுத்துக் கொண்டு ‘நாய்க்கும் நீரிழிவு வரும்’
என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நாய்களுக்கு வரும் புற்றுநோய்கள் பற்றிப் பல கட்டுரைகள்
பேசுகின்றன.
இளவயதிலிருந்து கால்நடைகளோடு பழக்கம் உள்ளவன் நான். அவற்றுக்கு
நோய்கள் வரும் என்பதை அறிவேன். மழைக்கால நோய்கள் பற்றிய அறிதல் உண்டு. அவற்றைப் போக்கக்
கொஞ்சம் மூலிகை மருத்துவம் எங்களுக்குத் தெரியும். ஊரில் சில அனுபவ வைத்தியர்கள் உண்டு.
பாடம் போட்டுப் பச்சிலை மருந்தும் தருவார்கள். அவற்றுக்குக் கட்டுப்படாது இறந்து போன
ஆடுமாடுகள், நாய்கள் என எத்தனையோ உயிர்களை இக்கட்டுரைகள் நினைவுக்கு வரவைத்தன. குடும்பக்
கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டதால் சகதுணை தேடி அலையும் வழிகளில் உயிர்
துறக்க நேர்ந்த பூனைகள் எத்தனையோ.
இவற்றுக்கும் நீரிழிவு நோய் வரும் என்றோ புற்றுநோய்கள் வரும்
என்றோ எனக்கும் தெரியாது. தொடர்ந்து வளர்ப்பு விலங்குகளோடு வாழும் எனக்கு இந்நூல் அறிவைப்
புகட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாய்களுக்கு நோய் முற்றிய நிலையில் கருணைக்
கொலையைப் பரிந்துரைக்கிறார் டாக்டர். சிலர் அதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். சிலர் ஏற்பதில்லை.
தன் வளர்ப்பு நாயையே கருணைக் கொலை செய்ததைப் பற்றி சமீபத்தில் ஒருகட்டுரை எழுதியிருந்தார்.
நியாயமான காரணங்கள் இருந்தாலும் ஏனோ என் மனதுக்கு அதுமட்டும் ஒப்பவில்லை.
நோயல் நடேசன், வாழும் சுவடுகள்,
2023, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், இரண்டாம் பதிப்பு, விலை ரூ.300.
000
இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவருமான
டாக்டர் ஆசி.கந்தராஜா மருத்துவர் அல்ல; முனைவர். பூங்கனியியல் – உயிரியல் தொழில்நுட்பத்துறைப்
பேராசிரியர். வேளாண்மையில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவர். செடிகொடிகளைப் பற்றி அறிவியல்
பூர்வமான புலமை பெற்றவர். சிறுகதை, நாவல்கள் எழுதியுள்ளார். அவரது ‘உயரப் பறக்கும்
காகங்கள்’ (2003) சிறுகதைத் தொகுப்பு வந்தபோதே அதற்கு மதிப்புரை எழுதினேன். ‘கள்ளக்கணக்கு’
(2018) சிறுகதைத் தொகுப்பைக் கோவை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுப் பேசினேன். ஏற்கனவே
நேரிலும் அறிமுகமான அவரை இப்போது ஆஸ்திரேலியா சென்ற போது சந்தித்தேன். அவரது வீட்டில்
சில நாட்கள் தங்கியிருந்தேன். வீட்டைச் சுற்றிப் பராமரிக்கும் தோட்டத்தைக் காட்டிய
அவர் ‘ஆறுமாதம் பொதுமுடக்கம் வந்தாலும் இந்தத் தோட்டத்துக் காய்கறிகளை வைத்து நாங்கள்
இருவரும் சாப்பிட்டுக்கொள்ள முடியும்’ என்று சொன்னார். ‘தமது உழைப்பில் வருவதைத் தமது வீட்டிலிருந்து உண்ணும்
போது கிடைக்கும் இன்பம் புணர்ச்சி இன்பத்தைவிடப் பெரிது’ என்பார் திருவள்ளுவர். முனைவர்
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அவர் மனைவியின் ஈழத்து முறைச் சமையல் சுவையோடு
உண்டது மறக்க முடியாதது.
வேளாண்மை தொடர்பான அவரது துறைசார் அறிவு, அனுபவம் ஆகியவற்றைக்
கொண்டு பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றைப் ‘புனைவுக் கட்டுரை’ என்கிறார். கதாசிரியரும்
அறிவியலாளருமாகிய கந்தராஜாவின் இருகூறுகளும் இணைந்த அறிவியல் புனைவுக் கட்டுரைகள் இவை
என அணிந்துரையில் மு.இராமனாதன் கூறுகிறார். தாம் எழுதியுள்ள கட்டுரைகளில் பதின்மூன்றைத்
தேர்ந்தெடுத்து ‘மண் அளக்கும் சொல்’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்திரிக்காய்’
என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பிலேயே ஒருநூல் இலங்கையில் வெளியாகியுள்ளது.
அக்கட்டுரை ‘முட்டிக் கத்திரிக்காய்’ என்னும் சுருக்கத் தலைப்பில் ‘மண் அளக்கும் சொல்’
நூலில் உள்ளது. ‘செல்லப்பாக்கியம் மாமி’ விடுபட்டுப் போன வருத்தத்தை அவரது பேச்சில்
உணர்ந்தேன்.
அக்கட்டுரை மட்டுமல்ல, எல்லாக் கட்டுரைகளும் ரசனையானவை. விமானப்
பயணத்தில் இந்நூல் பெருந்துணையாக அமைந்தது. ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து அசை போட்டுச்
செரித்த பிறகு அடுத்த கட்டுரையைத் தொடங்கினேன். ஒரு விஷயத்திற்குள் அடங்கும் கட்டுரை
ஏதுமில்லை. முட்டிக் கத்திரிக்காய் என்னும் யாழ்ப்பாணக் கத்திரிக்காய் பற்றிப் பல தகவல்கள்
அக்கட்டுரையில் வருகின்றன. அதன் விதையை ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திக் கொண்டு போய்ச்
செல்லப்பாக்கியம் மாமி விளைவிக்கிறார். ஆனால் கத்திரிக்காயின் தன்மை மாறிப் போய்விடுகிறது.
அதற்கான காரணத்தை அறிவியல் அறிஞரின் கோணத்தில் விளக்குகிறார். பிறகு யாழ்ப்பாணப் பயணம்
நேர்கிறது. முட்டிக் கத்திரிக்காயின் தனித்தன்மையைக் காப்பாற்றச் செல்லப்பாக்கியம்
மாமி தன் பணத்தைச் செலவழித்து எடுக்கும் முயற்சியைச் சொல்லி முடிகிறது.
மாமியைப் பற்றி எள்ளலோடு தொடங்கும் கட்டுரை அவரது மகத்தான
செயலில் நிறைவு பெறுகிறது. இடையிடையே ஊர் நினைவுகள், சமையல் குறிப்புகள், கோயில்கள்,
வீடுகளின் அமைப்பு என எத்தனையோ செய்திகள். கட்டுரையை வாசிக்கும்போது இத்தனை செய்திகளா
என்னும் பிரமிப்பு ஏற்படுவதில்லை. அத்தனை இலகுவாக கட்டுரையின் போக்கில் நம்மையும் அழைத்துச்
சென்றுவிடுகிறார். வாசித்து முடித்த பிறகு மீளப் பார்க்கையில் ஒவ்வொன்றும் முன்னால்
வந்து நிற்கின்றன.
‘சாத்தானின் விரல்கள்’ என முருங்கைக்காயைப் பற்றி ஒரு கட்டுரை.
அம்மாவின் நினைவில் இருக்கும் ஊர்முருங்கையில் தொடங்கி உலகத்தையே சுற்றி வந்துவிடுகிறது.
‘வரகு மான்மியம்’ கட்டுரையும் அப்படித்தான். பத்தொன்பது கிலோ வரகை 1890 டாலர் கூடுதல்
கட்டணம் செலுத்தி விமானத்தில் கொண்டு வந்த கதை சுவாரசியமாக விரிகிறது. அவருக்குள் ஒரு
படைப்பாளர் இருப்பதைப் போலவே ஆர்வமாக வகுப்பெடுக்கும் ஒரு பேராசிரியரும் வலுவாக இருக்கிறார்.
வரகு பற்றிய அறிவியல் தகவல்களை மனைவியிடம் சொல்ல ஆரம்பித்ததுமே கூடுதல் கட்டணம் பற்றிய
கவலை பறந்துவிடுகிறது.
எல்லாக் கட்டுரைகளுமே இப்படித்தான் என்று பொதுவாகச் சொல்லிவிடலாம்.
இவற்றில் இடம்பெறும் சம்பவங்கள், மனிதர்கள், தகவல்கள் எல்லாமே ஈர்க்கின்றன. அதற்குக்
காரணம் அவரது சொல்முறைதான். சுயஎள்ளலும் கொண்ட நகைச்சுவை ததும்பும் இக்கட்டுரைகளை இயற்கை
நேசர்கள், வீட்டுத் தோட்ட ஈடுபாடுள்ளோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்ல; அறிவையும்
ரசனையையும் ஒருசேர வளர்த்துக் கொள்ளச் சகலரும் வாசிக்கலாம்.
ஆசி.கந்தராஜா, மண் அளக்கும்
சொல், 2022, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை ரூ.225/-
-----
No comments:
Post a Comment